அரும்புகள் மலரட்டுமே!
- ஒரு தேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அந்த விடுதியின் கீழ்த் தளத்தில் உணவு உண்ணும் வளாகம் இருக்கிறது. அன்று உணவு உண்ணும் வேளையில் வழக்கத்துக்கு மாறாகத் துர்நாற்றம் வீசியது. மாணவர்கள் புகார் தெரிவித்தனர். சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறதா அல்லது வேறு ஏதாவதா என்று வெவ்வேறு இடங்களில் சோதனை செய்யப்பட்டது.
- விடுதியில் சில அறைகள் திறந்திருந்தன. சில அறைகள் பூட்டி இருந்தன. குறிப்பிட்ட ஓர் அறையின் உள்ளிருந்து துர்நாற்றம் அதிகமாக வந்ததும், உள்பக்கம் தாழிடப்பட்டிருந்த அந்த மாணவரின் அறையைத் தட்டியும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் பயனில்லை. கதவு உடைக்கப்பட்டது. இறுதியாண்டு மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். அவர் இறந்து சில நாள்கள் ஆகியிருந்தன. ஏன் இந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டார் என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கலாம். ஆனால், அவர் இறந்து சில நாள்கள் கடந்தும் யாரும் அவரைத் தேடவில்லை என்பதே மிகவும் துயரமான செய்தி.
பொது சுகாதாரச் சவால்:
- தற்கொலைகள் மிகப்பெரிய பொது சுகாதாரச் சவாலாக மாறியுள்ள தாக உலக சுகாதார நிறுவனம் தெரி வித்துள்ளது. உலக அளவில் ஆண் டொன்றுக்கு 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சமீபத்தில் ‘The Annual International Career & College Counseling Conference’ இல் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், 2021இல் நாடளவில் விவசாயிகள் தற்கொலைகளைவிட மாணவர் தற்கொலைகள் அதிகமாக உள்ளன.
- அந்த ஆண்டில் மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மாணவர்களின் தற்கொலையில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தச் சூழலில் தற்கொலைகள் குறித்துப் பொதுவெளியில் பேச வேண்டிய அவசரநிலையில் இருக்கிறோம்.
நீளும் உளவியல் நெருக்கடிகள்:
- கரோனா ஊரடங்கால் சமூகத் தொடர்புகளிலிருந்து துண்டிக்கப்பட்ட வளரிளம் பருவத்தினர் சமூகச் செயல் பாடுகள் அற்று, மெய்நிகர் உல கில் திறன்பேசிகளிலுள்ள வீடியோ கேம்கள் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதாக நினைத்தனர். அந்த வீடியோ கேம்தான் தங்களுக்கு ஆக்சிஜன் போன்று இருந்ததாகச் சிகிச்சையின்போது மாணவர்கள் பலரும் தெரிவித்தனர்.
- தன்னிலையிலிருந்து மட்டும் ஒரு செயலை அணுகாமல், பல்வேறு கோணங்களில் ஒரு செயலை அணுகி, பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும் நெருக் கடிகளைச் சமாளிக்கவும், அதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வெளிச் சூழலின் தொடர்பு மிகவும் அவசியமாகிறது.
- ஆனால், வளரிளம் மூளைக்கு அந்த வாய்ப்பை அளிக்காமல் ஊரடங்கு தடை செய்துவிட்டது. இதனால், கல்விச் சூழலில் ஏற்படும் நெருக்கடிகள், தேர்வுகளை எதிர்கொள்வதில் உள்ள சவால்கள், வீட்டுச் சூழலில் இருக்கும் அழுத்தங்களால் தாங்கள் எதிர்பார்த்த விஷயங்களை நினைத்ததுபோல உடனடியாக அடைந்துவிட வேண்டும் என்கிற மனநிலை மாணவர்களுக்கு உள்ளது. நினைத்ததை அடையாவிட்டால், உடைந்துபோவதும் அவர்களுக்குச் சாதாரணமாகிவிட்டது.
பிரச்சினைகளைப் பகிருங்கள்:
- பிறரிடம் உதவி நாடுவதைப் பலவீனமானவர்களின் அறிகுறியாக இன்றைய தலைமுறை கருதுகிறது. தனியே நின்று சண்டையிட்டு வெற்றிபெறுவதே வீரம் என்றே பலரும் கருதுகின்றனர். இந்த மனநிலை தவறானது. பிறரிடம் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்வதன் மூலம் நீங்கள் பலமடைகிறீர்கள். மேலும், இன்றைய தலைமுறை யில் எதிர்மறை முடிவுகளே வராது என்கிற திடமான நம்பிக்கையும், தோல்விகளை அனுபவங்களாகப் புரிந்துகொள்ளும் மனப்பாங்கு இல்லாததும் தங்கள் சுயத்தையே வெறுக்கும் அளவிற்கு மாணவர்கள் போகக் காரணங்கள்.
என்ன செய்யலாம்?
- சமூகத் தொடர்பை ஏற்படுத்துவதன் அவசியத்தைப் பேசுவதும் அதற்கான செயல்திட்டத்தை வகுப்பதும் இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானது. தனித்தீவாக இருக்கும்போது திகைத்துப் போய் இயங்க முடியாமல் போவதும் மற்றவர்களோடு கூட்டுச் செயல்பாட்டில் இணையும்போது பிரச்சினைகளைக் கையாள்வதில், உதவி பெறுவதில், தீர்வு கிடைப்பதில் இருக்கும் மாற்றத்தை மாணவர்களுக்கு உணர்த்துவதும் அவசியம். இதைப் பள்ளி அளவில் மட்டுமல்ல, சமூக அளவிலும் செய்ய முடியும். பிரச்சினைகள், தோல்விகள், உளவியல் சிக்கல்களைத் தனிநபர் பிரச்சினைகளாகப் பார்க்காமல், அதைப் பற்றிப் பேசத் தயங்கும், வெட்கித் தவிக்கும் மனப்பாங்கை மாற்ற வேண்டும்.
- தோல்வியிலிருந்து உருவான உளவியல் நெருக்கடிகள் எப்படி வந்தன, அப்போது எந்த மாதிரியான உளவியல் பிரச்சினை களைச் சந்திக்க நேர்ந்தது, அவற்றை எப்படி நேர்மறையாக அணுகுவது என்பதை ஓர் இணைநிலையினர் (peer educator) மூலம் பயிற்றுவிக்க வேண்டும். ஆழ்மனத்தில் உறைந்துள்ள பிரச்சி னைகள், ஆறாத தழும்புகளிலிருந்து விடுபட்டு, மாற்றத்தைக் கட்டமைக்க, உளவியல் நெருக்கடிகளைத் தீர்க்க நாடகக் கலை உதவுகிறது. அதை ஒரு பயிலரங்கின் மூலம், தேர்ந்த கலைஞர்கள் மூலம் பள்ளிதோறும் நடைமுறைப்படுத்தி, மாணவர்களை ஈடுபடச் செய்வது தற்போது மிகவும் தேவையாக இருக்கிறது.
- தற்கொலையைப் பற்றிய உரையாடலை மக்களிடையே கொண்டுசெல்வதன் மூலம் அரும்புகள் மலர்வதை உறுதிப்படுத்த வேண்டும். இது நம் கடமையும்கூட.
- (செப். 10: உலகத் தற்கொலைத் தடுப்பு நாள்)
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 09 – 2024)