- பாபாசாகேப் அம்பேத்கர் தனது மக்களோடு பெளத்தம் தழுவியதைப் பற்றி ‘தலித் முரசு’ ஆசிரியர் புனித பாண்டியன் எழுதிய ‘அறியப்படாத அக்டோபர் புரட்சி!’ (அக்.17) கட்டுரையைப் படித்தேன். இவ்வரலாற்று நிகழ்வினை ‘அறவழியில்’ நடைபெற்ற சமூக – பண்பாட்டுப் புரட்சி என்று கட்டுரையாளரே தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும் பெளத்தம் என்பது அறநெறி அல்லது கொள்கையே எனவும், அம்பேத்கரின் வரையறையின்படி, மரபார்ந்த பொருளில் பெளத்தம் ஒரு மதமாகாது எனவும் கட்டுரையாளர் எழுதியிருப்பதை, பெளத்தத்தை ஏற்ற பட்டியல் சாதியினர் மறுக்கவே செய்வர்.
- பெரியாரின் எழுத்துக்கள் வாயிலாக பெளத்தத்தைப் புரிந்துகொண்டால் அது ஒரு மதமல்ல. ஆனால், அம்பேத்கர் வழியில் மதமாற்றம் அடைந்தவர்கள் பெளத்தத்தை அறம் சார்ந்த வாழ்வியலாக மட்டுமே உள்வாங்கிக்கொள்ளவில்லை. பெளத்தத்தை மதமாகப் பின்பற்ற அவர்களது பகுத்தறிவு ஒரு தடையாகவும் இருந்ததில்லை. அதற்குக் காரணம் அம்பேத்கரின் எழுத்துக்களே எனலாம்.
- ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலுக்கான பதிப்பிக்கப்படாத முகவுரையில் புத்தரின் மதம் (Religion of the Buddha) என்றே அம்பேத்கர் தெளிவுபடுத்துகிறார். “புத்தரின் தம்மத்தைச் சிறந்ததாகக் கருதுகிறேன். எந்த மதத்தையும் அதனுடன் ஒப்பிட முடியாது. அறிவியலை அறிந்த ஒரு நவீன மனிதனுக்கு மதம் வேண்டுமென்றால் புத்தரின் மதத்தை மட்டுமே அவனால் வைத்துக்கொள்ள முடியும்” - இவையே பெளத்தத்தை நோக்கி தான் செல்வதற்கான காரணம் என அம்பேத்கர் எழுதுகிறார்.
- 1935 அக்டோபர் 13இல் நடந்த இயோலா மாநாட்டில், “நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்” என அம்பேத்கர் உறுதியளித்தார். இதையடுத்து, “வீடு அல்லது உடையைப் போன்று மதத்தையும் விருப்பம்போல மாற்றிட முடியாது” என காந்தி கூறினார். “எந்த மதத்திற்குச் செல்வது என்று தற்போது முடிவெடுக்கப்படவில்லை என்றாலும், நான் மதம் மாறுவது முடிவெடுக்கப் பட்டு விட்டது” என அம்பேத்கர் எதிர்வினையாற்றினார்.
- இப்பின்னணியில், மே 1936இல் மதமாற்றத்துக்கான ஆதரவினைக் கண்டறிய நடந்த தாதர் மாநாட்டில் எழுப்பப்பட்ட பந்தலில் மதமாற்ற முழக்கங்கள் வைக்கப்பட்டன. ‘Conversion’ என்ற சொல் இங்கே பயன்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் நிகழ்த்தப்படாமல் போன ‘சாதி ஒழிப்பு’ உரையிலும் இதே சொல் பயன்படுத்தப்பட்டது. இச்சொல் தொடர்பான அம்பேத்கரின் மரபார்ந்த பயன்பாட்டினைக் கவனிக்கையில் எங்கும் எப்போதும் ‘மதம்’ என்ற கட்டமைப்பை நோக்கியே அவர் பயணப்படுவதைப் புரிந்துகொள்ள முடியும்.
- 20 ஆண்டுகள் கழித்து, நாக்பூரில் அம்பேத்கர் பெளத்த மதத்தினைத் தழுவினார். மறுநாள் 15, அக்டோபர், 1956இல் மராத்தி மொழியில் உரையாற்றுகையில், ‘‘நான் ஏன் மற்ற மதங்களை ஏற்காமல் ‘பெளத்த மத’த்தினை மட்டுமே தழுவினேன்?’’ என்ற கேள்வியை அவரே எழுப்பி விளக்கமும் அளித்தார். நன்கு சிந்தித்து உணர்ந்த பின்னரே எவரொருவரும் ‘இம்மத’த்தைத் தழுவ வேண்டும் என அறிவுறுத்தினார்.
- கார்ல் மார்க்ஸைப் பின்பற்றுபவர்களுடன் முரண்பட்டு, மனித குலத்துக்கு ‘மதம்’ இன்றியமையாதது எனவும் இவ்வுரையில் அம்பேத்கர் தெரிவித்தார். பெளத்தத்தை அறநெறி, பகுத்தறிவு என்பதையெல் லாம் கடந்து ‘மதம்’ என்ற பொருளிலேயே அம்பேத்கர் பயன்படுத்தி உள்ளார். பெளத்தம் என்பது வாழ்க்கை முறை என்று அம்பேத்கரும் கூறியிருக்கிறார்.
- அதற்கு மட்டுமே அழுத்தம் கொடுத்து பெளத்தத்தை மதமாகக் கருதக் கூடாது என்று கூறுவதென்பது அம்பேத்கரையே திரிபு செய்வதற்குச் சமம். பெளத்தம் என்பது மதமா அல்லது அறநெறி மட்டுமா என்ற விவாதமே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதுடன், பட்டியல் சாதியினரை இந்து தீண்டத்தகாதவர் களாகத் தொடரவே வழிவகுக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (25 - 10 – 2023)