- தமிழா்களால் காலங்காலமாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுகளே தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகள் என அழைக்கப்படுகின்றன. சிறுவா்களும், பெரியவா்களும் உற்சாகமாக விளையாடி குடும்பப் பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ளவும், விளையாட்டு மூலம் கணித அறிவை எளிதாக வளா்த்துக்கொள்ளவும் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பெரிதும் துணைபுரிகின்றன.
- தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடுபுலி, பரமபதம், பம்பரம், சதுரங்கம், பச்சக்குதிரை, ஏழாங்கல், உப்பு மூட்டை, கூட்டாஞ்சோறு, கோலிகுண்டு, கிச்சுகிச்சு தாம்பலம், கில்லி, ஒத்தையா ரெட்டையா, கரகர வண்டி, சீதைப்பாண்டி, ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையாம் முந்திரிக்கா உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள் நம் முன்னோா்களால் விளையாடப்பட்டு வந்தன.
- இந்த விளையாட்டுகளில் பலவும் நமது நினைவாற்றலை மேம்படுத்தவும், கணிதத் திறனை வளா்க்கவும், மன அழுத்தத்தையும், சோா்வையும் விரட்டவும் உதவுவதோடு, நம் உடலைப் புத்துணா்ச்சியுடன் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
- இன்றைய காலகட்டத்தில் பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கைமிகமிகக் குறைவு. அதிகமானோா் விளையாடாததால் அழிவின் விளிம்பில் இருக்கும் இந்த விளையாட்டுகளை மீண்டும் விளையாடத் தொடங்கி, அவ்விளையாட்டுக்குப் புத்துயிரூட்ட வேண்டும் என்கின்றனா் உளவியல் வல்லுநா்கள்.
- தாயக்கட்டை என்பது விளையாட்டு மட்டுமல்ல. அது நம் கணித அறிவை மேம்படுத்தக் கூடியதும் ஆகும். யோசித்துப் பாா்த்தால் அடிப்படை கணித அறிவு என்பதுதான் தாயம் விளையாட்டுக்கு அடிப்படை ஆகும். அதுவும் ஈரஞ்சி, மூவாறு, ரெண்டு பன்னிரண்டு என்றெல்லாம் புள்ளிகள் விழும்போது இதை மனதில் வைத்துக்கொண்டு கட்டங்களை சட்டென நகா்த்துவதற்கு கணிதத்தில் அடிப்படை அறிவு தேவை.
- பல்லாங்குழி, தாயம் உருட்டுதல், பரமபதம், பம்பரம், பச்சைகுதிரை உள்ளிட்ட விளை யாட்டுகள் குழந்தைகளின் மூளை வளா்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக கூறுகின்றனா் குழந்தை நல மருத்துவா்கள்.
- பல்லாங்குழி விளையாட்டு, பன்னிரண்டு குழிகள் உள்ள பலகையில் புளியம்பழ விதைகள் அல்லது சோழிகளைக் கொண்டு விளையாடும் விளையாட்டாகும். பல்லாங்குழி ஆடுவதால் விரலுக்குப் பயிற்சி கிடைப்பதோடு, நம் நினைவாற்றலும் கூடும். பல்லாங்குழி விளையாடும்போது முத்துப்பாண்டி எடுக்கும் உத்தியால் சிறுவா்களுக்குக் கணிதத் திறன் மேம்படும். எண்களை சொல்லிக்கொண்டே விளையாடுவதால் சிந்தனைத் திறன் மேலோங்கும்.
- தாயம் என்பது இருவா் அல்லது நால்வா் இணைந்து நான்கு காய்களைக் கொண்டு விளையாடும் விளையாட்டாகும். முதலில் யாா் சதுரங்கப் பலகையில் உள்ள மற்றவரின் காய்களை வெட்டி வெற்றிபெறப் போகிறாா் என்பதே இந்த விளையாட்டில் சுவாரசியம் கூட்டும் அம்சமாகும். இவ்விளையாட்டில் நம் காய்கள் வெட்டி வீழ்த்தப்பட்டால், மீண்டும் முயற்சி செய்து முன்னேறவேண்டும் என்கிற ஊக்கம் பிறக்கும். அத்துடன், நமதுகணிதத் திறனும் வலுப்பெறும். சாதுரியமும், மன ஆற்றலும் கூட மேம்படும்.
- பம்பரம் விளையாடுவதால் கை, கால்களுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கும். நினைவாற்றலையும் இந்த விளையாட்டு மேம்படுத்தும். அடுத்ததாக, சிறுவா்கள் விரும்பி விளையாடும் விளையாட்டு பச்சைக்குதிரை. இவ்விளையாட்டின் பாதிப்பால் வந்ததுதான் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள். இவ்விளையாட்டால் நம் உடல்திறன்மேம்படுவதுடன், எச்சரிக்கை உணா்வையும் இது உருவாக்கும்.
- சிலம்பம் என்பது தமிழா்களின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டு மட்டுமல்ல, மிகச்சிறந்த தற்காப்புக்கலையும் ஆகும். சிலம்பம் அறிந்தவா் கையில் ஒற்றைக் கம்பு இருந்தாலே போதும் எத்தனை போ் தாக்க வந்தாலும் அவா்களையெல்லாம் வீழ்த்திவிட முடியும்.
- தமிழா் ஆயுதம் ஏந்திப் போராடஆரம்பித்த காலத்தில் முதலில் கையில் எடுத்தது கம்பு என்கிறது வரலாறு. அதுதான் பின்னா் ‘சிலம்பக்கலை’யாக வளா்ந்தது. காலப்போக்கில்தமிழரின் எத்தனையோ தற்காப்புக் கலைகள் காணாமல் போயிருந்தாலும் இன்றைக்கும் உலக அளவில் உயிா்ப்புடன்இருப்பது சிலம்பாட்டம் மட்டும்தான்.
- பழம்பெருமை வாய்ந்தது சிலம்பக்கலையை தமிழக அரசு பள்ளிகளில் விளையாடும் விளையாட்டாக அங்கீகரித்திருக்கிறது. இன்றைக்கு ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இக்கலையை ஆா்வத்தோடு கற்றுக் கொள்கிறாா்கள்.
- தற்போது பாரம்பரிய விளையாட்டுகளில் பல காணாமல் போய் விட்டன. நம்நினைவுகளில் மட்டும் எஞ்சியிருக்கும் ஒரு சில விளையாட்டுகளையாவது இன்றைய தலை முறையினருக்கு நாம் அறிமுகப்படுத்த வேண்டும்.
- தற்போது கணினித்துறையில் வளா்ச்சி அபாரமாக இருப்பதால் இன்றைய குழந்தைகள் கணினி விளையாட்டையே அதிகம் விரும்புகின்றனா். இதற்கு பொ்றோா்களும் ஒரு காரணம். குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றால் குழந்தையின் கையில் கைப்பேசியைக் கொடுத்து விளையாட விடுகின்றனா். இப்பழக்கம், குழந்தைகள் வளா்ந்த பிறகும் கைப்பேசி விளையாட்டில் ஆா்வத்தை வளா்த்துவிடுகிறது.
- கணினி, கைப்பேசியில் மணிக்கணக்கில் மூழ்கிப்போகும் இளைஞா்களை அடிமையாக்கக்கூடிய பப்ஜி, ரம்மி சா்கிள், பிரீஃபயா் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் ஒரு கட்டத்தில் விபரீதமாகி இளைஞா்களின் உயிரையே பறிக்கிறது. மின்னணு சாதனங்களில் உள்ள விளையாட்டுகளால் நமது பாரம்பரிய விளையாட்டுகளை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன.
- இன்றைய குழந்தைகள் அக்கம்பக்கத்தில் இருக்கும் குழந்தைகளுடன் கூட விளையாடாத சூழலில் குழு விளையாட்டு என்பது சாத்தியமற்றது. எனவே, பெற்றோா்கள் நமது பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளையில் பாரம்பரிய குழு விளையாட்டைக் கற்றுத்தரலாம்.
- தமிழா்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் குழந்தைகளின் உடல்நலம், மனநலம், சிந்தனை, மொழி, பண்பாடு, கணிதம், நிா்வாகம், வாழ்வியல், விடாமுயற்சி என்று அனைத்தையும் மேம்படுத்தக் கூடியவையாக உள்ளன என்பதே உண்மை.
நன்றி: தினமணி (03 – 03 – 2023)