TNPSC Thervupettagam

அரசமைப்பின் முகப்புரை: ஒரு பேசப்படாத வரலாறு

January 26 , 2021 1457 days 731 0
  • கடந்த 2020-ல் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக வெளிவந்த நூல்களுள் ஆகாஷ் சிங் ரத்தோர் எழுதிய அம்பேத்கர்ஸ் ப்ரியாம்பில்பரவலான கவனத்தைப் பெற்றது. ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒரு ரகசிய வரலாறுஎன்று தனது புத்தகத்துக்குத் துணைத்தலைப்பு இட்டிருந்தார் ஆகாஷ்.
  • அரசமைப்பின் திறவுகோல் என்று வர்ணிக்கப்படுவது அதன் முகப்புரை. ஜவாஹர்லால் நேருவால் முன்மொழியப்பட்ட குறிக்கோள் தீர்மானமே அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைந்தது என்று கூறப்படுகிறது. முகப்புரை உருவாக்கத்தில் அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ், அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புகளைக் குறித்து கேள்விகளை எழுப்பி விடையளித்துள்ள ஆகாஷ், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவில் தொடர்ந்து கலந்துகொண்ட ஒரே நபர் என்ற அடிப்படையில் அம்பேத்கரின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.

நேருவின் தீர்மானம்

  • மே 11, 1946-ல் பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை இயற்றிக்கொள்ள பரிந்துரை செய்தது. அதைத் தொடர்ந்து, ஜூலை 22, 1946-ல் காங்கிரஸ் காரிய கமிட்டியால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, குறிக்கோள் தீர்மானத்துக்கான வரைவை இறுதிசெய்தது.
  • ஜவாஹர்லால் நேரு தலைமையிலான அந்தக் குழுவில் ஆசப் அலி, கே.எம்.முன்ஷி, என்.கோபாலசாமி அய்யங்கார், கே.டி.ஷா, ஹுமாயூன் கபீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஏறக்குறைய ஐந்து மாதங்கள் கழித்து டிசம்பர் 13, 1946 அன்று அரசமைப்புச் சட்ட அவையில் ஜவாஹர்லால் நேரு அத்தீர்மானத்தை முன்மொழிந்தார்.
  • டிசம்பரிலும் ஜனவரியிலும் எட்டு நாட்கள் விவாதத்துக்குப் பிறகு ஜனவரி 22, 1947 அன்று அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்தக் கோரிக்கைகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டதால் அவையில் ஒருமனதாக நிறைவேறியது.
  • நேரு முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானத்தின் மீது விவாதிக்கவும் திருத்தம் கோரவும் 50 பேர் விருப்பம் தெரிவித்ததை அரசமைப்புச் சட்ட அவையின் தலைவர் ராஜேந்திர பிரசாதின் உரையிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
  • சமநலவாதியான ஜவாஹர்லால் நேரு, குறிக்கோள் தீர்மானத்தில் சோஷலிஸம்என்ற வார்த்தையைக் குறிப்பிடவில்லை. சமநலப் பொருளாதாரம் இல்லாவிட்டால் சமூக, பொருளாதார, அரசியல் சுதந்திரம் எப்படிக் கிடைக்கும் என்று அப்போது அவையில் கேள்வியெழுப்பியிருக்கிறார் அம்பேத்கர். அப்போது அவர் அவை உறுப்பினராக மட்டுமே இருந்தார். வரைவுக் குழு அப்போது அமைக்கப்படவில்லை.

ஐக்கிய இந்திய நாடுகள்

  • அனைத்திந்திய பட்டியலினக் கூட்டமைப்பில் சார்பின் அரசமைப்புச் சட்ட அவையின் ஆலோசனைக் குழுவுக்குச் சமர்ப்பித்த பிரமாணங்களில் முகப்புரைக்கான வரைவு ஒன்றையும் பரிந்துரைத்தார் அம்பேத்கர். அந்த வரைவிலும்கூட சோஷலிஸம்என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.
  • ஆனால், அவர் பரிந்துரைத்த அரசமைப்பே சமநலச் சமுதாயத்தின் அடிப்படையில்தான் அமைந்திருந்தது. தொழிற்துறையை மட்டுமின்றி விவசாயத்தையும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார் அம்பேத்கர்.
  • அவர் பரிந்துரைத்த முகப்புரையானது ஐக்கிய இந்திய நாடுகள் என்ற வார்த்தைகளைக் கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • வரைவுக் குழுத் தலைவராகப் பொறுப்பேற்றதாலேயே தனது விருப்பங்களை வெளிப்படுத்த முடியாமல் அம்பேத்கர் கட்டுப்படுத்தப்பட்டார் என்றொரு வாதம் இன்றும் தொடர்கிறது.
  • ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை கொடுத்ததால் அரசமைப்புச் சட்டத்தின் சமநலச் சமுதாயம் குறித்த அவரது கனவைத் தள்ளிவைத்துவிட்டார் என்று எண்ணவும் இடமுண்டு.
  • அம்பேத்கரையும் அவர் காலத்து அரசியல் நெருக்கடிகளையும் அவர் ஏற்றுக்கொண்ட பணியையும் கணக்கில் கொண்டால், அம்பேத்கரை இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள முடியும்.
  • மே 30, 1947-ல் குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு முகப்புரைக்கான வரைவொன்றை அரசமைப்புச் சட்ட ஆலோசகர் பி.என்.ராவ் அளித்தார். ‘இந்திய மக்களாகிய நாம்என்ற வார்த்தைகளுடன் கூடியதாக அந்த வரைவு அமைந்திருந்தது.
  • குறிக்கோள் தீர்மானத்துக்கு முகப்புரை வடிவம் கொடுப்பது பற்றி முடிவுசெய்வதற்கு ஒரு துணைக் குழு நியமிக்கப்பட்டது. அத்துணைக் குழுவில் ஏற்கெனவே குறிக்கோள் தீர்மானத்தை முடிவுசெய்த காங்கிரஸ் குழுவில் இடம்பெற்றிருந்த கே.எம்.முன்ஷி, என்.கோபாலசாமி அய்யங்கார் இருவரும் இடம்பெற்றிருந்தார்கள்.
  • பாகிஸ்தான் பிரிவினை அறிவிக்கப்பட்டவுடன் அரசமைப்புச் சட்ட அவை உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது. அரசியல் சூழலும் அமைதியிழந்தது.
  • அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்தை உறுதிசெய்வதற்கு முன்னால் முகப்புரையைப் பற்றி முடிவுசெய்துகொள்ளலாம் என்று அது குறித்த விவாதங்கள் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.

அம்பேத்கரின் வரைவு

  • பிப்ரவரி 6, 1948 தேதியிட்ட வரைவுக் குழு குறிப்புகளின்படி, முகப்புரைக்கான வரைவு இறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  • அந்த வரைவு நேரு முன்மொழிந்த குறிக்கோள் தீர்மானமும் அல்ல, பட்டியலினக் கூட்டமைப்பு சார்பில் அம்பேத்கர் சமர்ப்பித்த வரைவும் அல்ல, பி.என்.ராவ் அளித்த வரைவும் அல்ல.
  • அப்படியென்றால், அந்த வரைவை முடிவுசெய்தது வரைவுக்குழுவாக மட்டுமே இருக்க முடியும். மூன்றரை மணி நேரம் நடந்த வரைவுக் குழுக் கூட்டத்தில் வெறும் பத்து நிமிட விவாதத்திலேயே முகப்புரையின் வரைவு முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
  •  வரைவுக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் முழுமையாகப் பங்கெடுக்காத சூழலில், நிச்சயம் அந்த வரைவை எழுதியவர் அம்பேத்கர் என்றே கருத வேண்டியிருக்கிறது என்ற முடிவுக்கு வருகிறார் ஆகாஷ் சிங் ரத்தோர்.
  • சாதி, வர்க்க வேறுபாடுகள் இல்லாத இந்தியாவைக் கனவுகாணும் வார்த்தைகள் அம்பேத்கருடையதாகவே இருக்க வேண்டும் என்பது அவரது முடிவு.
  • அரசமைப்புச் சட்ட அவைத் தலைவர் ராஜேந்திர பிரசாதிடம் அரசமைப்புச் சட்ட வரைவைச் சமர்ப்பிப்பதற்காக பிப்ரவரி 21, 1948-ல் கூடிய வரைவுக் குழுவின் இறுதிக் கூட்டத்தில் முகப்புரையில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன என்றாலும் அவை வார்த்தைகளை எளிமைப்படுத்தலுக்காக மட்டுமே.
  • அம்பேத்கரால் ஆலோசனைக் குழுவிடம் அளிக்கப்பட்ட வரைவு முகப்புரையின் உள்ளடக்கம் பின்பு அவரே வரைவுக் குழுத் தலைவரான போது எளிதில் நிறைவேறிவிட்டது என்றே கொள்ள வேண்டும்.
  • 81 வார்த்தைகளில் இறுதி செய்யப்பட்ட முகப்புரையில் நீதி, தன்னுரிமை, சமத்துவம், உடன்பிறப்புரிமை, நாடு ஆகிய ஆறு சொற்கள் உரிய முக்கியத்துவத்தைப் பெறுவதற்கு அம்பேத்கரே காரணகர்த்தாவாக இருந்திருக்கிறார்.
  • சமயச் சார்பின்மை, சமநலச் சமுதாயம் ஆகிய சொற்கள் முகப்புரையில் இடம்பெற வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட அவையிலேயே திருத்தம் கோரி தீவிரமாக வாதாடியவர் கே.டி.ஷா.
  • அவரது மறைவுக்குப் பிறகு 1976-ல்தான் அந்தக் கோரிக்கை நிறைவேறியது. சமயச் சார்பின்மை, சமநலச் சமுதாயம், ஒருமைப்பாடு ஆகிய சொற்களைச் சேர்த்த பிறகு தற்போது முகப்புரை 85 வார்த்தைகளைக் கொண்டிருக்கிறது.
  • இந்திய மக்களாகிய நாம்என்று தொடங்கும் முகப்புரையில் ஜவாஹர்லால் நேரு, பி.என்.ராவ், அம்பேத்கர், கே.டி.ஷா என்று எத்தனையோ தலைவர்கள், சட்ட அறிஞர்களின் கனவுகள் ஒன்றுகலந்திருக்கின்றன.

அந்தக் கனவை மெய்யாக்குவதே இந்தியர்களாகிய நம் முதற்கடமை.

நன்றி: இந்து தமிழ் திசை (26-01-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்