TNPSC Thervupettagam

அர்ப்பணிப்பு உணர்வு தேவை

September 12 , 2019 1947 days 1088 0
  • படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களின் பெரும் கனவுகளில் ஒன்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப் பணி. சமூக அந்தஸ்து, அதிகாரம், பணிப் பாதுகாப்பு, வசதியான வாழ்க்கை, சேவை செய்ய வாய்ப்பு என்பதோடு, நாட்டின் அதிகார வர்க்கத்தின் முக்கிய அங்கம் என்பதால் குடிமைப் பணி மீது அத்தனை ஆசை.
ராஜிநாமா
  • ஆனால், கடந்த 5 மாதங்களில் 2 ஐ.ஏ.எஸ். மற்றும் 1 ஐ.பி.எஸ். என 3 பேர் தங்களது குடிமைப் பணியை ராஜிநாமா செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவரது பூர்வீகம் கேரளம். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்தின் ஐ.ஏ.எஸ். (2009 ஆம் ஆண்டு குழு) அதிகாரி. அதே மாநிலத்தில் ஐ.பி.எஸ். (2011)அதிகாரியாகப் பணியாற்றியவர் கே. அண்ணாமலை. இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. மிஸோரம் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். (2012) அதிகாரியாகப் பணியாற்றியவர் கண்ணன் கோபிநாத். இவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 3 பேரும் அண்மையில் தங்களது பணியை ராஜிநாமா செய்துள்ளனர்.
  • இவர்கள் தங்களது ராஜிநாமாவுக்கான காரணங்களாக, ஒருவர் காஷ்மீர் பிரச்னையைச் சுட்டிக்காட்டி தனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லை என்கிறார். இன்னொருவர் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். மற்றொருவர், தாம் இந்தப் பணியில் இருப்பதால் குடும்பத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டி வருவது வருத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். அவர்களின் இந்த கருத்துகள் ஏற்புடையதா, இல்லையா என்பது விவாதத்துக்குரியதாக இருக்கலாம். ஆனால், சில சிந்தனைகள் தவிர்க்க முடியாதவை.
பணி நியமனம்
  • குடிமைப் பணியை ராஜிநாமா செய்துள்ள இவர்கள் மூவருமே 40 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களது பணி அனுபவக் காலம் என்பது 7 முதல் 10 ஆண்டுகள் மட்டுமே. குடிமைப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு முதலில் பிரத்யேக பயிற்சி நிலையங்களில் வகுப்பறை பயிற்சி,  பின்னர் மாவட்டங்களில் களப் பயிற்சி. அதன்  பிறகு சார்பு அதிகாரிகளாக பணி நியமனம் பெறுவர். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அரசுத் துறைகளில் தனி அதிகாரத்துடன் பணி நியமனம் செய்யப்படுவர்.
  • அதற்கு சுமார் 5 ஆண்டுகள் வரை ஆகலாம். அதன் பிறகுதான் அவர்களது உண்மையான திறமை வெளிப்படுவதோடு, அவர்களுக்கு  முழுமையான பணி அனுபவமும் கிடைக்கும்.
    இளம் அதிகாரிகள் தங்களது திறமையை வெளிப்படுத்தவும், பல்வேறு துறைகளில் பணி அனுபவம் பெற்று அதில் முதிர்ச்சி அடையவும் சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம். ஓய்வு பெறுவதற்கு முன்பு எஞ்சியுள்ள 10, 15 ஆண்டுகளில்தான் அவர்கள் அதுவரை பெற்ற பணி அனுபவத்தையும், முதிர்ச்சியையும் அரசு நிர்வாகத்தில் முழுமையாக வெளிப்படுத்தலாம் என்பது குடிமைப் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளின் கருத்து. 
  • இன்றைய உலகமயமாக்கல் சூழலில், புத்திக் கூர்மையுள்ள, திறமைவாய்ந்த இளைஞர்களை தனியார் நிறுவனங்கள் கொத்திக்கொண்டு போவதற்கு காத்திருக்கின்றன. அரசு வேலையைவிட தனியார் நிறுவனங்களில் திறமைக்கு தக்க அதிக ஊதியம் மற்றும் சலுகைகள் இளைஞர்களை ஈர்க்கின்றன. எனவே,  புத்திக் கூர்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ள குடிமைப் பணி இளைஞர்களுக்கு தனியார் துறையில் நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம்.
அரசு வேலை
  • சிலர், அரசு வேலை கிடைப்பதற்கு முன்போ அல்லது அதன் பிறகோ தனியாக ஏதேனும் தொழிலில் ஆர்வம் கொண்டவராக அதைச் செய்து கொண்டிருந்திருக்கலாம். அந்தத் தொழில் நல்ல வளர்ச்சி அடைந்து பணம் கொட்டத் தொடங்கியதும் கூடுதல் கவனம் செலுத்தினால் மேலும் வளர்ச்சி உறுதி என்ற நிலையில் அரசுப் பணியில் ஏதேனும் நெருக்கடி வந்தால் வேலையை ராஜிநாமா செய்யலாம்.
    அரசு வேலை, அதுவும் குடிமைப் பணி என்பது மிகவும் பொறுப்புள்ள, கால நேரம் பார்க்காமல் செய்ய வேண்டிய பணி.  சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் இயற்கை பேரிடர்  போன்ற நிகழ்வுகளில் அவர்கள் ஆற்ற வேண்டிய களப் பணி அதிகம்.  
  • இன்றைய நிலையில் சேவை செய்ய விரும்பும் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் ஏராளம். அரசுகளும் அல்லது உயர் அதிகாரிகளும் தங்களை அவமானப்படுத்துவதாக எண்ணினாலும் சரி, முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தாலும் சரி, அரசின் அமைப்பிலும், செயல்பாட்டிலும் குறைகள் இருந்தாலும் சரி,  அரசின் திட்டங்களில் கோளாறுகள் இருந்தாலும் சரி, அவற்றையெல்லாம் அமைப்புக்குள் இருந்து கொண்டு அவற்றைச் சீர்படுத்த முயற்சிக்கலாம்.  
  • ஓடி ஒளிந்து கொள்வது குடிமைப் பணிக்கு அழகல்ல.
    ஒழுக்கமும், நேர்மையும், திறமையும், பணியாற்ற ஆர்வமும் உள்ள அதிகாரிகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்பது சமீபகாலமாக பல்வேறு தருணங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
  • எனவே,  குடிமைப் பணி அதிகாரிகள் தாங்கள் பணியாற்றும் இடங்களில் மக்களுக்கு எந்த விதத்திலும் சேவையாற்றலாம்.  எல்லாத் துறைகளிலும் அரசின் சேவை தேவை உள்ள மக்கள் உள்ளனர். ஆதலால், தனது திறமைக்கோ, அனுபவத்துக்கோ ஏற்ற பணி வழங்கவில்லை எனக் கூறிவிட்டு ராஜிநாமா செய்வதை ஏற்க முடியாது.
  • குடிமைப் பணி அதிகாரிகள்கூட ஒரு வகையில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு  ஒப்பானவர்கள்தான். நாடு சுதந்திரம் அடைய நமது முன்னோர் குடும்பம், சொத்து, சுகத்தை துறந்து, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுதான் வெற்றி பெற்றனர். சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டையும், மக்களையும் முன்னேற்ற அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் அவசியம்.  அதில் குடிமைப் பணி முக்கியமானது.
  • எனவே,  குடிமைப் பணி அதிகாரிகளுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் மனப்பான்மை இருக்குமானால் ராஜிநாமா செய்ய மனம் ஒப்பாது. அப்படிப்பட்ட மனநிலை இல்லாமல்கூட இருக்கலாம். ஆனால்,  பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனநிலை இல்லை என்றால் அவர்கள் குடிமைப் பணிக்கு வராமலேயே இருந்திருக்கலாம்.

நன்றி: தினமணி (12-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்