- இந்தியச் சந்தையை அமெரிக்க உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் மீது கடுமையாக வரி விதித்தது அமெரிக்கா; இது நடந்து கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு, பதிலுக்கு இந்தியாவும் அமெரிக்காவின் 29 பொருட்கள் மீது இறக்குமதி வரியை உயர்த்தியிருக்கிறது. இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அளித்திருந்த ‘பொது விருப்ப முறைமை’ (ஜிஎஸ்பி) சலுகையை அமெரிக்கா விலக்கிக்கொண்டுவிட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவு இப்படியே சென்றுகொண்டிருப்பது இரு தரப்புகளுக்குமே நல்லதல்ல.
நிர்வாகம்
- அரசியல்ரீதியாகவோ வேறு வகைகளிலோ அமெரிக்காவுக்கு இந்தியா பகை நாடோ, போட்டி நாடோ அல்ல. அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பண்டங்களின் அளவோ, மதிப்போ மிக அதிகம் அல்ல. அத்துடன் அமெரிக்கா, இந்தியாவுக்கு விற்கும் பண்டங்களின் அளவும், மதிப்பும் குறைவு அல்ல. இரு நாடுகளின் வர்த்தகப் பற்று வரவு நிலையில், அமெரிக்காவுக்குத்தான் சாதகமான நிலை நிலவுகிறது. இருந்தும், இந்தியாவை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை அடுக்கியபடி இருக்கிறது ட்ரம்ப் நிர்வாகம். ‘இந்தியாவின் நிலைமையை நன்கு தெரிந்து வைத்திருந்தும் ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்கக் கூடாது, ரஷ்யாவிடமிருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கக் கூடாது’ என்றெல்லாம் நிபந்தனைகளையும் கடுமையாக்கிக்கொண்டே செல்கிறது.
வர்த்தகம்
- உள்ளபடி, ‘இந்தியர்கள் பற்றிய தரவுகளை இந்தியாவுக்குள்ளேயே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்; இணைய வழி வர்த்தகத்துக்கு வரம்பற்ற சுதந்திரம் தர முடியாது’ என்ற இந்தியாவின் நிலைப்பாடு, பன்னாட்டு பெருநிறுவனங்களுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. இந்தியர்கள் தொடர்பிலான தரவுகளானது, இந்தியச் சந்தை தொடர்பிலான தகவல் சுரங்கம். மட்டுமின்றி, இணைய வழி வர்த்தக நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களைவிட விலை குறைவாக வீட்டுக்கே கொண்டுசென்று விற்பதால் இந்திய வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படும் வியாபார இழப்பையும், இந்திய அரசுக்கு ஏற்படும் வரி இழப்பையும் உத்தேசித்துச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் இந்தியாவின் அக்கறைகளும் அச்சமும் நிலைப்பாட்டிலுள்ள உறுதியும் மிகுந்த நியாயத்துக்குரியவை. அதைக் குறிவைத்தே அழுத்தம் கொடுக்கிறது அமெரிக்கா.
- உலக வர்த்தக அமைப்புக்குக் கட்டுப்பட்ட நாடு இந்தியா. அதேசமயம், இறையாண்மையுள்ள நாடு. வணிகம் இரு தரப்பு நலன்களையும் உள்ளடக்கியதாகவே அமைய முடியும். அமெரிக்காவின் அழுத்தத்துக்கு இந்திய அரசு எந்த வகையிலும் பணியக் கூடாது. ஆனால், இந்த வணிக உரசல் மேன்மேலும் வளர்ந்து செல்லாமல் முடிவுக்குக் கொண்டுவர நாம் பேச்சுவார்த்தையைக் கையில் எடுக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25-06-2019)