- திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், எதிர்பார்த்தது போலவே அமளியில் மூழ்கி ஒத்தி வைக்கப்பட்டது.
- அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு புதிய அமைச்சர்களை உறுப்பினர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது என்பது மரபு.
- அதைக்கூட அனுமதிக்காமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது நாடாளுமன்ற மரபுகளை மீறும் தவறான முன்னுதாரணம்.
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கோரிய பொருளாதாரம் குறித்த, எரிபொருள் விலையேற்றம் குறித்த பிரச்னைகள் விவாதத்துக்குரியவை என்பதில் சந்தேகம் இல்லை.
- ஆனால், புதிய அமைச்சர்களை அவைக்கு அறிமுகம் செய்து வைக்காமல், எடுத்த எடுப்பிலேயே விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை, அவையை நடத்த விடாமல் செய்வதற்கான முன்னெடுப்பு.
- புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்கு வந்திருந்தது, அவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டதை வெளிப்படுத்துகிறது.
தெளிவான விளக்கம் தேவை
- மாநிலங்களவையிலும், புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தவும், காலமான முன்னாள் மக்களவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் அனுமதிக்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதும் அதேபோலத்தான்.
- எதிர்க்கட்சிகள் முன்வைத்த 17 பிரச்னைகள் குறித்த விவாதத்துக்கு ஒன்றன்பின் ஒன்றாக அனுமதி வழங்குவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு உறுதி அளித்தும்கூட அதை அவர்கள் ஏற்காதது தவறான அணுகுமுறை.
- நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கும், நரேந்திர மோடி அரசின் விளக்கத்தைப் பெறுவதற்கும் பல பிரச்னைகள் காத்துக் கிடக்கின்றன.
- அமளியில் ஈடுபடுவதால் அந்தப் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு விடாது என்பது தெரிந்தும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு செயல்படுவது வருத்தமளிக்கிறது.
- நமது மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பெருமதிப்பிற்குரிய குடிமக்களும் தெரிந்து கொள்வதற்காக, நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டிய முக்கியமான சில பிரச்னைகளை அவர்களது கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.
- தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வரிசையில் நின்றும்கூடத் தடுப்பூசி பற்றாக்குறையால் மையங்களில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
- 18 வயதுக்கு மேற்பட்ட 92 கோடி பேருக்கு இரண்டு முறை தடுப்பூசி போடப்பட வேண்டும். டிசம்பர் மாதத்திற்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
- இதுவரை 40 கோடி பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்திற்குள் எப்படி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்பது குறித்து அரசின் தெளிவான விளக்கம் தேவை.
மறுப்பவர் மறுக்கட்டும்
- இந்தியாவில் 5 முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 30 கோடி. கடந்த 18 மாதங்களாகப் பள்ளிகள் செயல்படாமலும், அவர்களில் பலருக்கு இணைய வழிக் கல்வி வழங்கப்படாமலும் இருக்கிறது.
- கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்தாலும், மாநிலங்களின் பொறுப்பில் இருப்பது என்று மத்திய அரசு தட்டிக் கழித்துவிட முடியாது.
- 30 கோடி இந்திய குழந்தைகளின் வருங்காலம் கேள்விக்குறியாவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
- மாநிலங்களுடன் இணைந்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண அரசு என்னென்ன முயற்சிகள் செய்திருக்கிறது?
- உணவுப் பொருள்களின் விலைவாசியும், பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. நடுத்தரக் குடும்பங்கள் அதனால் மிகப் பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றன.
- அதன் விளைவாக பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு, மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து பொருளாதாரம் ஸ்தம்பித்திருக்கிறது.
- ஒருபுறம் சேமிப்புகளுக்கான வட்டித் தொகை குறைகிறது; மற்றொருபுறம் விலைவாசி அதிகரிக்கிறது. வரவுக்கும் செலவுக்கும் ஈடுகட்ட முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இந்தப் பிரச்னையை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது?
- உச்சநீதிமன்றம், கொள்ளை நோய்த்தொற்று இறப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டுமென்று பேரிடர் மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது.
- மத்திய சுகாதார அமைச்சகத்தின் கணக்குப்படி, இதுவரை கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு 4,13,091.
- இன்னொருபுறம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2019 அறிக்கைபடி, ஐந்தில் ஒரு இறப்பு பதிவு செய்யப்படுவதில்லை.
- அப்படியானால், கொவைட் 19 நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை தான் என்ன? அரசிடம் இந்தப் புள்ளிவிவரம் இருக்கிறதா? இல்லை கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது உயிரிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கைபோல எந்தவித விவரமும் இல்லையா?
- கொள்ளை நோய்த்தொற்றுக்குப் பிறகு வேலைவாய்ப்பை இழந்தவர்களின் எண்ணிக்கை தான் என்ன? தொழிலாளர் நல அமைச்சகத்திடம் வேலை இல்லாதவர்களின் புள்ளி விவரமும், வேலை இழந்தவர்களின் புள்ளிவிவரமும் இருக்கிறதா, இல்லையா?
- கடந்த ஓர் ஆண்டில் மூடப்பட்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்த புள்ளிவிவரம் திரட்டப்பட்டிருக்கிறதா? ஆண்டொன்றுக்கு ஊழியர்களுக்கு ஊதியமாக மட்டும் மக்கள் வரிப்பணத்திலிருந்து மத்திய அரசு ரூ.2.54 லட்சம் கோடியை வழங்கும் நிலையில், இந்த புள்ளி விவரங்களைக்கூட சேகரிக்க முடியவில்லை என்றால், எப்படி?
- அரசிடம் கேட்பதற்கு இன்னும் எத்தனையோ கேள்விகள் இருக்கின்றன. நாடாளுமன்ற அமளி மூலம் அரசைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகள் உதவுகின்றன. இதனை ஏற்பவர் ஏற்கட்டும், மறுப்பவர் மறுக்கட்டும்!
நன்றி: தினமணி (21 - 07 - 2021)