TNPSC Thervupettagam

அமைதியாக ஒரு பாய்ச்சல்

October 5 , 2023 463 days 310 0
  • இள வயதில் என்னுடைய தாத்தாவின் லெட்டர் பேட் என்னை மிகவும் கவரக் கூடியதாக இருந்தது. பெரும்பாலும் தன்னிடம் சிபாரிசு கேட்டு வரக் கூடியவர்களுக்குக் கடிதம் கொடுத்தனுப்ப அதைத் தாத்தா பயன்படுத்துவார். அது அவருடைய சமூக அந்தஸ்தை வெளிக்காட்டும் வகையிலும் இருந்தது.
  • எப்படி இருக்கும் என்றால், இடது ஓரத்தில் அவர் ஈடுபட்டிருந்த தொழில் நிறுவனங்களின் பெயர்கள் – கட்டுமான நிறுவனம், திரையரங்கம், பஸ் – லாரி சர்வீஸ், உணவகம், சைக்கிள் நிறுவனம் – அவருடைய பதவியோடு இடம்பெற்றிருக்கும்; வலது ஓரத்தில், அவர் பங்கெடுத்திருந்த சமூக அமைப்புகளின் அமைப்புகளின் பெயர்கள் – நகர்மன்றம், நகரக் கூட்டுறவு வங்கி, பால் கூட்டுறவுச் சங்கம், சமூக நல அமைப்புகள் – அவருடைய பதவியோடு இடம்பெற்றிருக்கும். நடுவே அவருடைய பெயர்… எஸ்.ராஜகோபாலன், அதற்குக் கீழே ‘கர்நாடக இசை சக்கரவர்த்தி எஸ்.ஜி.கிட்டப்பாவின் ரசிகன்’ என்று அச்சிடப்பட்டிருக்கும். இவ்வளவு அடையாளங்களையும் சொல்லும் தாளில்தான் அவர் கடிதம் எழுதுவார்.
  • இவ்வளவு பொறுப்புகளை வகித்தவர் ஏனைய எந்தப் பதவியையும் காட்டிலும் தலையாய அடையாளமாக, ஏன் ஓர் இசை மேதையின் ரசிகர் என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்? இந்தக் கேள்வியை யாரேனும் அவரிடம் கேட்டால், “ஏனைய அடையாளங்கள் எல்லாம் ஊருக்கு; இந்த அடையாளம்தான் என் ஆத்மாவுக்கு; ஞானத்தின் முன் மண்டியிடும் ஒரு மாணவனாக இருப்பதைக் காட்டிலும் பெரிய அடையாளம் ஏதும் இல்லை” என்பார். நல்ல வசதியான சூழலில் இருந்தார். இன்றைய நாட்களைப் போன்று டிஜிட்டல் பொருளாதாரம் உருவாகியிராத காலம் அது என்பதால், அவரைச் சுற்றி எப்போதும் கட்டுக்கட்டாகப் பணம் இருக்கும். விருப்பப் பட்ட விஷயங்களில் எல்லாம் பணத்தை வாரி இறைப்பார். ஓய்வு நாட்களில் வீட்டிலேயே கலைஞர்களை அழைத்துக் கச்சேரி கேட்பார்.
  • இவ்வளவு வசதியாக தாத்தா இருந்தார். ஆனால், பாட்டி எப்படி இருந்தார் தெரியுமா? ஒரு முழம் பூ வாங்கக் காசுக்குத் தாத்தாவை எதிர்நோக்கி இருந்தார். பாட்டி மீது தாத்தாவுக்குக் கொள்ளை பிரியம் உண்டு. பெண்களுக்கான சுயமரியாதையை அறிந்திராதவர் அல்ல அவர். ஒரு பெரியாரியர். முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரே தன்னுடைய இரு மகன்களுக்கும் இணையாக ஆறு பெண்களுக்கும் படிக்கும் சூழலை உருவாக்கித் தந்தார். பெண்கள் சுதந்திரமாகச் செயல்பட அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் அவசியம் என்று சொல்லி எல்லோரும் வேலைக்குச் செல்ல ஊக்குவித்தார். பிள்ளைகள் எல்லோருடைய பெயரிலும் முதலில் பாட்டி பெயரின் முதல் எழுத்தும், அடுத்து தாத்தா பெயரின் முதல் எழுத்துமாகச் சேர்ந்து இரட்டை முன்னெழுத்தாகக் கொடுத்துதான் பள்ளியில் சேர்த்தார். தன்னுடைய சொத்திலும் பெண்களுக்குப் பங்கு கொடுத்தார்.  இவ்வளவு புரிதல் இருந்தும், பாட்டிக்கு என்று ஒரு செலவு இருக்கும்; அவர் கையாள அவரிடம் பணம் இருக்க வேண்டும் என்ற கற்பனை அவருக்கு இல்லவே இல்லை.
  • நிறையக் கஷ்டங்களை எதிர்கொண்டுதான் தாத்தா வாழ்வில் முன்னேறினார். இந்தக் கஷ்டங்கள் எல்லாவற்றிலும் உற்ற துணையாக இருந்ததோடு, தாத்தாவின் பாரத்தையும் சேர்த்து சுமந்தவர் பாட்டி. நிச்சயமாக, தாத்தாவின் சம்பாத்தியத்தில் பெரும் பங்கு பாட்டிக்கும் உண்டு. ஆனால், பாட்டி ஒருநாளும் அதை எண்ணியதே இல்லை. பத்து ரூபாய் பணம் செலவிடக்கூட தனக்கு வீட்டுப் பணத்தில் உரிமை இல்லை என்பதாகவே அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. அச்சம் கலந்த கூச்சத்துடனே அவர் தாத்தாவிடம் பணத்தை வாங்குவதை என் சிறு பிராயத்தில் பார்த்திருக்கிறேன்.
  • இந்தக் கதையை வாசிக்கும்போது உங்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டில் ஒவ்வொருவர் நினைவு வருவதைத் தவிர்க்கவே முடியாது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகான இந்த முக்கால் நூற்றாண்டில் இந்திய வீடுகளின் சூழல் கணிசமாக மேம்பட்டிருக்கிறது என்றாலும், பெண்களுக்கான பொருளாதாரச் சுதந்திரம் என்பது இன்னமும் கற்பனைக்கு அப்பாற்பட்ட உயரத்திலேயே இருக்கிறது. தலைமையாசிரியையாகப் பணியாற்றும் என்னுடைய தோழி ஒருவர் சொன்னார், அவருடைய பள்ளியில் பணியாற்றும் பத்தில் எட்டு ஆசிரியைகளின் வங்கிக் காசு அட்டை அவர்களுடைய கணவர்கள் கைகளிலேயே இருக்கிறது; இவர்களில் பலருக்கு அன்றாடப் போக்குவரத்துச் செலவு; ஆண்டுக்குச் சில புடவைகள், நகைகள், அலங்காரப் பொருட்களுக்கான செலவு நீங்கலாக வேறு எந்த உரிமையும் அவர்களுடைய வருமானத்தில் அவர்களுக்குக் கிடையாது. வெளியே சென்று சம்பாதிக்கும் பெண்களின் நிலையே இதுதான் என்றால், வீட்டை நிர்வகிக்கும் பெண்களின் நிலையை விவரிக்க வேண்டியதே இல்லை. அதிலும் வயது முதிர்ந்த பெரும்பான்மைப் பெண்கள் கிட்டத்தட்ட வீட்டுக்குள் ஒரு பராரி நிலையிலேயே இருக்கிறார்கள்.
  • அண்ணா பிறந்த நாள் அன்று தமிழ்நாடு அரசு செயல்பாட்டுக்குக் கொண்டுவந்த ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’த்தின் மகத்தான விஷயம் என்று எனக்குச் சொல்லத் தோன்றுவது அது உள்ளடக்கியிருக்கும் இந்தக் கற்பனைதான்: வீட்டை நிர்வகிக்கும் பெண்களின் உழைப்பை அது அங்கீகரிக்கிறது; இதை அரசின் உதவித் தொகையாக அல்ல; பொருளாரரீதியாக முன்னகரும் ஓர் அரசு இந்த முன்னேற்றத்தில் அவர்களைப் பங்காளிகளாகக் கருதி அவர்களுக்குத் தரும் பங்களிப்புத் தொகையை அவர்களுடைய உரிமையாகக் கருதுகிறது! ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குக் குறைவான வருமானம் கொண்ட 1.06 கோடி குடும்பத் தலைவியர்க்கு மாதம் ரூ.1000 வழங்கும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டத் தொடர் ஓட்டத்தில் ஒரு பாய்ச்சல் என்றே சொல்வேன்.
  • சமத்துவத்தின் தாயான பாலினச் சமத்துவத்தில் மிக மோசமான இடத்திலேயே இந்தியா இருக்கிறது. உலகளாவிய பாலின இடைவெளி பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் 146 நாடுகளில் 127ஆவது இடத்தில் இந்தியா இடம்பெற்றிருப்பதும், இந்தியாவில் 23.97% பெண்களே வெளி வேலைக்குச் செல்லும் சூழலில் இருப்பதும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்புகளைக் கொண்டவை. இங்கே சராசரியாக வீட்டு வேலைகளுக்கு ஓர் ஆண் 2.8 மணி நேரம் செலவிட்டால், ஒரு பெண் 7.2 மணி நேரம் செலவிடுகிறார். இந்தச் சூழல்தான் பெரும்பான்மைப் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிடுகிறது; அவர்களுடைய வெளிக்கனவுகளையும் முயற்சிகளையும் தின்கிறது. இவ்வளவு உழைப்பைக் கொடுத்தும் இதன் நிமித்தம் அவர்கள் பெறும் அங்கீகாரம், வெகுமதி மிகக் குறைவு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் இந்தத் திட்டமானது பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் ஒரு சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்பு.
  • நாட்டிலேயே இப்படி ஒரு திட்டத்தை முதலில் அறிவித்தது தமிழ்நாடு அரசுதான் என்றாலும், செயல்படுத்துவதில் நம்மை 15 நாட்களில் அண்டை மாநில கர்நாடக அரசு முந்திக்கொண்டிருக்கிறது. முதல்வர் சித்தராமையா தலையிலான காங்கிரஸ் அரசு அங்குள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 அளிக்கும் முன்னெடுப்பை ‘க்ரஹலட்சுமி திட்டம்’ என்ற பெயரில் கொண்டுவந்திருக்கிறது. விரைவில் நாடு முழுமைக்கும் இது பிரதியெடுக்கப்படும் என்பதற்கான அதிவேக அறிகுறி இது. நாட்டை ஆளும் கட்சியான பாஜக ‘ரேவடி அரசியல்’ என்று இதைக் கடுமையாகச் சாடும் சூழலில், ஒரு மாற்றுப் பொருளாதார அணுமுறையாகவும் இதை அரசியல் தளத்தில் நாம் காணலாம்.
  • தமிழகத்தில் அளிக்கப்படும் ரூ.12,000 தொகை ஆகட்டும்; கர்நாடகத்தில் அளிக்கப்படும் ரூ.24,000 தொகை ஆகட்டும்; இது பெண்களுக்கு ஓர் அதிகாரத்தை வழங்குவதோடு, குடும்பங்களின் பொருளாதார முன்னகர்விலும் நிச்சயம் ஒரு பங்கு வகிக்கும். மிகச் சமீபத்தில் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்த ‘குறைந்தபட்ச உத்தரவாத வருமானச் சட்டம்’ இந்தச் சமயத்தில் இங்கே நினைவுகூர வேண்டியது ஆகும். அடுத்த சில வாரங்களிலேயே தமிழகமும் இதே போன்ற ஒரு முன்னெடுப்பை நோக்கிச் சென்றது. வெவ்வேறு பிரிவினருக்கானதாகவும், வெவ்வேறு பெயர்களிலானதாகவும் அறிமுகமாகும் இந்தத் திட்டங்கள் ஒருவகையில் இந்தியாவில் மெல்ல, ‘குறைந்தபட்ச வாழ்வுறுதி வருமானம்’ எனும் சிந்தனையை நோக்கி நம் ஆட்சியாளர்களை நகர்த்துகின்றன.
  • இந்தப் போக்கு வளர வேண்டும். ஒவ்வொரு மனிதரின் கண்ணியமான வாழ்வும் ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (05 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்