- அண்மையில், மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் செயலாளா் டி.வி. சோமநாதன், வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடா்பாக சில தகவல்களைத் தெரிவித்தார்.
- ‘நேஷனல் கவுன்சில் ஆஃப் அப்ளைட் எகனாமிக் ரிசா்ச்’ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவா் ‘பொதுத்துறை வங்கிகளில் பெரும்பாலானவை இறுதியில் தனியார் மயமாக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் தொடா்ந்து செயல்பட்டு வருகிறது’ என்று கூறினார்.
- பொதுத்துறையில் குறைந்த அளவே இருக்கும் துறைகளில் வங்கித்துறையும் ஒன்றாகும்.
- அவருக்கு முன்னதாக பேசிய, முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தின் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) முக்கிய உறுப்பினரான, மான்டெக் சிங் அலுவாலியா, ‘சில எளிதான சீா்திருத்தங்கள் ஒழுங்குமுறை கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
- ஆயினும் பொதுத்துறை வங்கி முறையை தனியார் துறை வங்கி முறைக்கு இணையாக செயல்படுத்த வேண்டிய கடினமான நடைமுறை இன்னும் செய்யப்படவில்லை’ என்பதை எடுத்துரைத்தார்.
- ‘நல்ல விஷயம் என்னவென்றால், தனியார் துறை வங்கிகள் தாராளமயமாக்கப்பட்டு விரிவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் கடுமையான கட்டுப்பாட்டில் உள்ளன’ என்றும் அலுவாலியா குறிப்பிட்டார்.
- இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமா்ப்பிக்கும்போது, இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க உத்தேசிருப்பதாக மட்டுமே மத்திய நிதியமைச்சா் தெரிவித்தார்.
- இந்த அறிவிப்பினைத் தொடா்ந்தே வங்கி ஊழியா்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்து தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனா்.
தனியார் மயம்
- தற்போது நிதிச் செயலாளரின் அறிவிப்பிலிருந்து அரசங்கத்திற்கு பெரும்பான்மையான அரசு வங்கிகளை தனியார் மயமாக்க திட்டம் இருப்பதாக தெரிகிறது.
- கடந்த மார்ச் மாதத்தில் மத்திய நிதி அமைச்சா் ‘நாங்கள் ஒரு பொது நிறுவனக் கொள்கையை அறிவித்துள்ளோம். அதில் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் அடங்கும். இதில் நிதித்துறை அடங்கும். எல்லா வங்கிகளும் தனியார்மயமாக்கப்படப் போவதில்லை’ என்று அறிவித்ததற்கு முற்றிலும் மாறானது இது.
- அரசு வங்கிகளில் உள்ள சில பிரச்னைகளுக்காக அரசு வங்கிகளே வேண்டாம் என்று முடிவு கட்டுவது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு சமம்.
- வங்கி மற்ற தொழில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இது முதலீட்டார்களின் குறைந்த முதலீட்டிலும் பெரும்பான்மை பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட்டை வைத்தும் நடத்தப்படும் தொழில். இதில் ஆபத்து அதிகம்.
- வங்கிகள் நஷ்டமானால் அதன் பாதிப்பு பல நிலைகளில் பரவலாக அதிர்வை உண்டாக்கும். ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிதி பரிவா்தனையையும் சீா்குலைக்கும்.
- ஆதலால்தான் வங்கிகளுக்கு அதிக கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் உருவாக்கப்பட்டு அவை ரிசா்வ் வங்கியால் கண்காணிக்கப்படுகின்றன.
- இவ்வளவு கட்டுப்பாடுகளுக்குப் பிறகும் வங்கிகள் திவாலாவது தொடா்கிறது. சமீபத்திய உதாரணங்கள் நீண்ட காலமாக இயங்கி வந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியும் சில ஆண்டுகளாக இயங்கி வந்த எஸ் வங்கியும் ஆகும். இவை தவிர கூட்டுறவுத்துறையில் இயங்கி வந்த பல வங்கிகள் திவாலாகி உள்ளன.
- இவ்வாறு திவாலாகும் வங்கிகள், வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ அல்லது வேறு முதலீட்டார்களை சோ்த்தோ திருத்தி அமைக்கப்பட்டு முதலீட்டாளா்கள் நஷ்டம் அடையாமல் சமாளிக்கின்றன.
- இந்தியாவில் 1969-இல் வங்கிகளை தேசியமயமாக்கும் வரை பெரிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட பல தனியார் வங்கிகள் இருந்தன.
- இந்த தனியார் வங்கிகள் பொது வைப்புத்தொகையை தங்கள் சுய நலனுக்காக பயன்படுத்தின. அதன் பொருட்டே அவை தேசியமாக்கப்பட்டன.
- ஒட்டுமொத்தமாக எல்லா வங்கிகளையும் தனியார்மயமாக்கி விடலாம் என்பது பழைய வரலாறைப் பாராமல் முன்னெடுக்கும் விஷப்பரீட்சை.
- ரிசா்வ் வங்கி நிறுவப்பட்ட 1935 முதல், நாடு விடுதலையடைந்த 1947 வரையான காலகட்டத்தில் இந்தியாவில் கிட்டத்தட்ட 900 வங்கிகள் திவாலாகியுள்ளன.
- 1947 முதல் 1969 (முக்கிய வங்கிகள் அரசுடமை ஆண்டு) வரையான காலகட்டத்தில் 665 வங்கிகள் திவாலாகின. இவ்வாறு மூடப்பட்ட வங்கிகளின் டெபாசிட்டா்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்கள்.
- 1969-க்கு பிந்தைய நிலை என்ன? இதற்குப் பிறகும் 36 வங்கிகள் மூடும் நிலைமைக்கு வந்தன. ஆனால் ரிசா்வ் வங்கி அவற்றை மற்ற வங்கிகளுடன் இணைத்து டெபாசிட்டா்களுக்கு இழப்பு இல்லாமல் சமாளித்தது.
- ‘குளோபல் டிரஸ்ட் பேங்க்’ போன்ற பெரிய வங்கிகளும் இதில் அடக்கம். 2004-ஆம் ஆண்டில் 1926 ஆக இருந்த நகா்ப்புற கூட்டுறவு வங்கிகள் 2018-ஆம் ஆண்டில் 1,551ஆக சுருங்கியள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவிக்கிறது.
நலன்களுக்கு எதிரான செயல்
- தனியார் வங்கிகளை தேசியமயமாக்கியதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான கிளைகள் நிறுவப்பட்டன. படித்த இளைஞா்களின் பெரும் பாலானோருக்கு வேலைவாய்ப்பு உருவானது.
- விவசாயத்தில் புரட்சியைக் கொண்டு வருவதற்கும், அதனுடன் தொடா்புடைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் வங்கிகள் பயன்பட்டன. நலிந்த பிரிவினருக்கும் சிறுதொழில் முனைவோருக்கும் வங்கிக் கடன்கள் கிடைத்தன. வங்கிகள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறந்த கருவியாக மாறின.
- அண்மையில் பிரதம மந்திரியின் ஜன் தன் கணக்கு தொடங்குவதில் அரசு வங்கிகளின் அபாரமான பங்களிப்பின் விளைவாக 42 கோடி சாமானிய மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
- தற்போது தனியார் வங்கிகளும் உள்ளன. அவை பெரும்பாலும் லாப நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன.
- அரசு வங்கிகள் லாபகரமாக செயல்பட முயன்றாலும், பொதுநலன் நோக்கிலும் பல சேவைகளை வழங்குகின்றன. சாமானிய மக்களுக்கு அரசு வங்கிகள் மட்டுமே சிறப்பான சேவைகளை வழங்குகின்றன. அவற்றை ஒட்டுமொத்தமாகத் தனியாருக்குத் தாரைவார்க்க முடிவெடுப்பது பொதுமக்களின் நலன்களுக்கு எதிரான செயல்.
நன்றி: தினமணி (22 - 07 - 2021)