TNPSC Thervupettagam

அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கரின் முதல் உரை

November 26 , 2020 1517 days 685 0
  • அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் ஆற்றிய கடைசி உரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
  • “1950 ஜனவரி 26-ல் நாம் முரண்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைப் பெற்றிருப்போம், சமூக பொருளாதார வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளைப் பெற்றிருப்போம். அரசியலில் ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு என்றிருக்கும். நமது சமூக-பொருளாதார வாழ்விலோ நமது சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒரு மனிதன் ஒரு மதிப்பு என்ற கோட்பாட்டைத் தொடர்ந்து நிராகரிப்பவர்களாக இருப்போம். எவ்வளவு காலத்துக்கு இந்த முரண்பட்ட வாழ்வை வாழப்போகிறோம்?” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியை அந்தக் கடைசி உரையில்தான் அவர் கேட்டார்.
  • ஆனால், அரசமைப்புச் சட்ட அவையில் அம்பேத்கர் ஆற்றிய முதல் உரை அப்படிப் பலருக்கும் அறிமுகமான ஒன்று அல்ல.

அரசமைப்பின் குறிக்கோள்கள்

  • அரசமைப்புச் சட்ட அவை 1946 டிசம்பர் 9-ல் முதன்முதலாகக் கூட்டப்பட்டது. 1946 டிசம்பர் 13-ல் நேரு ‘அரசியலமைப்புச் சட்ட அவையின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள்’ தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானத்தில் எட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.
  • சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கான முடிவு முதல் அம்சத்திலும்; இந்தியாவில் இடம்பெறப்போகும் பகுதிகள், எல்லைகள் குறித்து அடுத்த இரு அம்சங்களிலும்; சுதந்திர இந்தியாவின் அத்தனை அதிகாரங்களும் மக்களிடமிருந்தே பெறப்படும் என நான்காவது அம்சத்திலும்; அனைத்து மக்களும் சட்டத்தின் முன்பு சமம், அவர்களது பேச்சுரிமை, நம்பிக்கை யாவும் சட்டத்துக்கு உட்பட்டு பாதுகாக்கப்படும்; சிறுபான்மையினரின் உரிமைகள், பின்தங்கிய பழங்குடிப் பகுதிகள், ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகங்களின் உரிமைகள் பாதுகாப்பு ஆகியன அடுத்த இரு அம்சங்களிலும்; சுதந்திர இந்தியாவின் எல்லைகளையும் நீர், நிலம், ஆகாயம் ஆகியவற்றில் அதற்குள்ள உரிமைகளையும் காப்பது; உலக அமைதிக்கும் மனிதகுல முன்னேற்றத்துக்கும் பங்களிப்பது ஆகியன இறுதி இரண்டு அம்சங்களிலும் விவரிக்கப்பட்டன.
  • நேரு முன்மொழிந்த அந்த தீர்மானத்தின் மீது பேசுவதற்காக அவைத் தலைவர் ராஜேந்திர பிரசாத், டிசம்பர் 17-ல் அம்பேத்கரை அழைத்தார். அதுவே அம்பேத்கர் அந்த அவையில் ஆற்றிய முதல் உரை.
  • “தலைவர் அவர்களே, நேற்றிலிருந்து நடந்த விவாதங்களின் வெளிச்சத்தில் பார்த்தால், இந்தத் தீர்மானம் வெளிப்படையாகத் தன்னை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறது. ஒரு பகுதி சர்ச்சைக்குரியது, மற்றொரு பகுதி சர்ச்சையில்லாதது. தீர்மானத்தின் அம்சங்கள் 5, 6, 7 பகுதி சர்ச்சையில்லாதவை. அவை இந்த நாட்டின் எதிர்கால அரசியலமைப்பின் நோக்கங்களை முன்வைக்கின்றன.
  • “ஒரு சோசலிஸ்ட் என்று புகழ்பெற்ற பண்டிட் ஜவாஹர்லால் நேருவிடமிருந்து இப்படியொரு தீர்மானம் வந்திருக்கிறது. இது சர்ச்சைக்குரியது அல்ல என்றாலும், என் மனதுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது.
  •  தீர்மானத்தின் அந்தப் பகுதியில் அவர் செய்திருப்பதைவிட அவர் இன்னும் அதிகமாகச் செல்வார் என்று நான் எதிர்பார்த்தேன். தீர்மானத்தின் இந்தப் பகுதி, சில உரிமைகளை விவரித்தாலும், தீர்வுகளைப் பற்றி பேசவில்லை என்பதை நான் காண்கிறேன். உரிமைகள் மீறப்படும்போது அதற்கான நிவாரணத்தைப் பெற மக்கள் முயல்கையில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் உரிமைகளால் எந்தப் பயனும் இருக்காது” என்று அந்த உரையில் குறிப்பிட்டார் அம்பேத்கர்.

மக்களின் ஒற்றுமையே முக்கியம்

  • தொழிற்சாலைகள் எல்லாம் தேசியமயமாக்கப்பட வேண்டும், இந்தியாவில் உள்ள நிலங்களெல்லாம் தேசியமயமாக்கப்பட்ட வேண்டும் என்பது போன்ற நோக்கங்களும் குறிக்கோள்களும் இதில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய அம்பேத்கர், “தீர்மானத்தின் நான்காவது அம்சத்தில் குடியரசு என்ற சொல் இடம்பெற்றிருப்பதைப் பற்றி இங்கே ஒரு சர்ச்சை எழுந்தது.
  • மக்களிடமிருந்துதான் இறையாண்மை பெறப்படுகிறது என அந்தப் பத்தியில் சொல்லப்பட்டிருக்கிறது. முஸ்லிம் லீக் இந்த அவையில் இடம்பெறாத நிலையில் அந்தத் தீர்மானத்தை இந்த அவை விவாதிப்பது சரியாக இருக்காது என டாக்டர் ஜெயகர் கூறினார்… இந்த அவையிலே எதிரெதிரான பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருக்கிறோம். நானே அதுபோல காங்கிரஸ் கட்சியினுடைய திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கின்ற ஒரு குழுவின் பிரதிநிதி. ஆனாலும்கூட இந்த நாடு என்பது ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த நாட்டின் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை” என்றார்.
  • தீர்மானத்தின் மூன்றாவது அம்சத்தில், இந்தியாவானது ‘மாகாணங்களின் ஒன்றியம்’ என்பதைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், “பிஹாரின் பிரதமரும், ஷ்யாம பிரசாத் முகர்ஜியும் ‘தீர்மானத்தின் இந்தப் பகுதி காங்கிரஸ், முஸ்லிம் லீக், இதர தரப்பினர் அனைவரும் பங்கேற்கிற இடைக்கால அரசு உருவாக்கப்படும் என பிரிட்டிஷ் கேபினட் மிஷனால் அறிவிக்கப்பட்ட மே 16 தீர்மானத்துக்கு முரணாக இருக்கிறது; முஸ்லிம் லீக் இந்த அவையின் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்குத் தடையாக இருக்கிறது’ என்று சுட்டிக்காட்டினர். கேபினட் மிஷனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதற்கும் இந்தத் தீர்மானத்துக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை ஜெயகர் படித்துக் காட்டினார்… இந்தச் சூழலில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது அறிவுடமையாகுமா?” என்றும் கேட்டார்.

காங்கிரஸின் வியூகங்கள்

  • முன்னதான கேபினட் மிஷனின் அறிக்கைக்கு முரணாக மொத்த அதிகாரத்தையும் தனது கையில் எடுத்துக்கொள்ளவே காங்கிரஸ் முற்பட்டது. அம்பேத்கரை அரசமைப்புச் சட்ட அவையில் இடம்பெறவிடக் கூடாது என்று படேல் வெளிப்படையாகவே அறிவித்தார்.
  • இதனாலேயே பம்பாய் மாகாணத்திலிருந்து தேர்வாகாமல் வங்கத்திலிருந்து அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் இருந்தது. வங்காளத்திலிருந்த தலித் தலைவரான யோகேந்திரநாத் மண்டல் அம்பேத்கரை அங்கு போட்டியிட அழைத்தார்.
  • அம்பேத்கருக்காக வாக்களித்த ஏழு எம்.எல்.சிக்களுள் 4 பேர் தலித்துகள், ஒருவர் பழங்குடியினத்தவர், இருவர் பிற்படுத்தப்பட்டவர்கள். பட்டியலின மக்களின் உரிமையை நிராகரிக்க என்ன தந்திரத்தை அப்போது காங்கிரஸ் கையாண்டதோ அதே தந்திரத்தைத்தான் முஸ்லிம்கள் விஷயத்திலும் கையாண்டது.
  • 1946 நவம்பர் 21-ல் முஸ்லின் லீக் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, “முஸ்லிம் லீக்கின் சார்பில் அரசமைப்புச் சட்ட அவையில் எந்த உறுப்பினரும் பங்கேற்க மாட்டார்கள்”என அறிவித்தார். முஸ்லிம் லீக் பங்கேற்காமல் அவையை நடத்தினால் அது சட்டப்படி செல்லுமா என்ற ஐயம் பலருக்கும் எழுந்தது.
  • அவர்களை எப்படியாவது அவையில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று அவையின் ஆலோசகராக இருந்த பி.என்.ராவ் ஒரு குறிப்பை நேருவுக்கு அனுப்பினார். கே.எம்.முன்ஷியும் இதை வழிமொழிந்து ராஜேந்திர பிரசாதுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனாலும் நேரு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

தேசத்தின் தலைவிதி

  • முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் இடம்பெறாதது அம்பேத்கருக்குக் கவலை அளித்தது. “எதிர்காலம் பற்றியதல்ல நமது பிரச்சினை, தற்போதிருக்கும் பலதரப்பட்ட மக்கள் திரளை எப்படி ஒரே விதமாக முடிவெடுக்க வைப்பது; எப்படி ஒற்றுமையை நோக்கி இட்டுச்செல்வது என்பதே நமது பிரச்சினை” எனத் தனது பேச்சில் சுட்டிக்காட்டிய அம்பேத்கர், “தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும்போது மக்களின் கௌரவமோ தலைவர்களின் கௌரவமோ கட்சிகளின் கௌரவமோ பொருட்படுத்தத் தக்கவையல்ல.
  • தேசத்தின் தலைவிதியே அனைத்திலும் முக்கியமானது. அரசமைப்புச் சட்ட அவை முழுமையானதாக செயல்பட வேண்டுமென்றால் முஸ்லிம் லீக்கின் எதிர்வினை என்ன என்பதை அவை அறிந்துகொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.
  • ஆனால், இந்தியா ஒரே நாடாக இருக்க முடியாது என்கிற முடிவுக்கு அப்போது ஜின்னாவும் நேருவும் உறுதிபட வந்திருப்பதான போக்குகளே இரு தரப்பிலுருந்தும் வெளிப்பட்டன.
  • மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் கூட்டாட்சியாக இந்தியா வடிவமைக்கப்பட வேண்டும் என்ற ஜின்னாவின் எண்ணமும், மாறாக மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட ஒன்றியமாக இந்தியா அமைய வேண்டும் என்ற நேரு உள்ளிட்டோரின் எண்ணமும் பிரிவினை நோக்கிய பயணத்தை மேலும் தீவிரமாக்கின.
  • ‘அரசமைப்புச் சட்ட அவையைப் புறக்கணிப்பது’ என 1947 ஜனவரி 31-ல் முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியது. காங்கிரஸ் தரப்பு இடைக்கால அரசிலிருந்து முஸ்லிம் லீக்கை வெளியேற்ற வேண்டும் என்று கோரியது.
  • இந்த முரண்பாடுகளின் காரணமாக 1948 ஜூன் மாதத்துக்கு முன்பாக ஆட்சியதிகாரத்தை முழுமையாக இந்தியர்களிடம் ஒப்படைக்கப்போவதாக பிரிட்டிஷ் அரசு 1947 பிப்ரவரியில் அறிவித்தது. பிரிவினையானது உறுதியான பின்னர் மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டதான அரசமைப்பே நியாயமானதாக எல்லோருக்கும் அப்போது தோன்றியது.
  • ஆனால், காலத்துக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையுடதாகவே அது உருவாக்கப்பட்டது. இந்த நெகிழ்வுத்தன்மையே அதன் பலம் என்று சொன்னார் அம்பேத்கர்.
  • முன்னதாக, தன்னுடைய முதல் உரையை அவர் முடித்த முத்தாய்ப்பான வரிகள் அன்றைய அரசமைப்புச் சட்ட அவைக்கு மட்டும் அல்லாது நம்முடைய இன்றைய சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கான வரையறையாகவும் கொள்ளலாம்: “இந்த அவை தமக்கு அளிக்கப்பட்டுள்ள இறையாண்மைமிக்க அதிகாரத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தும் என்பதை நாம் நமது நடத்தையின் மூலம் நிரூபிப்போம்.
  • அதன் மூலமாக மட்டுமே நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் நம்மோடு அழைத்துச் செல்ல முடியும். ஒற்றுமையை எட்டுவதற்கு இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை!

நவம்பர் 26: அரசமைப்புச் சட்ட தினம்

நன்றி : இந்து தமிழ் திசை (26-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்