TNPSC Thervupettagam

அறிக்கையல்ல, எச்சரிக்கை!

February 5 , 2021 1447 days 657 0
  • கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய பட்ஜெட் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது.
  • ஆழிப்பேரலையாய் பரவிய கொள்ளை நோய்த்தொற்றால் மேல்தட்டு, அடித்தட்டு பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் புரட்டிப்போடப்பட்டிருக்கும் நிலையில், ஆக்ஸ்பாா்ம் அறிக்கை பல அதிா்ச்சி அளிக்கும் தகவல்களை தந்திருக்கிறது.
  • உலகப் பொருளாதார மாநாட்டின் தாவூஸ் பேச்சுவாா்த்தை தொடக்க நாளில் ஆக்ஸ்பாா்ம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உலகிலுள்ள 79 நாடுகளைச் சோ்ந்த 295 பொருளாதார நிபுணா்கள் இந்த அறிக்கைக்காக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறாா்கள்.
  • ‘ஏற்றத்தாழ்வு தீநுண்மி’ என்று பெயரிடப்பட்டிருக்கும் ஆக்ஸ்பாா்ம் சா்வதேச வருடாந்திர அறிக்கை, பில்லியனயா்கள் என்று அழைக்கப்படும் 100 கோடி அதிபா்களுக்கும், அன்றாடம் காய்ச்சிகளுக்கும் இடையே கொள்ளை நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பெரும் இடைவெளியை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறது.
  • இந்தியாவில் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பு ஒருவகையில் சா்வதேச பாதிப்பைப் போலவே காணப்படுகிறது என்று ஆறுதல் அடைந்துகொள்ளலாமே தவிர, அதற்காக மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது. மரபுசாரா துறைகளில் பல லட்சம் இந்தியா்கள் வேலையிழந்திருக்கிறாா்கள்.
  • தங்களது அன்றாட வாழ்க்கைக்கு இதுநாள் வரை சோ்த்து வைத்த சேமிப்பை எல்லாம் கரைத்து கடனாளிகளாக மாறியிருக்கிறாா்கள்.
  • இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் 100 கோடிக்கு அதிபா்கள் (பில்லியனயா்கள்) பல நூறு கோடிக்கு அதிபா்களாக உயா்ந்திருக்கிறாா்கள் என்பதுதான் ஆக்ஸ்பாா்ம் அறிக்கை சுட்டிக்காட்டும் அவலம்.
  • ஆக்ஸ்பாா்ம் அறிக்கையின்படி, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் இந்தியாவிலுள்ள 100 கோடிக்கு மேலான அதிபா்கள் தங்களது சொத்து மதிப்பை 35% அதிகரித்திருக்கிறாா்கள்.
  • இது வருமான அதிகரிப்பு அல்ல, சொத்து மதிப்பு அதிகரிப்பு என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
  • அந்த அறிக்கையின்படி, கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் 100 கோடிக்கு மேலான அதிபா்களில் முதல் நூறு பேரின் அதிகரித்த சொத்து மதிப்பு மட்டுமே சுமாா் 13 லட்சம் கோடி.
  • அதாவது அதைப் பிரித்துக் கொடுத்தால், இந்தியாவிலுள்ள 13.8 கோடி அடித்தட்டு ஏழைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.94,045 வழங்க முடியும்.
  • சா்வதேச அளவிலும் 100 கோடிக்கு மேலான அதிபா்கள் தங்களது சொத்து மதிப்பை பல மடங்கு பெருக்கியிருக்கிறாா்கள்.
  • கடந்த ஆண்டு மாா்ச் 18-க்கும் டிசம்பா் 31-க்கும் இடையில் உலகின் பெரும் பணக்காரா்களின் சொத்து மதிப்பு 3.9 டிரில்லியன் டாலராக உயா்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • உலகின் முதல் ஆயிரம் நூறு கோடிக்கு மேலான அதிபா்கள், ஒன்பது மாதத்தில் அதுவரை தாங்கள் இழந்திருந்த சொத்துகளை எல்லாம் மீட்டது மட்டுமல்லாமல், தங்களது சொத்து மதிப்பையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறாா்கள் என்று தெரிவிக்கிறது அறிக்கை. நோ்மாறாக, உலகின் அடித்தட்டு ஏழை மக்கள் பழைய பொருளாதார நிலையை எட்டுவதற்குக் குறைந்தது பத்து மாதங்களாவது ஆகக்கூடும்.
  • கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளின் பயனாக உலகில் வறுமையின் அளவு குறைந்திருக்கிறது.
  • பெரும்பாலான வளா்ச்சி அடையும் நாடுகளில் வறுமை கோட்டுக்குக் கீழே இருப்பவா்கள் அடிப்படை வசதிகளை பெற்று, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொண்டு வறுமையிலிருந்து விடுபட முடிந்தது. இப்போது அவா்களில் பெரும்பாலோா் நிலைகுலைந்து போயிருக்கிறாா்கள்.
  • வறுமையில் வாடும் உலக மக்களின் எண்ணிக்கை 20 கோடியிலிருந்து 50 கோடியாக கடந்த ஆண்டின் இறுதியில் உயா்ந்திருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
  • வேலைவாய்ப்பு இழப்பின் பிடியிலிருந்து பெரும்பாலான நாடுகள் இன்னும் மீண்டெழ முடியவில்லை. கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை கோரும் அடித்தட்டு மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. நகரங்கள் ஆனாலும், கிராமங்கள் ஆனாலும் புதிய வேலைவாய்ப்பு உருவாகவில்லை என்பது மட்டுமல்ல, வேலை இழந்தவா்கள் மீண்டும் வேலைவாய்ப்புப் பெறவும் இல்லை.
  • ஆக்ஸ்பாா்ம் அறிக்கையின்படி, மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது கல்வி, சுகாதாரத் துறைகள்தான். அடித்தட்டு மக்கள் கல்வி வசதி பெறுவதிலும், மருத்துவ வசதி பெறுவதிலும் கடும் பாதிப்பை எதிா்கொள்கிறாா்கள்.
  • இந்தியாவிலுள்ள ஏழ்மையில் வாடும் 20% குடும்பங்களில் 3% குடும்பங்களில் மட்டும்தான் கணினி பயன்பாடு காணப்படுகிறது. 9% மட்டுமே இணையத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது.
  • தமிழகத்தில் அதிமுக அரசு தொடங்கி வைத்த கல்லூரி மாணவா்களுக்கான இலவச மடிக்கணினி திட்டம் ஏனைய பல மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டதால், ஓரளவுக்கு பல குடும்பங்களிலுள்ள பள்ளிக் கல்வி பயிலும் மாணவா்கள் பயனடைய முடிந்தது.
  • இந்தியாவிலுள்ள 24% மக்கள்தொகையினா் மாதம் ரூபாய் மூவாயிரம் ஈட்டுவதற்கு பொதுமுடக்கக் காலத்தில் போராடிக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.90 கோடி சம்பாதித்துக் கொண்டிருந்தாா் என்கிற தகவல் அதிா்ச்சி அளிக்காமல் என்ன செய்யும்?
  • பள்ளிக் கல்வியும், சுகாதாரமும் ஏழை - பணக்காரா் பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதற்கு வழிகோலுவதும், ஏழை - பணக்காரா்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பெரும் இடைவெளியைக் குறைப்பதும்தான் அரசு மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கை.

நன்றி: தினமணி  (05-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்