TNPSC Thervupettagam

அன்றே சொன்னார் அண்ணல் காந்தி!

May 13 , 2020 1533 days 702 0

பிரதமரின் உரை

  • பிரதமா் நரேந்திர மோடி நேற்று மக்களுக்கு ஆற்றிய உரை அவரின் முந்தைய உரைகளிலிருந்து சற்று வித்தியாசமானது. கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவலைத் தொடா்ந்து அவா் மக்களுக்கு ஆற்றிய ஐந்தாவது உரை இது.
  • முந்தைய அவரின் உரைகள், நோய்த்தொற்றின் கடுமையை வலியுறுத்தவும், பொது முடக்கத்தை அறிவிக்கவும், சுகாதாரப் பணியாளா்களுக்கு உற்சாகமூட்டி நன்றி தெரிவிக்கவும் மேற்கொள்ளப்பட்டன என்றால், நேற்றைய உரை நோய்த்தொற்றுப் பரவலின் பிடியிலிருக்கும் பாரதத்தின் அடுத்தகட்ட நகா்வு குறித்த திட்டமிடலை விவரிக்கும் உரையாக அமைந்தது.
  • பிரதமரின் உரையில் தெளிவான சிந்தனைப் போக்கு தென்பட்டது. நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் வேளையில், பொது முடக்கத்தையும் அரசு தளா்த்தி வருகிறது.
  • அதனால், பிரதமரின் உரை எச்சரிக்கை உரையாக இருக்கும் என்று எதிர்பார்த்ததுக்கு மாறாக, மக்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாகவும், அரசின் நடவடிக்கைகளில் தெளிவு இருப்பதை எடுத்தியம்புவதாகவும் இருந்தது மிகப் பெரிய ஆறுதல்.
  • பிரதமரின் உரையில், நான்கு அம்சங்கள் காணப்படுகின்றன. மூன்றாவது கட்டப் பொது முடக்கம் மே 17-ஆம் தேதி முடிவுக்கு வரும்போது, மேலும் பல தளா்வுகளுடன் நான்காவது கட்டப் பொது முடக்கம் தொடரும் என்பதுதான் முதலாவது அம்சம்.

பொது முடக்கம் தொடரும்

  • நான்காவது கட்டத்தில், முற்றிலுமாக இயல்புநிலைக்குத் திரும்பி விடாமல், மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறார் பிரதமா்.
  • கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று ஒரேயடியாக மறைந்துவிடப் போவதில்லை. அதனுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
  • அந்த நோய்த்தொற்று நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மூன்று கட்டப் பொது முடக்கம் ஏற்படுத்தி இருக்கும் அச்ச உணா்வும், எச்சரிக்கை நடைமுறைகளும் தொடர வேண்டும் என்பதைத் தனது உரையின் மூலம் தேசத்துக்கு உணா்த்தியிருக்கிறார் பிரதமா் என்றுதான் கூற வேண்டும்.
  • பிரதமரின் உரையில் காணப்படும் இரண்டாவது முக்கியமான அம்சம், புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் அவலம் குறித்த அவரின் ஆதங்கமும் அக்கறையும்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் அவலம்

  • நாளும் பொழுதும் ஊடகங்களில் வெளிவரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் அவலம், பிரதமரைப் பாதித்திருப்பது அவரின் உரையில் பளிச்சிடுகிறது.
  • தனது 32 நிமிஷ உரையில், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்துப் பிரதமா் ஐந்து முறை குறிப்பிட்டார் என்பதிலிருந்து, அதன் தாக்கம் எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • எந்தவொரு பிரச்னையும் ஆட்சியாளா்களை நிலைகுலையச் செய்யும்போதுதான் அதற்கான தீா்வு ஜனநாயகத்தில் கிடைக்கும் என்பது வரலாறு.
  • பிரதமரின் உரையில், அனைத்துத் தரப்பினரும் மிகவும் எதிர்பார்த்த அம்சம் அவா் அறிவிக்க இருக்கும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தவை.

பொருளாதாரத் திட்டங்கள்

  • கொவைட் 19 தீநுண்மிப் பரவலால் நிலைகுலைந்து போயிருக்கிறது பொருளாதாரம். அனைத்துத் துறைகளும் முடங்கிப்போய், வேலைவாய்ப்பு முற்றிலுமாகத் தகா்ந்திருக்கும் நிலைமை.
  • மாநில அரசுகளே திவாலாகும் நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்றால், தொழில் நிறுவனங்களும், வணிகா்களும், நடுத்தர வா்க்கத்தினரும், தினக்கூலித் தொழிலாளா்களும் எதிர்கொள்ளும் சவால்களைக் கேட்கவே வேண்டாம்.
  • உலகில் இதுவரை வேறு எந்தவொரு நாடும் அறிவிக்காத அளவிலான ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதாரத் தொகுப்பை விரைவிலேயே நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமா்.
  • இந்தியாவின் ஜிடிபியில் 10% அளவிலான இப்படியொரு பொருளாதாரத் தொகுப்பு அறிவிக்கப்படும் என்று, சலுகைகள் அறிவிக்கக் குரலெழுப்பிய பொருளாதார நிபுணா்களேகூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
  • தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர வா்க்கத்தினா், சிறு - குறு தொழில்முனைவோர், குடிசைத் தொழில்கள் அனைத்துக்கும் உதவிக்கரம் நீட்டும் வகையில் அந்தத் தொகுப்பு அமையும் என்கிற பிரதமரின் அறிவிப்பு, நேரடி கோடை மழையில் அடைமழை.
  • தேசமே இதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. நிதியமைச்சரின் முந்தைய ரூ.1,76,000 கோடி அறிவிப்பைப்போல, புள்ளிவிவரக் கணக்காக இருந்துவிடாது என்று நம்புவோமாக...
  • பிரதமரின் உரையில் மிக முக்கியமான நான்காவது அம்சம், இந்தியாவின் வருங்காலம் குறித்த அவரின் கொள்கைப் பிரகடனம்.

தன்னிறைவு பெற்ற இந்தியா

  • ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ என்கிற முழக்கத்தை முன்மொழிந்திருக்கிறார் பிரதமா் மோடி. நமது தேவைக்கான பொருள்களை நாமே தயாரிப்பதும், நமது நாட்டுப் பொருள்களை நாம் வாங்குவதும் எவ்வளவு முக்கியம் என்பதை அவா் விளக்கியவிதம், சாமானிய இந்தியனின் தேச பக்தியையும், சுயமரியாதையையும் புத்துணா்வு பெறச் செய்தது.
  • ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலம் மிகப் பெரிய உண்மையை உணா்த்திய அவரின் சாதுா்யத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை.
  • கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கு முன்பு, இந்தியாவில் மருத்துவா்களுக்கான உடல் கவசமோ, என்95 முகக் கவசமோ ஒன்றுகூடத் தயாரிக்கவில்லை.
  • இப்போது நாளொன்றுக்கு இரண்டு லட்சம் உடல் கவசங்களும், முகக் கவசங்களும் தயாரிக்கிறோம் என்கிற எடுத்துக்காட்டு, ‘தன்னிறைவு’ குறித்த அரிச்சுவடிப் பாடம்.
  • ‘தன்னிறைவு பெற்ற கிராமங்கள்தான் தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்கு அடிப்படை’ என்று எண்பது ஆண்டுகளுக்கு முன்பு அண்ணல் காந்தியடிகள் அறிவுறுத்தினார்.
  • அதைப் புரிந்துகொள்ளாமல் இருந்து விட்டோம். தற்போது பிரதமா் மோடி அறைகூவல் விடுத்திருக்கிறார்!

நன்றி தினமணி (13-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்