TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன?

August 24 , 2024 147 days 120 0

அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸுக்கு சாதக, பாதகங்கள் என்னென்ன?

  • அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறுகிறது. எனினும், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தே அமெரிக்க அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. ஜூலை 21-ஆம் தேதி அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக இப்போதைய அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருமான பைடன் அறிவித்தார். பைடன் பின்வாங்கியது பேசுபொருளாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக கமலா ஹாரிஸின் பிரவேசம் பிரளயத்தை ஏற்படுத்திவிட்டது. அவருக்கான ஆதரவு அலைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் பலத்த ஆதரவை அவர் பெற்றுள்ளார்.
  • சிகாகோவில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பை கமலா ஹாரிஸ் முறைப்படி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்தச் சாதனை அவரை முதல் பெண் அதிபராகவும் அமர்த்துமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
  • கமலா ஹாரிஸுக்கு முந்தைய அதிபர்கள் பிள் கிளின்டன், பராக் ஒபாமா ஆகியோரும் ஆதரவை நல்கியுள்ளனர். தன்னுடைய வெற்றியின் நீட்சியாக, அமெரிக்காவில் வெள்ளை இனத்தை சாராத பெண் ஒருவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது என்பது எத்தகைய வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டது என்று ஒபாமா பேசினார். ”கமலா ஹாரிஸ் தலைமையில் அமெரிக்கா ஒரு புதிய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று பேசி நம்பிக்கையை பாய்ச்சினார்.
  • அதேபோல் முன்னாள் அதிபர் கிளின்டனும், “கமலா ஹாரிஸ் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவர் அமெரிக்க மக்களின் கனவுகளை நனவாக்குவார். மிகுந்த அனுபவமும், நம்பிக்கையும், உற்சாகமும் கொண்ட அதிபர் வேட்பாளர்” என்று ஆதரவுச் சான்றிதழைக் கொடுத்தார். சொந்தக் கட்சியில் முழுமையான ஆதரவு, இளைஞர்கள் மத்தியில் ஏகோபத்திய வரவேற்பு, பல்வேறு தேர்தல் கருத்துக் கணிப்புகளிலும் முன்னிலை என ஜொலித்துக் கொண்டிருக்கும் கமலாவுக்கு முன் இருக்கும் சவால்கள் தான் என்ன?

ஆதரவு எல்லாம் வாக்குகளா?

  • தற்போதைய நிலவரப்படி கமலா ஹாரிஸுக்கு இளம் வாக்காளர்கள் மத்தியில் அதிகப்படியான ஆதரவு உள்ளதை கருத்துக் கணிப்பு முடிவுகள் தெளிவாக விளக்குகின்றன. அவற்றின்படி 18 முதல் 29 அல்லது 18 முதல் 34 வயதிலான வாக்காளர்களில் 50% முதல் 60% பேர் வரை கமலாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதாகக் கூறியுள்ளனர். இது நம்பிக்கை தரும் எண்ணிக்கை என்றாலும், அரியணையைத் தரும் எண்ணிக்கையா என்றால் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை முன்வைக்கின்றனர் தேர்தல் அரசியல் நிபுணர்கள்.

நிபுணர்களின் பார்வையில்...

  • கமலா ஹாரிஸை ஆதரித்து டிக் டாக், மீம், ஸ்டோரி, ரீல்ஸ் என்று அமெரிக்க இளைஞர்கள் தெறிக்கவிடுகின்றனர். ஆனால் இதுவரையிலான தேர்தல் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது அமெரிக்க இளைஞர்கள் வாக்களிக்க காட்டும் ஆர்வம் மிகமிகக் குறைவாகவே இருக்கிறது என்பது தெரிகிறது.
  • நவம்பர் 2020 அதிபர் தேர்தலில் 18 முதல் 29 வயதுடையோர் 52.5% பேரும், 60+ வயதினர் 78% பேரும் வாக்களித்திருந்தனர். அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் 2020 தேர்தலில்தான் இளைஞர்களின் வாக்கு அதிகம். என்றாலும் அதே நிலை இம்முறையும் நீடிக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது எனக் கூறுகின்றனர். உலகளவில் அமெரிக்காவில் தான் தேர்தலில் இளம் வாக்காளர்கள் பங்களிப்பு குறைவு என்ற புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி இதன் மீதான நம்பகத்தன்மையை நிபுணர்கள் விவாதப் பொருளாக முன்வைக்கின்றனர்.

எது தடையாக இருக்கிறது?

  • சரி, இளம் வாக்காளர்கள் தங்களின் அரசியல் பங்களிப்பை பிரச்சார ஆதரவு, இணையவெளியைத் தாண்டி வாக்களிப்பதில் செலுத்தாமல் இருப்பதற்கு இரண்டு தடைகளை ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதன்படி முதல் காரணம் தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வமில்லை என்பது. இளம் வாக்காளர்களில் 77% பேர் தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை என்று எளிமையான பதிலைக் கூறியுள்ளனர்.
  • இரண்டாவது காரணம் சுய விருப்பத்தைக் காட்டிலும் ஒரு விளைவு சார்ந்ததாக இருக்கிறது. தேர்தலில் வாக்களிக்கும் முறையையே இளைஞர்கள் பெரிய சுமையாகக் கருதுகின்றனர். அதாவது வாக்களிக்க முறைப்படி பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவு செய்யும் முறை நிறைய இளம் வாக்காளர்களுக்கு சவாலாக இருக்கிறது. வாக்காளர் பதிவு படிவத்தை தங்களால் பூர்த்தி செய்து பதிவு செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையே பல இளைஞர்களுக்கு இருப்பதில்லை. இளைஞர்கள் பலரும் கல்வி, பணிச் சூழல் என தாங்கள் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் வாக்களித்தல் பிரதானமான பணிகள் பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறுகின்றனர்.
  • இவ்வாறு இருக்க, இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் நிறைய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இளம் வாக்காளர்களை ஊக்குவிக்க டெய்லர் ஸ்விஃப்ட் போன்ற பிரபலங்களை வைத்து பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம் என்ற யோசனைகள் கூட பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் நவம்பரில் தேர்தல் என்பதால் இவை எந்தளவுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மீண்டும் ஒரு கேள்விக் குறியே!
  • 2024 தேர்தலில் இளம் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஊக்குவித்தல், நாட்காட்டி ரிமைண்டர்களை ஆட்டோமேட் செய்து நினைவூட்டுதல், தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்றவை பின்பற்றப்படவுள்ளன. இப்போதுதான் அமெரிக்காவின் சில மாகாணங்கள் ‘ப்ரீ ரெஜிஸ்ட்ரேஷன்’ (Pre Registration) என்ற முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது 16, 17 வயது இளைஞர்கள் தாங்கள் தேர்தலில் வாக்களிக்க விரைவில் தகுதியாகிவிடுவோம் என்பதை பதிவு செய்து கொள்ளுதல். இதன் மூலம் அவர்கள் தேர்தலை சந்திக்கும் காலம் வரும்போது வாக்களிக்க பதிவு செய்வது எளிமையாகும் என்ற கணிப்பில் இந்த நடைமுறை அமலாகியுள்ளது.
  • கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரங்கள் மூலம் இளைஞர்கள் வாக்காளர்களாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதில் புத்துயிர் பாய்ச்சியுள்ளார் என்றாலும் கூட, அந்த எழுச்சி அத்தனையும் வாக்குகளாக மாறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெண் என்ற பெரும் சவால்!

  • “ஒவ்வொரு அமெரிக்கரின் சார்பாகவும், கட்சி, இனம், பாலினம், மொழி என அனைத்து பேதங்களையும் கடந்து நான் இன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதை முறைப்படி ஏற்றுக் கொள்கிறேன்.” என்று தான் கமலா ஹாரிஸ் சிகாகோ மாநாட்டில் முழங்கினார். பாலின பாகுபாடுகளற்ற சமூகத்தை அவர் தன் பேச்சின் மூலம் வலியுறுத்தினார்.
  • ஆனால், பெண் என்பதாலேயே கமலா ஹாரிஸுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் சில பின்னடைவுகள் ஏற்படும் என்று சிலர் கணிக்கின்றனர். அமெரிக்கா சுதந்திரம் பெற்ற 248 ஆண்டுகளில் இதுவரை ஒரு பெண் கூட நாட்டின் அதிபராகவில்லை. தனியுரிமைக்கும், பெண்ணுரிமைக்குமான குரல்கள் ஊற்றெடுக்கும் நாடாக இருந்தும் கூட இதுதான் நிலையாக இருக்கின்றது. இதற்கான அடிப்படையை ஆராய்ந்தால் அமெரிக்கத் தேர்தலில் பாலின பாகுபாடு மிகவும் அதிகமாக இருப்பதை உணரலாம். அமெரிக்க ஆண் வாக்காளர்கள் மத்தியிலான கருத்துக் கணிப்புகள் பலவும், அவர்கள் அரசியல் தலைமைப் பதவிகளில் பெண்களைவிட ஆண்களே சிறந்து விளங்குவார்கள் என்று ஆணித்தரமாக நம்புவதாகக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கின்றது.
  • 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் குடியரசுக் கட்சியின் வேட்பாளரானார். அவருக்கு கட்சியில் ஆதரவு இருந்தாலும் கூட பொதுத் தேர்தலில் மக்கள் ஆதரிக்கவில்லை. தேர்தல் பிரச்சாரங்களிலேயே ஹிலாரி பாலின ரீதியிலான விமரசனங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரச்சாரங்களில் அவர் அணிந்த உடை தொடங்கி அவர் பூசிக் கொண்ட உதட்டுச் சாயம் வரை விமர்சிக்கப்பட்டன. அவருடைய பேச்சு, உடல்மொழி எல்லாவற்றையும் பெண் என்பதை முன்வைத்தே அமெரிக்க சமூகத்தில் சிலர் அணுகினர். அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகாமல் போனார் ஹிலாரி. பிரச்சாரங்களில் தான் பாலின ரீதியிலான பாகுபாட்டை உணர்ந்ததாக ஹிலாரி பின்னாளில் அளித்த ஊடகப் பேட்டியில் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
  • ஹிலாரி மட்டுமல்ல இந்த அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து விலகிய நிக்கி ஹேலே வரை பாலின பாகுபாட்டை உணர்ந்துள்ளனர். குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகியதற்கு மாகாணங்களில் ஆதரவு கிடைக்காதது ஒரு காரணம் என்றாலும், அவருடைய நிறம், தோற்றம், அவர் தனித்து வாழும் பெண் போன்ற விஷயங்களும் முக்கிய பேசுபொருளாகி பங்களித்துள்ளன என்பது அதிர்ச்சி தரும் அமெரிக்க தேர்தல் கள நிதர்சனம்.அமெரிக்க அதிபர் தேர்தலில் நிலவும் பாலினம் சார்ந்த பார்வை வயது, இனம், கல்வி, வருமானம் என பல படிநிலைகளில் பல்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • அமெரிக்க வாக்காளர்கள் ஏன் பெண் ஒருவர் அதிபராவதை விரும்பவில்லை என்ற அடிப்படைக் கேள்வியோடு அங்கொரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் மூன்றுவிதமான பதில்களை அமெரிக்கர்கள் கொடுத்துள்ளனர். 1. பெண்கள் எளிதாக புண்பட்டுவிடுவார்கள். 2. பெண்கள் பணியிடப் பிரச்சினைகளை மிகைப்படுத்துவார்கள். 3. பெண்கள் ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அதிகாரத்தைப் பெற முயல்வார்கள் என்று கூறியுள்ளனர்.
  • பாலினம் சார்ந்த எண்ணங்கள், அமெரிக்க தேர்தல் அரசியலில் நீண்டகாலமாகவே தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் குறிப்பாக தற்போதைய மாறிவரும் சூழலில் கருக்கலைப்பு சட்டங்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு மத்தியில் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் பாலினம் இன்னும் சக்திவாய்ந்த காரணியாக உருவெடுத்துள்ளது. பெண்கள் தொடர்பாக எதிர்மறை எண்ணங்கள் உடையவர்கள் கமலா ஹாரிஸுக்கு வாக்களிப்பது சந்தேகமே என்பதே அண்மைய கருத்துக் கணிப்பாக உள்ளது. கமலா ஹாரிஸின் இனி வரும் பிரச்சாரங்கள் இந்த நிலவரத்தை எவ்வாறு மாற்றும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை தலைவராக இருந்த பேராசிரியர் ராமு மணிவண்ணன், அமெரிக்க அதிபர் தேர்தலில் இளைஞர்களின் தாக்கமும், பாலின பாகுபாடு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் நம்முடன் சில முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
  • அவர் கூறியது: “அமெரிக்க இளைஞர்களில் ஒரு சாரார் ஆளும் ஜனநாயக அரசின் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக காசா விவகாரத்தில் பைடனின் நிலைப்பாட்டை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதேபோல் அமெரிக்காவில் இன்றும், வெள்ளை மேலாத்திக்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் இருக்கின்றனர். இந்த இரு சாராரின் வாக்குகள் கமலாவுக்கு நிச்சயமாகக் கிடைக்காது.
  • ஆனால் இளைஞர்களிலேயே தாராளவாதிகள், ஜனநாயகக் கட்சிக் கொள்கைகளின் மீது ஆதரவு கொண்டவர்கள் கமலாவை வெளிப்படையாக ஆதரிக்கிறார்கள். ஏன், அமெரிக்க வெள்ளை இன மக்களிலேயே ஒரு சாரார் கூட கமலா ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்க தயராக இருக்கின்றனர். அந்தவகையில் இளைஞர்கள் மத்தியில் கமலாவுக்கான ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது ஏற்புடையதே.
  • அதேபோல், பாலின பாகுபாடு பிரச்சினையை எடுத்துக் கொண்டால் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவர் இயல்பிலேயே வெள்ளை மேலாத்திக்கத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறார். அதுமட்டுமல்லாது ஆதிக்கம் நிறைந்த ஆணாகவும் அறியப்படுகிறார். அதிபர் தேர்தல் என்று வரும்போது டொனால்ட் ட்ரம்ப்பா அல்லது கமலா ஹாரிஸா என்று தேர்வு செய்யும் வாய்ப்பில் பெண்கள் கமலா ஹாரிஸையே ஆதரிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
  • கடந்த 2016 தேர்தலில் ஹிலாரி கிளின்டனை மக்கள் ஆதரிக்காததற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. அவரது கணவர் 8 ஆண்டுகளாக அதிபராக இருந்தார். ஹிலாரியே 8 ஆண்டுகள் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அதனால் மக்கள் அவரை ஓர் ஆதிக்கவாதியாகவே பார்த்தனர். அந்தத் தேர்தலில் ட்ரம்ப் vs ஹிலாரி என்று வரும்போது அவர்களுக்கு ட்ரம்ப் நல்ல தெரிவாகத் தெரிந்தார்.
  • ஆனால் இப்போது வெள்ளை மேலாதிக்கம் நிறைந்த, எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்குள்ளும் எளிதில் தன்னை வரையறுத்துக் கொள்ளாத ட்ரம்ப்பா? அல்லது கார்ப்பரேட் முகம் இருந்தாலும் கூட ஆதிக்கவாதியாக இல்லாத கமலா ஹாரிஸா என்று வரும்போது மக்கள் தங்களின் ஆதரவை வெகுவாக கமலா ஹாரிஸுக்கு அளிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆதரவாளர்களில் வெள்ளை ஆதிக்க சிந்தனை கொண்ட பெண்களும் இருக்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
  • இப்போதைய நிலவரப்படி இன்னாருக்குத் தான் வெற்றி என்று உறுதிபட கூற இயலாவிட்டாலும் கூட இளைஞர்கள் ஆதரவு பெற்றும், பாலின பாகுபாடுகளைக் கடந்தும் கமலா ஹாரிஸ் சற்றே முன்னிலை வகிக்கிறார் என்று கொள்ளலாம். இறுதி தீர்ப்பு மாறுபடலாம்” என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
  • 1872 அமெரிக்க அதிபர் தேர்தலில் விக்டோரியா வுட்ஹல் என்ற பெண் முதன்முதலில் போட்டியிட்டார். அதன் பின்னர் 2016-ல் ஹிலாரி கிளின்டன் போட்டியிட்டு தோற்றார். இப்போது 2024-ல் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். காலங்கள் மாறியதுபோல் அமெரிக்க பொதுபுத்தியில் பாலினம் சார்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை தேர்தல் முடிவே உறுதி செய்யும். கமலாவுக்கு பாலினம் மற்றும் நிறமும், இனமும் கூட சவாலாக இருக்கிறது. உரிமைகள் பேசும் அமெரிக்கா தன்னை எப்படி புதிய உலகுக்கு அடையாளப்படுத்தும் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தும். அதுபோலத்தான் இளைஞர்களின் ஆதரவும் என்னவென்பதை தேர்தலுக்குப் பிந்தைய வாக்கு சதவீதங்கள் உணர்த்தும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்