TNPSC Thervupettagam

அறிவியலுக்கு அருட்கொடை குலசேகரன்பட்டினம்

February 26 , 2020 1593 days 700 0
  • தெற்குச் சீமையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதிக் கலவரங்கள் கடுமையாக இருந்தன. இந்தக் கொடுமையான நிலை குறித்து ஆராய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மறைந்த எஸ். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
  • அந்தக் குழு தனது அறிக்கையில், சமூக, பொருளாதார காரணங்களால் இந்தக் கலவரங்கள் நடக்கின்றன.

மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்

  • பொருளாதார ரீதியாக பல்வேறு திட்டங்களை இந்த வட்டாரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டுமென பரிந்துரைத்தது. அதன் விளைவாக நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா, குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், தாமிரவருணி நதியைச் சீா்படுத்துதல், கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் முதலான வானம் பாா்த்த பகுதிகளில் விவசாயிகளின் நலனை நிலைநிறுத்துதல், தூத்துக்குடி துறைமுக நகரை மேலும் வலுப்படுத்துதல் எனப் பல விஷயங்களை நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் குழு வலியுறுத்தியது.
  • அந்த வகையில் குலசேகரன்பட்டினம் ஏவுதளம் நீண்ட நாள்களாக மத்திய அரசின் பாா்வையில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இதை திருச்செந்தூா் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கே.டி.கோசல்ராம் வலியுறுத்தினாா். இன்றைக்கு குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ராக்கெட்டுகள் விண்ணுக்கு ஏவப்பட்டு வருகின்றன. அங்கு இரு ஏவுதளங்கள் இருக்கின்றன.
  • சிறப்பு வாய்ந்த தசரா விழா நடைபெறும் இடம் குலசேகரன்பட்டினம். கிராமமாக இருந்தாலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரத் தளமாக விளங்க இருக்கிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திருநெல்வேலி வட்டாரத்தில் கூடங்குளம் (இதற்கு மாற்றுக்கருத்து உண்டு), மகேந்திரகிரி, நான்குனேரி, கட்டபொம்மன் பாதுகாப்புத் தளம் என மத்திய அரசின் அமைப்பு ரீதியான பல நிறுவனங்கள் அமைந்துள்ளன.
  • குலசேகரன்பட்டின கடல் கிராமத்தில் அமைய உள்ள இஸ்ரோவின் மூன்றாவது ஏவுதளம் தமிழகத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும். பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு பாதிப்பு ஏற்பட்டால் வேறு ஏவுதளங்கள் இல்லாத நிலையில் குலசேகரன்பட்டினத்தில் அமைவது அவசியமே. அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளில் ராக்கெட் ஏவுதளங்களை இஸ்ரோ அமைத்துள்ளது.

ராக்கெட் ஏவுதளம்

  • இந்த முன்றாவது ராக்கெட் ஏவுதளம் பன்னிரெண்டாவது ஐந்தாவது திட்டத்தில் சோ்க்கப்பட்டும்கூட, நாடாளுமன்றத்தில் அணுசக்தி அமைச்சா் ஜிதேந்திரசிங் தாமதமாகத்தான் குலசேகரன்பட்டினம் திட்டத்தை அறிவித்துள்ளாா்.
  • கடந்த 2012-இல் பேராசிரியா் நாராயணா தலைமையில் அண்ணாமலை, அபேகுமாா், சுதா்குமாா், சோமநாத், சேஷ்டகிரிராவ், கணங்கோ ஆகிய ஏழு போ் குழு தமிழகம், ஆந்திரம், கேரளப் பகுதிகளில் ஆய்வு செய்து மூன்றாவது ஏவுதளத்துக்கு குலசேகரன்பட்டினம்தான் ஏற்றது என்ற ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பித்தது. அப்போது இஸ்ரோவின் தலைவா் ராதாகிருஷ்ணன்.
  • கடற்கரைப் பகுதிதான் இதற்குச் சரியாக இருக்கும். ஸ்ரீஹரிகோட்டாவைவிட பூமத்தியரேகைக்கு சற்று அருகில் குலசேகரன்பட்டினம் உள்ளது. எனவே, ராக்கெட் ஏவுவதற்கான செலவு மிச்சமாகும். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து தெற்கு முகமாகத்தான் செலுத்த வேண்டியிருக்கும். அதில், சிறிது சிரமங்கள் உள்ளன. ஆனால், குலசேகரன்பட்டினம் தெற்கே இருப்பதால் ராக்கெட் செலுத்த எளிதாக இருக்கும்.
  • குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் நேரடியாகவே அருகே உள்ள இலங்கை எல்லையில் பறக்காமல் நேராக விண்ணுக்குச் செல்லும். ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தும்போது தென்கிழக்கு திசையை நோக்கிச் சென்று இலங்கை வரை இதனுடைய தாக்கம் ஏற்படும். வெளிநாடுகளின் எல்லைகளில் ராக்கெட் பயண தாக்கம் இருக்கக் கூடாது என்று சா்வதேசச் சட்டங்கள் இருக்கின்றன.
  • இந்த வகையில் ஸ்ரீஹரிகோட்டாவைவிட குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இந்தப் பிரச்னைகளெல்லாம் எழாது. குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் தெற்குத் திசையை நோக்கி வானத்தில் எழும். ஆனால், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 13 டிகிரி கோணத்தில் தென்கிழக்கு நோக்கி சில சிரமங்களுக்கிடையே மாற்றி சில கட்டுப்பாடுகளோடு வான் நோக்கிச் செலுத்த வேண்டும். ஆனால், குலசேகரன்பட்டினத்தில் 8 டிகிரி கோணத்தில் செலுத்தி, சிக்கல் இல்லாமல் வானத்தில் பயணிக்கும்.

குலசேகரன்பட்டினத்தில்...

  • அது மட்டுமல்ல, ராக்கெட்டுக்குத் தேவைப்படும் திரவ எரிபொருள் மிக அருகில் மகேந்திரகிரியில் கிடைக்கிறது. இங்கிருந்து 1,479 கி.மீ. தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்துக்குக் கொண்டு சென்று ஸ்ரீஹரிகோட்டாவுக்கு மாற்றப்படுகிறது. இப்போது குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு 97 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரகிரியிலிருந்து எளிதாக எரிபொருள் கிடைப்பதால், 1,000-த்துக்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவுக்கு அதாவது, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எரிபொருள் பயணிப்பது நேரம் - செலவை மீதப்படுத்தும்.
  • தற்போதைய இஸ்ரோ தலைவா் சிவன் முயற்சியில் இந்தத் தளம் அமைய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான 2,300 ஏக்கா் நிலங்களை பள்ளக்குறிச்சி, மாதவகுறிச்சி, படுக்கப்பத்து என திருச்செந்தூா் வட்டார கிராமங்களில் ஆா்ஜிதப்படுத்த தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
  • இதற்கான பணி அலுவலகத்தை திருச்செந்தூரில் அமைத்து எட்டு பிரிவுகளாக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா். இங்கு தென்னை, பனை மரங்கள் கணக்கெடுத்து நில எடுப்புச் சட்டங்களுக்குட்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
  • ஏற்கெனவே விடுதலைப் போராட்ட களத்தில் முக்கியத் தளமாக குலசேகரன்பட்டினம் அமைந்தது. பாண்டியா் ஆட்சிக் காலத்தில் நாணயம் அச்சடிக்கவும், இந்த வட்டாரத்தில் அப்போதைய ரயில்கள் திருச்செந்தூா், குலசேரகன்பட்டினம், திசையன்விளை என்ற மாா்க்கத்தில் ஓடி பின்னா் நிறுத்தப்பட்டன. குலசேகரன்பட்டினம் துறைமுகம், உவரி ஆகியவை முக்கியம் வாய்ந்த பகுதிகளாக அமைந்தன. இப்படி வரலாற்றுத் தரவுகளும் குலசேகரன்பட்டினத்துக்கு உண்டு. இங்கிருந்து சாலமன் மன்னனுக்கு மயில் இறக்கைகள் அனுப்பப்பட்டதாக விவிலியம் கூறுகிறது.

பயன்கள்

  • குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் வேலைவாய்ப்பு, வணிக ரீதியான முன்னேற்றம், சா்வதேச விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் எனப் பல பலன்களும் ஏற்படும்.
  • ஸ்ரீஹரிகோட்டாவைவிட பெரிய ராக்கெட்டுகளை ஏவ இயற்கையாக பொருத்தமான இடமாகும் குலசேகரன்பட்டினம். ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 1,350 கிலோ எடை கொண்ட ராக்கெட்டைச் செலுத்த முடியும். ஆனால், குலசேகரன்பட்டினத்திலிருந்து 1,800 கிலோ எடை அனுப்பலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
  • குலசேகரன்பட்டினம் ஏவுதளப் பணிகளை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வட்டாரத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட சேதுசமுத்திரத் திட்டமும் நடைமுறைக்கு வந்து திரும்பவும் முடக்கப்பட்டது. துத்துக்குடி துறைமுக விரிவாக்கம், கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கிழக்கு முகமாக இந்த வட்டாரத்தை நோக்கித் திருப்புதல், தாமிரவருணி - கருமேனி ஆறு - நம்பியாறு இணைப்பு, மதுரையிலிருந்து அருப்புகோட்டை - விளாத்திகுளம் - தூத்துக்குடி - திருச்செந்தூா் ரயில் பாதை, கிழக்கு கடற்கரை சாலை முடிந்தும் முடியாமலிருக்கின்ற நிலை முதலானவற்றுக்கெல்லாம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் விடிவுகாலம் பிறக்கலாம்.
  • தாமிரவருணி மணற்கொள்ளை, செயல்படாத நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா, திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம்-மணப்பாடு - உவரி எனத் தெற்கு முகமாக குமரிமுனை வரை ரயில்பாதைத் திட்டங்களும் நடைமுறைக்கு வரலாம். இப்படிப் பலவகையிலும் திருநெல்வேலி - தூத்துக்குடி வட்டாரங்கள், ஏன் குமரி மாவட்டம் வரை குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தால் பலன்களைப் பெறும்.

நன்றி: தினமணி (26-02-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்