TNPSC Thervupettagam

அமித் ஷாவும் உள்ளூர்மொழிக் கல்வியும்

December 2 , 2022 704 days 384 0
  • உள்ளூர் மொழிக் கல்வியின் வழியாக உயர் கல்வியைக் கற்பித்தல் எனும் மோடி அரசின் முடிவு தொடர்பாக ‘அருஞ்சொல்’ வெளியிட்டுவரும் தொடர் கட்டுரைகளும், இது தொடர்பாக அதன் ஆசிரியர் எழுதிய தலையங்கமும் கவனம் ஈர்க்கின்றன. “உள்ளூர் மொழி வழியிலான உயர்கல்வி எனும் பாதையில் இந்திய அரசு அடியெடுத்து வைத்திருப்பது வரவேற்புக்குரிய முன்னெடுப்பு. இந்தியாவில் நூற்றாண்டு பழமையான கனவு இது. பல மாநிலங்களின் அபிலாஷையாக நீடித்துவந்த இதை இன்றைய மோடி அரசு செயல்படுத்த களம் இறங்கியிருப்பது நல்ல விஷயம்” என்று ‘அருஞ்சொல்’ கூறியுள்ளது காத்திரமான, சிந்தனைக்குரிய விவாதங்களைத் தூண்டுவதாகக் கருதுகிறேன்.
  • நமது கல்வி நிலையங்களில் உள்ள ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற வேண்டும்; ஆங்கில மொழி வழியாகக் கல்வி கற்பவர்களுக்கும் தமிழ்மொழி வாயிலாகக் (குறைந்த அளவேனும் உயர்நிலைப் பள்ளி வரை) கல்வி கற்பவர்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட வேண்டும்; தாய்மொழியில் கற்பிப்பதுதான் மாணவர்கள் உண்மையான அறிவுத் தேர்ச்சி பெறுவதற்கான வழி என்றும் பல கட்டுரைகள் தெரிவிக்கின்றன. ‘தமிழால் முடியும்’ என்று உறுதியாக நம்புகிறவர்களின் நானும் ஒருவன்.

தமிழாலும் முடியும்

  • எழுத்து வடிவம் பெறாத பாஷா லேஷியா, பாஷா இதோனீஷியா ஆகியன ரோமன் எழுத்துகளைப் பயன்படுத்தி, உயர் கல்வி நிறுவனங்கள் வரை கல்வி கற்பிக்கும்போது சொந்த எழுத்துகளைக் கொண்ட வளமான மொழியாயான தமிழால் ஏன் முடியாது? தமிழ்நாட்டில் சில கலைக் கல்லூரிகளில் மட்டுமல்லாது, பொறியியல் கல்லுரிகளிலும் சோதனை அளவில் தமிழ்மொழி பயிற்றுமொழியாக ஆக்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது சரியாக செயல்படவில்லை என்றால், அதற்கான தீர்வுகளைக் கண்டறிவோம்.
  • எனினும் தொடக்கப் பள்ளி முதல் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வரை தமிழ் மொழியைப் பயிற்றுமொழியாக ஆக்குவதற்கு என்னென்ன அடிப்படைகளை உருவாக்க வேண்டும், எத்தகைய முன்னெடுப்புகளை  எடுக்கப்பட வேண்டும் என்பது தமிழைப் பயிற்றுமொழியாக்க விரும்பும் பல்வேறு துறைகளைச் (குறிப்பாக அறிவியல் துறைகளைச் சேர்ந்த) கல்வி வல்லுநர்களுடன் இணைந்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணி. இல்லாவிட்டல் தமிழ் ‘தமிழிங்கலம்’ ஆகவோ அல்லது ‘தமிஹிந்தி’ ஆகவோ மாற்றப்படும் ஆபத்து ஏற்படும்.

நடந்திருக்கும் பணிகள்

  • தமிழ் மொழியின் சிறப்புகளில் ஒன்று, அதிலுள்ள வேர்ச்சொற்கள் களஞ்சியம். அதைக் கொண்டு இன்று பல்வேறு துறைகளில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாது, ‘அறியப்படாத’ எண்ணற்றோரும் தமிழில் பல் அறிவுத் துறைகளைச் சேர்ந்த கலைச் சொற்களை உருவாக்குகின்றனர். தமிழின் தனித்தன்மையைப் பெரிதும் பாதிக்காத அளவில் இச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன.
  • முக்கியமான இந்தப் பணியில் இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் உள்ளிட்ட அயல் தமிழர்கள் சிறந்த பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். அதேபோல, சாமானிய மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கில் இருக்கும் பல சொற்கள் அவர்களது பட்டறிவின் வாயிலாக உருவாக்கப்பட்டவை. இவையும் நமக்குப் பயன்படும்.
  • கலைஞர் மு.கருணாநிதின் தலைமையில் 1971இல் தமிழ்நாடு அரசு அமைந்தபோது, பல துறைகளைச் சேர்ந்த அறிஞர்களால் தமிழ்மொழியில் அரசியல், பொருளியல், புவியியியல் உயிரியல், வேதியியல், இயற்பியல் முதலியன தொடர்பான அருமையான பாடநூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட்டன. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எப்படியிருப்பினும் அந்தப் பாடநூல்களை இன்று நாம் எடுத்துப் பார்ப்போமேயானால், ‘தமிழால் முடியும்’ என்பது எவ்வளவு சாத்தியத்துக்குரியது என்பது மேலும் உறுதிப்படும்.

நோக்கங்களை அடையாளம் காணல்

  • ஆக, தமிழ்நாட்டுக்கோ தமிழ் அறிவுப் புலத்துக்கோ ‘தாய்மொழி வழியிலான கல்வி’ ஏற்கெனவே அறிமுகமான நம்முடைய ஆர்வத்தில் உள்ள அதேசமயம், மறுபடியும் அக்கறையைக் கோரும் ஒரு விவகாரம். இந்தியாவில் எந்த மாநிலமும் ஆக்கபூர்வமாக எடுத்துச் செய்ய வேண்டிய, கூடிய ஒரு விஷயம். இதில் அந்தந்த மாநில மொழிகளை வளம் பெறச் செய்வதையும், அந்தந்த மாநில மக்களுக்குக் கல்வியை மேலும் ஜனநாயகப்படுத்துவதையும் தாண்டி வேறு எந்த நோக்கமும் இருக்க நியாயம் இல்லை.
  • சரி, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இப்போது கையில் எடுத்திருக்கும் ‘உள்ளூர் மொழி வழியிலான கல்வி’ இப்படி நம்மால் பார்க்க முடியுமா? உள்ளபடி அவர்களுடைய உள்ளார்ந்த நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்வதும் இந்த விவாதங்களில் முக்கியமான ஒரு புள்ளியாக அமையும்.

உள்ளூர் மொழிக்கான வரையறை என்ன?

  • உள்ளூர் மொழி என்று அமித் ஷா குறிப்பிடுவது என்ன? ஏனென்றால், ஒரே மாநிலத்தில் பல ‘உள்ளூர் மொழிகள்’ உள்ளன. சரி, ‘தாய்மொழிக் கல்வி’ என்று குறிப்பிட்டாலும், அதுவும் பிரச்சினைதான். ஏனெனில், இந்தியாவில் பேசப்படும் பல ‘தாய்மொழி’களுக்கு எழுத்துருவம் இல்லை. எனவே, அந்தந்த மாநிலத்தில் எது முதன்மையான அல்லது பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறதோ அந்த மொழியில்தான் அந்த மாநில மக்களில் மிகப் பெரும்பான்மையினர் எழுதுகிறார்கள், படிக்கிறார்கள் அல்லது அந்த முதன்மையான மொழியின் எழுத்துகளைத்தான் தங்கள் மொழிக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
  • பிஹாரில் ‘உள்ளூர் மொழி’ எது? போஜ்பூரி, கடிபோலி, மைதிலி என வட்டாரத்துக்கு வட்டாரம் ‘உள்ளூர் மொழி / தாய்மொழி’ உள்ளது. மத்திய பிரதேசத்தில் கணிசமான மக்களால் சட்டிஸ்கரி பேசப்படுகிறது. போஜ்பூரியிலும், மைதிலியிலும் சட்டிஸ்காரியிலும் சிறந்த இலக்கியப் படைப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்தியாவின் அட்டவணை மொழிகள் வரிசையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு நீண்ட காலமாக இருக்கிறது.
  • சில மாநிலங்களில் அதிகாரபூர்வமாகவும், அதிகாரபூர்வமற்றும் பெரும் தொகை மக்களால் பேசப்படும் பல மொழிகள் உள்ளன. உதாரணமாக, உத்தர பிரதேசத்திலும் டெல்லியிலும் பிஹாரிலும் உருது மொழி பேசுவோர் கணிசமாக உள்ளனர். எனவே உருதுவும் அமித் ஷாவுடைய ‘உள்ளூர் மொழி’ அங்கீகாரத்துக்குள் வருமா? அப்படியென்றால், எந்தெந்த மொழிகளை இந்திய அரசு இந்த வரையறைக்குள் கொண்டுவர இருக்கிறது?

உண்மையான உள்ளூர் மொழிகளுக்குப் பயன் உண்டா?

  • இந்திய அரசின் அறிவிப்பில் தெளிவில்லாத சூழலில், நாம் ‘மாநில மொழிகள்’ என்பதைத்தான் அமித் ஷா ‘உள்ளூர் மொழிகள்’ என்று குறிப்பிடுவதாகக் கொண்டாலும்கூட அதிலும் சிக்கல்கள் உள்ளன. ஏனென்றால், ஏற்கெனவே இங்கு மாநிலங்களுக்குள் பல உண்மையான உள்ளூர் மொழிகள் உள்ளன. அவை அரசிடமிருந்து எதிர்பார்க்கும் விஷயங்களும் நெடுங்காலமாக நிறைவேறாமல் உள்ளன.
  • மொழிவாரி மாநிலங்கள் என்று கூறப்படுவவை ஒரு பிராந்தியத்தில் எந்த மொழி முதன்மையான மொழியாக, பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகின்ற மொழியாக இருக்கிறதோ அந்த மொழியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. ஆயினும், எந்த ஒரு மாநிலமும் மொழி அடிப்படையில் ஒருபடித்தானது இல்லை. ஒவ்வொரு மொழிவாரி மாநிலத்திலும் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.
  • பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழிதான் ‘மாநில மொழி’ என்ற தகுதியைப் பெறுகிறது என்றால், ஏனைய மொழிகள் சில பகுதிகளில் கணிசமானோரால் பேசப்படுகின்றன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், கன்னடம், மலையாளம், தெலுங்கு, உருது, செளளராஷ்டிரம் போன்றவற்றைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கணிசமாக உள்ளார்கள். இவர்களில் பெரும்பாலோர் தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். பள்ளிக் கல்வியில் தமிழைப் பாட மொழியாகக் கொண்டு கற்றுக்கொள்வது அவர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. எனினும், வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் இவர்களுக்கு அவர்களுடைய தாய்மொழியைக் கற்பிப்பது முக்கியம். இது மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமை.
  • தமிழகத்தில் சில இடங்களில் அப்படி பயிற்றுவிக்கப்படுகிறது என்றாலும், தேவை அதிகம். கற்பித்தலில் மட்டும் அல்லாது, முக்கிய அரசாணைகள், அறிவிப்புகள் ஆகியவற்றை அந்தந்த மொழிகளில் தருவதும் அவசியம். இந்தியா முழுவதும் இப்படியான தேவைகளை முன்னிறுத்தும் சிறுபான்மை மொழிகள் உள்ளன.
  • இன்னொரு விஷயம், குறிப்பிட்ட பிராந்தியத்தில் கணிசமானோரால் பேசப்படும் மொழி. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால், பிற எல்லா மக்களையும்விட ‘உள்ளூர் மொழி’ அல்லது ‘தாய்மொழி’ என்பது படுகு. அதற்கு எழுத்து கிடையாது. எனவே படகர்கள் தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தி படுகப் பாட்டுகளை எழுதுகிறார்கள், பைபிளை மொழிபெயர்க்கிறார்கள்.
  • நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டால் அவர்கள் பெரும்பான்மையினராக அமைவதில்லை. அதற்கு முக்கியக் காரணம் தொழில் வளர்ச்சியோ, உயர் கல்வி நிறுவங்களோ இல்லாத நீலகிரி மாவட்டத்திலுள்ள அவர்கள் சிறந்த கல்வி வாய்ப்பையும் வேலை வாய்ப்புகளையும் பெறுவதற்காக வெளிமாவட்டங்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து சென்றுவிட்டது ஆகும். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பத்தாண்டுகளில் மக்கள்தொகை குறைந்துபோன மாவட்டம் அது ஒன்றுதான்.
  • மேலும், அந்த மாவட்டத்தில் குறைந்தது ஆறு பழங்குடி இனங்கள் இருக்கின்றன. அவர்கள் ஒவ்வொருவரின் எண்ணிக்கையும் சுமார் இரண்டாயிரத்துக்குள்தான் அடங்கும் என்றாலும், அவர்களுக்கென்று தனிமொழிகள்/தாய்மொழிகள் உள்ளன. அவற்றில்தான் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். படுகர்கள் உள்ளிட்ட இந்தப் பழங்குடி மக்களும் தமிழ்மொழியை ஏற்றுக்கொள்வதில் இதுவரை எந்தச் சிக்கலும் இல்லை என்றாலும், இந்த மொழியினர் தம் மொழிகளுக்கான வளர்ச்சிக்காக அரசிடம் எதிர்பார்ப்பது அதிகம்.
  • கேள்வி என்னவென்றால், இவர்களுடைய நலன் – மேம்பாட்டுக்கு இந்திய அரசின் திட்டம் என்ன? இதுவரை குறைந்தபட்சம் ‘உள்ளூர் மொழி’ என்ற பிரயோகத்தையேனும் அவர்கள் தக்க வைத்திருந்தார்கள். இப்போது உள்ளூர் மொழி என்ற பெயரையும் அவர்களிடமிருந்து அரசு பறிக்கப்போகிறதா? அப்படி இல்லை என்றால், உள்ளூர் மொழி வழியிலான கல்வி எனும் அறிவிப்புக்குள் இந்த உள்ளூர் மொழிகளுக்கான திட்டங்கள் ஏதும் இருக்கிறதா?

உள்ளூர் மொழிகள் மீதான தாக்குதல்

  • பழங்குடி மக்களிடம் பேசினால், அவர்களுடைய மொழி மீது தாக்குதலையே இதுவரை இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கும் சங்க பரிவாரங்கள் மேற்கொண்டிருப்பதைச் சொல்வார்கள். குறிப்பாக, பழங்குடிகள் மிகுந்த வட கிழக்கு மாநிலங்களில் சென்ற கால் நூற்றாண்டில் இந்தி எப்படியெல்லாம்  வளர்க்கப்பட்டது என்பதும், எப்படியெல்லாம் உள்ளூர் மொழிகள் சிதைக்கப்பட்டன என்பதும் தனித்தும் விரித்தும் எழுதப்பட வேண்டிய கதை.
  • இன்னொரு விஷயம், உள்ளூர் மொழி கல்வி நிறுவனங்களில் இந்திய அரசின் அக்கறை என்ன என்பது ஆகும். நேரடியாக ஒரு மாணவர் உயர் கல்விக்கு வந்து அமர்ந்துவிடுவது இல்லை. பள்ளிக்கல்வியை அவர் முடிக்க வேண்டும். அப்படியானால், உள்ளூர் மொழி வழியிலான உயர் கல்வியில் அக்கறை காட்டுவதாகச் சொல்லும் ஓர் அரசாங்கம் பள்ளிக் கல்வியிலும் அந்த அக்கறையைக் காட்ட வேண்டும். தமிழ்நாட்டையே எடுத்துக்கொண்டால் தமிழ் வழியில் கற்பிக்கும் பள்ளிகள் உள்ளன. பெரும் பகுதியானவர்கள் இந்தப் பள்ளிகளில் விளிம்புநிலையினர். இந்த வகைப் பள்ளிகளுக்கும் அங்கு படிக்கும் மாணவர்களும் அரசு கொடுப்பது என்ன? ஏதாவது மானியம், சலுகைகள் உள்ளனவா?

உள்ளூர் செயலாக்கத்தை தேசியமயமாக்க முடியுமா?

  • எல்லாவற்றிலும் முக்கியம், இப்போது பாஜக அரசு பேசும் ‘உள்ளூர் மொழி வழியிலான கல்வி’ ஒருவேளை செயல்முறைக்கு வருமானால், கல்வியை முழுமையாக மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்றினால் மட்டுமே அது சாத்தியம். ஏனென்றால், அந்தந்த மாநிலங்கள்தான் அவரவர் மொழிக்கான பாடத்திட்டத்தை, வகுப்புகளை, தேர்வுகளைத் திட்டமிட்டு செயலாற்ற முடியும். உள்ளூர் அளவில் செயல்பாடு என்று பேசிக்கொண்டு தேசிய அளவில் கல்விக் கொள்கையை வகுப்பதும், முடிவுகளை எடுப்பதும் அபத்தமாக இருக்கும். அதேபோல, தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வுகள், வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகள் எல்லாவற்றையும் ‘உள்ளூர் மொழி’யில் இனி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அரசு அறிவிக்க வேண்டும்.
  • இது தொடர்பில் தன்னுடைய நிலைப்பாடு என்ன என்பதையும் மோடி அரசு அறிவிக்க வேண்டும்.

ஆங்கிலத்தை வெளியேற்றுவதா?

  • மிக முக்கியமான இன்னொரு விஷயம் என்னவென்றால், உள்ளூர் மொழியை வளர்க்கிறேன் என்றேன் பெயரில் ஆங்கிலத்தை அழித்தொழிக்க முற்பட வேண்டியது இல்லை. இந்தியாவில் தாய்மொழி வழியிலான கல்விக்கான முயற்சிகளை முன்னெடுத்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஆனால், ஆங்கிலத்தை அது எதிரியாகச் சித்திரிக்கவில்லை. காரணம், அதற்கு மறைமுக நோக்கம் ஏதும் இல்லை.
  • இந்தியை ஒரு மாநில மொழியாக வளர்த்தெடுக்க நினைத்தால் அதைச் செய்யலாம். ஆங்கிலத்தின் இடத்தில் இந்தியை அமர்த்திவிட முடியும் என்று நினைப்பது பேராசை, அபத்தம்! அந்தப் பேராசை இந்தி மாநிலங்களுக்கு இருக்கலாம்; சங்கப் பரிவாரங்களுக்கு இருக்கலாம்; அதற்குத் தமிழ்நாடு போன்ற ஏனைய மாநிலங்கள் எதற்காக பலியாக வேண்டும் என்பதையும் அமித் ஷா விளக்க வேண்டும்.
  • மத்திய பிரதேசத்தில் ஐஐடியில்கூட இந்தி பயிற்றுமொழியாக ஆக்கப்பட்டுள்ளது என்று அமித் ஷா பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மிக எளிய கலைச்சொற்களைக்கூட உருவாக்காமல் தேவநாகரி மொழி எழுத்துகளில், ஆங்கிலச் சொற்களை எழுதுவதன் மூலம் அவை இந்திச் சொற்களாகிவிட முடியுமா என்ற கேள்விக்கு,  ‘அது ஹிங்க்லிஷ்’ என்று விநோத விளக்கத்தையும் அவர்களே கொடுத்து சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். ஆனால், இத்தகு அபத்தங்களை எல்லாம் எல்லா மாநிலங்களும் ஏற்கத் தேவை இல்லை.
  • ஆங்கிலத்துடன் ஒட்டியும் வெட்டியுமான உறவைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. மொழிபெயர்ப்புகளை எவ்வளவு உயிர்ப்போடு கொண்டுவர வேண்டும் என்றும் தமிழர்களுக்குத் தெரியும்; அதேசமயம், ஆங்கிலம் போன்ற ஓர் உலக மொழியை ஆக்கபூர்வமாக எப்படி அணுகுவது என்பதும் தமிழர்களுக்குத் தெரியும். ஒருபுறம் தம்முடைய பிள்ளைகளை ஆங்கிலத்தில் அதுவும் வெளிநாட்டு நிறுவனங்களில் படிக்க வைத்துக்கொண்டே மறுபுறம் ‘ஆங்கிலம் ஒழிக; இந்தி வாழ்க’ என்று கோஷம் எழுப்பும் இரட்டைத்தனம் எமக்கு வேண்டியது இல்லை.
  • ஆகையால், ‘உள்ளூர் மொழி வழியிலான கல்வி’ என்று சொல்லும்போது அதை எப்படிப் பார்ப்பது என்பது அந்தந்த மாநிலங்களின் எல்லைக்குள் அமைய வேண்டும். இந்த முடிவை இந்திய அரசு எடுக்குமா?

உள்ளே வெளியே ஆட்டம்

  • இப்படி வரிசையாகக் கேள்விகளை எழுப்பிக்கொண்டால் ஒரு விஷயம் தெரியவரும், ‘தேசிய கல்விக் கொள்கை’ என்ற பெயரில் பாஜக அரசு இன்று எதையெல்லாம் செயல்படுத்த விரும்புகிறதோ அதற்கு நேர் எதிரான முடிவுகளை எடுத்தால் மட்டுமே ‘உள்ளூர் மொழி வழியிலான கல்வி’ என்பது உண்மையில் சாத்தியம் ஆகும். ஆக, ஒருபோதும் அப்படியான முடிவை அவர்கள் எடுக்க மாட்டார்கள். அப்படியானால், இந்த ‘உள்ளூர் மொழி வழியிலான கல்வி’யின் நோக்கம்தான் என்ன?
  • ஒற்றை அடையாளத்துக்குள் இந்தியாவைக் கொண்டுவர இந்தியை ஒரே மொழி ஆக்குவது பாஜக அரசின் முக்கியமான தேவையும் நோக்கமும் ஆகும். அதை நோக்கிய செயல்பாட்டில் இந்தியை அவர்கள் மேலும் வலுப்படுத்த விரும்புகிறார்கள். அதை ‘உள்ளூர் மொழி’ வளர்ச்சி என்ற பெயரில் முன்னெடுக்க விரும்புகிறார்கள்.
  • தமிழர்கள், தாய்மொழி வழியிலான கல்வியை வளர்த்தெடுக்க விரும்புபவர்கள் தம் பணியை வழக்கம்போல முன்னெடுக்கலாம். ஆனால், பாஜக அரசின் இந்தச் சூழ்ச்சியைப் புரிந்து இந்த விவகாரத்தை அணுக வேண்டும். ஏனென்றால், நாம் பேசும் தாய்மொழி வழிக் கல்வியும் அவர்கள் பேசும் உள்ளூர் மொழி வழிக் கல்வியும் ஒன்று அல்ல!

நன்றி: அருஞ்சொல் (02 – 12 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்