TNPSC Thervupettagam

அறிவியலை நம் கையில் எடுப்போம்!

August 24 , 2024 147 days 156 0

அறிவியலை நம் கையில் எடுப்போம்!

  • தமிழ்நாடு, புதுவை கடற்கரையின் மணல்வெளி கட்டமைவில் காலவாரியாக நேர்ந்துவரும் மாற்றங்களை கடற்கரை மணல்வெளி கட்டமைப்புக் கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் ஒரு மக்கள் அறிவியலாளர் குழு ஆவணப்படுத்தி வருகிறது. மணல்வெளியின் சாய்வு, அகலம், மணலின் அளவு, வகை போன்ற கூறுகள் பதிவுசெய்யப்பட்டுவருகின்றன. காலநிலை அறிவியலுக்காக இதுபோன்ற தளங்களை உருவாக்க ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

ஆதார அடிப்படையில் கொள்கை:

  • ஆக, பருவநிலை மாற்றம் குறித்த ஆதாரங்கள் மக்கள் களங்களிலிருந்து திரட்டப்பட வேண்டும்; காலநிலைச் சிக்கலை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை அவற்றின் அடிப்படை யிலேயே அரசு வகுக்க வேண்டும். இப்படிப்பட்ட, ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம்தான் (evidence based policy making) மக்களிடையே நடைமுறை மாற்றத்தை ஏற்படுத்தும்.
  • அரசுத் தரவுத் தளத்திலிருந்து மக்கள் தரவுகளைக் கேட்டுப் பெறுவதற்கும், தீர்வு சார்ந்த நடவடிக்கைகளுக்கான கோரிக்கையை விடுப்பதற்குமான உரிமையும் திட்டத்தில் உட்படுத்தப்பட வேண்டும். ஓர் உதாரணம் - கடலோர நிலத்தடிநீர் எப்போது, எப்படி உவர்ப்பாகத் தொடங்கியது, அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை உள்ளூர் மக்கள்தான் சொல்ல முடியும்.
  • இத்தகவலை உயர்நிலை ஆய்வுகளோடு இணைத்தால், நிலத்தடிநீர் குறித்த முழுமையான சித்திரம் கிடைக்கும். காலநிலை மாற்றம் குறித்து மக்களைப் பேச வைப்பதுதான் இன்றைக்கு நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்.

பெருந்தொற்று படிப்பினை:

  • அன்றாட வாழ்க்கையை அசைவற்றுப் போகவைத்த கோவிட் பெருந்தொற்று, நாம் வசதியாக மறந்துபோன இயற்கையின் பாடத்தை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நினைவுறுத்திச் சென்றிருக்கிறது. மனிதர்கள் வீடு அடங்கிக் கிடந்த அக்காலத்தில் நகரங்களில் தொழிற்சாலைகள், கட்டு மானத் தொழில் நின்றுபோயிருந்தன; பரபரப்பான நகர்ப்புறச் சாலைகள் வெறிச்சோடியிருந்தன.
  • சென்னை நகரை எப்போதும் நிறைத்திருக்கும் பேரிரைச்சல் அற்றுப் போயிருந்தது; நட்சத்திரங்களைப் பார்க்கும் அளவுக்கு சென்னையின் வானம் தெளிந்திருந்தது. ஊர்ப்புறத்தில் நிற்பதுபோல் மொட்டைமாடியில் நின்று தூய்மையான காற்றை ஆசை தீர அனுபவிக்க முடிந்தது.
  • நன்னீர்நிலைகளின் கரைகளில் ஏராளமான பறவைகள் வரத் தொடங்கின. சாலைகளில் மான்கள்போன்ற வனவிலங்குகள் சுதந்திரமாகநடமாடின. மனிதக் குறுக்கீடுகள் இல்லாத புவி எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இயற்கை இன்னும் ஒருமுறை நிறுவிக் காட்டியது. இயற்கை சுதந்திரமாக மூச்சுவிட்ட அந்தக் காலத்தை நாம் ‘பேரிடர்க் காலம்’ என்று அழைத்தது எவ்வளவு பெரிய நகைமுரண்! உண்மையில், இயற்கைக்குப் பேரிடரை இழைப்பவர்கள் நாமல்லவா?

வழிநடத்தும் கதைகள்:

  • மனிதர்கள் கதைகளால் வளர்க்கப் பட்டவர்கள், வழிநடத்தப்படுபவர்கள். கதைகள் நம் சிந்தனை முறையை மாற்றும் அபார ஆற்றல் கொண்டவை. மூளைக்குள் நுழையும் ஒரு கதை, ஒருபோதும் அமைதியாக உட்கார்வதில்லை. அதன் அடுத்த படிமலர்ச்சியை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டேயிருக்கும்; கதைகள் பிற கலை வடிவங்களுக்கு மாறிக்கொள்ளவும் செய்யும்.
  • தமிழ்ச் சூழலில், அன்றைக்கெல்லாம் வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் குறைவாகவே இருந்தனர். அவர்களில் பெரும்பான்மையினர் புனைவுசாரா எழுத்துகளின் பக்கம் தலைவைத்தும் படுத்ததில்லை. ஆனால், கருத்துகள் வேறு வழிகளில் மக்களைச் சென்று சேர்ந்தன. நாட்டார் கதைகளும் புனைவுகளும் கூத்துகளிலும் நாடகங்களிலும் எடுத்தாளப்பட்டன; அதைப் போலவே புனைகதைகள் அல்லது அவற்றின் தழுவல்கள், திரைப்படங்களாகின. தமிழ்நாட்டில் சீர்திருத்தக் கருத்துகளின் வீச்சு திரைப் படங்களின் மூலமாகச் சாத்தியப்பட்டது.

புனைவுகள் தேவை:

  • இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. வாசிப்பு ஆர்வம்பெருகியிருக்கிறது, புனைவுசாரா எழுத்துகளின் மீதும் ஆர்வம் கூடியிருக்கிறது. ஏராளமான இளம் வாசகர்கள் புனைவுசாரா எழுத்து களிலும் பசுமை இலக்கியத்திலும் ஆர்வம் காட்டுகின்றனர். வேகமாக வளர்ந்துவரும் இந்த வாசிப்புப் பசிக்குத் தரமான தீனி கிடைக்க வேண்டும்.
  • அறிவுஜீவிகளின் விவாதப் பொருளாகவே நீடித்துவரும் காலநிலை அறிவியலை வீதிக்குக் கொண்டுவந்து சேர்த்தால்தான் மக்களிடையே மாற்றம் நிகழும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கான வழிமுறைகளில் ஒன்று, காலநிலைச் சிக்கலை இலக்கிய, நிகழ்த்துக்கலை வடிவங்களில் விவாதப் பொருளாக்குவது.
  • காலநிலை இலக்கியத்தைப் பொறுத்தவரை, கருத்து-கதை-கலை வடிவ நேர்க்கோட்டுப் பாதையில் தமிழ் எழுத்து இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. புனைவுசாராப் பசுமை எழுத்துகள் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளன என்பது நல்ல செய்தி; இதன் தொடர்ச்சியாக பசுமைப் புனைவுகள் நிறைய வரவேண்டும். இளைய புனைவுப் படைப்பாளிகள் களமிறங்க வேண்டும்.

பசுமை ஊடகர்கள்:

  • புனைவோ, திரைப்படமோ, கலைவடிவங்களோ- எதுவானாலும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடங்கங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. சமூகச் சிக்கல்களை ஊடகர்கள் பார்க்கும் கோணம்தான் மக்களின் பார்வைக் கோணமாக மாறுகிறது. அப்படியென்றால், ஊடகர்களின் வேலை உன்னதமான ஒன்று. அது நிகழ்வைச் செய்தியாக்குவது மட்டுமல்ல; மக்களைத் தொடுகிற பிரச்சினைகளை அவர்களைத் தொடும் வடிவத்தில், முன்கணிப்போடு வழங்குவது. அது மாபெரும் சமூகப் பொறுப்பு.
  • ஒரு பொறுப்பான, சமர்த்தான ஊடகர் முன்கணிப்புடன் பதிவிட வேண்டும்; சமூகத்தின் கவனத்தைச் சரியான திசையை நோக்கித் திருப்ப வேண்டும்; அத்துடன், செயல்ரீதியான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். காலநிலைப் பிறழ்வு என்கிற நெருக்கடி நிலையில் அவ்வாறான பசுமைத் தூதுவர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள்.
  • கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பசுமை ஊடகர்களும் பசுமை இளைஞர் குழுக்களின் செயல்பாடுகளும் பெருகிவரும் போக்கு, மந்தாரமான எதிர் காலத்தின்மீது வெளிச்சக் கீற்றாய் விழுகிறது. அவர்களின் முனைப்புகள் காலநிலைப் பிறழ்வின் மீது மேலும் குவிமையமாக வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்