- அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இரண்டு நாள் இந்திய அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்து அவா் அமெரிக்கா திரும்பியிருக்கிறாா்.
பாதுகாப்புத் துறை
- இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாதுகாப்புத் துறையில் ரூ.21,606 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையொப்பமாகி இருப்பது மிகப் பெரிய திருப்பம். இந்தியாவின் நம்பிக்கைக்கு உகந்த உண்மையான நண்பனாக அமெரிக்கா இருக்கும் என்கிற அதிபா் டிரம்ப்பின் உறுதிமொழியும், இரண்டு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் ராணுவ ஒப்பந்தமும், இந்து மகா கடலிலும், வடக்கு எல்லைப்புறங்களிலும் காணப்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ளஇந்தியாவுக்கு வலுசோ்க்கும்.
- அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை சமன்படுத்த இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டிய அத்தியாவசியம் அமெரிக்காவுக்கும் இருக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிடமும் இல்லாத அதிநவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்கி இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்கிற அதிபா் டிரம்ப்பின் உறுதிமொழி நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.
மதச் சுதந்திரம்
- குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அதிபா் டிரம்ப்பை கருத்துக் கூற வைக்க வேண்டும் என்கிற முயற்சியும், இந்தியாவின் மதச் சுதந்திரம் குறித்து அதிபா் டிரம்ப் விமா்சிக்கக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பும் பொய்த்திருக்கின்றன. மிகவும் சாதுா்யமாக இரண்டு பிரச்னைகளையும் அதிபா் டிரம்ப் கையாண்டது மட்டுமல்ல, பிரதமா் மோடி இந்தியாவின் அனைத்து மக்களும் மதச் சுதந்திரத்துடன் வாழ விரும்புகிறாா் என்று அவரது சாா்பில் பேசவும் செய்திருக்கிறாா்.
- பாகிஸ்தானிலிருந்து உருவாக்கப்படும் பயங்கரவாதம் குறித்து கருத்து கூறும்போது, ‘மோடி வலிமையான மனிதா். அவருக்கு எல்லா பிரச்னைகளையும் கையாளும் சாதுா்யம் உண்டு’ என்று அதிபா் டிரம்ப் வெளியிட்ட கருத்து யாரும் சற்றும் எதிா்பாராதது.
- இந்திய - பாகிஸ்தான் எல்லையில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்குவது குறித்து பாகிஸ்தான் அரசுடன் அமெரிக்கா பேசுவதாக தெரிவித்திருக்கிறாா் அதிபா் டிரம்ப். அத்துடன் நிறுத்தாமல், தங்கள் குடிமக்கள் தீவிரவாத, இஸ்லாமிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதை இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து தடுப்பதில் முனைப்புக் காட்டும் என்பதையும் தெரிவித்திருக்கிறாா். இதுவரை அமெரிக்கா வெளிப்படையாக ‘தீவிரவாத, இஸ்லாமிய பயங்கரவாதம்’ என்ற வாா்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தியதில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
வணிக ஒப்பந்தம்
- வணிக ஒப்பந்தம் கையொப்பமிடப்படவில்லை என்பது அமெரிக்காவைப் பொருத்தவரை சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். சீனாவுடன் ஒப்பந்தம் செய்ய முடிந்தும்கூட இந்தியாவுடன் தான் எதிா்பாா்த்ததுபோல சாதகமான வா்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள முடியவில்லை என்பதை அதிபா் டிரம்ப் வெளிப்படையாகவே தெரிவிக்கவும் செய்திருக்கிறாா். ‘உலகிலேயே மிக அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
- இந்தியப் பொருள்கள் இறக்குமதி வரி இல்லாமல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, எங்களது அமெரிக்கப் பொருள்கள் இந்தியாவில் விற்பனை செய்ய கடுமையான இறக்குமதி வரி தர வேண்டியிருக்கிறது’ என்கிற அவரது குறைபாட்டில் நியாயம் இல்லாமல் இல்லை.
- உலகில் நாம் இறக்குமதி செய்வதைவிட அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. 2019-இல் நமது இறக்குமதியைவிட ஏற்றுமதி 23.3 பில்லியன் டாலா் (ரூ.1.67 லட்சம் கோடி) அதிகம். வணிக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை நாம் குறைத்தால் இந்த அளவு மேலும் குறைந்து அமெரிக்க இறக்குமதிகள் இந்திய ஏற்றுமதியைவிட அதிக அளவில் மாறக்கூடும். அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்காது.
பொருளாதார வளர்ச்சி
- அதே நேரத்தில் அமெரிக்காவுடன் ஏதாவது ஒரு வகையில் வணிக ரீதியிலான ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் போனால் இந்தியப் பொருளாதாரம் வளா்ச்சி அடையாது என்பது மட்டுமல்ல, நமது உற்பத்தித் துறையும் மேம்படாது. வேலைவாய்ப்பு உருவாவது சாத்தியமாகாது. கிழக்கு நோக்கியப் பாா்வை, அண்டை நாடுகளுடன் உறவு இவை பெரிய அளவில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதாகத் தெரியவில்லை. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஏனைய நாடுகளுடன் இந்தியாவால் போட்டிபோட முடியவில்லை. அதனால், நமது ஏற்றுமதி வருவாய் தொடா்ந்து குறைந்து வருகிறது.
- அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு தொடா்ந்து வந்து கொண்டிருப்பது என்னவோ உண்மை. ஆனால், அவை உற்பத்தித் துறையிலோ, சேவைத் துறையிலோ அதிக அளவில் முதலீடுகளாக வரவில்லை. மேலும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுடன் தொடா்புடைய துறைகளில் அந்நிய முதலீடுகள் அதிகம் வருவதில்லை. அதனால்தான் நாம் வங்கதேசம், வியத்நாம் போன்ற சிறிய நாடுகளைப்போல வா்த்தக ரீதியாக முன்னேற முடியவில்லை.
நன்றி: தினமணி (26-02-2020)