TNPSC Thervupettagam

அரசுக்கு உறுதுணையாக இருப்போம்

April 3 , 2022 856 days 410 0
  • உக்ரைன் - ரஷியா நாடுகளுக்கிடையே நடந்து வரும் போர் தீவிரமாகி, உச்சத்தைத் தொட்டு அணு ஆயுதப் போராக மாறுமோ என்ற அச்சம் உலக மக்களிடம் எழுந்துள்ளது.
  • உக்ரைனும், ரஷியாவும் சோவியத் யூனியன் சிதையாமல் இருந்தபோது, ஒன்றாக இருந்தன. அதிபர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில், போர் வெறியர் என்று இகழப்பட்ட ஹிட்லரின் நாஜிப் படையை இரண்டாம் உலக யுத்தத்தின் போது மண்டியிடச் செய்தன. மாவீரன் என்று புகழப்பட்ட நெப்போலியன் தோற்றுப் போனதும் ரஷிய மண்ணில்தான்.
  • ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கூட, ரஷியாவும், உக்ரைனும் ஒன்றாக இருந்தபோது பதக்கப்பட்டியலில் அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடித்துக் கொண்டன. ஜோசப் ஸ்டாலினை அடுத்து சோவியத் யூனியன் அதிபரான குருசேவ் அதற்கு பிறகு நீண்டகாலம் அதிபராக இருந்த பிரஷ்னெவ் ஆகியோரும் உக்ரைன் நாட்டிலிருந்து வந்தவர்கள்தான். இப்படி ஒன்றாக இருந்த ரஷியாவும், உக்ரைனும் இன்று எதிரிகளாகி போரிடுவதால் அப்பாவி மக்கள் மடிகின்றனர்.
  • சோவியத் யூனியன் சிதறுண்டதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, ரஷிய மொழியை பிற இனத்தினர் மீது திணிக்க முயன்றது. இன்றைக்கு உக்ரைனில் வாழும் மக்களில் முப்பது விழுக்காட்டினர், ரஷிய மொழியைத் தங்கள் தாய்மொழியாகக் கொண்ட ரஷியர்களே. 
  • அது மட்டுமல்ல, "நேட்டோ' எனப்படும் அமெரிக்க ஆதரவு ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைப்பதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், உக்ரைனை நேட்டோவில் இணைத்து விட்டால் அமெரிக்கா தன் ராணுவ மையத்தை உக்ரைனில் நிறுவி விடும். அது ரஷியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும். அமெரிக்காவுக்கு நிகரான ராணுவ வலிமையைக் கொண்ட ரஷியா தனது பாதுகாப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே தொடங்கப்பட்டது இந்தப் போர்.
  • உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் மிகப்பெரிய சேதத்தை உக்ரைனில் ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் தற்போது தனது படைகளையும் ரஷியாவிற்கு ஆதரவாக அனுப்பியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷியாவிற்கு எதிராகப் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன.
  • ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில உக்ரைனுக்குச் சென்றுள்ளனர். குறிப்பாக, தமிழக மாணவர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருப்பதாகத் தெரிகிறது. இதில் கொடுமை என்னவென்றால், உக்ரைனில் பதுங்கு சுரங்கத்தில் இருந்த தமிழக மாணவர்களை உக்ரேனியர்கள் அடித்து விரட்டுவதாகவும், பாதுகாப்பாக போலந்து, ருமேனியா போன்ற நாடுகளுக்கு தப்பிச் செல்ல முயல்பவர்களை உக்ரைன் ராணுவ வீரர்கள் தாக்குவதாகவும் செய்திகள் வருகின்றன.
  • பிரதமர் நரேந்திர மோடி, சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிபர்களுடன் பேசி ஆயிரக்கணக்கான இந்தியர்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். நெருக்கடியான இந்த நேரத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவு பாராட்டத்தக்தது. ஆயினும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் குண்டுவீச்சுத் தாக்குதலில் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க இந்தியர்கள் பிழைப்பு தேடி செல்லாத நாடு இல்லை. அந்த அளவிற்கு உலகெங்கும் சென்று உழைத்து வாழ்கின்றனர் நம் தமிழர்கள்.
  • சமீபத்தில் கனடா நாட்டின் ராணுவ அமைச்சராக அனிதா ஆனந்த் என்ற தமிழர் பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவின் துணை அதிபராக தமிழ்நாட்டின் கமலா ஹாரிஸ் தேர்ந்தேடுக்கப்பட்டு தமிழினத்துக்கு பெருமை சேர்த்தார். அவர் சிறிது நேரம் அமெரிக்க அதிபராகவும் செயல்பட்டு அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெற்றார். கனடாவில் கேரி ஆனந்த் எம்.பி.யாக இருக்கிறார். அதே நாட்டில் மாகாண சபை உறுப்பினராக விஜயனும், லோகன் கணபதியும் இருக்கிறார்கள். மலேசிய அரசில் டத்தோ சாமிவேலு 32 ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளார். 
  • சிங்கப்பூரில் 10 எம்.பி.கள் தமிழர்கள் ஆவர். தருமன் சண்முகம் எனும் தமிழர் துணை பிரதமராக உள்ளார். இந்திராணி ராஜா அமைச்சராக உள்ளார். மேலும் மூன்று தமிழர்கள் அமைச்சர்களாக உள்ளனர். அதிபராக எஸ்.கே. நாதன் என்ற தமிழர் இருந்துள்ளார். பப்பு நியுகினியாவில் முத்துவேல் சசிதரண் உட்பட பல தமிழர்கள், மத்திய அமைச்சராக, போக்குவரத்து துறை, விமான போக்குவரத்து துறை அமைச்சர்களாக உள்ளனர். கயனா நாட்டில் மோசஸ் வீராசாமி நாகமுத்து 2015-இல் அதிபராகப் பதவி ஏற்றார். அதற்கு முன் அவர் துணை ஜனாதிபதியாக இருந்தார். 
  • மலேசியாவில் 21 தமிழ் எம்.பி.கள் உள்ளனர். அதில் 15 பேர் அந்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆறு பேர் நம்மூர் ராஜ்ய சபை எம்.பி. களைப்போல் உள்ளனர். நார்வே நாட்டுக்கு அகதியாகச் சென்று, பின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிறகு துணை மேயராக  உயர்ந்தவர் கம்சாயினி குணரத்தனம் எனும் இலங்கைத் தமிழர்.
  • நியூஸிலாந்தில் இரண்டு தமிழர்கள் எம்.பி.க்களாக உள்ளனர். ஒருவர் இந்தியத் தமிழர்; மற்றொருவர் இலங்கைத் தமிழர்.
  • இப்படி உலகமெங்கும் 191 நாடுகளில் தமிழர்கள் பல்வேறு பதவிகளில் அமர்ந்து அந்தந்த நாடுகளின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகின்றனர். பன்னிரண்டு நாடுகளில் மட்டும் 152 எம்.பி.க்கள் உள்ளதாக உலக தமிழ் வம்சாவளி அமைப்பு கூறியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிந்து விண்வெளிப் பயணம் மேற்கொண்டு மறைந்த கல்பனா சாவ்லா ஒரு இந்தியரே. விண்வெளிக்கு சென்று வந்த சுனிதா வில்லியம்ஸýம் இந்தியரே. இப்படி பல நாடுகளில் பல அறிவியல் அறிஞர்கள் தமது அறிவாற்றலால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். 
  • அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அறிவாற்றல் மிக்க தமிழர்கள் பல துறைகளில் நிபுணர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தின் தலைவராக உள்ள சுந்தர் பிச்சை ஒரு தமிழரே. இப்படி எத்தனை எத்தனையோ தமிழர்களால், இந்தியர்களால் நமது தேசத்திற்கு பெருமை சேர்ந்த வண்ணம் உள்ளது. அப்படி தமது அறிவாற்றலால், ஆளுமைத் திறனால் உலகெலாம் உயர்ந்து வாழ்கின்றனர் தமிழர்களும் இந்தியர்களும்.
  • தென்னாப்பிரிக்காவில் அண்ணல் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தில்லையாடி வள்ளியம்மை உள்ளிட்ட  தமிழர்களே. "இந்தியர்களே! உங்களுக்குக் கொடியே இல்லை, பிறகு உங்களுக்கு நாடு ஏது' என்று ஆங்கிலேயே வெறியன் ஒருவன் ஏளனமாக பேசிய போது அண்ணல் காந்தி முன்னிலையில், தான் உடுத்தியிருந்த பாவாடையின் ஒரு பகுதியைக் கிழித்து "இதோ இருக்கிறது எங்கள் நாட்டின் கொடி' என்று காட்டி ஆங்கிலேயனை மிரளச் செய்தவர் வள்ளியம்மை.
  • சில வருடங்களுக்கு முன் பிஜி தீவில் அதிபராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகேந்திர பால் சௌதர் அங்குள்ள பூர்வகுடி மக்களின் புரட்சிப் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஆட்சியையும் கைப்பற்றினர். அங்கு இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தாக்குதலுக்கு ஆளாயினர். வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
  • இன்றைக்கு உக்ரைனில் இந்திய - தமிழ் மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, இந்தியாவிற்கு பாதுகாப்புக் கவசமாக சோவியத் ரஷியா இருந்தது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தபோதும், ரஷியா, நமக்கு ஆதரவாகவே இருந்தது. சீனா நமக்கு எதிராக சில அவதூறுகளைக் கூறியபோதும் அன்றைய சோவியத் யூனியன் இந்தியாவிற்கு ஆதரவாகவே இருந்துள்ளது.
  • அப்படிப்பட்ட ரஷியாவிற்கு பிரதமர் மோடி ஆதரவு கூட தெரிவிக்கவில்லை. நடுநிலைதான் வகித்தார். இந்திய தேசத்தில் சிறு சிதறலும் எவராலும் ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு பிரதமருக்கு உண்டு. அதை நன்கு உணர்ந்தவர்தான் நமது பிரதமர். 
  • அமெரிக்கா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கியூபா, இந்தியா போன்ற பல நாடுகள் ஒன்று சேர்ந்து விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டுகளை வீசி கொன்றன. குற்றமிழைக்காத தமிழ் இளைஞர்களைக் கூட புலிகள் என்று கூறி சுட்டுக் கொன்றனர். பலரைப் பிடித்துச் சென்றனர். 
  • "பிடித்துச் செல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள் என்ன ஆனார்கள்' என்று 2009-லிருந்து கேட்டு கேட்டு சலித்துப்போனார்கள் தமிழ் உறவுகள். அவர்களுக்கு, அதிபராக பொறுப்பேற்றவுடன் "அந்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்' என்று அறிவித்தார் கோத்தபய ராஜபட்ச.
  • அன்றைக்கு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது எத்தனை நாடுகள் தமிழர்களுக்காகப் பரிந்து பேசின? போரை நிறுத்த எந்த நாடு குரல் கொடுத்தது? தமிழர்களைக் கொன்று குவித்த எத்தனை சிங்களத் தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்? ஒருவருமில்லையே!
  • அதற்காக ரஷியா - உக்ரைன் இடையிலான போரை நாம் வரவேற்கவில்லை.
  • மனித இனம் அழிக்கப்படக் கூடாது என்பதே இந்திய மக்களின் நிலைப்பாடாகும். இந்தத் தருணத்தில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியா கொண்டுவர, இந்திய பிரதமரும், தமிழக முதலமைச்சரும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாம் உறுதுணையாக இருப்போம்.

நன்றி: தினமணி (03 – 04 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்