TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் தேர்தல் வினோதம்!

October 13 , 2024 43 days 99 0

அமெரிக்க அதிபர் தேர்தல் வினோதம்!

  • அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம், விவாதங்கள் நடக்கின்றன. உலகமே இந்தத் தேர்தல் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது; உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாகவும், பாரம்பரியமுள்ள ஜனநாயக நாடாகவும் திகழும் அமெரிக்கா வல்லரசாகவும், பிற நாடுகளின் உள்விவகாரங்களில்கூட தலையிட்டு நாட்டாமை செய்யும் பெரிய அண்ணனாகவும் இருப்பதாலும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
  • நாட்டு மக்கள் அனைவரும் வாக்களித்துத்தான் அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றாலும் அவர்கள் அனைவருமே அதிபருக்கு நேரடியாக வாக்களிப்பதில்லை என்பதுதான் இங்கு வினோதம்.
  • அதிபரைத் தேர்ந்தெடுக்க முதலில் தங்களுக்குள் மாநில வாரியாக தேர்தல் குழாமைத்தான் (எலக்டோரல் காலேஜ்) மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் தேர்தல் குழாத்தில் இடம்பெறுகிறவர்களே இறுதி வாக்காளர் குழுவாக இருந்து அதிபரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இது சற்றே குழப்பம் தருவதாக இருக்கிறதா? இது எப்படிச் செயல்படுகிறது, ஏன் இந்த ஏற்பாடு என்பதையும் அடுத்து இனி காண்போம்.

538 பேருள்ள வாக்காளர் குழு

  • அமெரிக்க நாட்டில் அதிபரைத் தேர்ந்தெடுப்பது 538 பேரைக் கொண்ட இறுதி வாக்காளர் குழு மட்டுமே. அனைத்து வாக்காளர்களும் முதலில் வாக்களிப்பது இந்தக் குழுவைத் தேர்ந்தெடுக்கத்தான். இந்தக் குழுவில் இடம்பெறுகிறவர்கள் யார்?
  • தேர்தலுக்கு முன்னால் குடியரசு, ஜனநாயகம் ஆகிய இரண்டு கட்சிகளும் மாநில வாரியாக, வாக்களிப்பதற்கான பிரதிநிதிகளை முதலில் தேர்ந்தெடுக்கின்றன. இவர்கள்தான் இறுதியாக அதிபர் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கப்போகிறவர்கள். இது எப்படி மக்களுடைய உண்மையான தேர்வைப் பிரதிபலிப்பதாக இருக்கும்? பெரும்பாலும் இருக்கும் - சில வேளைகளில் மாறியும் போகும்! இந்தப் பிரதிநிதிகள் அனைவருமே அரசியல் கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அல்லது ஆதரவாளர்கள்.

சம பிரதிநிதித்துவம்

  • மாநிலத்தின் நிலப்பரப்பளவு வேறுபட்டாலும் மக்கள்தொகை வேறுபட்டாலும் எல்லா மாநிலத்துக்கும் சம எண்ணிக்கையில்தான் பிரதிநிதிகள் இந்தத் தேர்தல் குழாமில் இடம்பெறுவார்கள். அதிலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதிகள் அவையிலும் செனட் அவையிலும் எவ்வளவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அதற்கு சம எண்ணிக்கையில்தான் இந்தத் தேர்தல் குழாத்திலும் இருப்பார்கள். உதாரணத்துக்கு மிச்சிகன் மாநிலத்துக்குத் தேர்தல் குழாம் வாக்குகள் 15. நாடாளுமன்றத்தில் அந்த மாநிலத்துக்கு 2 செனட்டர்கள், 13 பேர் பிரதிநிதிகள் அவை உறுப்பினர்கள்.
  • அதிபரைத் தேர்ந்தெடுக்கிறவர்கள் யார் என்று தெரிந்துவிட்டது, அவர்கள் எத்தனை பேர் என்பதும் தெரிந்துவிட்டது. அவர்கள் அளிக்கும் வாக்குகள் எப்படி அதிபருக்குச் சேருகின்றன என்பதில்தான் அந்த வினோதத்தின் மையக் கருவே இருக்கிறது.

வெற்றியாளருக்கே அனைத்தும்!

  • ஒரு மாநிலத்தில் 15 வாக்குகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஒருவருக்கு 8 பேரும் இன்னொருவருக்கு 7 பேரும் வாக்களித்தாலும் இறுதியில் அந்த 15 வாக்குகளும் 8 வாக்குகள் பெற்றவரையே சேரும். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பெறப்படும் வாக்குகள் எண்ணிக்கை கூட்டப்படும்.
  • இதிலும் ஒரு உள்குத்து இருக்கிறது. மைனே, நெப்ராஸ்கா போன்ற தொலைதூர மாநிலங்கள் தங்களுடைய தேர்தல் குழாமை, மக்கள் அளிக்கும் உண்மையான வாக்குகள் அடிப்படையில் தேர்வுசெய்யும் சிக்கலான துணை நடைமுறையும் இருக்கிறது.
  • நாட்டின் தலைநகரம் அமைந்துள்ள கொலம்பியா மாவட்டம் ஒரு மாநிலம் இல்லையென்றாலும் அதற்கும் 3 தேர்தல் குழாம் வாக்குகள் தரப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் அதிபராக பதவியில் அமர வேண்டுமென்றால் மொத்தமுள்ள 538 தேர்தல் குழாம் வாக்குகளில் குறைந்தபட்சம் 270 பேரின் ஆதரவை வென்றிருக்க வேண்டும்.

நவம்பரில் வாக்களிப்பு

  • அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் நவம்பர் மாதம் வாக்களிப்பார்கள். இந்தத் தேர்தல் குழாம் உறுப்பினர்கள் ஒரு மாதம் கழித்து டிசம்பரில் வாக்களிப்பார்கள். அவர்களுடைய வாக்குகளை எண்ணி, அமெரிக்க நாடாளுமன்றம் சான்றளித்த பிறகே, ஜனவரி தொடக்கத்தில் அதிபர் பதவியேற்பார். எப்படி இருக்கிறது இந்தத் தேர்தல் முறை?
  • அதிபர் தேர்தலில் 270க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவை ஒருவர் பெற வேண்டுமென்றால், முக்கியமான – பெரிய என்றும் சொல்லலாம் – மாநிலங்களில் அதிக வாக்குகளைப் பெறுவது அவசியம். மக்கள் அளிக்கும் வாக்குகளில் ஒருவர் அதிகபட்சம் பெற்றாலும், தேர்தல் குழாமின் வாக்குகள் அதை எதிரொலிக்கவில்லை என்றால் அவரால் வெற்றிபெற முடியாது.

ஹிலாரி தோல்வி

  • சமீபத்திய உதாரணம் இதோ: 2016இல் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுக்குத்தான் பெருவாரியான மக்கள் நேரடியாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப், ஃபுளோரிடா - பென்சில்வேனியா மாநிலங்களில் வாக்காளர் குழாமை முழுமையாக கைப்பற்றியதால் வென்றார். அங்கே இரு மாநிலங்களுக்கும் தலா 20 வாக்குகள்.
  • இப்படி வாக்காளர் குழு முறையை அதிபர் தேர்தலில் உட்புகுத்தியதன் காரணம் எந்தவொரு மாநிலமும் தனிச் செல்வாக்குச் செலுத்திவிடக் கூடாது, நாட்டின் அனைத்து மாநிலங்களும் சம முக்கியத்துவம் பெற வேண்டும், முக்கியமாகக் கருதப்பட வேண்டும் என்பதுதான். மாநிலங்களுக்கு அரசியல் அதிகாரத்தில் சம பங்கும் பொறுப்பும் இருப்பதை அமெரிக்க கூட்டாட்சி முறை பல வழிகளிலும் உறுதிசெய்திருக்கிறது.
  • ‘இந்தத் தேர்தல் குழாம் முறை ரத்துசெய்யப்பட வேண்டும், மக்களிடையே நேரடியாக அதிக ஆதரவு பெற்றவரையே அதிபராகத் தேர்ந்தெடுக்க வேண்டும், பல நாடுகளில் உள்ள இதே நடைமுறையை நாமும் பின்பற்ற வேண்டும்’ என்று இப்போதும் பல அமெரிக்கர்கள் வலியுறுத்துகின்றனர்.
  • ‘மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்கள் அரசியலில் அதிகம் செல்வாக்குப் பெற்றுவிடாமல் தடுக்கவும், அரசில் சிறுபான்மையோர் பிரதிநிதித்துவம் பெறவும் இந்த வாக்காளர் குழு முறைதான் பயன்படுகிறது, எனவே இதுவே தொடர வேண்டும்’ என்கின்றனர் மற்றவர்கள்.

நன்றி: அருஞ்சொல் (13 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்