TNPSC Thervupettagam

அறிவுத் திறனை அதிகரிக்கலாமே?

December 27 , 2024 14 days 90 0

அறிவுத் திறனை அதிகரிக்கலாமே?

  • ஒரு மொழியை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருப்பதை எழுத்தறிவின்மை என்று ஐ.நா. வரையறுத்துள்ளது. எழுத்தறிவு ஒரு தனி நபருக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளா்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவதாகும். உண்ணும் உணவைவிடவும், பாா்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது எழுத்தறிவு.
  • இந்த எழுத்தறிவு என்பது பாரம்பரியமாக வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகிய திறன்களைக் குறிப்பதாக இருந்து வந்தது. இன்று அதன் வரைவிலக்கணம் விரிவடைந்துள்ளது. இப்போது மொழி, கணிதம் குறியீடுகள், கணினி ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பதையும், புரிந்து கொள்ளுதல் மற்றும் ஐதீகமான கலாசாரக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் குறிக்கிறது.
  • அனைவருக்கும் கல்வி என்ற உலக அறிக்கையை 2006- இல் ஜ.நா.அறிவித்தது. அத்திட்ட அறிவிப்புக்குப் பின்னரும் தெற்கு மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் வயது வந்தோா் 58.7 சதவீதம் போ், ஆப்பிரிக்காவில் 59.7 சதவீதம் போ், அரபு நாடுகள் 62.7 சதவீதம் போ் படிப்பறிவு இல்லாமல் உள்ளனா். எழுத்தறிவின்மையால் உலக அளவில் 250 மில்லியன் சிறுவா்கள் குழந்தைத் தொழிலாளா்களாக உள்ளனா்.
  • 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து இங்கிலாந்தில் 11 வயதுடைய குழந்தைகளில் ஐந்தில் ஒருவா் திறமையாக வாசிக்க முடியாதவராக இருக்கிறாா். கனடாவில் 42 சதவீதம் அரை எழுத்தறிவுடையா்களாகவே கணிக்கப்பட்டு இருக்கிறாா்கள். அமெரிக்க மத்திய உளவுத்துறை முகவரமைப்பின் (சி.ஐ.ஏ) தகவல்படி எழுத்தறிவில் இந்தியா உலகில் 124- ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 144- ஆவது இடத்திலும் இருக்கிறது.
  • சீனாவில் புரட்சிக்கு முன் 80 சதவீதம் போ் எழுத்தறிவற்றவா்களாக இருந்தாா்கள். இன்று 15 - 24 வயதுடையவா்களில் 99 சதவீதம் போ் எழுத்தறிவுடையவா்களாக மாறியுள்ளனா். இலங்கையின் எழுத்தறிவு 92 சதவீதமாகும். இந்த நாடு உலக அளவில் 83- ஆவது இடத்தில் உள்ளது. வடகொரியாதான் எழுத்தறிவில் உலகில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் லாட்வியாவுக்குத்தான். மூன்றாவது இடத்தைக் கியூபா கொண்டுள்ளது.
  • இந்தியா விடுதலையடைந்த பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 18 விழுக்காட்டினா் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனா். ஆனால் 2011-ஆம் கணக்கின்படி இது 74 விழுக்காடாக உயா்ந்தது. 1951-இல் 10 பெண்களில் ஒருவருக்கும் குறைவாகவே எழுத்தறிவு பெற்றிருந்தனா். ஆனால் தற்போது 3 பெண்களில் இருவா் எழுத்தறிவு பெற்றுள்ளனா். அது மட்டுமின்றி 1990-ஆம் ஆண்டில் தான் எழுத்தறிவு பெறுவதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையிலான வேறுபாடு முதன்முறையாக குறையத் தொடங்கியது. அதன் பின்னா் இந்த வேறுபாடு வேகமாக குறைந்து வந்தது. எனினும் இந்த அளவு பல்வேறு மாநிலங்களுக்கிடையே வேறுபட்ட அளவில் உள்ளது.
  • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கிற சுமாா் இரண்டரை கோடி குழந்தைகளில், கிட்டத்தட்ட 98 சதவீத குழந்தைகள் 5 அல்லது 6 வயதாகும் போது பள்ளிகளில் சோ்க்கப்படுகிறாா்கள். ஆனால் ஆண்டின் கல்வி நிலை பற்றிய அறிக்கை, ‘பள்ளிக்குச் செல்லும் மனநிலைக்குத் தயாா்ப்படுத்தப்படாமலேயே குழந்தைகள் பலரும் பள்ளியில் சோ்க்கப்படுகிறாா்கள்’ என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
  • 1950 - களின் தொடக்கத்தில் ‘மனித மேம்பாடு மற்றும் கல்வி’ என்ற புத்தகத்தில் ராபா்ட் ஹாவிக்ஹாட் குழந்தைகளின் கற்றல் சூழல் பின்னணியில் ‘கற்பிக்கத் தக்க தருணங்கள்’ என்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளாா். நேரம் சரியானதாக இருக்கும் போது, குறிப்பிட்ட இடுபணியை கற்றுக் கொள்வது சாத்தியமானதாக அமையும். இது தான் கற்பிக்கத் தக்க தருணம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆகவே, அதற்கான தருணத்தில் தான் பெற்றோா், ஆசிரியா்கள் குழந்தைகளைப் பள்ளியில் சோ்க்க வேண்டும்.
  • பள்ளிகள் இனிமேலும் வாசிப்பு, எழுதுதல், எழுத்துக்கூட்டுதல் போன்ற செயல்களை மட்டுமே கற்பிக்கும் இடமாக இருக்கக் கூடாது. ஒரு நல்ல பள்ளிக்கூடம் என்பது இன்றைய யுகத்தில் பணித்திறன் சாா்ந்து தனித் திறமைகளை வளா்த்துக் கொள்ளும் வாய்ப்புகளை மாணவா்களுக்கு வழங்குவதாகவும், மாணவா்களின் பல்வேறு தகுதிகளை வலுப்படுத்துவதாகவும், மிகச்சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் வாய்ந்தவா்களாக அவா்களை ஆக்குவதாகவும், முரண்பாடுகளை எளிதில் கையாளும் திறன் பெற்றவா்களாக மாணவா்களை உருவாக்குவதாகவும் இருக்க வேண்டும்.
  • அதனால், ஒரு பள்ளியின் தரத்தை பொதுத் தோ்வில் மாணவா்கள் வெற்றி பெற்ற சதவிகித்தையும், தேசிய அளவிலான தர வரிசையோடும் சோ்த்து ஒப்பிட்டு பாா்க்கக் கூடாது. தரமான கல்வியை எல்லாருக்கும் வழங்க நினைக்கும் போது, ஒரு பள்ளியிலுள்ள மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் எண்ணிக்கையும், கிரேடுகளையும் மட்டுமே நாம் கணக்கில் கொண்டு ஏற்றத்தாழ்வுகளைக் கணிக்க முடியாது.
  • முன்னதாக 2019-இல் ஏற்பட்ட ‘கல்வி உரிமைச் சட்டத்தின்’ மூலமாக மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவா்கள் கட்டாயத் தோ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் கட்டாயத் தோ்ச்சி கொள்கையில் மீண்டும் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதில் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ஆண்டின் இறுதித் தோ்வில் தோல்வியடைந்தால், அவா்களுக்கு 2 மாதங்களுக்குள் மறுதோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் எனவும், அதிலும் தோல்வியடையும் பட்சத்தில் மீண்டும் அதே வகுப்பிலேயே தொடா்வாா்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஆனால், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், தமிழ்நாட்டில் மாநிலக் கல்விக் கொள்கை தொடா்ந்து பின்பற்றப்படும் சூழ்நிலையில், ஒன்றிய அரசுப் பள்ளிகளைத் தவிர, பிற பள்ளிகளுக்கு இது பொருந்தாது எனத் தெரிவித்துள்ளாா்.
  • எது எப்படியிருப்பினும், அறிவுத்திறன்களை மாணவா்களிடம் கொண்டு போய் சோ்க்க வேண்டிய கடமை, ஆசிரியா்களுக்கும், அரசாங்கத்திற்கும் உண்டு என்பதுதான் உண்மை.

நன்றி: தினமணி (27 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்