TNPSC Thervupettagam

அரசியலும்...பொருளாதாரமும்!

May 14 , 2019 2022 days 1108 0
  • பொருளாதார விளைவுகள் குறித்த எந்தவிதக் கவலையும் இல்லாமல் தேர்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்காளர்களைக் கவர்ந்தால் போதும் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டா போட்டி நிலவுகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும் வாக்காளர்களுக்கு அளித்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால், பொருளாதாரம் மிகப்பெரிய  இடரை எதிர்கொள்ளும். இந்தியாவைப் பொருத்தவரை மத்திய அரசின் நிதி நிலைமை ஆரோக்கியமானதாக இருந்தால் மட்டும் போதாது.
பொருளாதாரம்
  • அந்நியச் செலாவணி கையிருப்பு, அதிகரித்த ஏற்றுமதி,  அந்நிய நேரடி முதலீடு என்பதெல்லாம் வலுவான பொருளாதாரத்துக்கு அடையாளங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி விடாது.
  • தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியால் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது என்றாலும், அரசுக்கு அதனால் கிடைக்கும் நேரடி வருவாய் மிக மிகக் குறைவு.  உற்பத்திஅதிகரிப்பதன் மூலம் மட்டுமே அரசின் வரி வருவாயும், அதிகரித்த வேலைவாய்ப்பும் ஏற்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கூட்டாட்சி
  • முன்பே கூறியதுபோல, தேசிய அளவில் வலுவான பொருளாதாரம் இருந்தால் மட்டும் போதாது. இந்தியாவைப் போன்ற  கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்  செயல்படும் தேசத்தில், மாநிலங்களின் பொருளாதாரம் வலுவாக இருந்தால்தான் தேசிய அளவிலான பொருளாதாரம் வலுவானதாக இருக்கும்.
  • இன்றைய எதார்த்த நிலைமை என்னவென்றால், மாநிலங்களின் நிதி நிலைமை கவலைக்குரியதாகக் காணப்படுகிறது என்பதுதான். பெரும்பாலான மாநிலங்கள்  மிகப் பெரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றன. அந்த மாநிலங்களின் பற்றாக்குறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையே  பாதித்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.
  • ஒருபுறம் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், நிதிப் பற்றாக்குறையில் சிக்கியிருக்கும் மாநிலங்கள் தங்களது நிதி நிலைமையைச் சரிக்கட்ட  அதிகரித்த வட்டியில் கடன் வாங்கிக் கொண்டிருக்கின்றன.
  • இந்தப் பின்னணியில்தான் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் வெற்றியைக் குறிவைத்து கடன் தள்ளுபடிகளையும், மானியங்களையும் வழங்க முற்படுகின்றன.  காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டமானாலும் ஆளும் பாஜகவின் விவசாயிகள் மானியத் திட்டமானாலும், பல்வேறு மாநிலக் கட்சிகள் அறிவித்திருக்கும்  இலவசத் திட்டங்களும், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநிலங்கள் மீது கடுமையான  சுமையாக மாறப் போகின்றன.
தேர்தல் அறிவிப்புகள்
  • இந்தத் தேர்தல் அறிவிப்புகளை ஆட்சிக்கு வந்து அந்தக் கட்சிகள் நடைமுறைப்படுத்த முற்பட்டால், குறைந்தது அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்கிற உண்மை மறைக்கப்படுகிறது.
  • ஒருபுறம் பற்றாக்குறை அதிகரிக்கிறது என்றால், இன்னொருபுறம் அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டும் விதத்தில் நிதி ஆதாரத்தை வரிகள் மூலமோ, வேறு விதத்திலோ அதிகரிக்கும் வாய்ப்புகள் மாநில அரசுகளுக்குக் குறைந்து வருகின்றன. ஜி.எஸ்.டி. (சரக்கு-சேவை வரி) வந்த பிறகு எல்லா மாநிலங்களும் மத்திய வரியில் தங்களுக்கு வழங்கப்படும்  பங்கை எதிர்நோக்கித்தான் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.  ஊழியர்களுக்கு  வழங்க வேண்டிய சம்பளத் தொகையைக்கூட வழங்க முடியாமல்  பல மாநில அரசுகள் திணறுகின்றன.
  • அப்படிப்பட்ட நிதி நிலைமையில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அந்த மாநிலங்களில் தொழில் தொடங்கவோ, முதலீடு செய்யவோ தயங்குகின்றனர். அதனால்தான் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே முதலீடுகளும், தொழில்களும் குவிகின்றன. மாநில அரசுகளின் நிதி நிலைமை பலவீனம் சரி செய்யப்படாமல் போனால்,  ஏற்கெனவே அந்த மாநிலத்தில் செயல்படும்  தொழில் துறையினரும், சேவைத் துறையினரும்கூட பாதிக்கப்படுவதும், அதன் தொடர் விளைவாக  இழப்பை எதிர்கொண்டு மூடுவதும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
  • ஏறத்தாழ 19 மாநிலங்களின்  நிதி நிலைமை  மோசமாகக் காணப்படுகிறது.  2018-19 நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் அந்த மாநிலங்களின்  நிதிப் பற்றாக்குறை எதிர்பார்ப்பைவிட 2% அதிகரித்திருந்தது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளம் ஆகிய மாநிலங்களில்  நிதிநிலை அறிக்கையின்  எதிர்பார்ப்பைவிட, நிதிப் பற்றாக்குறை  முதல் 9 மாதங்களிலேயே பல மடங்கு அதிகரித்து, கவலைக்கிடமான நிலையில் காணப்படுகிறது. இதை எதிர்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கியிடமோ, நிதி ஆணையத்திடமோ எந்தவித வழிமுறையும் இருப்பதாகத் தெரியவில்லை. பற்றாக்குறையைக் குறைத்து, மாநிலங்களின் நிதி நிலைமையைச் சீர்படுத்துவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன என்றாலும்,  அதற்கு இதுவரை வழிகாண முடியவில்லை.
நிதி ஆணையம்
  • என்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதி ஆணையம்,  இந்தப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க இரண்டு நாள் கூட்டம் ஒன்றை மும்பையில்  கூட்டியது. இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள்,  வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்ட அந்த இரண்டு நாள் கூட்டம் பல்வேறு  வழிமுறைகள் குறித்து  விவாதித்தது.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்