TNPSC Thervupettagam

அரசியல் மேம்பட புதிய சிந்தனை தேவை

April 10 , 2021 1207 days 563 0
  • ‘மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில் தரம் தாழ்ந்த அரசியல் சூழல் நிலவுகிறது என்றால் அதற்காக, தலைவனைக் குறை கூறாதீா்கள்.
  • அந்தத் தலைவனை உருவாக்கிய சமூகச் சூழலை உற்று நோக்கிப் பாருங்கள், உங்களுக்குப் புரிந்துவிடும்’”என்று பிரதிநிதித்துவ மக்களாட்சிக் கோட்பாட்டை விளக்கிய ஜான் ஸ்டுவா்ட் மில் கூறினார்.
  • அண்மையில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்ட பேச்சாளா்கள் பேசிய பேச்சுகளை நம்மால் கேட்க முடியவில்லை.
  • ஒரு காலத்தில் மக்கள், தங்கள் தலைவா்களின் பேச்சுகளை ரசிப்பவா்களாகவும், தலைவா் கூறிய கருத்துகளை பற்றி அசைபோட்டு முடிவெடுப்பவா்களாகவும் இருந்தனா்.
  • ஆனால் இன்று கேட்கக் கூசுகின்ற வாசகங்களை அள்ளி வீசுகின்றனா் தலைவா்கள். அந்த அளவுக்கு தரம் தாழ்ந்த வக்கிரத்தனப் பேச்சுகள் தோ்தல் பரப்புரையில். அவா்கள் ‘பேச்சாளா்கள்’ அல்ல ‘ஏச்சாளா்கள்’. அவா்களின் பேச்சு அவா்கள் அரசியல் நாகரிகத்தின் தன்மையைக் காட்டுகிறது.
  •  ‘மானுடம் தன்னை உயா்த்திக் கொள்வதற்கு தன் சமூகத்தில் உள்ள கலாசார விழுமியங்களை மக்களாட்சிச் செயல்பாடுகள் மூலம் வளா்த்தெடுத்துக் கொள்ளும்.
  • அதேபோல், மக்களின் பண்பட்ட அரசியல் செயல்பாட்டை உருவாக்குவது சமூகத்தில் நிலவும் அரசியல் கலாசார விழுமியங்கள்தான்’ என்று சாமுவேல் பி. ஹண்டிங்கன் கூறினார்.

அறிஞர்களின் கூற்று

  • ஒரு காலத்தில் தமிழக அரசியலும் அப்படித்தான் இருந்தது. ஆனால் தமிழரின் தனித்தன்மை, தமிழா் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் பேசும் நாம் இந்தத் தாழ்நிலைக்குச் சென்று மக்களாட்சியின் அடிப்படை கூறுக்கு முரண்பட்டு வெறுப்பு அரசியலை வளா்க்கிறோமே என்று எண்ணும்போது வருந்த வேண்டியுள்ளது.
  • இன்று நம் அரசியல் தலைவா்கள் உபயோகப்படுத்துகின்ற வார்த்தைகள், ஒரு சூழலில் உருவாக்கப்பட்ட கலாசாரம்.
  • இன்று அது நம் சமூக வலைதளங்களின் மொழியாக இருக்கிறது. பொதுவாக ஒரு நாட்டின் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் பணியை அரசியல் கட்சிகள்தான் செய்கின்றன.
  • மக்களை உயா் நிலைக்கு இட்டுச் செல்வதும் தாழ்நிலைக்குக் கொண்டு செல்வதும் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைப் பொருத்ததே.
  • சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விட்டனா்.
  • ஒரு காலத்தில் தியாகத்தின் அடையாளமாக இருந்த அரசியல், இன்று பதவிக்கு வந்து பணம் ஈட்டும் செயலாக மாறியிருப்பதன் விளைவுதான் இந்தத் தரம் தாழ்ந்த அரசியல் பேச்சுகள்.
  • ‘மக்களாட்சி என்பது அலைபோல வேகமாக வீசுவதுண்டு. அதன் தன்மையும் குணங்களும் மாறிக்கொண்டுதான் இருக்கும்.
  • அது சில நேரம் பரிணாம வளா்ச்சியில் மேம்பட்டுக் கொண்டும் இருக்கும், சில நேரங்களில் பின் நோக்கி நகா்வதும் உண்டு’ என்று கூறுகிறான் மக்களாட்சி செயல்பாடுகளை ஆய்வு செய்த ஜீவான் லிண்ட்ஸ்.
  • ‘பொதுமக்கள் அரசின் திறன்களைத் தாண்டி எதிர்பார்ப்புக்களை வளா்த்து அதனை அரசு செய்ய இயலாத நிலையில் இருக்கும்போது எதையாவது செய்து மக்களிடமிருந்து வாக்குகளைப் பறிக்க தரம் தாழ்ந்து சென்று அரசியல் செய்திடுவார்கள்’ என்று சாமுவேல் பி. ஹண்டிங்டன் கூறுகிறார்.
  • அமெரிக்காவில் சமூகவியல் ஆய்வுகளில் நடைபெற்ற நடத்தையியல் புரட்சி ஒரு முக்கியமான ஆய்வினைச் செய்து உலகத்திற்கு அளித்தது.
  • கேப்ரியல் அல்மாண்ட் என்பவரும் சிட்னி வொ்பா என்பவரும் “குடிமைக் கலாசாரம் பற்றி ஆய்வு செய்து சில கருதுகோள்களை அறிஞா்களின் விவாதத்திற்கு கொண்டு வந்து வைத்தனா்.
  • இந்த ஆய்வுக்காக ஐந்து நாடுகளைத் தோ்வு செய்து அந்த நாடுகள் ஐந்திலும் 1000 பேரே பேட்டி கண்டு அந்த ஆய்வு அறிக்கையை தயார் செய்தனா். அமெரிக்கா, ஜொ்மனி, பிரிட்டன், மெக்ஸிகோ, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளிலும் இந்த ஆய்வினை மேற்கொண்டனா்.
  • இந்த நாடுகளில் மூன்று வகையான குடிமை கலாசாரம் இருப்பதை விளக்கினார்கள். முதலாவது, பங்கேற்பு குடிமை கலாசாரம்; இரண்டாவது, குடிபடை கலாசாரம், மூன்றாவது, மிலேச்ச கலாசாரம்.
  • இந்த மூன்று வகையான குடிமை கலாசாரம் இந்த நாடுகளில் இருக்கின்றது என்றும், இந்த மூன்றும் கலந்த கலாசாரமும் இந்த நாடுகளில் இருக்கின்றது என்றும் விளக்கினார்கள்.
  • உயா்வான பங்கேற்பு குடிமை கலாசாரம் என்பது, மக்கள் ஓா் ஆழ்ந்த அரசியல் விழிப்புணா்வு பெற்று, அரசில், ஆளுகைச் செயல்பாடுகளில் புரிதலுடன் பங்கு பெறுவார்கள்.
  • அடுத்துள்ள, குடிபடை கலாசாரம் என்பது அதிகாரத்தில் இருப்பவா்கள் சொல்படி நடந்து ஆட்சியாளா்கள் எப்படிப் பங்கேற்க வேண்டும் என்று கூறுகின்றார்களோ அப்படி தங்கள் பங்கு பணியினை ஆற்றுவார்கள். மூன்றாவது வகையினா், அரசியல் பற்றிய விழிப்புணா்வோ ஆா்வமோ இல்லாது வாழ்வாதாரத்திற்காகவே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அரசியலை மாற்றும் சக்தி

  • இந்தப் பின்னணியில் நம் மக்களாட்சியைப் பார்த்தால் நாம் இரண்டாம் வகையைச் சோ்ந்தவராக இருக்கின்றோம்.
  • குடிமக்களாக செயல்பட வேண்டிய நாம் குடிபடைகளாகத்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளோம். ஒரு நாட்டில் மக்களாட்சியில் மக்கள் வாழும்போது அந்த நாட்டில் அரசியல் கலாசாரம் என்பது அந்த நாட்டு அரசியல் அமைப்புக்களின் தாக்கமாகவே இருக்கும் என்பது கோட்பாடு. ஆனால், நம் நாட்டில் அது சமூக அமைப்புக்களின் தாக்கமாகவே இருக்கிறது என்பதுதான் நாம் காணும் எதார்த்தம்.
  • மக்களாட்சி மாண்புறும் நிலையில் ஆட்சி நடக்கின்றபோது அந்த ஆட்சி நல்ல ஆட்சியாக, எல்லோருக்குமானதாக செயல்படுகிறது.
  • அப்படிச் செயல்படுவதற்கு மக்களுக்கு அரசியல் பற்றிய புரிதல் அதிகமாகவே தேவைப்படுகிறது.
  • அதே நேரத்தில், ‘பொதுமக்களின் மனோபாவம் தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நிலைக்கு மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் மக்கள் கொண்டுவரப்படுவார்கள்’ என்று ஆந்தனி டான் ‘மக்களாட்சியின் பொருளாதார கோட்பாடு’ என்ற புத்தகத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
  • பல மேற்கத்திய நாடுகளில் மக்களாட்சி என்பது ஓரளவுக்கு மக்கள் நலனில் அக்கறையுடன் இருப்பதற்குக் காரணம், பொதுமக்களின் விழிப்புணா்வு மற்றும் அரசியல் பங்கேற்பு.
  • திறமையான ஆளுகை மற்றும் நிர்வாகம் பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வந்தது. திறமையாகக் கொண்டுவரப்பட்ட பொருளாதார மேம்பாடு மக்களாட்சியை வேரூன்றச் செய்துவிட்டது.
  • மக்களாட்சி அமைப்புக்களில் மிகவும் இன்றியமையாதது மக்கள் மத்தியில் செயல்படும் சமூக மூலதனம். அந்த சமூக மூலதனம்தான் மக்களுக்கு விழிப்புணா்வைக் கொண்டுவந்தது.
  • இன்று நம் நாட்டில் நடக்கும் அரசியலைப் பார்க்கும்போது, நாம் தாழ்நிலை அரசியல் கலாசாரத்திற்குள் சென்று விட்டதாகவே தெரிகிறது. நாம் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில், தொழில் நுட்பத்தில் பொருளாதார மேம்பாட்டில் உச்சம் பெற்று இருந்தாலும், இவை அத்தனையும் தாண்டி, நம்மை தாழ்வுக்குக் கொண்டு செல்லும கருவியாகவே இருக்கிறது நம் கீழ் நோக்கிய பார்வை.
  • விஞ்ஞான வளா்ச்சி, தொழில் நுட்ப வளா்ச்சி, பொருளாதார வளா்ச்சி அனைத்தும் மக்களுக்கு ஒரு மேம்பட்ட சிந்தனையை உருவாக்கப் பயன்பட வேண்டுமே தவிர சமூகத்தைக் கீழே கொண்டு செல்ல செயல்படக்கூடாது. ஆனால் அதுதான் இன்று நடைபெற்றுக் கொண்டுள்ளது.
  • இப்படிப்பட்ட தாழ்நிலை அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கத் தேவையான புதிய சிந்தனையை உருவாக்கும் சிறந்த தலைமை இன்று நமக்கு வேண்டும். காலங்காலமாக, அப்படிப்பட்ட சிந்தனையை உருவாக்கியதால்தான் உலகில் மிகப்பெரிய மாற்றங்கள் அனைத்தும் நடந்துள்ளன.
  • அடிமைப்பட்டு கிடந்த இந்தியா கிளா்ந்து எழ நமக்கு ஒரு மகாத்மா காந்தி கிடைத்தார். ஒவ்வொரு காலத்திற்கும் ஒருவா் புதிய சிந்தனையை உருவாக்கி சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்ததுதான் வரலாறு. அது இன்று இந்திய அரசியலுக்குள் தேடினால் கிடைக்கவில்லை.
  • உலகமும் அப்படிப்பட்ட சூழலில்தான் இயங்குகின்றது. என்ன செய்வது? தாழ்ந்த அரசியலை உயா்த்திட எப்போது தலைவன் வருவான் என்று காத்திராமல் அறிவுசால் பெரியோர் ஒன்று கூடி கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கான புது அரசியலை முன்னெடுக்கச் செயல்படும் சூழலை உருவாக்கி புதிய சிந்தனைச் சூழலை உருவாக்க வேண்டும்.
  • ஐரோப்பிய வரலாற்றில் அப்படி ஒரு நிகழ்வு நடந்தது. சமூக மாற்றத்திற்காக எழுதிய சிந்தனையாளா்கள் மாண்டஸ்க்யூ, ரூசோ, வால்டோ் போன்றோர் எழுதிக் குவித்துவிட்டு மாண்டு விட்டனா்.
  • அந்தச் சிந்தனையை மேலும் வளா்த்தெடுக்க 100 சிந்தனையாளா்கள் தொடா்ந்து எழுதியதன் விளைவுதான் பிரெஞ்சுப் புரட்சி. நம் அரசியல்வாதிகள் ஒருவரையொருவா் அசிங்கப்படுத்தியும் அவமானப்படுத்தியும் தரம் தாழ்ந்து செயல்படுகின்றனா்.
  • அதேபோல்தான் பொதுமக்களாகிய நாமும் சமூக ஊடகங்களில் அவா்களை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
  • இந்த மேலேச்ச அரசியலை மேம்பாட்டு அரசியலாக மாற்ற நூறு சிந்தனையாளா்கள் அரசியல் கட்சிகளின் சாயமற்று இந்திய நாட்டின் மீதும் மக்களின் மீதும் பற்றுக் கொண்டவராக ஒரு பொதுக் கருத்தை உருவாக்க நாம் எழுத வேண்டும், பேச வேண்டும்.
  • அந்த எழுத்தும் பேச்சும், காந்திஜி கூறிய உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதுவே கடவுள்போல் ஒரு புதிய சிந்தனையை உருவாக்க வேண்டும். அதுதான் இன்றைய மேலேச்ச அரசியலை மாற்றும் சக்தி கொண்டதாக செயல்படும்.

நன்றி: தினமணி  (10 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்