TNPSC Thervupettagam

அரசு மருத்துவர்களின் உடனடித் தேவை நிறைவேறுமா?

May 10 , 2021 1356 days 582 0
  • மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்துவந்த இளம் மருத்துவரும் கர்ப்பிணியுமான ஷண்முகப்பிரியாவின் மரணம் தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
  • ஆனால், இத்தகைய மரணங்களுக்கான அத்தனை சாத்தியங்களோடும்தான் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
  • கரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிபவர்களுக்குத் தொற்றுக்கான சாத்தியம் அதிகம் என்றாலும் அரசு பொது மருத்துவமனைகள், சிறப்பு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கும் தொற்றுக்கான வாய்ப்புகள் மிகவும் நெருக்கத்திலேயே இருக்கின்றன.
  • அபாயகரமான சூழலில் மருத்துவப் பணியை ஏற்று ஏராளமான உயிர்களைக் காப்பாற்றிவரும் அரசு மருத்துவர்கள் திடீரென்று உயிரிழக்கும்போது, அவர்கள் குடும்பத்தினருக்கு உதவ, மருத்துவர்களின் பங்களிப்பில் ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ திட்டத்தைச் செயல்படுத்துமாறு கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை. பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசாவது அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமா?

உளவியல் நெருக்கடிகள்

  • மருத்துவர்கள் சிகிச்சைப் பணிகளைத் தாண்டி பொது மக்களை எதிர்கொள்வதிலும் சில சமயங்களில் கடுமையான உளவியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
  • 24 மணிநேரம், 32 மணி நேரம் என்று சர்வசாதாரணமாக நீடிக்கும் பணி நேரம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள் எண்ணிக்கை போதாமையால் ஏற்படும் பணிச்சுமை, நிர்வாக முறைகேடுகள் ஏற்படுத்தும் மன அழுத்தம் ஆகியவற்றின் நடுவே பணியாற்றும் மருத்துவர்கள் இளம் வயதில் இறந்துபோவது தொடர்கதையாகி வருகிறது.
  • சில வாரங்களுக்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவம் இது. பெரம்பலூர் அரசு மருத்துவர் தர்மலிங்கம் காலையில் பணியில் இருந்தபோது, 40 வயதுடைய ஒருவர் தனக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என கேட்டுள்ளார்.
  • அப்போது அவரிடம் புரிந்துகொள்ளும்படிச் செய்யவும், சமாதானப்படுத்தவும் தர்மலிங்கம் சிரமப்பட்டுள்ளார். அதன் பிறகு, வார்டு ரவுண்ட்ஸில் இருந்தபோது, சுமார் 20 நிமிடத்துக்குள் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மாரடைப்புக்கான அறிகுறிகள் தெரிந்ததால் அதற்கான சிகிச்சைகள் தரப்பட்டு, மேற்படி சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார்.
  • சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளதைப் போலவே அரசு மருத்துவர்கள் உயிரிழப்பும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.
  • மருத்துவர் திடீரென்று உயிரிழக்கும்போது, அவரை நம்பியிருக்கும் குடும்பத்தினர் பொருளாதாரரீதியில் முற்றிலும் நிர்க்கதியாக மாறுகின்றனர்.
  • எனவே, அரசு மருத்துவர்களுக்கு ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ என்று அழைக்கப்படும் தனி நிதியத்தை உருவாக்க வேண்டும் என்று 2017-ல் தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்திருந்தோம். அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் சிந்தனையில் உதித்த திட்டம் இது.
  • இந்தத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என லட்சுமி நரசிம்மன் தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தபோது, இதற்கான நிதியை அரசு மருத்துவர்களின் பங்களிப்பிலேயே, அதாவது மருத்துவர் ஒவ்வொருவரும் மாதம் ரூ.500 தருவதன் மூலம் செயல்படுத்த முடியும் எனத் தெரிவித்தோம்.
  • அதை நிர்வகிக்கும் பொறுப்பை மட்டும் அரசு மேற்கொண்டால் போதும் எனவும் தெரிவித்தோம். உடனே, “இது அருமையான திட்டம்” என சுகாதாரத் துறை செயலர் பாராட்டியதோடு, விரைவில் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.
  • ஆனால், இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. அரசிடம் ஒரு பைசாகூட எதிர்பார்க்காமல், முழுக்க முழுக்க மருத்துவர்களின் பங்களிப்பில் நடைமுறைப்படுத்தக் கோரும் இந்தத் திட்டத்தைக்கூடக் கடந்த அரசு நிறைவேற்றாமல் போனது.

நிர்க்கதியாகும் குடும்பங்கள்

  • ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ திட்டம் குறித்து லட்சுமி நரசிம்மன் யோசித்ததற்குப் பின்னாலும் ஒரு துயரச் சம்பவம் உண்டு.
  • மேட்டூரில் ஒரு தனியார்ப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய புலவர் வெங்கடேசன் தனது சொற்ப வருமானத்தில் மகன் எழில்நம்பியைப் படிக்க வைத்தார்.
  • அவர் வேலையில் தொடர முடியாத நிலையில் வெங்கடேசனின் மனைவி தையல் தொழில் செய்து மகனைப் படிக்க வைத்தார்.
  • எழில்நம்பிக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து, தொடர்ந்து மேற்படிப்பையும் முடித்தார். ஆனால், திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் எதிர்பாராத ஒரு விபத்தில் மருத்துவர் எழில்நம்பி மரணமடைகிறார்.
  • வாழ்வாதாரம் பறிபோன பெற்றோர் மருமகளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இடம்பெயர்ந்தனர்.
  • புலவர் வெங்கடேசனின் மாணவர்தான் லட்சுமி நரசிம்மன். வாழ்வாதாரம் தேடி ஏதோ ஒரு கடையில் அந்தத் தமிழாசிரியர் வேலைபார்த்துவருவதை அறிந்த பிறகுதான் அவர் பதறித் துடித்து இந்த நிதியத்தை உருவாக்குவதற்காகப் போராட்டத்தை முன்னெடுத்தார்.
  • அரசு மருத்துவர்கள் பணிக்காலத்தில் இறக்கும் நிலையில், அந்தக் குடும்பங்களைக் காப்பாற்ற லட்சுமி நரசிம்மன் முன்மொழிந்த ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ திட்டத்தின்படி அரசு மருத்துவர் ஒவ்வொருவரிடமும் மாதப் பங்களிப்பாக ரூ.500 நிதி பெறப்பட வேண்டும்.
  • இதன் மூலம் ஆண்டுதோறும் 18,000 X 500 X 12 = ரூ.10.8 கோடி கிடைக்கும். இதிலிருந்து உயிரிழப்பு நேரிடும் மருத்துவர் குடும்பத்துக்குத் தலா ரூ.1 கோடி கொடையாக வழங்கப்பட வேண்டும்.
  • அரசு, மருத்துவர்களின் மாதச் சம்பளத்தை பிடித்தம் செய்து அதை நிர்வகிக்க வேண்டும் என்பதைக் கோரிக்கையாக முன்வைத்தார் லட்சுமி நரசிம்மன்.
  • ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என அரசிடம் ஓயாமல் வலியுறுத்திவந்த மருத்துவர் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் 2020 பிப்ரவரி 7-ல் உயிரிழந்தார்.
  • 2019-ல் நடந்த மருத்துவர் போராட்டத்தில் பங்கேற்ற பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட 118 அரசு மருத்துவர்கள் இடம் மாற்றப்பட்டுத் தண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலே அவரது உயிரிழப்புக்குக் காரணமாயிற்று. அவரது குடும்பத்துக்கும்கூட இதுவரை அரசுத் தரப்பில் எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இப்போதாவது நிறைவேறுமா?

  • அரசு மருத்துவர்கள் ஒன்றிய அரசின் கீழும் மற்ற மாநிலங்களிலும் பணிபுரியும் மருத்துவர்களைப் போல தங்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கடந்த 6 ஆண்டுகளாகப் போராடிவரவில்லை.
  • இத்தகைய ஒரு ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ நிதியை அரசு நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துதான் போராட்டங்களை நடத்தினார்கள்.
  • முந்தைய தலைமுறைகளில் பெரும்பாலும் சமூகத்தின் மேல்தட்டிலிருந்து மட்டுமே மருத்துவர்கள் உருவாகினார்கள்.
  • சமூக நீதியின் பலனாக அடித்தள, ஒடுக்கப்பட்ட, விவசாயத் தொழிலாளர் குடும்பங்களிலிருந்தும்கூட இன்று மருத்துவர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை இழக்க நேரும் அந்தக் குடும்பங்கள் நிர்க்கதியாக விடப்படுகின்றன.
  • புதிய ஓய்வூதியத் திட்டம் மருத்துவர்களின் ஊதியத்தைப் பிடித்தம் செய்கிறதே தவிர, அவர்களின் இறப்பின்போதுகூட அந்தப் பணம் வீடு வந்துசேர்வதில்லை என்பதுதான் உண்மை நிலை.
  • கரோனா காலத்திலும்கூடத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளிக்கப்படவில்லை. இழப்பீடு அளிக்கப்பட்டவர்களுக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை.
  • அரசு மருத்துவர்களுக்கான ‘கார்ப்பஸ் ஃபண்ட்’ உருவாக்கப்பட வேண்டியது உடனடி அவசியம். மருத்துவப் படிப்பில் சமூக நீதிக்காகக் குரல்கொடுக்கும் இன்றைய அரசானது மருத்துவர்களின் நலனிலும் அதே அக்கறையை காட்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்