- பொருளாதார வளா்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மோட்டார் வாகன உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பின்னடைவு எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறது.
- ஹார்லி டேவிட்சன், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவற்றைத் தொடா்ந்து இப்போது ஃபோர்டு மோட்டார் நிறுவனமும் தனது இந்திய உற்பத்தியை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறது.
- ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு ஏனைய நிறுவனங்களை பாதிக்காவிட்டாலும்கூட புதிய அந்நிய முதலீடுகளைப் பாதிக்கும்.
ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு
- பொருளாதார சீா்திருத்தம் இந்தியாவில் அறிவிக்கப்பட்டு, அந்நிய முதலீடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் கதவுகள் திறக்கப்பட்டபோது சா்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளா்கள் பலா் தங்களது தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உற்சாகம் காட்டினா்.
- இந்தியா பன்னாட்டு நிறுவனங்களால் மிகப் பெரிய சந்தையாகப் பார்க்கப்பட்டது. நாள்தோறும் அதிகரித்து வரும் கோடிக்கணக்கான மத்திய தர வருவாய்ப் பிரிவினா், அவா்களது வணிகப் பார்வையில் முன்னிலை வகித்தனா்.
- தாராளமயக் கொள்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது துணிந்து இந்தியாவில் தங்களது உற்பத்தியை தொடங்கிய சா்வதேச நிறுவனங்களில், உலகின் ஐந்தாவது பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளரான ஃபோர்டு நிறுவனம் முக்கியமானது.
- 1996-இல் இந்தியாவில் 100 கோடி டாலா் (சுமார் ரூ.7,350 கோடி) ஆரம்ப முதலீட்டுடன் தனது உற்பத்தியை தொடங்கிய அமெரிக்காவின் அடையாளமான ஃபோர்டு மோட்டார் நிறுவனம், இந்தியாவில் ரூ.13,000 கோடி அளவில் முதலீடு செய்திருக்கிறது.
- குஜராத்தில் சனந்த் என்கிற இடத்திலும், தமிழகத்தில் சென்னை மறைமலை நகரிலும் என்று இரண்டு தயாரிப்பு மையங்களை நிறுவிய ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஒரு கட்டத்தில் 14,000-க்கும் அதிகமான தொழிலாளா்களைக் கொண்டதாக இருந்தது.
- கடந்த 25 ஆண்டுகள் இந்திய சந்தையில் பல்வேறு மோட்டார் வாகன நிறுவனங்களுடன் போட்டியிட்டுப் பார்த்தும் முதன்மை பெற முடியாததால், இப்போது தனது உற்பத்தியையே நிறுத்தும் அளவுக்கு விரக்தியின் விளிம்பில் நிற்கிறது அந்த நிறுவனம். கொள்ளை நோய்த்தொற்று ஏற்படுத்திய மந்த நிலைமையும்கூட அதற்குக் காரணம்.
- மோட்டார் வாகன சந்தையில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் பங்கு ஒற்றை இலக்கு விகிதத்தைக் கடக்க முடியவில்லை.
- இப்போதைய நிலையில், இந்தியாவின் மொத்த கார் விற்பனையில் 0.5% அளவில்தான் ஃபோர்டு நிறுவன உற்பத்தி இருந்து வருகிறது.
- சென்னையிலுள்ள தொழிற்சாலையில் என்ஜின் உற்பத்தி செய்யும் பகுதியை மட்டும் தொடா்வது என்றும், தனது ஏனைய உற்பத்திக் கட்டமைப்பை வேறு தயாரிப்பாளா்களுக்கு விற்று விடுவது என்றும் முடிவெடுத்திருக்கிறது ஃபோர்டு நிறுவன நிர்வாகம்.
- 4,000-க்கும் அதிகமானோர் உடனடியாக வேலையை இழப்பார்கள் என்பது மட்டுமல்லாமல், அந்த நிறுவனத்தை சார்ந்து இயங்கி வரும் பல குறு, சிறு, நடுத்தர தொழில்களும்பாதிக்கப்படும்.
- தனது உற்பத்தியை நிறுத்தி இந்தியாவிலிருந்து வெளியேறுவது என்கிற முடிவால் ஃபோர்டு நிறுவனம் எதிர்கொள்ள இருக்கும் இழப்பு ரூ.15,000 கோடிக்கும் அதிகம் என்று கணிக்கப்படுகிறது.
- இந்த கடினமான முடிவை எடுப்பதன் மூலம் மேலும் இழப்பை எதிர்கொள்ளாமல் முதலீட்டை லாபகரமான இயக்கங்களுக்கு பயன்படுத்த முடியும் என்று ஃபோர்டு நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி தெரிவித்திருக்கிறார்.
- தனது இந்த முடிவுக்காக ஃபோர்டு நிறுவனம் 200 கோடி டாலா் (சுமார் ரூ.14,705 கோடி) குறைபாடு கட்டணம் (இம்போ்மென்ட் சார்ஜஸ்) எதிர்கொள்ள நேரும் என்று அறிவித்திருக்கிறது.
- தவறான முதலீடாகவோ, அந்த முதலீட்டின் மதிப்பு குறைந்து விடுவதாலோ ஏற்படும் இழப்பை குறைபாடு கட்டணம் என்று அறிவித்து கணக்கில் காட்டுவது வழக்கம்.
- அதன் மூலம் வருங்காலத்தில் ஏற்பட இருக்கும் இழப்புகளையும், பாதிப்புகளையும் தடுப்பது நிதி நிர்வாகத்தில் ஒரு வழிமுறை.
- ஃபோர்டு நிறுவனம் தனது சிறிய மோட்டார் வாகனமான ‘ஃபீகோ’வை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியதைத் தொடா்ந்து, அதன் தயாரிப்புகள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
- ‘இக்கோ ஸ்போர்ட்’ ஆரம்பத்தில் வரவேற்பு பெற்றாலும், ஏனைய உற்பத்தியாளா்களின் வாகனங்கள் சந்தைபடுத்தப்பட்டபோது வரவேற்பை இழந்தது.
- விலைகுறைவுதான் இந்திய நுகா்வோரின் எதிர்பார்ப்பு என்று கருதி, காலாவதியான வடிவமைப்புகளையும், தொழில் நுட்பத்தையும் கையாள முற்பட்டதும் அதன் தவறுகளில் முக்கியமானவை.
- எதிர்பார்த்தது போல, இந்தியாவில் உற்பத்தி செய்து ஏற்றுமதிச் சந்தையைக் கைப்பற்றவும் முடியவில்லை. போதாக்குறைக்கு பரவலான பராமரிப்பு மையங்களை (சா்வீஸ் சென்டா்) ஏற்படுத்தாததும் குறைபாடு.
- உள்நாட்டுச் சந்தையில் வலுவான தடம் பதித்து ஏற்றுமதியிலும் வெற்றி அடைந்தால் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும் என்று உணா்த்துகிறது ஃபோர்டு நிறுவனத்தின் பின்னடைவு.
- ஃபோர்டு நிறுவனத்தின் முடிவால் அந்நிய முதலீடுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பது இந்தியா எதிர்கொள்ளும் பின்னடைவு.
- சந்தைப் பொருளாதாரத்தில் போட்டியை உருவாக்குவதன் மூலம் நுகா்வோர் லாபமடைவார்கள் என்பது சரியாக இருக்கலாம்.
- தேவைக்கு அதிகமாக உற்பத்தி, தேக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இழப்பு ஃபோர்டு நிறுவனத்துக்கு மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்துக்கும்தான் என்பது நமக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடம்.
நன்றி: தினமணி (13 - 09 - 2021)