- உலகத்திலேயே மிகவும் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், இறையாண்மை மிக்க அரசர் அல்லது அரசி தலைமைப் பொறுப்பில் இருக்கிறார், ஆனால் அங்கு எழுதப்பட்ட அரசியல் சட்டம் இல்லை; அப்படி இருந்தும் அரசமைப்புச் சட்டப் படியான ஜனநாயக நாடுகளுக்கு அதுவே முன்மாதிரியாகக் கருதப்படுகிறது. பிரிட்டனின் நிர்வாக முறையானது, எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் கொண்ட பிற நாடுகளின் நிர்வாகத்தைவிட உயர்வானதாகக் கருதப்படுகிறது.
- இதற்கு நேர் மாறானவை டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாந்து போன்றவை, இங்கும் அரச குடும்பத்தவர்களே அரசின் அடையாளத் தலைமையாகத் தொடர்கின்றனர். சீனம், ஈரான், மியான்மர் (பர்மா) போன்ற நாடுகள் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. ஜனநாயகத்தன்மையை ஆய்வுசெய்து தரப்படுத்தும் ‘வி-டெம்’ அமைப்பு, முதல் வகை நாடுகளை ‘சுதந்திரமான ஜனநாயக நாடுகள்’ பட்டியலில் முன்னிலை பெறுவதாக வகைப்படுத்தியிருக்கிறது, பிந்தைய நாடுகளை, ‘சர்வாதிகார நாடுகள்’ என்கிறது.
- இந்த இரண்டுக்கும் இடையில்தான் இந்தியா இருக்கும் என்று கருதுகிறேன். இந்தியாவில், எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம்தான் அமலில் இருக்கிறது; அது மிகவும் நெடியது. டாக்டர் அம்பேத்கரும், சட்டத்தைத் தயாரிக்கும் வரைவுக் குழுவில் இருந்த அவருடைய சகாக்களும் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாள்கள் கடுமையாக உழைத்து சட்ட வரைவைத் தயாரித்து அரசமைப்புச் சட்டமாக்க உதவினர்.
- அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பேரவையே, ஜனநாயக முறையில் விவாதங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும், மாறுபட்ட கருத்துகள் எப்படித் தெரிவிக்கப்பட வேண்டும், முடிவுகள் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
தடுமாறினோம், சுதாரித்து விட்டோம்
- எழுதப்பட்ட இந்த அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டே 73 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். சட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பதாக நாடாளுமன்றம் கருதியபோதும் – அப்படி அது கருதாதபோதிலும்கூட – நாடாளுமன்றம் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறது. இதுவரை இந்திய அரசமைப்புச் சட்டம் 106 முறை திருத்தப் பட்டிருக்கிறது.
- நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது அரசமைப்புச் சட்டத்துக்கு வெளிப்படையான சவால் ஏற்பட்டுவிட்டதாக பல சட்ட நிபுணர்கள் நம்பினர். ஆனால், அரசமைப்புச் சட்டம் மறைமுகமான ஆபத்துகளை எதிர்கொண்ட தருணங்கள் வேறு பலவும் உண்டு. அரசமைப்புச் சட்டமானது நசுக்கப்பட்டு நெளிந்தது, ஆனால் அழிக்கப்படாமல் தப்பிவிட்டது.
- சில தருணங்களில் உச்ச நீதிமன்றமும் தடுமாறியிருக்கிறது, ஆனால் காலப்போக்கில் அதிலிருந்து மீண்டுவிட்டது. தான் தவறுசெய்துவிட்டதை உணர்ந்து அதை ஒப்புக்கொள்ளும் பணிவு அதனிடம் இருக்கிறது. ஏ.கே.கோபாலன், ஐ.சி. கோலக்நாத், ஏ.டி.எம். ஜபல்பூர் வழக்குகள் உதாரணம். மேனகா காந்தி, எஸ்.ஆர்.பொம்மை, கேசவானந்த பாரதி, கே.எஸ்.புட்டசாமி வழக்குகளில் நீதிமன்றமே தன் தவறைத் திருத்திக்கொண்டு, அரசமைப்புச் சட்டப்படியான அடிப்படைக் கொள்கைகளை உறுதிபட வலியுறுத்தி காப்பாற்றியது.
மறைமுகமான தாக்குதல்
- சமீபத்திய சில சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. அவையெல்லாம் அரசமைப்புச் சட்டம் மீதான மறைமுகமான தாக்குதல்கள் என்பது என்னுடைய கருத்து:
- ஜம்மு – காஷ்மீர் என்ற மாநிலம் இல்லாமலாக்கப்பட்டு அதற்குப் பதிலாக இரண்டு ஒன்றியப் பிரதேசங்கள் (மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்), 2019 ஆகஸ்ட் 5இல் உருவாக்கப்பட்டன; அவை சட்டப்படி செல்லுமா என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்துக்கு வினோதமான விளக்கம் அளிக்கும் வகையில், ‘நாடாளுமன்ற’த்தை ‘நாடாளுமன்ற’மே ஆலோசனை கலந்து, அதன் கருத்துகளைத் தெரிந்துகொண்ட பிறகு அந்த மாநிலத்தை இரண்டு ஒன்றியப் பகுதிகளாக சுருக்கி விட்டது! எதிர்காலத்தில் இதே வழிமுறைப்படி வேறு எந்த மாநிலமும் இப்படி பிரிக்கப் படமாட்டாது – சுருக்கப்படமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
- தில்லி ஒன்றியப் பிரதேசம் (ஜிஎன்சிடிடி) 1992 முதல் அனுபவித்துவரும் அதிகாரங்களைக் குறைக்கும் வகையில், ஒன்றிய அரசு இரண்டு முறை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இரண்டு முறையும் அந்தச் சட்டங்கள் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தில்லி பிரதேச உயர் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை, தில்லி மாநில அமைச்சர்களின் பொறுப்பிலிருந்து நீக்கி, துணைநிலை ஆளுநருக்கு அளிக்கும் புதிய சட்டத்தை சமீபத்திய மழைக்காலக் கூட்டத் தொடரில் அரசு நிறைவேற்றியிருக்கிறது. அமைச்சர்கள் இப்போது அதிகாரிகள், துணை நிலை ஆளுநரின் தயவில் நிர்வாகத்தை நடத்த வேண்டியிருக்கிறது.
- அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி எல்லையற்ற அதிகாரங்களைக் கொண்டது. நம்முடைய ஜனநாயகத்தில் நமக்குள்ள உறுதியைப் பறைசாற்றும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்ற மக்களவைக்கும் சட்டமன்றங்களின் பேரவைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தும் கடமை அதற்கு இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு உறுப்பினர்களைக் கட்சி சார்பற்ற வகையில் தேர்ந்தெடுக்க, அனூப் அகர்வால் வழக்குக்குப் பிறகு ஒரு வழிமுறையை உச்ச நீதிமன்றம் வகுத்தளித்தது. அதன்படி பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய குழு அந்தத் தேர்வைச் செய்ய வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த ஏற்பாட்டை நிராகரிக்கும் வகையில் கடூரமான முறையில் ஒன்றிய அரசு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறது. அந்த மூவர் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதில் பிரதமர் நியமிக்கும் ஒன்றிய அரசின் அமைச்சர் உறுப்பினராக இருப்பார் என்று புதிய சட்டம் கூறுகிறது. இந்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் அரசு வென்று விட்டால் இந்திய ஜனநாயகத்தின் பாதையே மாறிவிடும்.
- மாநில சட்டமன்றங்கள் சட்ட மசோதாக்களை நிறைவேற்றுகின்றன. அரசமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவு அளிக்கும் அதிகாரப்படி மாநில ஆளுநர்கள் அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் தரலாம், அல்லது ஒப்புதல் தராமல் நிறுத்திவைக்கலாம், அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கலாம். சில ஆளுநர்கள் இந்த மூன்றில் எதையும் செய்யாமல் சும்மா அதைக் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள். சில மாநிலங்களின் சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினர்களை நியமிக்க மாநில அமைச்சரவை செய்யும் பரிந்துரைகள் மீதும் முடிவெடுக்காமல் ஆளுநர்கள் சும்மா இருக்கின்றனர். கட்சித் தாவலைத் தடைசெய்யக் கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி, கட்சி மாறிவிட்டதாகக் கருதப் படும் உறுப்பினர் மீது நடவடிக்கை கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது முடிவெடுக்காமல் சட்டப்பேரவைத் தலைவர்கள் சும்மா இருக்கின்றனர். தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்தி முடிவெடுக்காமல் சும்மா கிடப்பில் போடுவது, அரசமைப்புச் சட்டப்படி செயல்படுவதாகப் பொருள்படுமா?
- அரசமைப்புச் சட்டத்தின் மீதான சமீபத்திய தாக்குதல் மணிப்பூர் மாநில நிலவரம் தொடர்பாக நடந்துவருகிறது. மாநிலம் இப்போது இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இம்பால் பள்ளத்தாக்கில் குகி இனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட நுழைய முடியாது, குகிக்கள் அதிக எண்ணிக்கை வசிக்கும் மாவட்டங்களுக்கு ஒரு மெய்திகூட செல்ல முடியாது. முதல்வரும் மாநில அமைச்சர்களும் அவரவர் வசிக்கும் இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களைத் தவிர வேறெங்கும் செல்ல முடியாது. முதலில் தடுத்துப் பார்த்த மாநில ஆளுநர், வேறு வழியில்லாமல் மணிப்பூர் சட்டப்பேரவை கூடுவதற்கு ஆணையிட்டார். குகி சமூகத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்களால் இந்தக் கூட்டத்துக்கு வர முடியாத நிலை நீடிக்கிறது. அரசமைப்புச் சட்டம் செயல்பட முடியாமல் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று இதைக் கருத முடியாவிட்டால், அரசமைப்புச் சட்டத்திலிருந்து 356வது பிரிவை அறவே நீக்கி விடலாம்; நிலைமை இப்படி இருந்தும் பதவியில் தொடர முதல்வர் அனுமதிக்கப்படுகிறார்.
அம்பேத்கரின் எச்சரிக்கை
- புதிய அரசமைப்புச் சட்டம் தயாரித்து முடிக்கப்பட்டு அடுத்த நாள் அதன் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறப்போகிறது என்ற தருணத்தில், அரசமைப்புச் சட்டப்பேரவைத் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 1949 நவம்பர் 25இல் நிறைவுரையின் போது தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானது:
- “அரசமைப்புச் சட்டம் எவ்வளவு நன்றாக தயாரிக்கப்பட்டாலும் அதை அமல் செய்ய வேண்டியவர்கள் மோசமானவர்களாக இருந்தால் சட்டமும் மோசமாகிவிடும்; அரசமைப்புச் சட்டம் மோசமானதாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதை அமல்படுத்த வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் நாட்டுக்கு நன்மையே விளையும். அரசமைப்புச் சட்டம் நன்றாகச் செயல்படுவதென்பது அதன் தன்மையை மட்டுமே முழுக்க முழுக்க சார்ந்தது அல்ல”.
- அரசமைப்புச் சட்டத்தை நாம் முறையாகச் செயல்படுத்துகிறோமா, சிதைக்கிறோமா என்ற கேள்வியை தயவுசெய்து உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்?
நன்றி: அருஞ்சொல் (28– 08 – 2023)