TNPSC Thervupettagam

அரசமைப்பின் மீள்வெற்றி

June 14 , 2024 17 days 56 0
  • நடைபெற்று முடிந்த 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மையப் பிரச்சினை என்று எதுவும் இல்லை எனத் தேர்தலின் பல்வேறு கட்டங்களில் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மையப் பிரச்சினையாக நினைத்தது என்னவோ அரசமைப்பைத்தான் (Constitution).
  • இந்த மண்ணில் காலம்காலமாகத் தொடர்ந்துவரும் மேம்பட்ட விழுமியங்களை மதிக்கும் இந்தியர்கள்தான் தாங்கள் என்பதை, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் மீண்டும் ஒரு முறை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் மரபுப் பெருமைகளைவிட அனைவரையும் சமமாக நடத்தச்சொல்லும் அரசமைப்பை மைய அம்சமாகக் கொண்டே பலரும் வாக்களித்திருக்கிறார்கள்.
  • நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சி என்று கூறப்பட்டாலும், அது சட்டப்படிதான் நடக்கிறதா என்பது அரசமைப்பை மக்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே. நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட குடும்ப மரபு, சாதி மரபு, மத மரபு போன்றவை இருக்கலாம். நம் குடும்பங்களில் அவற்றைத் தீவிரமாகப் பின்பற்றவும் செய்யலாம். தேர்தலில் வாக்களிக்கும்போது, இந்த அம்சங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தத்தான் செய்கின்றன.
  • ஆனால், நமது சமூகத்திலும் புறஉலகச் செயல்பாடுகளிலும் மேற்கண்ட தனிப்பட்ட விருப்பு சார்ந்த அம்சங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் என்றால், நாடும் சமூகமும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து மேம்பட்ட சமூகமாக வளர்வது சாத்தியமில்லாமல் போகும். கூட்டுணர்வுடன் ஒரு சமூகமாகச் செயல்பட வேண்டுமானால், அனைவருக்கும் அனைத்தையும் சமமாகக் கருதும் சட்டப் பாதுகாப்பு தேவை. நமது அரசமைப்பு அதை வழங்கியுள்ளது.
  • சமூக நீதிக் கொள்கை அடிப்படையிலான இடஒதுக்கீட்டு உரிமை, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் அனைத்துத் தளங்களிலும் பங்கேற்கக்கூடிய சமமான வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தக்கூடிய அரசமைப்புச் சட்டத்தை 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாள்கள் விவாதித்து, அரசமைப்பு அவையில் பங்கேற்ற தலைவர்கள் உருவாக்கினார்கள். அது வெறுமனே சட்டப் புத்தகமாகத் தேங்கிவிடக் கூடாது என்றும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தேசத்தை நிர்மாணித்த முன்னோடித் தலைவர்கள் கருதினார்கள்.
  • தனிமனிதர்களைவிட, ஆட்சி அதிகாரத்தைவிட, அரசின் அங்கங்களைவிட மக்களை மையமாகக் கொண்ட அரசமைப்புதான் முதன்மையானது என்பதை அந்தத் தலைவர்கள் சமைத்த கனவின் பாதையில் நடைபயின்ற இந்திய வாக்காளர்கள், இந்தத் தேர்தலில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். நவீன இந்தியாவில் தங்கள் அடையாளம் எதில் அடங்கியுள்ளது என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பதை இது வெளிப்படுத்துகிறது. அது அரசமைப்பு தூக்கிப்பிடிக்கும் மேம்பட்ட விழுமியங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

சாமானியரின் ஆயுதம்:

  • நாட்டு விடுதலைக்குப் பிறகு மற்ற காலங்களைவிட, சமீப ஆண்டுகளில் அரசமைப்பு சார்ந்த விவாதங்களும் பேச்சும் அதிகரித்திருக்கின்றன. அரசமைப்பை மக்கள் என்றைக்குமே மறந்திருக்கவில்லை. 2019 டிசம்பரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, அதற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்களில் அரசமைப்புப் புத்தகம் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. மசூதிகள், பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் தேசியக் கொடி வைக்கப்பட்டிருந்தது. சுதந்திர தினம், குடியரசு தினங்கள் உண்மையான வெளிப்பாட்டுடன் கொண்டாடப்பட்டன.
  • தனி மனித உரிமைகளையும் அரசமைப்பின் முகவுரையையும் முன்வைத்துப் பள்ளி மாணவர்கள் தொடங்கிச் சமூக ஊடகங்கள் வரை பேசப்பட்டுவருகிறது, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாகவே 18ஆவது நாடாளுமன்றத் தேர்தலிலும் அரசமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்தது என்று ‘தி பிரின்ட்’ இதழில் அபூர்வா மந்தானி பல்வேறு அம்சங்களைக் கவனப்படுத்தியுள்ளார்.

400 தொகுதிகளும் அரசமைப்பும்:

  • நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் தேவையற்ற சட்டங்களை மாற்ற முடியும் என கர்நாடகத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார், மார்ச் மாதம் பேசியிருந்தார். அடுத்து, நாட்டின் நலனுக்காகச் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றார் ராஜஸ்தான் பாஜகவின் ஜோதி மிர்தா. 2024 அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் பேசிய உத்தரப் பிரதேச பாஜக முன்னாள் எம்.பி. லல்லு சிங், புதிய அரசமைப்பை உருவாக்க மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்றார். ‘இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி’ என்கிற பெருமுழக்கத்துக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மேற்கண்ட கூற்றுகளை உரத்துப் பேசியது.
  • உடனடியாக இந்தப் பேச்சுகளுக்கு எதிரான வாதங்களை காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தன. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்கிற பிரச்சாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக எதிர்த்தார். ‘இந்தத் தேர்தல் - வேட்டையாடிகளுக்கும் (பக்ஷக்), காவலர்களுக்கும் (ரக்ஷக்) இடையிலானது’ என்றார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்.
  • ‘ஏழைகள், தலித், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டையும் உரிமைகளையும் உறுதிப்படுத்தியது அரசமைப்புதான். அது பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். அரக்கு நிற அட்டை கொண்ட சிறிய அரசமைப்புப் புத்தகத்தைக் கையில் பிடித்தபடி, இதைப் பாதுகாக்கவே இந்தத் தேர்தல் எனப் பெரும்பாலான பிரச்சாரக் கூட்டங்களில் ராகுல் காந்தி பேசினார். தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போதும், அந்த அரசமைப்புப் புத்தகம் அவர் கையில் இருந்தது. முன்னதாக 2022 செப்டம்பரில் அவர் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரையும் ‘அரசமைப்பைப் பாதுகாப்பதற்காக’ எனும் முழக்கத்துடன்தான் நடைபெற்றது.

பிரச்சாரத்தின் திசை:

  • பொதுவாக, பெரும்பாலான தேர்தல்களில் பிரச்சாரத்தின் போக்கை முன்கூட்டியே திட்டமிட்டுத் தீர்மானித்து, அந்தத் திசையிலேயே பாஜக தொடர்ச்சியாகச் செலுத்தும். புதிய அம்சங்களைக் கூறிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக, பாஜகவின் பிரச்சாரத்துக்குப் பதில் கூறும் நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் அமையும். ஆனால், இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் உரிமை, அரசமைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றை முன்வைத்து இண்டியா கூட்டணிக் கட்சிகள் இந்த முறை மேற்கொண்ட பிரச்சாரம், மக்களிடையே எதிரொலிக்க ஆரம்பித்தது. அநேகமாக முதன்முறையாகத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் பல்வேறு அம்சங்களுக்காக எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்துக்குப் பதில் கூறும் நிலைமைக்கு பாஜக தள்ளப்பட்டது. ஒரு கட்டத்தில், “அம்பேத்கரே வந்தாலும் அரசமைப்பை மாற்ற முடியாது” என ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியே பேசியிருக்கிறார்.
  • இந்தப் பின்னணியில்தான் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன், பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்.பி-க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி அரசமைப்புப் புத்தகத்துக்கு வணக்கம் செலுத்தினார்.

மக்களின் செய்தி:

  • அரசமைப்பின் அடிப்படையிலான ஜனநாயகம் என்பது ஆளும்கட்சிகள், எதிர்க்கட்சிகளின் கைகளில் மட்டும் இல்லை. உண்மையில், அது மக்களின் கைகளில்தான் இருக்கிறது. அரசமைப்பையும் அது தூக்கிப்பிடித்த ஜனநாயக மாண்புகளையும் மறந்து கட்சிகள் செயல்படும்போதெல்லாம், அரசமைப்பின் முக்கியத்துவத்தை மக்கள் பல வகைகளில் நினைவுபடுத்துகிறார்கள். இந்தத் தேர்தலில் அது திட்டவட்டமாக நடந்துள்ளது.
  • அரசமைப்பு என்பது தங்கள் நடைமுறை வாழ்க்கையில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்று, நாட்டை நிர்மாணித்த தலைவர்களின் கனவுகள் மேம்பட்டவை என்பதைச் சாதாரண இந்தியக் குடிநபர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையே இது வெளிப்படுத்துகிறது. அதன் காரணமாகவே இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தாலும் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், கூட்டணி சார்ந்த பெரும்பான்மையை வழங்கி, அத்துடன் ஒரு செய்தியையும் சேர்த்தே உணர்த்தியிருக்கிறார்கள். அரசமைப்பே இந்த நாட்டின் தன்மையைத் தீர்மானிக்கிறது என்பதுதான் அந்தச் செய்தி.

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்