- பொது முடக்கத்தால் முடங்கிப்போய்க் கிடக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசு என்ன செய்யப் போகிறது என்கிற கேள்விக்கு, ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்புகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.
- பிரதமா் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரப் புத்துயிர்ப்பு நிதியுதவித் திட்டத்தின் முதல் பகுதி கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுவிட்டது.
- இப்போது, பொது முடக்கம் தளா்த்தப்படும் நிலையில், அடுத்தகட்ட ஊக்குவிப்பில் அரசு இறங்கியிருப்பது வரவேற்புக்குரியது.
அறிவிப்புகள்
- ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்த நாள்களில் நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்படும் அறிவிப்புகளின் முதல் கட்டமாக அவா் தோ்ந்தெடுத்து அறிவித்தது குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை உயிர்த்தெழ வைப்பதற்கான முயற்சி.
- கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருப்பவை குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள்தான் என்பதால், அவற்றுக்கு நிதியமைச்சா் முன்னுரிமை வழங்கியிருப்பது, பயனளிக்கிறதோ இல்லையோ நிச்சயமாக ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
- நிதியமைச்சா் நிர்மலா சீதாராமனின் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான பொருளாதார உதவித் திட்டம், நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது.
- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வரையறை மாற்றி அமைக்கப்படுவது, உத்தரவாதம் இல்லாத ரூ.3 லட்சம் கோடி அளவிலான வங்கிக் கடனுதவி, ரூ.200 கோடி வரையிலான எல்லா அரசு ஒப்பந்தப்புள்ளிகளிலும் உலக அளவிலான பங்களிப்பு ரத்து செய்யப்படுதல், அந்த நிறுவனங்களுக்கு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் நிலுவைகள் 45 நாள்களில் வழங்கப்படுதல் என்பவைதான் இந்த நான்கு பிரிவுகள்.
- சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவிலான உத்தரவாதம் இல்லாக் கடன் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 43 லட்சம் தொழில்முனைவோர் பயனடைவார்கள்.
- நான்கு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் வழங்கப்படும் இந்தத் கடன்களுக்கு முதல் ஓராண்டுக்கு வட்டியும் செலுத்த வேண்டியதில்லை.
- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறையையும் நிதியமைச்சகம் மாற்றி அமைத்திருக்கிறது. அதன்படி, ரூ.10 கோடி முதலீடும் - ரூ.5 கோடி விற்றுமுதலும் கொண்டவை குறு நிறுவனங்களாகவும், ரூ.10 கோடி முதலீடும் ரூ.50 கோடி விற்றுமுதலும் கொண்டவை சிறு நிறுவனங்கள் என்றும், ரூ.20 கோடி முதலீடு - ரூ.100 கோடி விற்றுமுதல் கொண்டவை நடுத்தர நிறுவனங்கள் என்றும் இப்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
- உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளிக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைத்து சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை அரசு ஊக்குவித்திருக்க வேண்டும்.
- ரூ.200 கோடிக்கும் கீழுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் இந்திய நிறுவனங்களுக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது தீநுண்மித் தொற்று இந்தியாவுக்குச் செய்திருக்கும் மிகப் பெரிய நன்மைகளில் ஒன்று.
- இந்த அறிவிப்பால், உடனடியாக எந்தவிதப் பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அரசின் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, தயாரிப்பு மீண்டும் முழு வீச்சில் நடக்கும்போதுதான் அதன் பயன் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்குக் கிடைக்கப் போகிறது.
- 45 நாள்களில் பழைய நிலுவைகள் அனைத்தும் வழங்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்திருப்பது ஆறுதலானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட. அரசுத் துறைகளும், அரசு நிறுவனங்களும் செயல்படத் தொடங்கி, தேங்கிக் கிடக்கும் நிலுவைத் தொகையை உடனடியாகப் பட்டுவாடா செய்யுமா, செய்ய முடியுமா என்பதை யார் உறுதிப்படுத்துவது? இது குறித்து நிதியமைச்சகம் உத்தரவு போட முடியுமா? அந்த நிலுவைத் தொகையை உடனடியாக வங்கிகள் ஏற்றுக்கொண்டு குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கும் என்கிற உத்தரவாதம் வழங்கப்படாத நிலையில், நிதியமைச்சரின் அறிவிப்பு ஆறுதல் தருமே தவிர, உதவிக்கரம் நீட்டும் அருமருந்தல்ல!
- ரூ.3 லட்சம் கோடி அளவிலான உத்தரவாதம் இல்லாத வங்கிக் கடன் என்பதும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறதே தவிர, நடைமுறை சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
- வங்கிகள் எந்தவித இடரையும் (ரிஸ்க்) எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை நிலவரம். அரசியல் தலைமையின் அழுத்தத்தால் வழங்கப்பட்ட கடன்கள் வாராக் கடன்களாக அழுத்துகின்றன.
- இதற்கு வங்கி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. அவா்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள். உத்தரவாதம் இல்லாக் கடனுக்கு அவா்கள் பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற உத்தரவாதம் அரசால் வெளிப்படையாக வழங்கப்படாமல், எந்த வங்கியும் குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் கதறலைச் சட்டை செய்யும் என்று தோன்றவில்லை.
நன்றி தினமணி (16-05-2020)