TNPSC Thervupettagam

அபிஜித் பானர்ஜி: பொருளாதார நோபல் இந்தியர்

October 16 , 2019 1869 days 928 0
  • சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் யோசனைகளுக்கும் அதன் போக்கைக் கணிப்பதற்கான புதிய உத்திகளுக்கும் கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் அளித்துவந்த நோபல் பரிசுக் குழு, இந்த ஆண்டு வளர்ச்சிப் பொருளாதாரத்தின் பக்கமும் வறுமை ஒழிப்பின் பக்கமும் கவனம்காட்டியிருக்கிறது.
  • 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த அமர்த்திய சென்னுக்கு வளர்ச்சிப் பொருளாதாரப் பங்களிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதே வங்க மண்ணில் பிறந்து, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் அபிஜித் பானர்ஜியும் வளர்ச்சிப் பொருளாதாரத் துறை பங்களிப்புக்காகவே நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
  • அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ, மைக்கேல் கிரெமர் மூவருக்கும் இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அபிஜித் பானர்ஜியும் பிரான்ஸில் பிறந்து, அமெரிக்காவில் வசிக்கும் அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோவும் மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர்.
  • நீண்ட காலமாக பொருளாதார ஆராய்ச்சித் துறையில் இணைந்து பணியாற்றிய பானர்ஜியும் டுஃப்லோவும் 2015-ல் திருமணம் செய்துகொண்டனர். 46 வயதாகும் டுஃப்லோ பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெறும் இரண்டாவது பெண். கடந்த 50 ஆண்டுகளில் இளம்வயதில் நோபல் பரிசைப் பெற்றிருக்கும் பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்கரான மைக்கேல் கிரெமர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவருகிறார்.

புதிய ஆய்வுமுறை

  • வறுமை ஒழிப்புக்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்கான தங்களது ஆய்வுகளில், சேகரிக்கப்பட்ட ஆய்வு மாதிரிகளை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத தனித்தனிக் குழுக்களாக வகைப்படுத்தி ஆய்வுசெய்யும் முறைக்காக இந்த நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
  • இந்த ஆய்வு முறையானது முதலில் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டது. மாதிரிகளை வகைபிரித்து ஆய்வுசெய்வதன் மூலம் அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இத்தகைய ஆய்வுமுறையைக் கண்டுபிடித்தவர்கள் என்றோ பொருளாதாரத் துறையில் இதைப் பயன்படுத்தியதில் முன்னோடிகள் என்றோ இவர்களைச் சொல்லிவிட முடியாது.
  • எனினும், வறுமை ஒழிப்புக்கான வழிமுறைகளைக் கண்டறிவதில் மற்ற ஆய்வுமுறைகளைக் காட்டிலும் ஆய்வு மாதிரிகளை வகைப்படுத்தும் முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதைப் பரிசோதித்து அதை நிரூபித்திருக்கிறார்கள்.
  • அதைவிடவும் முக்கியமாகத் தாங்கள் ஆய்வின்வழி கண்டடைந்த முடிவுகளிலிருந்து வறுமையில் உழல்பவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கும் வழிமுறைகளையும் அவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
  • க்ரெமர் இந்த ஆய்வு முறையை 1990-களின் மத்தியில், மேற்கு கென்யாவின் கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில் தான் நடத்திய ஆய்வுகளில் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார். பெருவாரியான எண்ணிக்கையில் பள்ளிக்கூடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை இலவச உணவு, இலவசப் பாடநூல்கள், குடற்புழு நீக்கம், ஆசிரியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகைகள் என்று வளர்ச்சி நடவடிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களாகப் பிரித்து ஆராய்ச்சி செய்தார்.
  • தனது ஆய்வுகளின் முடிவில், இத்தகைய இலவசத் திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்றும் பாடத்திட்ட அளவில் மாற்றங்களை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் முடிவுக்கு வந்தார்.

கல்வியும் சுகாதாரமும்

  • கென்யாவில் க்ரெமர் பரிசோதித்துப் பார்த்த இந்த ஆய்வு முறையை இந்தியாவில் பானர்ஜியும் டுஃப்லோவும் பயன்படுத்திப் பார்த்தார்கள்.
  • இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆசிரியர்களின் கவனம் பெரும்பாலும் நன்கு படிக்கும் மாணவர்களின் மீதுதான் இருக்கிறது என்பதையும் சராசரி மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.
  • தமது ஆய்வுகளின் முடிவில், இந்த மூன்று பொருளியல் அறிஞர்களுமே தெரிவித்த கருத்து, தற்போதைய கல்வி முறை வெற்றிபெறுவதற்குச் சிரமமான தேர்வுகளையே மையம்கொண்டிருக்கிறது என்பதும் இத்தகைய முறையானது வெற்றிபெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் என்று ஒட்டுமொத்த மாணவர்களையும் இரண்டு வகைகளுக்குள் அடைத்துவிடுகிறது என்பதும்தான்.
  • அனைத்து மாணவர்களிடத்திலும் மிகச் சிறிய அளவில் கற்கும் திறன் அதிகரித்தாலும், உலகத்தோடு உறவாடுவதற்கான அவர்களது திறமையில் நேர்மறையான விளைவுகள் ஏற்படும் என்பதைத் தற்போதைய கல்வி முறையானது அலட்சியப்படுத்துகிறது என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டினார்கள்.
  • கென்யாவில் க்ரெமர் மேற்கொண்ட மற்றொரு ஆய்வு, குடற்புழு நீக்க மாத்திரைகளின் விலையில் சிறிய அளவிலான மாற்றம்கூட அதன் தேவையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைத் தெளிவுபடுத்தியது.
  • மருத்துவத் துறை வசதிகளைப் பொறுத்தவரையில் அவற்றுக்கு நிர்ணயிக்கப்படும் விலை, ஏழை எளிய மக்களைப் பதற்றம்கொள்ளச் செய்கிறது.
  • எனவே, அரசு தனது மக்களுக்கு வழங்கும் மருத்துவ வசதிகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று க்ரெமரும் அவருடன் ஆய்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட மற்ற ஆய்வாளர்களும் வலியுறுத்துகிறார்கள்.
  • பொது சுகாதாரத் துறையில் இந்த ஆய்வு முறையை பானர்ஜியும் டுஃப்லோவும் ராஜஸ்தானின் கிராமப்புறப் பகுதிகளில் மேற்கொண்ட தங்களது ஆய்வுகளில் கையாண்டனர். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் நடமாடும் மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார மையங்களும் வகிக்கும் முக்கியப் பங்கை அவர்கள் உறுதிசெய்தார்கள்.
  • ஆய்வு மாதிரிகளை வகை பிரிக்கும் முறையைக் குறித்த மாறுபட்ட சில கருத்துகளும் வளர்ச்சிப் பொருளாதாரத் துறையைச் சேர்ந்த சில அறிஞர்களிடையே இருக்கிறது. எனினும், இந்த ஆய்வுமுறையை வறுமை ஒழிப்பில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுத்த முடியும் என்பதை நோபல் பரிசு பெறும் அறிஞர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள்.
  • அபிஜித் பானர்ஜியின் ஆய்வு முடிவுகளால், இந்தியாவில் 50 லட்சம் பள்ளி மாணவர்கள் தாங்கள் பலவீனமாக இருக்கும் பாடங்களில் சிறப்புப் பயிற்சியைப் பெற்றிருக்கிறார்கள்.

வறுமை ஒழிப்பு மையம்

  • 2003-ல் பானர்ஜியும் டுஃப்லோவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியருமான செந்தில் முல்லைநாதனுடன் இணைந்து வறுமை ஒழிப்பு மையம் ஒன்றைத் தொடங்கினார்கள்.
  • தற்போது அந்த மையமானது, சவுதி அரேபியாவின் ஷேக் அப்துல் லத்தீப் ஜமீல் பெயரில் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்துடன் உலகெங்கும் 100-க்கும் மேற்பட்ட பொருளாதாரப் பேராசிரியர்கள் இணைந்து செயல்பட்டுவருகின்றனர்.
  • 2023-ம் ஆண்டுக்கான தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்த தமிழக அரசு, பள்ளிக் கல்வி, வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம் தொடர்பான ஆய்வுகளுக்காக 2014-ல் இந்த வறுமை ஒழிப்பு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • பானர்ஜி - டுஃப்லோ இணைந்து 2011-ல் எழுதிய ‘ஏழைகளின் பொருளாதாரம்: உலக வறுமையை முடிவுக்குக் கொண்டுவரும் வழிமுறையைப் பற்றி ஒரு முழுமையான மறுபார்வை’ என்ற புத்தகம் பெருங்கவனத்தைப் பெற்றது.
  • இதுவரையில் பொருளாதார ஆய்வுகளில் பின்பற்றப்பட்டுவரும் ஆய்வு முறைகளுக்கும் களங்களில் பணிபுரிந்த அனுபவங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கண்டுகொண்ட இவர்கள், தங்களது புத்தகத்தைப் புள்ளிவிவரங்களாக மாற்றாமல், அனுபவங்களின் பகிர்வாக மாற்றினார்கள்.
  • வணிக நிறுவனங்களும் அரசுகளும் ஏழைகளின் நலனுக்காக என்ன செய்திருக்கின்றன என்ற கேள்விகளை எழுப்பி, என்னென்னவெல்லாம் செய்ய முடியும் என்றும் பரிந்துரைகளையும் செய்திருக்கிறார்கள்.
  • ஆய்வுகளோடு தங்களது பணியை முடித்துக்கொள்ளாமல், அவற்றின் நோக்கத்தையும் நிறைவேற்றத் துடிக்கிற இந்த களச் செயல்பாட்டாளர்களின் கனவுகள் நிறைவேறட்டும். அவர்களின் ஆலோசனைகளுக்கு அரசுகள் செவிசாய்க்கட்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்