TNPSC Thervupettagam

அறிவியல் மாணவர்களுக்கும் உதவட்டும் அரசு

March 31 , 2023 486 days 300 0
  • தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, வரவேற்பையும் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கும் நிலையில், அறிவியல் துறை சார்ந்தும் சில கருத்துகளை முன்வைக்க வேண்டியிருக்கிறது.
  • இந்த ஆண்டு உயர் கல்வித் துறைக்கு ரூ.6,967 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது; இது முந்தைய ஆண்டைவிட ரூ.1,299 கோடி அதிகம். பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைச் சீர்மிகு திறன் மையங்களாக மாற்றுவதற்கான அறிவிப்பு முக்கியமானது.
  • கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம், அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகளை உருவாக்கவும் ஐந்து ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1,000 கோடியில், இந்த ஆண்டு ரூ.200 கோடி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
  • குடிமைப் பணிக்குத் தேர்வாகும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, சில ஆண்டுகளாகக் குறைந்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நுழைவுத்தேர்வு மூலம் 1,000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்திருப்பது ஆக்கபூர்வமானது.
  • கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT), இந்திய அறிவியல் கழகம் (IISc) போன்ற அறிவியல் உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் செல்லும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் (JAM, JEST, GATE) தமிழ்நாட்டு மாணவர்கள் வெற்றிபெறுவது கடினமாகியிருப்பது ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
  • எனவே, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மூலமாகவே மாநிலம் முழுவதும் இதற்குத் தகுதியான குறைந்தபட்சம் 1,000 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வெற்றிபெற அரசு உதவ வேண்டும். அதேபோல், ஒவ்வொரு மாவட்ட நூலகத்திலும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராக ஏதுவாக பயிற்சிப் புத்தகங்களும், பாடநூல்களும் இடம்பெற வேண்டும். அறிவியல் துறை வல்லுநர்களை வைத்து அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்குச் செல்வதன் அவசியத்தை உணர்த்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
  • அரசுப் பள்ளி மாணவர்கள் ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற பல்வேறு அறிவியல் உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில் இளங்கலை அறிவியல் படிப்புக்குத் தேர்வானால், அவர்களின் படிப்புச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று கடந்த நிநிதிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
  • அதன் நீட்சியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் சிறந்து விளங்கும் இளங்கலை அறிவியல் மாணவர்களுக்கு அரசுக் கல்லூரியிலோ அரசுப் பல்கலைக்கழகத்திலோ பயிற்சி கொடுத்தால், அரசுக் கல்லூரி மாணவர்களும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குச் செல்ல முடியும். தமிழ்நாட்டு இளைஞர்களின் மனித வளம் அனைத்துத் துறைகளிலும் சீராக அதிகரித்தால்தான் அது சரியான, அறிவியல்பூர்வமான சமூக வளர்ச்சியாக இருக்கும்!

நன்றி: தி இந்து (31 – 03 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்