TNPSC Thervupettagam

அமெரிக்க வலையில் வீழ்ந்திடக் கூடாது இந்தியா!

October 15 , 2020 1557 days 658 0
  • ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நான்கு தரப்புகளுக்கிடையிலான (குவாட்) வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை டோக்கியோவில் நடைபெற்றதன் மூலம் குவாட்அமைப்பு தீர்க்கமான ஓர் அத்தியாயத்துக்குள் நுழைந்திருக்கிறது.
  • சமீபத்தில் ஐநா பொது அவையில் சந்தித்துக்கொண்ட இந்த அமைச்சர்கள், கரோனா பெருந்தொற்றுக்கு இடையேயும் குவாட் சந்திப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியதால் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.
  • வழக்கமாக, குவாட் மாநாடுகளின் தீர்மானங்கள் ரகசியமாக இருக்கும். இந்த முறை அப்படி அல்ல. இந்த மாநாட்டை நடத்திய நாட்டின் பிரதமர் என்ற முறையில் யோஷிஹிதே சுகா, குவாட் அமைப்பை 2007-ல் முன்னெடுத்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அளவுக்குச் செயலூக்கம் கொண்டவராக இருக்க மாட்டாரோ என்ற சந்தேகத்தைப் போக்கினார்.
  • இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் நிலவிய பதற்றத்தின் மீது இந்திய அரசின் கவனம் குவிந்திருந்தபோதும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் சென்று திரும்பியிருக்கிறார்.
  • தேர்தல் நடப்பதற்கு இன்னும் கொஞ்ச காலமே இருப்பதால், இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு அமெரிக்கா அதிக ஆர்வம் காட்டியிருக்கக் கூடும்.
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்பியோ கலந்துகொண்டார்.
  • சீனாவின் அத்துமீறலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிரான நகர்வுகளை நோக்கி குவாடைச் செலுத்துவதே தன் திட்டம் என்றும், இந்த நான்கு-தரப்பு உறவானது சம்பிரதாயமான உறவு இல்லை என்றும் அவர் கூறினார்.
  • நடப்பு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு, தெற்கு, கிழக்குச் சீனக் கடற்பகுதிகளில் சீனாவின் அத்துமீறல் போன்றவற்றைக் குறிப்பிட்டு சீனாவின் சுரண்டல், ஊழல், அச்சுறுத்தல்ஆகியவற்றை எதிர்த்து இந்தப் பிரதேசத்தைக் காப்பதற்கு குவாட் ஒன்றுசேர்ந்து இயங்க வேண்டும் என்று பாம்ப்பியோ அறைகூவல் விடுத்திருக்கிறார்.
  • சுதந்திரமான, திறந்த இந்தோ-பசிபிக் உறவுக்காக ஜனநாயக நாடுகள் ஒன்றுசேர வேண்டும் என்பது மட்டுமல்ல அவர் உணர்த்துவது. சீனாவால் நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டிருக்கும் நாடுகளின் ராணுவக் கூட்டுறவாக குவாடை மாற்றுவதில் அமெரிக்கா விருப்பம் கொண்டிருப்பது தெரிகிறது.
  • இப்படி வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட உள்நோக்கங்களின் முக்கியத்துவத்தை இந்தியா குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.
  • அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களுக்கு ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் கட்டுப்பட்டிருக்கும் அதே வேளையில், இந்தியா இதுவரை தனது ராணுவரீதியிலான பாதையை சுதந்திரமாகவே வகுத்துக்கொண்டிருக்கிறது.
  • அமெரிக்கத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பாம்ப்பியோவின் வார்த்தைகள் வெற்றுக் கூச்சல்களாகக்கூட இருக்கலாம்.
  • எனினும், இந்தோ-பசிஃபிக் விவகாரத்துக்குள் இந்தியாவைக் கொண்டுவரும் ஆர்வத்தையும் அதே நேரத்தில் இந்திய-சீன நெருக்கடிக்குள் குவாடையும் பங்கெடுக்கச் செய்யும் ஆர்வத்தையும் அவரது பேச்சு உணர்த்துகிறது.
  • இந்திய அரசு இதுபோன்ற யோசனைகளைப் புறம்தள்ளிவிட்டிருக்கிறது. இந்த நிலைப்பாட்டிலிருந்து தற்போது எப்படி மாறினாலும் அது நன்மை தருவதாக இருக்காது. குவாடை இந்தியா பயன்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், அமெரிக்க ஆதிக்கத்திடம் சிக்கிவிடக் கூடாது என்பதும் முக்கியமானது.

நன்றி: தி இந்து (15-10-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்