TNPSC Thervupettagam

அறிவியல், அன்றும்.. இன்றும்

February 28 , 2023 531 days 298 0
  • ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழா கொண்டாடப்படுவதற்கு, தோன்றுவதற்கு மூலக் காரணியாக அமைந்தது சர்.சி.வி. இராமனின் அறிவியல் கண்டுபிடிப்பே காரணமாகும். சர்.சி.வி இராமன் கண்டறிந்த இராமன் விளைவு, ஃபோட்டானின் உறுதியற்ற சிதறல் என்ற விளைவே முதன்மையானதாகும். இதற்காக 1930 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டார் சர்.சி.வி. இராமன்
  • தேசிய அறிவியல் தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கருத்தினை முன்னிருத்தி கொண்டாடப்படுகின்றது. சென்ற ஆண்டு பெண்கள் மேம்பாடு என்ற பொருண்மையில் விழா எடுக்கப் பெற்றது. இந்த ஆண்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் அறிவித்துள்ளபடி இந்த நாள் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பிற்கான விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.
  • ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அறிவியல் வளர்ச்சியில் புதிய புதிய கண்டுபிடிப்பில் எத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளதோ அதனை வைத்தே அளவிடப்படுகின்றது.
  • மனித சமூகம் முதலில் கண்டறிந்தது சிக்கிமுக்கிக் கல்லால் உருவாக்கப்பட்ட நெருப்பைப் பயன்படுத்தியதே. அதன் தொடர்ச்சியாக சக்கரம் மாபெரும் கண்டுபிடிப்பாகக் கருதப்பட்டது. இன்று பல்வேறு நிலைகளில் நவீன தொழில் நுட்பங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ச்சி பெற்றிருந்தாலும் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாக மிகப் பழங்காலங்களில் வாழ்ந்த மக்கள் கண்டறிந்த அறிவியலின் வளர்ச்சியே இன்றைய உச்சத்திற்குக் காரணம் என்றால் மிகையல்ல.
  • அந்த வகையில் பழந்தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்த அறிவியல் காரணிகளை பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து சிறிது பார்ப்போம்.
  • இன்று நாட்டில் வேளாண் நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகையோ பெருகிக் கொண்டே செல்கிறது. மிகுந்து வரும் மக்களின் உணவுத் தேவையை, குறைந்து கொண்டே வரும் வேளாண் நிலங்களை வைத்து நிறைவு செய்ய வேண்டியுள்ளது. இந்த சிக்கலுக்கான தீர்வை ஐயன் வள்ளுவன் இயற்றிய குறளில் அமைந்துள்ள உழவு என்னும் அதிகாரம் உணர்த்துகிறது.
  • உழவர் நிலத்தை உழுகின்றபோது ஒரு பலம் எடையுள்ள புழுதியை கால் பலம் அளவாகக் குறைந்த எடையில் மண்ணைக் காயவிட வேண்டும். இவ்வாறு பக்குவம் பெற்ற நிலத்தில் பயிர் விளையச் செய்தால் ஒரு பிடி அளவு கூட எரு தேவைப்படாது. அம்மண்ணே எருவாக இருந்து பயிர் விளைச்சலையும் கூடுதலாக்கிக் கொடுக்கும். இதனை,

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்

வேண்டாது சாலப் படும்

  • என்று குறள் கூறுகிறது.
  • விளைநிலத்தை உழுது காயவைத்து மண்ணின் எடையைக் குறைப்பதால் அதன் திண்மை குறைகிறது. எளிதாகக் காற்றும், எருவும் மண்ணில் புகுந்து வேர்களைச் சென்றடையும். பயிருக்கான நீர் உடனே வேருக்குச் செல்லும். இதனால் நீர் ஆவியாவது தடுக்கப்படுகின்றது.
  • மழை வர வாய்ப்பிருக்கிறதா? புயல் வருமா? மிதமான மழையா? கடும் மழையா? போன்ற வினாக்களுக்கான விடையை வளிமண்டல அறிவியலாளர்கள் காற்றின் திசையையும், அதன் தன்மை, வெம்மை நிலை, கடலில் மையங்கொண்டு நகரும் நிகழ்வு ஆகியவற்றை செயற்கைக்கோள்களின் உதவியுடன் ஆராய்ந்து மக்களுக்கு அறிவிக்கின்றனர். மழை வரும் என்கின்றனர். ஆனால் சில சமயங்களில் வராமல் பொய்க்கிறது.
  • ஆனால் நம் பழந்தமிழர் புத்தம் புது அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லா பண்டைய காலங்களில் இயற்கையிலும், உயிரிகளின் வாழ்வியலிலும் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிந்து மழை, ஆற்று வெள்ளம் வருவதை முன்கூட்டியே கண்டறிந்தனர்.
  • சங்க நூல்களில் வெள்ளிக்கோள் திசை திரிந்தால் அதனை வைத்து மழைப்பொழிவு இருக்கும் அல்லது இருக்காது என்பதைக் கண்டு உரைத்தனர். பழந்தமிழர்கள். அதே போன்று குறுந்தொகையின் 324 ஆவது பாடல் சிறப்பான செய்தியைச் சொல்கிறது. பொதுவாக சங்கப்புலவர்களின் பெயர்கள் கூட அறியக்கூட இயலாத நிலையில் அப்பாடலில் வரும் சொல்லை வைத்துப் பெயர் சூட்டினர் அறிஞர் பெருமக்கள். அதுபோல இப்பாடலை எழுதியவர் பெயர் கவை மகனார் என்பதாகும்.
  • ஒரு கருவில் இருந்து உருவாகும் இரட்டைக் குழந்தைகளின் தன்மையினை இன்றைய மருத்துவ உலகு நமக்கு பறைசாற்றுகின்றது. ஒருவருக்கு உண்டாகும் உடல் நிலை மற்றோரையும் பாதிக்கும் என்பது இன்றைய மருத்துவ அறிவியல் கூறும் செய்தியாகும். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு எழுந்த குறுந்தொகை இக்கருத்தை வலியுறுத்துகிறது.
  • உடல் ஒட்டிய இரட்டையர் என்பவரைக் கவை மகன் என்று குறிப்பிடுகிறார்.

“கவை மக நஞ்சு உண்டா அங்கு

அஞ்சுவல் பெரும என் நெஞ்சாத்தானே”

  • கவை என்பது கிளை, ஒன்றிலிருந்து கிளைத்து இரண்டாதல் என்னும் பொருளை உடையது. மரத்தின் கிளை இரண்டாகப் பிரிதலை கவை என்று சொல்லும் மரபு உண்டு. 'கவையாகிக் கொம்பாகி காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்' என்பார் ஒளவையார். கவண், கவட்டை என்ற சொல்லும் ஒன்றிலிருந்து இரண்டாகப் பிரியும் பொருளைக் குறித்து வருபவையே. இங்கே கவை மகன் நஞ்சு உண்டாங்கு என்னும் அடியானது ஒட்டிப் பிறந்த இருவருள் ஒருவர் நஞ்சினை உண்ண இன்னொருவர் உடலும் மரியத் துடிக்கும் என்பதாகும்.
  • சாவா மருந்தெனப் போற்றப்படும் நெல்லிக்கனி குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் அதிகம் காணப்படுகின்றன. இக்கனியின் மகத்துவத்தைப் பண்டைய தமிழ் மக்கள் உணர்ந்திருந்தனர் என்பதை அதியன், ஒளவைக்கு ஈந்தமையால் அறியலாம். அதியமானிடம் நெல்லிக்கனியைப் பெற்ற ஒளவையார், மலைச்சரிவிலே கடும் முயற்சியுடன் பெற்ற இனிய நெல்லிக்கனியானது அதனைப் பெறுவதற்கு அரிது என்றும் கருதாமல் அதனால் விளையும் சிறந்த பேற்றினையும் கூறாமல் உள்ளத்திலேயே அடக்கிக் கொண்டு எம சாலை நீக்க எமக்கு அளித்தாயே நீலமணிமிடற்று இறைவன் போல நீயும் நிலைபெற்று வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.
  • இதனை,
  1. “பெருமலை விடரகத்து அருமிசை கொண்ட
  2. சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
  3. ஆதல் நின்னகத்து அடக்கிச்
  4. சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே”
  • என்ற புறநானூற்று அடிகள் மூலம் அறியலாம்.
  • வேனிற்காலத்தில் வெப்பத்தைப் போக்கித் தாகம் தீர்க்க இக்கனி உதவுகிறது. பாலை நிலத்தில் பொருள் தேடச் செல்லும் ஆடவர்களின் தாகத்தைத் தீர்த்து உயிரைக் காக்கச் செய்யும் இந்நெல்லி மரங்களை வளர்த்து அறம் செய்யும் வழக்கத்தைப் பண்டைய கால மக்கள் கொண்டிருந்ததை,

அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்கால்

என்ற குறுந்தொகை அடியும்,

சிறியிலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய்

  • என்ற அடிகள் அகநானூற்று அடிகள் உணர்த்துகின்றன.
  • ஓர் ஆப்பிளுக்கு இணையெனக் கூறப்படும் இக்கனியினை உட்கொண்டால் இரத்தம் விருத்தி அடைவதுடன் தூய்மைப் பெறவும் செய்கிறது. உலர்ந்த நெல்லிக்கனியைத் தேனில் ஊறவைத்து உட்கொண்டால் பார்வைக் கோளாறு நீங்குவதோடு வாந்தி, குமட்டல் நீங்கும். உயர் இரத்த அழுத்தமும் சீராக இருக்கும். வாதம், பித்தம், சிலேத்துமத்தையும் போக்கும். நீண்ட நாள் ஆரோக்கியமாக, உடல் நலத்தோடு வாழ்வர். இத்தனை மருத்துவ குணம் நிரம்பியதால்தான் இக்கனியினை “சாவா மருந்து” என்று போற்றினர்.
  • அறிவியல் என்றால் புதுப்புதுக் கருவிகளைக் கண்டறிவது மட்டுமல்ல. அறிவியல் என்பது நாம் வாழ்கின்ற வாழ்வு உட்பட அனைத்துக் கூறுகளும் அடங்கியதாகும். உலகளவில் ஏற்பட்ட பெருந்தொற்று நோயால் ஐரோப்பிய நாடுகளில் பல்லாயிரம் பேர் மடிந்ததை நாம் அறிவோம். அதே நேரத்தில் நம் நாட்டில் உயிர் இழப்புக் குறைவு. அதற்குக் காரணம் நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்த அறிவியல் முறையில் அமைந்த உணவு முறை என்றால் மிகையல்ல. பெருமளவு உயிரிழப்பு இல்லை என்றாலும்கூட குறிப்பாக 45 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் திடீர் திடீர் என மரணம் எய்தினர். இவற்றையெல்லாம் தவிர்க்க உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கேற்ப நெல்லிக்கனி உண்போம். இளம்வயது மரணம் தவிர்ப்போம். அறிவியல் தினத்தில் உணவு அறிவியலைக் கைக்கொள்வோம்.

நன்றி: தினமணி (28 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்