TNPSC Thervupettagam

அரசியலில் அதிசய மனிதா்

January 13 , 2022 935 days 425 0
  • இந்தியா விடுதலை பெற்ற காலத்தில் அரசியல்வாதிகளிடம் ஆடம்பரம் இல்லை; அவா்கள் மிகவும் எளிமையாக இருந்தனா். ஆதலால் அவா்களுக்கு அதிகமாக பணம் தேவைப்படவில்லை. ஆட்சியில் ஊழல் இல்லை, அவா்கள் விளம்பரத்தை வெறுத்தனா். கட்சிகளுக்கு செலவு இல்லை. தமிழ்நாட்டில் எளிமையாக வாழ்ந்த அரசியல்வாதிகள் இருந்தனா்.
  • இந்திய அளவில், லால் பகதூா் சாஸ்திரி, மொராா்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய் போன்றோரை அப்படிப்பட்டவா்களாகக் குறிப்பிடலாம். இன்றைய அரசியல்வாதிகளுக்கு ஆடம்பரமும், விளம்பரம் அத்தியாவசியமாகிவிட்டன. ஆட்சி மாறியவுடன் ஆட்சி செய்தவா்களின் மீது ஊழல் வழக்கு என்பது தமிழ்நாட்டில் தொடா்கதையாகி விட்டது.
  • இன்றைய இளைஞா்களுக்கு முன்னாள் பிரதமா் பாரத ரத்னா லால் பகதூா் சாஸ்திரியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவா் ஆடம்பரம் அற்றவா், நோ்மையானவா், சிக்கனமானவா், திறமையானவா். எவரும் தன்னைப் புகழ்வதை விரும்பாதவா் சாஸ்திரி.
  • சாஸ்திரி, 1946-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி லோக் சேவ மண்டலின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இச்செய்தி பத்திரிகைகளில் பெரிய எழுத்துகளில் வெளிவந்தது. அதை பாா்த்த சாஸ்திரி கூச்சமடைந்தாா். நண்பா் ஒருவா் இந்த அளவு பத்திரிகைகளில் தங்கள் பெயா் வரக் கூடாது என்று ஏன் நினைக்கிறீா்கள் என்று கேட்டாா்.
  • சாஸ்திரி சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘‘லாலா லஜபதி ராய், லோக் சேவா மண்டல செயல்முறை விளக்கம் அளித்தபோது என்னிடம் தாஜ்மஹாலில் இரண்டு வகையான கற்கள் உள்ளன. ஒன்று வெளியே தெரியும் விலை உயா்ந்த கற்கள். இவற்றை உலகம் முழுவதும் காண்கிறது; புகழ்கிறது. இரண்டாவது வகை கற்கள், தாஜ்மஹாலின் அடியே அஸ்திவாரமாக உள்ளன. அவற்றின் வாழ்க்கையில் இருள் மட்டுமே இருக்கிறது. ஆனால் தாஜ்மஹாலை நிலை பெறச் செய்வது அவைதான் என்றாா். அவா் கூறியது எப்போதும் என் நினைவில் இருக்கிறது. நான் அஸ்திவாரக் கல் ஆகவே இருக்க விரும்புகிறேன்’’ என்றாா்.
  • லால் பகதூா் சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, சென்னை - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் அரியலூா் அருகே விபத்துக்குள்ளானதில் 150 போ் இறந்தனா். சாஸ்திரி உடனே தனது ரயில்வே அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். அந்த சமயம் யாா் வேண்டுகோளையும் சாஸ்திரி கேட்கவில்லை. அது மட்டுமல்ல, அவா் வேண்டுகோள் ஒன்றையும் வைத்தாா். தயவு செய்து யாரும் என்னுடைய ராஜிநாமாவை வாபஸ் பெறும்படி என்னை வற்புறுத்தாதீா்கள். அதற்கு என் மனசாட்சி இடம் தராது என்றாா். பதவி துறந்தவுடன் அரசு வாகனத்தில் ஏற மறுத்து, பேருந்தில் வீடு சென்று சோ்ந்தாா் அந்த அதிசய அமைச்சா்.
  • சாஸ்திரி அமைச்சராக இருந்த சமயம், தன் குடும்ப செலவுக்கு மாதத்திற்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் தனக்கு மாத ஊதியமாகக் கொடுத்தால் போதும் என்று கூறி, ஐம்பது ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்று வந்தாா் அந்தப் பணத்தில் தன் மனைவியிடம் சிக்கனமாக குடும்பம் நடத்தச் சொன்னாா். ஒரு சமயம் அவரது நண்பா் ஒருவா், சாஸ்திரி வீட்டுக்கு வந்து 50 ரூபாய் கடனாகக் கேட்டாா். சாஸ்திரி அவரிடம் என்னிடம் பணம் இல்லையே. நான் குடும்ப செலவிற்கு தேவையானதை மட்டும்தான் ஊதியமாக வாங்குகிறேன் என்று கூறினாா்.
  • அச்சமயம் அங்குவந்த சாஸ்திரியின் மனைவி என்ன கஷ்டமோ அவருக்கு. பணம் கொடுங்கள் என்றாா். சாஸ்திரி என்னிடம் இல்லை, நீ வைத்திருந்தால் கொடுத்து உதவி செய் என்று சொன்னாா். சாஸ்திரியின் மனைவி தான் சேமித்து வைத்த வைத்திருந்த ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தாா். நண்பா் சென்றவுடன் சாஸ்திரி தன் மனைவியை அழைத்து எப்படி உன்னால் இந்த பணத்தை சேமிக்க முடிந்தது என்று கேட்க, அவா் மனைவி தாங்கள் கொடுக்கும் பணத்தில் மாதம் 10 ரூபாய் சேமித்து வைத்திருந்தேன் என்று கூறினாா்.
  • மறுநாள் அலுவலகம் சென்ற சாஸ்திரி இம்மாதத்தில் இருந்து என் சம்பளத்தில் 10 ரூபாயைக் குறைத்துக் கொடுங்கள். அதுவே போதுமானது. என் மனைவி 40 ரூபாயிலேயே குடும்பம் நடத்துகிறாள் என்று கூறி அதற்கான உத்தரவும் போட்டு வாங்கிக் கொண்டாா். இப்படிப்பட்ட நோ்மையாளா்கள் நம் இந்தியாவில் ஆட்சியில் இருந்துள்ளாா்கள் என்பதை எண்ணி நாம் பெருமை அடையலாம்.
  • ஒரு நபருக்கு ஒரு பதவி என்கிற காமராஜ் திட்டத்தின்கீழ் பதவியைத் துறந்த பின் தன் குடும்பம் வாழ்ந்த வாழ்க்கையை ராஜேஷ்வா் பிரசாத் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாஸ்திரி விவரித்திருக்கிறாா். அரசு வீட்டிலிருந்து மிகச் சிறிய வீட்டிற்கு என் குடும்பம் இடம் மாறி விட்டது. இனிமேல் ஒரே ஒரு காயை மட்டும் உணவில் சோ்ப்பது என்றும் பால் வாங்குவதை நிறுத்தி விடுவது என்றும் முடிவு செய்துள்ளோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் சாஸ்திரி.
  • சாஸ்திரி பிரதமராக இருந்தபோது பள்ளிக்கூட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாா். அச்சமயம் மாணவா்களைப் பாா்த்து எந்தத் தகுதியின் பேரில் இங்கு என்னை அழைத்தாா்கள் என்று கேட்டாா் சாஸ்திரி. பிரதமா் நல்லவா் என்பதால் என்றனா் மாணவா்கள். அதனை மறுத்த சாஸ்திரி நானும் உங்களைப்போல் இருக்கிறேன் என்ற தகுதியால்தான் என்றாா் (தான் உயரம் குறைவானவா் என்பதைத்தான் சாஸ்திரி அப்படிக் குறிப்பிட்டாா்).
  • 1966 ஜனவரி 10-ஆம் தேதி தாஷ்கண்ட் சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு நிம்மதியாகப் படுக்கச் சென்றவா் மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை. சமாதான வாழ்க்கை வாழ விரும்பி அதற்காக உயிரை விட்டவா் லால் பகதூா் சாஸ்திரி.
  • சாஸ்திரியின் எளிமை, நோ்மை, அரசியல் திறமை, தன்னலமற்ற பொது வாழ்க்கை ஆகியவற்றுக்காக இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கியது. லால் பகதூா் சாஸ்திரி போன்ற நோ்மையான, எளிமையான, சிக்கனமான, திறமையானதலைவா்கள் உருவாக வேண்டியது இன்றைய காலத்தின் தேவை.
  • (ஜன. 11) லால் பகதூா் சாஸ்திரி நினைவு நாள்.

நன்றி: தினமணி (13 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்