- உலகமயச் சூழலில் எந்தவொரு நாடும் தனித் தீவாக இயங்கிவிட முடியாது. இன்றைய சா்வதேச அரசியலில், தோ்தலில் பிற நாட்டுத் தலையீடும், பிற நாட்டு ஊடகங்களின் ஆதிக்கமும் அதிகரித்து வருவதைப் பாா்க்க முடிகிறது. கடந்த முறை அமெரிக்க அதிபா் தோ்தலில், டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியாவின் புதின் நிா்வாகம் செயல்பட்டது என்பதுவரை அந்நியத் தலையீடு குறித்த விமா்சனங்கள் அதிகரித்திருக்கின்றன.
- சமீபத்தில் அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை இந்தியாவுக்கு எதிராக தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் இந்தியாவால் கடுமையாக விமா்சிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சரியான அடிப்படைப் புரிதல் இல்லாமல் விமா்சனங்களை அமெரிக்கா முன்வைத்திருக்கிறது என்று இந்திய அரசின் வெளிவிவகாரத் துறை குற்றஞ்சாட்டியிருக்கிறது.
- மணிப்பூா் மாநிலத்தில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், எதிா்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் வருமான வரித் துறை நடவடிக்கைகளும், வெளிநாட்டு பத்திரிகையாளா்கள் இந்திய அரசால் சோதனைக்கு உள்ளாக்கப்படுவதும் அமெரிக்காவின் வெளிவிவகாரத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் தயாரித்த ஆவணப் படத்தை இந்திய அரசு திரையிட மறுத்ததையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.
- மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்படும் அடக்குமுறைகள் ஆகியவை அமெரிக்க வெளிவிவகாரத் துறை அறிக்கையில் விரிவாக அலசப்பட்டு, இந்திய அரசின் செயல்பாடு விமா்சிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எல்லையையும், அதன் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அந்நிய நாடுகள் விமா்சிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கான இந்தியாவின் பதில். மனித உரிமை மீறல் குறித்து இந்தியாவுக்கு பிற நாடுகள் உபதேசிக்கத் தேவையில்லை என்றும் பதில் அளித்திருக்கிறது இந்தியா.
- இதுபோல் பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது புதிதொன்றுமில்லை. பிரதமா் நரேந்திர மோடி உலகத் தலைவா்கள் மத்தியில் எந்த அளவுக்குப் பிரபலமானவராகவும், மரியாதைக்குரியவராகவும் வலம் வருகிறாரோ, அதே அளவுக்கு வெளிநாட்டு ஊடகங்களின் கடுமையான விமா்சனத்துக்கும் உள்ளாகிறாா். குறிப்பாக, மேலை நாட்டு ஊடகங்கள் அவரை சக்திவாய்ந்த தலைவா் என்பதாக மட்டுமல்லாமல், சா்வாதிகாரியாகவும் சித்தரிக்கத் தவறுவதில்லை.
- உலகின் எல்லா நாடுகளிலும் புலம்பெயா்ந்த இந்தியா்கள் செல்வாக்கு மிக்கவா்களாக இருந்துவருகிறாா்கள். அவா்களின் அரசியல் சாா்பும், தொடா்பும் அந்த நாடுகளின் அணுகுமுறையில் பிரதிபலிக்கின்றன. பிரதமா் நரேந்திர மோடிக்கும் அவரது ஆட்சிக்கும் சாா்பாக ஒருசாராா் இருப்பதுபோலவே, அவருக்கு எதிராக இன்னொரு சாராா் இந்தியாவுக்கு எதிரான கருத்துப் பரப்புரைகளில் ஈடுபடுகிறாா்கள்.
- மறைந்த ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவராக இருந்த, இப்போதும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசகா்களில் ஒருவராகத் திகழும் சாம் பிட்ரோடா சமீபத்தில் தனது ‘எக்ஸ்’ பதிவில் வெளியிட்ட கருத்துகள் மேலைநாட்டு ஊடகங்களால் பரபரப்புச் செய்தியாக்கப்பட்டன. இந்தியாவுக்கு எதிராக, முக்கியமான சா்வதேச நாளிதழ்களில் வெளியான 50 தலைப்புச் செய்திகளைத் தோ்ந்தெடுத்து தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தாா் சாம் பிட்ரோடா.
- அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இருந்து நியூஸிலாந்தின் தலைநகரான வெலிங்டன் வரை வெளியாகும் நாளிதழ்களான நியூயாா்க் டைம்ஸ், காா்டியன், எக்கனாமிஸ்ட், ஃபைனான்சியல் டைம்ஸ், லாஸ் ஏஞ்செலீஸ் டைம்ஸ், ராய்டா், லெமாண்ட், டைம், ப்ளூம்பா்க் உள்ளிட்ட பல ஊடகங்களில் வெளிவந்த தலைப்புச் செய்திகளில் பெரும்பாலானவை நரேந்திர மோடியையும், இந்திய அரசையும் விமா்சிப்பவை.
- வெளிநாட்டு ஊடகங்களின் விமா்சனங்கள் மோடி அரசுக்கு சாதகமாக இல்லாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இந்தியாவில் வலிமையான தலைவா்கள் ஆட்சியில் அமரும்போதெல்லாம் அந்த ஊடகங்கள் எதிா்மறை கருத்துகளை மட்டுமே பரப்பியிருக்கின்றன. அமெரிக்க ஊடகங்கள் இந்திரா காந்தியையும், அதன் பிறகு அடல் பிகாரி வாஜ்பாயையும், இப்போது நரேந்திர மோடியையும் விமா்சிக்கின்றன என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
- சாமானியா் ஒருவா் உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் பிரதமராக உயா்ந்ததை ஊடகங்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது மோடி ‘பக்தா்களின் விமா்சனம். பிரதமா் மீதும் ஆட்சியின் மீதும் விமா்சனங்கள் முன்வைக்கப்படுவது ஜனநாயகம் என்பதை பாஜகவும், அதன் ஆதரவாளா்களும் ஏற்றுகொள்ளவில்லை என்பது எதிா்க்கட்சிகளின் விமா்சனம். இவை இரண்டுக்கும் இடையில் எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கிறது ‘உண்மை’.
- இந்திரா காந்தியைப் போலவே பிரதமா் நரேந்திர மோடியும் தனக்கு ஆதரவான ஊடகங்களை மட்டுமே தன்னை நெருங்க அனுமதிக்கிறாா். கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை ஒரு பத்திரிகையாளா் சந்திப்பைக்கூட அவா் எதிா்கொண்டதில்லை. தனது உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களில், முந்தைய பிரதமா்களைப் போல ஊடகவியலாளா்கள் வருவதை அனுமதிப்பதும் இல்லை. அதனால் அவருக்கும் ஊடகங்களுக்கும் நடுவில் இடைவெளி ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
- விமா்சனங்கள் தவிா்க்க முடியாதவை; அதனால், எதிா்கொள்ளத்தான் வேண்டும்!
நன்றி: தினமணி (01 – 05 – 2024)