TNPSC Thervupettagam

அம்பை 80: இரண்டு தலைமுறை கடந்து செல்லும் எழுத்து

November 24 , 2024 6 days 28 0
  • தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு தொடக்கக் காலத்திலிருந்தே வெளிப்பட்டுவந்துள்ளது. நவீனக் காலத்திலும் அதன் தொடர்ச்சியைப் பார்க்க முடியும். ஆனால், பெண்ணியம் என்கிற நோக்கில் தமிழில் தொடக்கக் காலத்தில் கதைகள் எழுதப்படவில்லை; பெண்ணுக்காக உருவாக்கப்பட்ட விழுமியங்கள் கேள்வி கேட்கப்படவில்லை. 1960களில் எழுதவந்த அம்பை, இத்தகைய கேள்விகளைத் தமிழ் இலக்கியத்தில் தொடங்கிவைத்தவர் எனலாம்.
  • அம்பை, 1944இல் கோயம்​புத்​தூரில் பிறந்​தவர். பதின்ம வயதில் எழுதத் தொடங்​கி​னார். அம்பை தன் கதைகளுக்கான மொழிக்குச் சிரமம் எடுத்​துக்​கொண்​ட​தாகத் தெரிய​வில்லை. அவர் தன்னிடம் பேசுவதற்காக இருந்த விஷயங்​களைச் சொல்வதற்கான ஊடகம் என்கிற அளவிலேயே மொழியைக் கண்டுள்​ளார். அதனால், அவரது கதைகளின் மொழி சுமையாக இல்லை. பெரும் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்ற காலக்​கட்​டத்திலும் அம்பையின் கதைகள் உணர்வுரீ​தியாக இருந்தன. அதுபோல் வெகுஜனக் கதைகளை வாசித்திருந்தாலும், அதன் அழகியல் மொழியைக் அவர் கைக்கொள்ள​வில்லை. தான் சொல்லவந்த பொருளுக்கு ஒரு மொழி என்கிற ரீதியிலேயே அவர் அதை அணுகி​னார். பெண் என்கிற நிலையில் அந்தக் கதைகள் கொஞ்சம் சாய்வு கொண்டிருந்​தாலும் அங்கும் உணர்வு​களுக்கு இடையிலேயே பயணித்தன.
  • பெண்களுக்கான சமூக ஒழுக்​கங்கள் வலுவாக இருந்த காலக்​கட்​டத்தில் ‘ஏன் பெண்களுக்கு மட்டும் இப்படி​யெல்​லாம்?’ என்கிற சிறுமியின் அதிசயக் கேள்வி​களாகவே அம்பையின் கேள்விகள் இருந்தன. அதற்கு மேல் ஆண் வெறுப்பு இல்லை. மாறாகப் பெண் நெருக்கம் இருந்தது. அவரது தொடக்கக் காலக் கதையான ‘காட்டில் ஒரு மான்’ கதையை இதற்கு உதாரண​மாகச் சொல்லலாம். இந்தக் கதையில் வரும் குட்டிப் பெண்ணை அம்பை​யாகக் கொள்ளலாம். இந்தக் குட்டிப் பெண்போல் வெள்ளந்தியாக இந்தச் சமூகத்தின் கொடூரமான ஆண்-பெண் பேதங்களை விளையாட்​டாகச் சொல்கிறார் எனலாம்.
  • தங்கம் அத்தை, பூப்பெய்​தவில்லை. இது பற்றி குட்டிப் பெண்ணுக்குச் சொல்லப்​படு​கிறது. ஆனால், அந்தச் சிறுமிக்கு அது ஒன்றும் புரிய​வில்லை. இன்னொரு வயதுக்கு வந்த சிறுமி, பட்டுப்போன மரத்தைக் காட்டிச் சித்திரமாக விளக்க முயல்​கிறாள். அந்த மரம் உள்ளீடற்றது. “அதுதான் பொக்கை” என்கிறாள் அந்தச் சிறுமி. ஆனால், இதைக் குட்டிப் பெண்ணால் ஏற்றுக்​கொள்ளவே முடிய​வில்லை. இதனால் அவளுடைய ப்ரியமான தங்கம் அத்தைக்கு நேரும் பிரச்​சினை​களையும் அவளால் ஏற்றுக்​கொள்ள முடிய​வில்லை. இதைத் தப்பி வந்த மானுடன் ஒப்பிடு​கிறார் அம்பை. அது குட்டிப் பெண்ணைக் குறிக்​கிறது எனக் கொள்ளலாம். இந்தக் கதையில் ஓர் உரத்த தொனி இல்லை. ஆனால், காத்திரத்​துடன் கதை கட்டப்​பட்​டுள்ளது.
  • குடும்ப உறவுகள், அதன் சிக்கல்கள், அது மனதளவில் ஏற்படுத்தும் தாக்கம் எல்லா​வற்​றையும் வேதனை​யுடன் வெளிப்​படுத்தும் பண்பும் அம்பையின் கதைகளில் வெளிப்​படு​கிறது. அவரது பழைய ‘ம்ருத்யூ’ கதை அப்பா-மகள் உறவை உணர்வு​பூர்​வ​மாகச் சித்தரிப்​பதைப் பார்க்க முடியும். அவரது சமீபத்திய கதையான ‘தொண்டை புடைத்த காகம்’ கதையில் காகம் அப்பாவின் உருவாக வருகிறது. ஞாபக மறதிகொண்ட அப்பா, ஒரு மகள் என அந்தக் கதையின் தன்மை வேதனை​யுடன் பின்னப்​பட்​டுள்ளது. சமகால சமூக மாற்றத்தில் சிக்கலுக்​குள்ளான உறவுகள், அதனால் ஏற்படும் மனச் சஞ்சலங்கள் எல்லாம் இந்தக் கதைகளில் திருத்தமாகச் சொல்லப்​பட்​டுள்ளன. தொன்ம நம்பிக்கையை ஒரு கைப்பிடி​யாகக்​கொண்டு மனதை விசாரிக்கும் கதை.
  • அவரது ‘வெளிப்​பாடு’ சிறுகதையில் ‘வெகுஜனப் பெண்’ணிலிருந்து வெளியேறி​விட்ட டெல்லி​வாசிப் பெண் வழியாகக் கதை சொல்லப்​படு​கிறது. இந்தக் கதைக்குள் பெண்கள் இருவர் வருகிறார்கள். இருவரும் கதைசொல்​லிக்குத் தோசை சுட்டுப் போடுகிறார்கள். ஒருத்தி திருமணம் முடிந்து, தோசைகள் சுட்டு, கணவனிடம் அடிகள் வாங்கி, குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்துத் தன் வாழ்க்கையைச் சமையலறைக்குள் ஒடுக்​கிக்​கொண்ட மனுஷி. அவள் நாற்பது வருடங்​களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்​டா​யிரம் தோசைகள் சுட்டிருக்​கிறாள். இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்​புகள், சோறு எல்லாம் தனிக் கணக்கு என்கிறார் கதைசொல்லி. இன்னொருத்தி கை நீட்டாத, கடை கண்ணிக்குக் கூட்டிப்​போகும் கணவனைக் கனவு காணும் இளம் பெண்.
  • அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. ‘அம்பை சிறுகதைகள்’ முழுத் தொகுப்பும் ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ குறுநாவலும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. அம்பை, புனைவு எழுத்துக்கு அப்பாற்பட்டுச் சமூகவியல் கட்டுரையாளராகவும் அறியப்பட்டவர். ‘எகனாமிக்கல் அண்ட் பொலிட்டிகல் வீக்லி’ உள்ளிட்ட பல ஆங்கில இதழ்களில் பெண்களின் நிலை குறித்துச் சமூகவியல் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஸ்பாரோ (SPARROW) அமைப்பை நிறுவியவர்களில் ஒருவர். தமிழகம் தாண்டி அறியப்பட்ட எழுத்தாளர்களில் அம்பையும் ஒருவர். ‘காட்டில் ஒரு மான்’ கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ஆங்கில இலக்கியத்தின் உயரிய விருதுகளுள் ஒன்றான ‘கிராஸ் வேர்டு’ விருதைப் பெற்றுள்ளார். இந்திய அளவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் டாடா விருதைப் பெற்றுள்ளார். கனடா இலக்கியத் தோட்ட இயல் விருது, சாகித்திய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • மூத்த மனுஷிக்குப் பிள்ளை பெறுவதற்கும் சமைப்​ப​தற்கும் அப்பால் ஒரு வாழ்க்கை இருக்​கிறது. சமுத்​திரம் மீது தீரா ப்ரியம் இருக்​கிறது. கண்ணாடி மாதிரி கிடக்கும் ஒரு சமுத்​திரத்தைச் சின்ன வயதில் பார்த்திருக்​கிறாள். அதைச் சமுத்திர சாபம் என்கிறாள் அவள். அதனால், கணவரிடம் அடியும் வாங்கி​யிருக்​கிறாள். இளம் பெண்ணுக்கு எல்லா​வற்​றையும் சுயமாகச் செய்ய விருப்பம். தனியாகக் கடைக்குப் போகவும் ஆசை. ஆனால், கதவு வரைதான் அவள் எல்லை. இந்த இரண்டு பெண்களும் குடும்ப அமைப்​புக்குள் எப்படித் தொலைந்​து​போயிருக்​கிறார்கள் என்பதை நமக்குச் சொல்கிறது இந்தக் கதை.
  • ‘சுதா குப்தா என்கிற துப்பறி​வாளரின் கதை’ என அம்பை சமீபத்தில் தொடர்ச்​சியாக எழுதிவரும் கதைகள், அவரது அடுத்த கட்டத்​திற்கான நகர்வாக இருக்​கிறது. அம்பையின் கதைகளில் நகைச்சுவை உணர்வு குறைவு எனச் சொல்லப்​படுவது உண்டு. ஆனால், அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உறைந்​து​விட்ட ஒரு தவறான பழக்கத்தை அவர் சுட்டிக்​காட்டும் விதம் விமர்​சன​மாகவும் பகடியாகவும் வெளிப்​படுவதை அவரது கதைகளில் உணரலாம். இந்தக் கதைகளில் மும்பை நகர வாழ்க்கை, பெண்கள், காதல், பகடி எல்லாம் தொழிற்​பட்​டுள்ளன. 1960களில் எழுதத் தொடங்கி, இரண்டு தலைமுறை​களைத் தாண்டிப் பயணிக்​கிறது அவரது எழுத்து. சர்வதேச அளவில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள், லட்சியத் தோல்விகள், புதிய கருத்​தாக்​கங்கள் எனப் பலவும் இந்த இரண்டு தலைமுறைக் காலக்​கட்​டத்தில் ஏற்பட்​டுள்ளன. அம்பையின் கதைகள் பெண்​ணியக் கதைகள் என்​ப​தையும் ​தாண்டி, இவை எல்​லா​வற்றுக்​குமான ​சாட்​சியங்கள்​ எனலாம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்