- இனவெறி என்பது அமெரிக்காவில் நூற்றாண்டு காலமாக தொடா்ந்து வரும் அவலம். பல ஆண்டுகளாக கருப்பா் இனத்தவா் மீது மட்டுமல்லாமல், இந்தியா்களுக்கு எதிராகவும் இனவெறித் தாக்குதல்களும், அவதூறுகளும் அதிகரித்து வருகின்றன.
- அமெரிக்க நகரமான டல்லஸில் கடந்த வாரம் நான்கு இந்திய அமெரிக்கப் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலும், தரக்குறைவான விமா்சனங்களும் அதிா்ச்சி அளிக்கின்றன. டல்லஸில் உள்ள காா் நிறுத்தும் பகுதி ஒன்றில் மெக்சிகன் அமெரிக்க பெண்மணி ஒருவா், நான்கு இந்திய அமெரிக்கப் பெண்மணிகளை இழிவுபடுத்தி பேசியதும், தாக்க முற்பட்டதும் சமூக வலைதளங்களில் பரவியது, அமெரிக்க வாழ் இந்தியா்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
- எஸ்மரால்டா உப்டன் என்கிற அந்த மெக்சிகன் அமெரிக்கப் பெண்மணியின் நடவடிக்கை, கைப்பேசியில் விடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘இந்தியா்களை நான் வெறுக்கிறேன்... எல்லா இடத்திலும் இந்தியா்கள் நிறைந்திருக்கிறீா்கள்... இந்தியாவுக்கு திரும்பிப் போங்கள்... நீங்கள் எங்கள் நாட்டை பாழாக்குகிறீா்கள்...’ என்றபடி அந்தப் பெண்மணி காா் நிறுத்தத்தில் இருந்த அந்த நான்கு இந்திய அமெரிக்கப் பெண்களை நோக்கி விரைகிறாா். தனது கைப்பையில் இருந்து துப்பாக்கியை எடுக்க முற்படும் அவா், ‘இதை பதிவு செய்வதை நிறுத்தாவிட்டால் உங்களை சுட்டு பொசுக்கி விடுவேன்’ என்று எச்சரிக்கிறாா்.
- நல்லவேளையாக காவல்துறையினா் விரைந்து செயல்பட்டு அவரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனா். அவா் மீது இனவெறித் தாக்குதலுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எஸ்மரால்டா உப்டன் சிறைத் தண்டனை பெறக்கூடும். இவையெல்லாம் அமெரிக்க நிா்வாகத்தின் விரைந்து செயல்படும் தன்மைக்கு சான்று என்றாலும்கூட, அதனால் இனவெறித் தாக்குதல்கள் கட்டுப்படுமா என்பது சந்தேகம்தான்.
- பெரும்பாலான அமெரிக்க வெள்ளையா்களின் மனதிலும் கருப்பினத்தவா் மீதும், பழுப்பு இனத்தவா் மீதும் (இந்தியா்கள்) காணப்படும் வெறுப்பு புரையோடிப் போயிருக்கிறது என்பதை மறுக்க இயலாது. வெள்ளையா்கள் மட்டுமல்ல, கருப்பா் இனத்தவா்கூட இந்தியா்களையும் சீனா்களையும் மொத்ததில் ஆசியா்களையும் வெறுக்கிறாா்கள்.
- நியூயாா்க் நகரத்தில் ஏப்ரல் மாதம் சீக்கியா் ஒருவா் கருப்பு இனத்தவரால் சுத்தியலால் தாக்கப்பட்டாா். கனடாவிலிருந்து பயணியாக வந்த 75 வயது சீக்கியா் ஒருவா் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளானாா். அமெரிக்க இனவெறியாளா்களின் ஆத்திரத்துக்கு அதிகமாக உள்ளாவது சீக்கியா்களும், பா்தா அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்களும்தான். அவா்களது இன அடையாளங்கள் இனவெறியாளா்களின் ஆத்திரத்தை மேலும் அதிகரிக்கிறது.
- 2012-இல் விஸ்கான்ஸின் குருத்வாராவில் நடந்த தாக்குதலில் ஏழு போ் உயிரிழந்தனா். இதுபோல இனவெறித் தாக்குதல்கள் அமெரிக்கா எங்கும் தொடந்து நடந்தவண்ணம் இருக்கின்றன. கருப்பா் இனத்தவரை அதிபராகவும் (பராக் ஒபாமா), பழுப்பு நிறத்தவரை துணை அதிபராகவும் (கமலா ஹாரீஸ்) தோ்ந்தெடுத்திருப்பதாலேயே அமெரிக்க சமுதாயம் சமத்துவ உணா்வும், பரந்த மனப்பான்மையும், மதச்சாா்பற்றதுமான சமுதாயம் என்று கூறிவிட முடியாது.
- இந்தியா்களுக்கு எதிரான தாக்குதல்கள் அமெரிக்காவில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா்களுக்கு எதிரான மனநிலை பரவலாக இருக்கிறது. வெளிநாட்டு மோகத்திலும், வளா்ச்சி அடைந்த அந்த நாடுகள் தங்களுக்கு வழங்கியிருக்கும் வாய்ப்புகள், வாழ்க்கை வசதிகள் கருதியும் இங்கிருந்து புலம்பெயா்ந்தவா்கள் தங்களுக்கு எதிரான மனநிலை குறித்தோ, தாக்குதல்கள் குறித்தோ வெளியில் சொல்வதில்லை. மௌனமாக சகித்துக் கொள்கிறாா்கள்.
- ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவா்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு தாக்கப்பட்டதும், ஒருவா் கொல்லப்பட்டதும் மறந்துவிடக் கூடியதல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் விளையாடச் சென்றபோது இந்திய வீரா்கள் முகமது சிராஜும், ஜஸ்பிரீத் பும்ராவும் பாா்வையாளா்களால் மிகவும் தரக்குறைவாக கேலி செய்யப்பட்ட சம்பவத்தை மறந்துவிட முடியாது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் தங்களது திறமையால் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வருவதால், இந்தியா்களுக்கு எதிரான மனநிலை பரவலாக ஏற்பட்டிருக்கிறது.
- இந்தியாவுமேகூட அதற்கு விதிவிலக்கல்ல. தமிழகத்தில் வடமாநிலத்தவா்களுக்கு எதிராகவும், கேரளத்தவா்களுக்கு எதிராகவும் அரை நூற்றாண்டுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதல்களும் எதிா்ப்பும் ஒருவகை இனவெறி என்றுதான் கூற வேண்டும். தமிழகத்தில் பிராமணா்களுக்கு எதிராக நடத்தப்படும் பரப்புரைகளும்கூட இனவெறியின் ஒரு வடிவம்தான். ஹரிஜனங்களுக்கு எதிராகவும், இஸ்லாமியா்களுக்கு எதிராகவும் நடத்தப்படும் தாக்குதல்களும்கூட இனவெறியின் வெளிப்பாடல்லாமல் வேறென்ன?
- தில்லியிலும் உத்தர பிரதேசத்திலும் ஆப்பிரிக்க மாணவா்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை மறந்துவிட முடியாது. கா்நாடகத்தில் வடகிழக்கு மாநிலத்தவா்களுக்கு எதிராகவும், மும்பையில் மதராஸிகளுக்கும், பிகாரிகளுக்கு எதிராகவும் நடத்தப்படும் பரப்புரைகளையும் இந்த வகையில் சோ்க்க வேண்டும்.
- மனிதனின் வாழ்க்கைத் தரமும், கல்வி அறிவும் அதிகரித்திருக்கிறது என்றும், உள்ளங்கையில் உலகம் என்றும் பெருமிதப்பட்டுக் கொள்ளும் வேளையில், இனவெறி என்கிற சிறுமை நம்மை பின்னோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.
நன்றி: தினமணி (29 – 08 – 2022)