TNPSC Thervupettagam

அமைதிக்காகக் காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்!

February 12 , 2019 2142 days 1336 0
  • ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் உலகளாவிய அளவிலும் முயற்சிகள் நடக்கின்றன. போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதில் அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டிவரும் நிலையில், கணிக்க முடியாத அதிபராலும், தீவிரமாக இயங்கிவரும் சிறப்புத் தூதர் ஜால்மே காலில்ஸாதாலும் இந்த விவகாரம் உச்சமடைந்துவருகிறது.
  • 1994-ல், ஆப்கன் அரசைக் கவிழ்த்துவிட்டு தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைப்போல், மீண்டும் நிகழ்ந்துவிடுமோ எனும் அச்சம் ஆப்கனில் அதிகரித்துவருகிறது. பதற்றத்துடன் இருக்கும் அமெரிக்காவுக்கும் அதீத நம்பிக்கை கொண்ட பாகிஸ்தானுக்கும் இடையில் அவசரகோலத்தில் உருவாகவிருக்கும் ஒப்பந்தத்தின் மூலம், ஆப்கன் அரசு, அந்நாட்டின் அரசியல் வட்டாரம், ஜனநாயக அமைப்பு ஆகியவை ஏமாற்றத்துக்குள்ளாகவிருக்கின்றன.
  • பதற்றம், பயம், இறுமாப்பு ஆகியவற்றின் மூலம் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்படலாம். ஆனால், அப்படியான ஒரு ஒப்பந்தம், அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய, நீடித்து நிலைக்கக்கூடிய அமைதியைக் கொண்டுவராது.
  • ஒரு பிரச்சினையின் முக்கியக் காரணிகளைக் களைவதுதான், நிலையான அமைதித் தீர்வை ஏற்படுத்துவதற்கான அடிப்படை நோக்கமாக இருக்க முடியும். ஆப்கன் பிரச்சினையின் வேர்கள் அடிப்படையில் மத, இன ரீதியிலானவை. வெளிக்காரணிகளும் உண்டு. ஆப்கன் அரசு மற்றும் சமூகத்தின் அடையாளம், சட்டபூர்வத் தன்மை, இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பிரச்சினை நடந்துவருகிறது.
  • பஷ்தூன்களின் ஆதிக்கம் கொண்ட நாடாக ஆப்கன் இருக்க வேண்டுமா அல்லது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாக இருக்க வேண்டுமா? நாட்டின் உண்மையான அடையாளம் என்பது இஸ்லாமிய / மதச்சார்புள்ள அரசா அல்லது அரசியல் சட்ட குடியரசா? பாகிஸ்தானின் கைப்பாவையாக இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமான நாடாக இருக்க வேண்டுமா?
அமைதி தராத ஒப்பந்தங்கள்
  • 1979-ல் ஆப்கன் பிரச்சினை தொடங்கியது முதலே, எண்ணற்ற அமைதி முயற்சிகளும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இடதுசாரி அதிபரான நஜிபுல்லா அஹ்மத்ஜாயி அரசு, புர்ஹானுதீன் ரப்பானி தலைமையிலான முஜாஹிதீன் அரசு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் அமைந்த ஹமீத் கர்ஸாய் மற்றும் அஷ்ரஃப் கனியின் அரசுகள் அதிகாரப் பகிர்வு, ஜனநாயக அரசு நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வு காண முயன்றன. ஆனால், அதில் தோல்வியைச் சந்தித்தன.
  • 1994-ல் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசு, முழு வெற்றியைப் பெறுவது; தூய்மையான இஸ்லாமிய அரசை நிறுவுவது ஆகிய நோக்கங்களில் உறுதியுடன் இருந்தது. தாலிபான் அமைப்பு என்பது அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடும் தேசியவாதக் கிளர்ச்சி அமைப்பு அல்ல. மாறாக, பாகிஸ்தானின் புவி வியூகக் கொள்கைகளுக்கு ஏற்ப ஒரு அரசியல் சூழலை மீண்டும் ஏற்படுத்துவதில் உறுதியுடன் செயல்படும் ஒரு சித்தாந்த இயக்கம். ஆப்கனில் சர்வதேசப் படைகள் இருப்பது, தாலிபான் அமைப்பின் நோக்கத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.
  • பிரதான கேள்விகள் இவைதான்: தூய்மையான இஸ்லாமிய அரசை நிறுவும் தாலிபானின் லட்சியமானது, பன்மைத்துவம், அதிகாரப் பகிர்வு, தேர்தல் அடிப்படையிலான அரசியல் ஆகியவற்றுக்குப் பொருத்தமானதா? இறையாண்மை கொண்ட, சுதந்திரமான ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா? தேசக் கட்டுமானம், ஜனநாயகமயமாக்குதல், பன்மைத்துவம் ஆகியவற்றில் நிகழ்த்தப்பட்டிருக்கும் பலவீனமான சாதனைகளின் அடிப்படையில் அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் கட்டமைக்கப்படுமா? எந்த ஒரு அமைதி ஒப்பந்தத்தின் நிலைத்தன்மையையும் உறுதிசெய்வதற்கான உத்தரவாதம் இருக்குமா?
  • 1979 மார்ச்சில், ‘ஆபரேஷன் சைக்ளோன்’ மூலம் பாகிஸ்தானின் உதவியுடன் முஜாஹிதீன்களுக்கு ரகசியமாக ஆதரவளிக்கத் தொடங்கியது அமெரிக்கா. ஆப்கன் விவகாரத்தில் ஒரு தரப்பாக அமெரிக்கா இன்றுவரை தொடர்கிறது. எனினும், பெரும்பாலும் ஆழ்ந்த பரிசீலனையின் அடிப்படையில் அல்லாமல், உள்ளுணர்வின் அடிப்படையிலேயே அமெரிக்காவின் ஆப்கன் கொள்கை இருக்கிறது. அமெரிக்காவின் தற்போதைய அமைதி முயற்சிகள்கூட அந்நாட்டின் சுயநலன் சார்ந்தும், அடிக்கடி மாறும் அதன் மனநிலையின் அடிப்படையிலும்தான் எடுக்கப்படுகின்றனவே தவிர, ஆப்கனின் கள நிலவரத்தின் அடிப்படையில் – குறிப்பாக ஆப்கன் அரசு மற்றும் மக்களின் பங்கு என்ன என்பதன் அடிப்படையில் அல்ல.
  • ஆப்கன் விவகாரத்தில், நிபந்தனையின் அடிப்படையிலான முன்னெடுப்புகள் தொடங்கி, அமெரிக்காவின் உள்நாட்டுத் தூண்டுதல்கள் அல்லது புவி அரசியல் நடப்புகளின் அடிப்படையிலான நடவடிக்கைகள் வரை, முந்தைய அதிபர்கள் அடிக்கடித் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதைப்போலவே டிரம்பும் நடந்துகொள்கிறார்.
வலிமையான நிலையில் தாலிபான்
  • தற்போதைய ராணுவச் சூழலும் சரி, அரசியல் கட்டமைப்பும் சரி நிலையான அமைதி முயற்சிக்கு உகந்ததாக இல்லை. ஆப்கன் மற்றும் அதன் கூட்டணிப் படைகள் ராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் களைப்படைந்தும் பதற்றத்துடனும் இருப்பதைப்போல், தாலிபான் அமைப்பு இல்லை. தாலிபான் தலைமையும், அதன் பாகிஸ்தான் கூட்டாளிகளும் முழு வெற்றியை அடையும் அளவிலான வலிமை, வளம், காரணிகளைக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் விஷயத்தில், ‘தொடர்ந்து குரைத்தாலும் கடிப்பதில்லை’ எனும் ரீதியிலான அணுகுமுறையை டிரம்ப் அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருவதன் காரணமாக தாலிபான் தரப்பின் நம்பிக்கையை வலுப்படுத்திவருகிறது.
  • ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஆப்கன் அதிபர் தேர்தலில், வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அமெரிக்கா – தாலிபான் இடையிலான துரிதமான பேச்சுவார்த்தைகள், ஆப்கன் அதிபர் தேர்தலுடன் போட்டி போடும் அளவில் இணையாக நடந்துகொண்டிருக்கின்றன. தனது நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, தற்போதுதான் வளர்ந்துவரும் நிலையில் இருக்கும் ஆப்கன் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் அமெரிக்கா பலிகொடுத்துவிடும் என்று ஆப்கனைச் சேர்ந்த பலரிடம் நிலவும் அச்சம் நியாயமானதுதான்.
  • ஆப்கன் அரசையும் மக்களையும் கவனத்தில் கொள்ளாமல் தாலிபான் அமைப்புக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஒப்பந்தமும் தோல்வியையே தழுவும். 2019-ன் ஆப்கன், 1990-களின் ஆப்கனைவிட அடிப்படையில் வேறுபட்டது. எத்தனையோ குறைபாடுகள் இருந்தாலும், ஆப்கன் அரசு குறிப்பிடத்தக்க அளவிலான திறனையும், சட்டபூர்வத்தன்மையையும் ஆப்கன் அரசு கொண்டிருக்கிறது. வலிமைமிக்க, வளர்ந்துவரும் தேசியப் பாதுகாப்புப் படையும் அதன் வசம் இருக்கிறது.
மக்கள் ஆதரவு இல்லை
  • மறுபுறம், பாகிஸ்தானும் தாலிபானும் ஆப்கனின் பெரும்பாலானோரின் வெறுப்புக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாகியிருக்கின்றன. ஆப்கனின் 90% மக்கள் தாலிபானின் நோக்கத்தை ஆதரிக்கவில்லை என்பது, 2018-ல், ஆசியா ஃபவுண்டேஷன் நிறுவனம் நடத்திய வருடாந்திர ஆப்கன் கணக்கெடுப்பிலும், வியூக ஆய்வுகளுக்கான ஆப்கன் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஆய்விலும் தெரியவந்திருக்கிறது. தாலிபான்களின் வார்த்தைகளில் சொன்னால், உலகமெங்கும் உள்ள ஜிகாதிகளுக்கு ஆப்கன் என்பது ஒரு ‘ஜிகாத் பள்ளி’. எனவே, தாலிபானுடனான எந்த ஒரு ஒப்பந்தமும் வன்முறை சார்ந்த பிற இஸ்லாமியக் குழுக்கள் மத்தியில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் தாலிபானின் குவெட்டா ஷுரா அமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தை என்பது ஆப்கன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, நடைமுறைச் சாத்தியமுள்ள, நீடித்து நிலைக்கக்கூடிய முயற்சிகளே அமைதி ஒப்பந்தத்துக்கு வழிவகுக்க வேண்டும். இது வெற்றியடைய, 1990-களின் இருண்டகாலத்துக்குத் திரும்பிவிடாமல் முன்னேற்றப் பாதையில் ஆப்கன் செல்வதை உறுதிசெய்ய விரும்புகின்ற, ஒத்த கருத்துடைய மற்ற சக்திகளுடன் இந்தியாவும் கைகோக்க வேண்டும்.
  • அமைதியான, பன்மைத்துவம் கொண்ட, வளமான தேசத்தையே ஆப்கன் மக்கள் விரும்புகிறார்கள். இப்படியான ஒரு அரசியல் சூழலைக் கட்டமைப்பதில், பிற ஆப்கன் குடிமக்களுக்கும் அரசியல் குழுக்களுக்கும் இருக்கும் அதே பங்கு தாலிபான்களுக்கும் இருக்கிறது. அமைதியான - வளமான ஆப்கானிஸ்தான், அமைதியான -முன்னேற்றமடைந்த பிராந்தியம், வன்முறை சித்தாந்தம் கொண்ட இஸ்லாமியக் குழுக்களின் வீழ்ச்சி ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. திணிக்கப்படும் அமைதி அல்லது திணிக்கப்படும் அரசியல் சட்டத்துடன் கூடிய சுதந்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆப்கன் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படக் கூடாது. திணிக்கப்பட்ட அமைதி என்பது ஒரு தரப்புக்குத் தற்காலிக வெற்றியைத் தரலாம். ஆனால், அது நீண்டகாலத் துயரத்தை ஏற்படுத்துவதுடன், இறுதியில் தோல்வியையே தழுவும்!

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்