TNPSC Thervupettagam

அமெரிக்கா – இஸ்ரேல்: கூட்டுக் களவாணிகள்

October 6 , 2024 51 days 93 0

அமெரிக்கா – இஸ்ரேல்: கூட்டுக் களவாணிகள்

  • இஸ்ரேலிய மக்கள் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7இல் கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியது ஹமாஸ். அதில் 1,100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், இறந்தவர்களில் அதிகம் பேர் அப்பாவி மக்கள். இஸ்ரேலிய அரசு உடனே மூர்க்கமாகத் திருப்பித் தாக்கியது, காஸாவில் ஹமாஸின் கட்டுப்பாட்டிலிருந்த பாலஸ்தீனப் பிரதேசத்தின் மீது குண்டுகளை வீசியது.
  • ஒரு சில நாள்களுக்குப் பிறகு அல்லது ஒரு சில வாரங்களுக்குப் பிறகு தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவிடும் என்று சிலர் நினைத்திருக்கவும் நம்பியிருக்கவும் கூடும். ஆனால், இந்தக் காட்டுமிராண்டித்தனமான பதிலடி தாக்குதல் ஓராண்டாக நீடித்துவருகிறது.
  • இஸ்ரேலியப் படைகளால் இதுவரை 50,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் 90% அப்பாவி மக்கள். கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்குமான விகிதம் இப்போது ஐம்பதுக்கு ஒன்று (50:1) என்றாகிவிட்டது. இந்த எண்ணிக்கையும் பாலஸ்தீனர்கள் உண்மையில் படும் துயரங்களை அப்படியே முழுமையாக தெரிவித்துவிடவில்லை. பத்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காஸா பகுதியிலிருந்தே விரட்டப்பட்டுவிட்டனர்.
  • காஸா பகுதியைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய இஸ்ரேல் இப்போது தனது கவனத்தை லெபனான் மீது திருப்பியிருக்கிறது. இங்கும்கூட அது பயங்கரவாதிகளையும் அப்பாவி மக்களையும் பிரித்துப் பார்த்து தனது தாக்குதலை நடத்தவில்லை. மிகச் சில தனிநபர்களை அழிப்பதற்காக நூற்றுக்கணக்கான லெபனானியர்களைக் கொன்றிருக்கிறது, ஆயிரக்கணக்கானவர்களை வீடிழக்க வைத்திருக்கிறது.

போர்க் குற்றங்கள்

  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இஸ்ரேலிய அரசும் ஹமாஸ் இயக்கமும் போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது. வரலாற்றுரீதியிலான பல நிகழ்வுகளுக்காக, ஹமாஸ் இயக்கம் கடந்த அக்டோபரில் நிகழ்த்திய கொடூரமான தாக்குதலுக்கு விளக்கம் தரவோ, மன்னித்துவிடவோ முடியாது.
  • அதேவேளையில் இஸ்ரேலிய அரசின் குற்றமே நிரம்பிய தாக்குதல்கள் அதைவிடப் பல மடங்கு பெரிதானவை. பழிவாங்கும் சாக்கில் அது நிதானமில்லாமல் நடந்துவருகிறது, பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் குண்டுவீசி தாக்கி தரைமட்டமாக்கிவிட்டது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களைக் கொன்றது மட்டுமல்லாமல் அதைவிட அதிக எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து -மாத்திரைகள், மின்சாரம் ஆகியவை கிடைக்காமல் கடுமையாக கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறது.
  • இந்த மோதல்கள் குறித்த ஊடகங்களின் செய்திகள் இஸ்ரேலியர்களையும் ஹமாஸ் இயக்கத்தையும் மட்டுமே கவனத்தில் கொள்கின்றன. இந்தக் கட்டுரை, ஏனைய குழுக்களையும் நாடுகளையும் பற்றியது. அவை இந்த மோதல் ஏற்படவும் தொடரவும் உதவிக்கொண்டிருக்கின்றன. பெரும்பாலான குற்றச்செயல்களில் குற்றவாளிகள் மட்டும் ஈடுபடுவதில்லை, அவர்களுக்கு வெளியிலிருந்து உடந்தையாக இருப்பவர்களும் உதவுகிறவர்களும் உண்டு. அப்படியானால் ஹமாஸ் இயக்கத்துக்கு உதவியவர்கள் யார், இஸ்ரேலுக்கு உதவிக்கொண்டிருப்பவர்கள் யார்?
  • ஹமாஸ் இயக்கத்துக்குப் பெரிதும் உதவுகிறவர்கள் மதம் சார்ந்த அரசாங்கத்தை நடத்தும் ஈரானும், லெபனானில் இருந்துகொண்டு செயல்படும் இன்னொரு பயங்கரவாத அமைப்பான ஹெஸ்புல்லாவும். மேற்கு நாடுகளின் ஊடகங்கள் இவற்றைப் பற்றித் தொடர்ந்து குறிப்பிட்டு குற்றஞ்சாட்டுகின்றன, அவமானப்படுத்துகின்றன. இஸ்ரேலுக்கு உடந்தையாக இருக்கும் நாடுகள் குறித்துப் பேச அவை தவறுகின்றன அல்லது மறைக்கப் பார்க்கின்றன, எனவே அதை நாம் செய்வோம்.

உதவுவது யார்?

  • இஸ்ரேலிய அரசின் அனைத்து குற்றச்செயல்களுக்கும் உதவும் முதன்மையான உடந்தை அமெரிக்க நாடு. இஸ்ரேலுக்குத் தேவைப்படும் ராணுவ சாதனங்களையும் ஆயுதங்களையும் அது இடைவிடாமல் அனுப்பிக்கொண்டிருக்கிறது. அதைக் கொண்டுதான் காஸாவையும் இப்போது லெபனானையும் குண்டுவீசி அழிக்கிறது இஸ்ரேலிய ராணுவம். அது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளில் இஸ்ரேலைக் கண்டிக்கும் அல்லது மேற்கொண்டு செயல்படவிடாமல் தடுக்கும் தீர்மானங்களையும் நடவடிக்கைகளையும் தனது ரத்து அதிகாரம் (வீட்டோ) மூலம் தடுத்து, இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர உதவிவருகிறது.
  • இந்த விவகாரத்தில் தானும் உடந்தை என்பதை ஏற்க மறுக்கும் அமெரிக்காவின் போக்கை கடந்த வாரம் ஹிலாரி கிளிண்டன் அளித்த பேட்டியில் கண்டேன். முன்னாள் அதிபரின் மனைவி, முன்னாள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் (செனட்டர்), முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், சில காலம் அதிபர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தும் அளவுக்குக்கூட பரிசீலிக்கப்பட்டவர் ஹிலாரி. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இப்போது அவர் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அந்த அனுபவம் குறித்து அவரைப் பேட்டி கண்டனர்.
  • கடந்த இலையுதிர் காலத்துக்குப் பிறகு, அவர் பணியாற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில், ‘காஸா மீது நடத்தும் தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும், உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்’ என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இதுகுறித்து கேட்டபோது, இவையெல்லாம் வெளியிலிருந்து பணம் தந்து ஊக்குவிக்கப்படுவதாகப் புறந்தள்ளிய அவர், ‘போராட்டக்காரர்களில் தீவிர யூத எதிர்ப்பாளர்கள் இருக்கின்றனர்’ என்றார்.

ஹிலாரியின் பேட்டி

  • ஹிலாரியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் தரப்படவில்லை. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னால் அழைப்பின்றியே சில வெளியார் அங்கு வந்தது உண்மை. ஆனால், இந்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்களும் பேராசிரியர்களும்தான், அவர்களும் சொந்தப் பணத்தைச் செலவிட்டுத்தான் இதில் பங்கேற்றனர்.
  • காஸாவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவதைக் கண்டு மனம் பொறுக்காத பல யூத மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் தாங்களாகவே வந்து கலந்துகொண்டனர். அவர்களுடைய மூதாதையர்களைப் போல அல்லாமல் - மனிதாபிமானம் பொங்க இச்செயலில் அவர்கள் ஈடுபட்டனர். (இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரிந்திருந்தும் ஹிலாரியைப் பேட்டி கண்ட ஃபரீத் ஜக்கரியா, அவருடைய குற்றச்சாட்டுகளை மறுக்காமல் அப்படியே விட்டுவிட்டார்).
  • ஹிலாரியின் இந்தப் பேட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே, நியூயார்க் நகரிலிருந்து வெகு தொலைவில் இப்படி ஹமாஸுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதையும் அதை வெளியிலிருந்து ஒரு முகமை ஆதரித்ததையும் அறிந்தேன். அப்படி உதவியது இஸ்ரேல், அதற்கு ஆதரவு காட்டியது அமெரிக்க அரசு.
  • ஹிலாரி கூறிய கருத்துகளை மீண்டும் அவருக்கே போட்டுக்காட்டி, இஸ்ரேலிய அரசின் செயலையும் காட்டியிருந்தால் அவர் சிறிதளவாவது ஆத்ம பரிசோதனை செய்துகொண்டிருப்பாரோ என்னவோ? அதுகுறித்து எனக்கு ஐயம் உண்டு. காரணம் அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்க அரசின் மைய நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்பில் கழித்தவர். எந்த விவகாரத்திலும் எந்த நாளிலும் தங்களுடைய அரசு தவறே செய்யாது என்பதுதான் அவர்களுடைய முதல் வாதமாக இருக்கும்.
  • நடப்பு மோதலுக்கும் முன்னால், அமெரிக்காவில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அதிபர்களும் அரசுகளும் சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீற உடந்தையாக இருந்து உதவியவர்கள்தான். மேற்குக் கரையில் யூத குடியிருப்புகளை இஸ்ரேலிய அரசு வளர்த்துக்கொண்டேபோனது குறித்து எப்போதாவது அமெரிக்க அரசு செல்லமாக கடிந்துகொண்டிருக்கிறதே தவிர, கடுமையாக எச்சரித்ததோ நடவடிக்கை எடுத்ததோ கிடையாது.
  • அமெரிக்காவை ஜனநாயக கட்சி அல்லது குடியரசுக் கட்சி ஆண்டாலும் பாலஸ்தீனர்களுடைய இடங்களை யூதக் குடியிருப்புகளால் ஆக்கிரமித்த இஸ்ரேலிய அரசின் செயலை நிறுத்தும் வல்லமையோ, விருப்பமோ அமெரிக்க அரசுகளுக்கு இருந்ததே இல்லை. இப்படிப் பெருகிய குடியிருப்புகளின் எண்ணிக்கையால், ‘இனி பாலஸ்தீன அரசை ஏற்படுத்துவதே முடியாது’ என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்காக குற்றஞ்சாட்டுவது என்றால் இஸ்ரேலை மட்டுமல்ல அமெரிக்காவையும் சேர்த்தே குற்றஞ்சாட்ட வேண்டும்.

அமெரிக்கா மட்டுமல்ல…

  • சர்வதேச சட்டங்களை மீறும் இஸ்ரேலின் குற்றங்களில் அமெரிக்கா பிரதான உடந்தையாளர். மேலும் சிலரும் உண்டு. அவை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய இந்திய குடியரசும் இந்தக் குற்றத்தில் பங்கேற்பாளர்தான்.
  • இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி ஓராண்டு வந்துவிட்ட நிலையில், இஸ்ரேல் ராணுவத்தால் அப்பாவி பாலஸ்தீனர்கள் இறப்பது அதிகரித்துக்கொண்டேவருகிறது; ஹிலாரி கிளிண்டன் அல்லது அமெரிக்கா போல அல்லாமல் – சுய விமர்சனம், சுய விழிப்புணர்வு உள்ள நாம் இந்தச் செயல் குறித்து நமக்குள் சிந்திக்க வேண்டும். இஸ்ரேல் இப்படிக் கொடுந்தாக்குதல் நடத்த இரு வழிகளில் உதவிய (அந்த இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்தவை) இந்திய அரசை அதற்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்.
  • முதலாவது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ‘காஸாவில் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், சர்வதேச சட்டங்களை இஸ்ரேல் மதிக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவில்லை. இரண்டாவது, இஸ்ரேலின் போர் நடவடிக்கைகள் தொய்வில்லாமல் தொடர இந்தியத் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்படுகின்றனர். இஸ்ரேலில் புதிய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன, நிறைய சம்பாதிக்கலாம் என்று பாஜக மாநில அரசுகள் தொழிலாளர்களை அனுப்பிவைப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
  • இஸ்ரேலின் செயலைக் கண்டிக்காமல் இந்திய அரசு அதற்கு உதவுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, பிரதமர் நரேந்திர மோடிக்கும் இஸ்ரேலியத் தலைவர் பெஞ்சமின் நேதான்யாகுவுக்கும் நிலவும் தனிப்பட்ட நட்பு; அடுத்தது சித்தாந்தம் அடிப்படையிலானது. இஸ்ரேலிய அரசும் தனது (யூத) மத நம்பிக்கையை அரசு நிர்வாகத்துடன் கலந்திருப்பதைப் போல இந்துத்துவ ஆதரவாளர்களும் செயல்பட விரும்புகின்றனர். முஸ்லிம்களை – ‘அவர்கள்’ என்று ஒதுக்கும் சந்தேகம், அல்லது சாத்தானாகப் பார்க்கும் வெறுப்புணர்வுதான் இரண்டாவது காரணம்.
  • இப்படி இஸ்ரேலிய ஆதரவு நிலையை எடுத்ததன் மூலமும் அதன் வன்முறையான தாக்குதல்களை மன்னிப்பதன் மூலமும், உலக அரங்கில் தனக்குரிய இடத்தையே - முக்கியமில்லை என்று புறந்தள்ளிவிட்டது இந்திய அரசு. மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் விவாதம் நடந்தது. சமாதானம் தொடர்பாக வெற்று வார்த்தைகளையும் முழு நம்பிக்கையற்ற கருத்துகளையும் ஒப்புக்குப் பேசியது இந்தியத் தரப்பு.

தீர்வை நோக்கி…

  • ஸ்லோவேனியா பிரதமர் கூறினார்: “இஸ்ரேலிய அரசுக்கு இதை நான் உரத்தும் தெளிவாகவும் சொல்ல விரும்புகிறேன். ரத்தக்களரியை நிறுத்துங்கள், மக்களுடைய துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள், பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களை உங்கள் நாட்டுக்கு அழைத்துவாருங்கள், மேற்குக் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிறுத்துங்கள். திருவாளர் நேதன்யாகு அவர்களே இந்தப் போரை இத்துடன் நிறுத்துங்கள்.”
  • ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கூறியது: “போரை நிறுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியாவும் 152 நாடுகளும் வாக்களித்து 300 நாள்களாகிவிட்டன. அதே கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். லெபனான் இன்னொரு காஸா ஆகிவிடக் கூடாது.”
  • ஸ்லோவேனியாவும் ஆஸ்திரேலியாவும் வெறும் ஜனநாயக நாடுகள் மட்டுமல்ல, இஸ்ரேலின் முக்கிய புரவலரான அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புகொண்டவை. நம்முடைய பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் இல்லாத துணிவு அந்த இருவருக்கும் இருக்கிறது.
  • மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயகம் நிலவும் ஒரே நாடு இஸ்ரேல் என்கிறார்கள். உலகிலேயே அமெரிக்காதான் செல்வ வளத்தில் முதலிடத்தில் இருப்பது, மிக வலிமையுள்ள ஜனநாயக நாடு என்றும் பெயரெடுத்தது. உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியாவுக்குப் பெருமை. காஸாவில் மனித குலத்துக்கு எதிராக இஸ்ரேல் நடத்தும் கொடுமைகளை அடுத்து, இந்தப் புகழ்ச்சியெல்லாம் வெற்று வார்த்தைகளாகிவிட்டன.
  • பிரதாப் பானு மேத்தா கூறுகிறார்: “இதோ, மூன்று ஜனநாயக நாடுகள் சர்வதேச முறைமை சீர்குலையக் காரணங்களாக இருக்கின்றன. இஸ்ரேல் தனது கொடூரமான தாக்குதல்களாலும், அமெரிக்கா அதற்கு உடந்தையாகவும் ஆதரவாகவும் செயல்படுவதாலும், இந்தியாவும் உடந்தை என்று சொல்லும் அளவுக்கு அந்த நடவடிக்கைக்கு தனது கண்டனங்களைத் தெரிவிக்காமல் தவிர்ப்பதன் மூலமும்.”

நன்றி: அருஞ்சொல் (06 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்