TNPSC Thervupettagam

அரசியல் பஞ்சைகளை அடையாளம் காட்டவா சாதிவாரிக் கணக்கு

March 12 , 2024 130 days 162 0
  • சாதிகள் இரண்டே வகை; அவை தவிர வேறு இல்லை. இளைத்த சாதிகள் ஒரு வகை. அவை மக்கள்தொகையில் குறைவானவை. வலுத்த சாதிகள் இரண்டாவது வகை. அவை மக்கள்தொகை அதிகம் உள்ளவை. இது உயர்வு, தாழ்வு ஏற்காத வெறும் எண்ணிக்கை அடிப்படையிலான வகைப்பாடு.
  • தொகுதிவாரியாக வாக்கெடுப்பு நடக்கும் ஜனநாயகத்தில் இளைத்தவை எவை, வலுத்தவை எவை என்பது தவிர, மற்ற வகை சாதிக் கணக்குகள் அரசியலுக்கு உதவாது. சாதிவாரிக் கணக்கெடுப்பை விவாதிக்கும் பலர் பேசத் தயங்கும் அம்சம் இது. சாதிவாரிக் கணக்கு நம் ஜனநாயக அரசியலை வளப்படுத்துமா?

தெரிந்த கணக்குதான்

  • ஒவ்வொரு தொகுதியிலும் எந்தச் சாதிகள் வலுத்தவை, எவை இளைத்தவை என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும்.நான்கே குடும்பங்கள்தான் ஒரு சாதியில் இருக்கின்றன என்றாலும் அவை எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதை அந்தத் தொகுதி கட்சி நிர்வாகிகள் அறிவார்கள். இளைத்த சாதிகளில் சில பொதுவாகப் பொருளாதார வசதி உள்ளவையாக இருக்கக்கூடும். இந்த பொருளாதாரக் கணக்கு தேர்தல் அரசியலில் அர்த்தம் பெறாது.
  • தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் கட்சிகள் இளைத்த சாதியினரை ஒதுக்கிவிடுவது, அவை பின்பற்றும் யதார்த்த விதி. இந்த விதிக்கு எப்போதாவது விலக்கு நிகழ்ந்தது உண்டு. அவை கட்சித் தலைவர்கள் மக்கள் தலைவர்களாக இருந்தபோதும், அவர்கள் அதீத செல்வாக்கோடு இருந்தபோதும் நிகழ்ந்தன. யதார்த்த அரசியலில் இந்த அபூர்வ விதிவிலக்குகளைக் கணக்கில் கொள்ள முடியாது. அரசியலுக்கும் சாதிக் கணக்குக்கும் இருக்கும் தொடர்பு எல்லா விதிவிலக்குகளையும் கடந்து நிலைப்பது.

துக்கடா தொகுப்பு

  • ஒரு சாதியினர் தமிழ்நாடுமுழுவதும் இரண்டாயிரம் பேர் இருக்கிறார்கள் என்று சல்லடைகொண்டு சலித்துக் கண்டுவிடுவதால் என்ன பயன்? யதார்த்த அரசியலுக்கு இதனால் ஒரு பலனும் இருக்காது என்பது மட்டுமல்ல.
  • இப்படி ஒரு கணக்கு அந்தச் சாதியினருக்கு இடையூறாகவும் முடியும். அவர்கள்ஜனநாயக அரசியலில் ஒரு துக்கடா தொகுப்பாகிவிடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால் கணக்கு எடுக்காமலிருக்கும்போது, அவர்களுக்கு நம் ஜனநாயகத்தில் முக்கியத்துவம் வாய்த்துவிடும் என்பதில்லை.
  • பிற்பட்டவை அல்லாத சாதிகளையும் சேர்த்துத் தமிழ்நாட்டில் 400 சாதிகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றில் 350 சாதிகளாவது அவரவர் வசிக்கும் தொகுதிகளில் முக்கியமற்றவர்கள்தான். வெகுஜன வாக்கெடுப்பு அடிப்படையிலான ஜனநாயகத்தில் இது இயற்கை.
  • மக்கள் அழுத்தமான தனிநபர்வாதிகளாக, தமது சுதந்திரத்துடன் வாக்களிக்கப் பழகியுள்ளார்கள் என்று நீங்கள் நம்பியிருக்கிறீர்களா? தங்களைத் தொகுப்புகளாகக் கருதி, தொகுப்புகளாகத்தான் மக்கள் செயல்படுகிறார்கள்.
  • ஒரு வார்டு, பஞ்சாயத்து, பேரூராட்சி அல்லது நகராட்சி, சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தொகுதி - இப்படி புவிப்பரப்புத் தொகுதி ஒவ்வொன்றிலும் எவை எண்ணிக்கையில் வலுத்த சாதியோ அவைதான் ஜனநாயக அரசியலில் பங்கேற்கும். இளைத்த சாதிகளின் அரசியல் பங்கேற்பு தேர்தலில் வாக்களிக்கும் கட்டத்தோடு முடங்கிவிடும். இது நம் அனுபவத்தில் உள்ளதுதானே!
  • அரசியலில் ஒவ்வொருவரும் முழுமையாகப் பங்குபெற வாய்ப்பளிப்பதுதான் ஜனநாயகத்தின் லட்சியம். நீங்கள் எண்ணிக்கையில் இளைத்த சாதியினராக இருக்கலாம். அதன் காரணமாகவே உங்களால் அரசியலில் பங்கேற்க இயலாது என்றால், நம் ஜனநாயகம் குறையுள்ளதுதான். சாதிவாரிக் கணக்கெடுப்பு நான் சொன்ன ஜனநாயக லட்சியத்தை அடையவோ இவ்வகைக் குறையைக் களையவோ உதவும் என்றால், அந்தக் கணக்கெடுப்பு அவசியமே. அது மக்களுக்கு நியாயம் செய்யும் என்று ஏற்கலாம்.

ஜனநாயகத்தில் சாதிகள் செரித்தனவா

  • ஆனால்,சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று வாதிடுபவர்கள் கவனிக்க வேண்டிய கேள்விகள் இரண்டுஉண்டு: இந்தக் கணக்கெடுப்பு சாதிகளுக்கு இடையிலான உறவுக்கு என்ன செய்யும்? சாதிகளுக்கும் ஜனநாயகத்துக்கும் உள்ள உறவுக்குஅது எப்படிப் பங்களிக்கும்? வேலைவாய்ப்புகளையும் நலத்திட்டப் பலன்களையும் எந்தக்கணக்கில் பகிர்ந்துகொள்வது என்பதைத் தாண்டியும் அரசியல் இருக்கிறது.
  • வலுத்தவர்களானாலும் இளைத்தவர்களானாலும் அரசியல் அக்கறை உள்ளவர்கள் எல்லோருக்குமே இந்தக் கேள்விகள் முக்கியமாகப்படலாம். இவை ஏட்டளவிலான, லட்சியவாதக் கேள்விகளோ, மேட்டிமைகளின் கேள்விகளோ அல்ல.
  • இளைத்த சாதிகள் எல்லாவற்றையுமே நம் ஜனநாயகம் ஒரு தொகுப்பாக அரசியலிலிருந்து ஒதுக்கிவைப்பது நியாயமல்ல என்பதை ஏற்பீர்கள். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நகரும் அரசியலுக்கும் அவர்களின் பங்களிப்பைப் பெற்று நகரும் அரசியலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் என்பதையும் ஏற்பீர்கள்.
  • நம் விவாதப் போக்கின் வலுவுக்காக இப்படிக் கற்பனை செய்து பார்ப்போம்: தமிழ்நாட்டின் ஜனநாயக வரலாற்றில் எண்ணிக்கையில் வலுத்த சாதியினரே முதலமைச்சர்களாக இருந்தார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவும் ஜனநாயகமே.
  • ஆனால், அந்த ஜனநாயகத்துக்கும் தமிழ்நாட்டின் வரலாற்றில் உண்மையில் நிகழ்ந்தவாறே வந்த ஜனநாயகத்துக்கும் தன்மையில் வேறுபாடு இருந்திருக்காதா? நான் தன்மை வேறுபாட்டைத்தான் சொல்கிறேன்; உயர்வு தாழ்ச்சிசொல்லவில்லை. எண்ணிக்கையில் இளைத்த சாதியினர் நம் முதலமைச்சர்களாக இருந்ததற்கு, மாமூலான ஜனநாயக அமைப்பு மட்டுமே காரணம்என்று நான் சொல்ல மாட்டேன்.
  • நம் ஜனநாயகம் இயங்கும் விதத்தையும் மீறி அவர்கள் முதலமைச்சர் ஆனார்கள் என்று சொன்னாலும் தவறில்லை. சாதிகளின் எண்ணிக்கை வலுவைத் தெரிந்து,அதனால் வந்த புரிதலில்தான் நம் அரசியலே இயங்குகிறது. யதார்த்தத்தைப் புறக்கணிப்பவர் அரசியலில் தரிக்க இயலாது என்பது உண்மைதானே!
  • அரசியலில் பஞ்சைகளை உருவாக்கும்: பிறகு, சாதிவாரிக் கணக்கெடுப்பு புதிதாக என்ன செய்யும்? துல்லியம் என்ற தோற்றத்தோடு அதிகாரபூர்வமான ஆவணத்தை அது படைக்கலாம். அதற்குமேல் எதையும் சாதிக்காது. அரசின் நிர்வாகநடவடிக்கைகள் சில புதிதாக அமையக்கூடும். ஆனால், இவை தொடர்பான அரசின் கொள்கைகள் ஏற்கெனவே இருக்கும் கொள்கைகளின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும். கொள்கைகளில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க இயலாது.
  • மாறாக, சாதிவாரிக் கணக்கெடுப்பு நாம் எதிர்பாராத விளைவுகளையும் உண்டாக்கும். வேலைவாய்ப்புகள் சாதிகளுக்கு இடையே துல்லியமாகப் பகிரப்படவில்லை என்பதைவிட, இந்த விளைவுகளுக்கு அரசியல் முக்கியத்துவம் அதிகம். பொதுவாக, எல்லா ஊர்களிலும் இளைத்த சாதிகளும் வலுத்த சாதிகளும் ஒன்றை ஒன்று அனுசரித்துக்கொள்வது தமிழ்நாட்டுப் பண்பாடு. அன்றாட வாழ்க்கையில் யாரையும் எண்ணிக்கை பற்றிய பிரக்ஞை வழிநடத்துவதில்லை.
  • ஆனால், ஒவ்வொரு சாதியும் ஒரு தொகுப்பாகத் தன்னை உணர்வதையும் சுய மதிப்பீட்டில் தன்னை எப்படிக் கருதிக்கொள்கிறது என்பதையும் சாதிவாரிக்கணக்கெடுப்பு நிர்ணயிக்கும். மாநிலத்தில் ஐநூறு நபர்கள் உள்ள சாதியில் ஒருவராக உள்ளவர், தான் ஒரு அரசியல் பஞ்சை என்று உணர்வதை அவர் தவிர்க்க இயலுமா? அல்லது ஐம்பது லட்சம் நபர்கள் உள்ள சாதியில் பிறந்தவர் தன் அரசியல் உரிமை இந்தப் பஞ்சைகளின் உரிமையைவிட மேலானது என்று கருதிக்கொள்வதை அவர்தான் தவிர்க்க இயலுமா? இரண்டு உணர்வுகளுமே நம் ஜனநாயகத்தின் குறைகளாகத்தானே இருக்கும்!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்