TNPSC Thervupettagam

அர்விந்த் கேஜ்ரிவால் கைது: உண்மைகள் வெளிவர வேண்டும்

March 27 , 2024 291 days 278 0
  • மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டிருப்பதும், அதைத் தொடர்ந்து எழுந்திருக்கும் அரசியல் அமளிகளும் நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கின்றன. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்நடவடிக்கை பெரும் விவாதத்துக்கும் வழிவகுத்திருக்கிறது.
  • ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு 2021இல் கொண்டுவந்த புதிய மதுபானக் கொள்கையால், அரசின் கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மதுபான விற்பனையாளர்களிடம் ஆம் ஆத்மி கட்சியினர் கையூட்டுப் பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
  • இவ்வழக்கில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உள்ளிட்டோர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், மார்ச் 21இல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கைதுசெய்தனர்.
  •  முதலமைச்சர் பதவியில் இருப்பவர் கைதுசெய்யப்படுவது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறை. ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்படுவதற்கு முன்பு பதவிவிலகியது கவனிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் ஒருபக்கம் சட்டரீதியாகவும், இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாகவும் நிகழ்வுகள் தொடர்கின்றன.
  • மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த தொகையை கோவா சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாகவும், இந்தச் சதியில் கேஜ்ரிவால் மூளையாகச் செயல்பட்டார் என்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டுகிறது.
  • எனினும், இவ்வழக்கில் உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் அவசரகதியில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சிக்கின்றனர். இவ்வழக்கில் பல முறை அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவற்றை நிராகரித்துவந்தார் கேஜ்ரிவால். கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்கூட்டியே பிணை பெறவும் அவர் முயற்சிக்காதது அரசியல் லாபத்தின் அடிப்படையிலான அணுகுமுறை என்று பாஜகவினர் வாதிடுகின்றனர்.
  • இதற்கிடையே டெல்லியில் குடிநீர்-கழிவுநீர் மேலாண்மையில் கவனம் செலுத்துமாறு சிறையில் இருந்தபடியே கேஜ்ரிவால் துண்டுச் சீட்டு அனுப்பி உத்தரவு பிறப்பித்ததாக டெல்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி சிங் கூறியிருக்கிறார். இதன் மூலம், தான் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்கள் நலனில் கேஜ்ரிவால் அக்கறை கொண்டிருக்கிறார் என்ற சித்திரத்தை ஆம் ஆத்மி கட்சியினர் உருவாக்குகின்றனர்.
  • குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை முதலமைச்சர் பதவியில் கேஜ்ரிவால் நீடிக்க தார்மிகரீதியில் உரிமை உண்டு என்றும் வாதிடுகின்றனர். அமலாக்கத் துறையால் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கேஜ்ரிவாலை, அதே வழக்கில் விசாரிப்பதற்காக அவரைக் காவலில் எடுக்க சிபிஐ-யும் நீதிமன்றத்தை அணுகும் எனச் செய்திகள் வெளியாகின்றன. நாளுக்கு நாள் இவ்விவகாரத்தில் நிகழ்ந்தேறும் சம்பவங்கள் தேவையற்ற பதற்றத்தை டெல்லியில் ஏற்படுத்தியிருக்கின்றன.
  • கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மார்ச் 31இல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. கூடவே, விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளைப் பாஜக குறிவைப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் மக்களவைத் தேர்தலில் இன்னும் வலுவாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் அரசியல் பாரபட்சமின்றி உண்மைகள் வெளிவர நீதிமன்றம் உதவ வேண்டும். அப்போதுதான் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் வலுவிழக்கும்.

நன்றி: தி இந்து (27 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்