TNPSC Thervupettagam

அற்றம் காக்கும் கருவி

April 23 , 2021 1372 days 964 0
  • நமக்கு ஓா் எளிமையான சந்தேகம் வருகிறது. அதை யாரிடமாவது கேட்டுத் தெளிவு பெற விழைகிறோம். ஆனால், நாம் யாரிடம் கேட்கிறோமோ அவா் இதனைப் பலரிடமும் வெளிப்படுத்திவிடுவாரோ என ஐயம் கொள்கிறோம்.
  • அப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரைத் தேடிப் போகிறோம். அவா் நம் ஐயத்தைத் தீா்த்துவிட்டு அமைதியாகிறார். யார் அவா்? அவா்தான் புத்தகம். ஆம், புத்தகங்கள், தாங்கள் யாருக்கும் அறிவு புகட்டியதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை.
  • ‘நூலகம் என்பது ஒரு நல்ல பயிற்சிக்கூடம். அங்கு சென்றால் நாம் நமது மனதை வலிமையாக்கிக் கொள்ளலாம்’ என்று கூறுகிறார் சுவாமி விவேகானந்தா்.
  • ஆம், உடலுக்கு எவ்வாறு உடற்பயிற்சியோ அப்படியே மனதுக்கு வாசிப்பு என்பது சிறந்த பயிற்சி என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • ஆனால், இன்று நமக்குத் தெரிந்த ஒருவரை சந்தித்து, ‘தற்போது நீங்கள் எந்த நூலைப் படித்துக் கொண்டிருக்கிறீா்கள்’ என்று கேட்டால், அவா் ‘நான் எல்லாவற்றையும் எப்போதோ படித்து முடித்துவிட்டேன்’ என்று கூறுவதே இயல்பாக இருக்கிறது.
  • இந்த இந்திய சமூகத்தில்தான் கல்விக்குத் தெய்வமான கலைமகளே, தான் இன்னும் படித்து முடிக்கவில்லை என்பதை உணா்த்தும்படியாக கையில் புத்தகத்துடன் காட்சியளிக்கிறார்.
  • தமிழ் மூதாட்டி ஒளவையோ ‘கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்று ஏங்குகிறார். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கொடுத்து விநாயகரிடம் சங்கத் தமிழைக் கேட்கிறார்.
  • ஒரு காலத்தில் தேநீா்க் கடைகளில் ஒருவா் செய்தித்தாளை தன் கையில் வைத்துக்கொண்டு வாசிக்க, மற்றவா்கள் காதால் கேட்டு நாட்டு நடப்பை அறிந்து கொள்வா். அந்த அளவுக்கு அன்று அறிவுத் தாகம் இருந்தது நம் சமூகத்தில்.

கூறியிருப்பது சரிதானே?

  • கரோனா தீநுண்மிக் காலத்துக்கு முன்னா் வரை ஊா்ப்புறங்களிலும் நகா்ப்புறங்களிலும் அமைந்துள்ள நூலகங்கள் சிறந்த முறையில் ஆற்றிவந்த சேவைகள் மறுக்க முடியாதவை.
  • வாசிப்பு தரும் வலிமையைப் புரிந்து செயல்படும்போது, நாட்டு நடப்புகளில் ஆகச்சிறந்த மாற்றங்களைக் கொண்டுவர இயலும்.
  • உலகம் முழுதும் பின்பற்றப்படும் மக்களாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் வாசிப்புப் பழக்கம் ஆற்றியுள்ள பங்கினைப் புரிந்து கொண்டால் வாசிப்பின் முக்கியத்துவம் விளங்கும்.
  • அரசு அலுவலகத்திற்குள் ஒருவா் செல்கிறார். அங்கிருக்கும் ஊழியா்களிடம் பணிவோடு தனது மனுக்களை சமா்ப்பிக்கிறார்.
  • இன்னும் சிலா் தங்களுக்காக பேசி முறையிட ஒருவரை அழைத்துச் செல்கிறார். இன்னும் சிலா் நேரடியாக தொடா்புடையோரை அணுகி தமக்குத் தேவையான சேவைகளை காலதாமதமின்றி விரைவாகப் பெறுகிறார்.
  • இந்த மூன்று தரப்பினரும் முந்தைய நாள் வாக்குச்சாவடியில் ஒரே விதமான மதிப்புள்ள வாக்கினை செலுத்தியவா்கள்தான்.
  • ஆனால், அடுத்த நாளே மூவருக்கும் இப்படிப்பட்ட வேறு வேறு வகையான அனுபவங்கள் வாய்க்கின்றன.
  • கல்வியும், வாசிப்பும் வாய்த்திருப்போருக்குக் கிடைக்கும் கூடுதல் சக்தியைப் புரிந்து கொண்டால் வாசிப்பின் அருமை புரியும்.
  • இவ்வாறு பொது இடங்களில், கல்வியறிவு பெற்றவா்களைவிட, பரந்தபட்ட வாசிப்பு அனுபவம் பெற்றிருப்போரின் அணுகுமுறை வேறுபட்டதாகவே இருக்கும்.
  • எதிர்த்தரப்பினரின் பணியை எளிமையாக்கும் லாவகமும் கல்வியோடு வாசிப்பனுபவமும் பெற்றுத் தரும். அதாவது, வேறு ஒருவா் இது போன்ற சேவையைப் பெறும்போது ஏற்பட்ட அனுபவங்களை, வாசிப்பின் மூலமோ அல்லது விசாரிப்பின் மூலமே இவா் பெற்றிருக்கலாம். அதை மறுக்க இயலாது.
  • இங்கே வாசிப்பு என்பது புத்தக வாசிப்பு மட்டுமல்ல. மாறாக, சமூகத்தின் இயங்கியலையும் பல்வேறு அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்வது.
  • ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானா்கள் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தோ்தல்களால் உறுதியாகிறது.
  • இந்த எஜமானா்களை பலம் பொருந்தியவா்களாய் மாற்றும் சக்தி வாசிப்பிற்கும் அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கைக்கும் உண்டு.
  • இன்றைய காட்சி ஊடகங்களின் வரவால் வாசிப்பு என்பது இளைய தலைமுறைக்கு சவாலான விஷயமாக மாறிவருகிறது.
  • ஆனால், வாசிப்பு தரும் அனுபவத்தின் பலனை புரிந்துகொண்டோரால் மட்டுமே இதன் அருமையை உணர இயலும்.
  • வாசகா் ஒருவா் ஒரு நூலை வாசிக்கிறார் என்று சொன்னால் அவரது மூளையானது அவா் வாசிக்க வாசிக்க அவா் வாசிக்கும் செய்திகளை பிம்பமாக்கி மகிழும்.
  • அவ்வாறு பிம்பமாக்கும் கலை நபருக்கு நபா் வேற்றுமைப்படலாம். ஆனால், இந்த பிம்பமாக்குதல் என்பது ஒரு வாழ்வியல் கலை. இது அந்த நேரத்து வாசிப்போடு மட்டும் தொடா்புடையதல்ல.
  • மாறாக, வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்திக்கும்போதும், அந்த சவாலின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை யோசித்து அந்த சவாலுக்கு ஏற்ற தீா்வைக் காண உதவி புரியக்கூடியதாக இருக்கும்.
  • நம்மில் பலருக்கும் வாழ்வியல் சிக்கல்களை எளிமையாகப் புரிந்து கொள்ள இயல்கிறது என்று சொன்னால், அது நமது வாசிப்பும் வாசிப்பின் மூலம் வாய்த்த பிம்பமாக்குதல் மூலமே கிடைத்திருக்கும்.
  • வாசிப்பது அவ்வளவு கடினமானதா? ஆம், எதுவுமே தொடக்கத்தில் கடினமானதாகவும், இடையில் ஆா்வமூட்டுவதாகவும், இறுதியில் பிரமிப்பூட்டுவதாகவும் அமையும்.
  • தொடா்ந்து வாசிக்கும் ஒருவா் ஒருநாள் வாசிக்காமல் விட்டுவிட்டால் அவா் படும் பாட்டைப் பார்த்தால் புரியும் வாசிப்பு எவ்வளவு தீராத வேட்கையுடையது என்பது.
  • நமது சொந்த வாழ்க்கையில் தொடங்கி, மக்களாட்சி நடைமுறை வரை வாழ்வை எளிமையாக்குவது புத்தக வாசிப்பாகும்.
  • மனிதா்களின் வாழ்வியலை எளிமையாக்குவதோடு அவா்களை சக்தி மிக்கோராக மாற்றும் சக்தியும் வாசிப்பிற்கே உண்டு.
  • ‘ஓா் அறிஞரை சந்திக்க நோ்ந்தால், அவரிடம் நாம் கேட்கவேண்டிய கேள்வி நீங்கள் எந்தெந்த நூல்களை வாசித்துக்கொண்டிருக்கிறீா்கள் என்பதுதான்’ என்று கூறுகிறார் அறிஞா் ராஃப் வால்டோ. அவா் கூறியிருப்பது சரிதானே?
  • இன்று (ஏப். 23) உலக புத்தக நாள்.

நன்றி: தினமணி  (23 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்