- திரைப்படக் கலை நமது இந்திய மக்களிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அலாதியானது. அந்தத் தாக்கம்தான் சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் பங்கேற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்குச் சென்ற ரசிகர்களின் அவஸ்தைகளுக்குக் காரணம் என்றால் அது மிகையாகாது.
- திரைப்படக் கலைஞர்கள் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொள்ளும் பொழுது அவர்களைப் பார்ப்பதற்காகப் பலரும் திரண்டு விடுகின்றனர். உடனடியாக அவ்விடத்தில் போக்குவரத்து ஸ்தம்பிக்கத் தொடங்கி விடுகின்றது. உயிருக்குப் போராடும் நோயாளிகளுடன் விரையும் ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கும் அங்கே வழி கிடைக்காமல் போகின்றது.
- இலக்கண சுத்தமான கவிதைகளைப் பொழிந்து தள்ளக் கூடிய திறமையாளர்கள் பலர் இருக்க, திரைப்படப் பாடலாசிரியர்களுக்கே மேடைகளில் முன்னுரிமை கிடைக்கிறது. பிரபல சங்கீத வித்வான்களின் கச்சேரிகளுக்குக் கூடாத கூட்டம் திரைப்பட இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சிகளுக்குக் கூடுகின்றன.
- எல்லாம் வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் அத்தகைய நிகழ்ச்சிகளுக்கான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ரசிகர்களின் ஆவலைப் பெருமளவு தூண்டிவிடுகின்றன.
- அதன் விளைவு, என்ன விலை கொடுத்தாகிலும் அந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்தே ஆக வேண்டும் என்ற தீவிரமான மனநிலைக்குத் திரைப்பட ரசிகர்கள் தள்ளப்படுகின்றனர்.
- தற்பொழுது பேசுபொருளாகியிருக்கும் திரைப்பட இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சியையே எடுத்துக் கொள்வோம். ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கியதுடன் தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துக் கொண்டு வந்த ரசிகர்கள் பலரால் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கினுள்ளே நுழையக்கூட முடியவில்லை.
- தாங்கள் வந்த வாகனங்களை நிறுத்தவும் வழியறியாமல் திகைத்ததுடன், நீண்ட தூரம் நடந்து வந்து அரங்க நுழைவாயிலை அடைந்த பலரும் உள்ளே நுழைய இயலாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- நிகழ்ச்சியைக் காண சுமார் நாற்பதாயிரம் ரசிகர்கள் வரை கூடியதாலும், அவர்களில் பலரும் தங்களுடைய வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதாலும் சென்னையின் முக்கியமான சாலையாகிய கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) பெருமளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அந்நெரிசலில் சிக்கிய முதலமைச்சரின் வாகனத்தை மாற்று வழியில் அனுப்ப வேண்டிய நிலைமையும் உருவானதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளரும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இது போன்ற மிகப்பெரிய நிகழ்ச்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விவாதமும் பொதுவெளியில் எழுந்துள்ளது.
- இது போன்ற பிரம்மாண்டமான திரைப்பட இசை நிகழ்ச்சிகள் எதிர்காலத்தில் யாருக்கும் எந்த ஒரு சிரமமும் இன்றி நடத்தப்படும் என்றே வைத்துக்கொண்டாலும், இத்தகைய நிகழ்ச்சிகளால் யாருக்கு என்ன லாபம் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
- முற்காலங்களில் திரைப்படக் கொட்டகைக்குச் சென்று பார்க்கும் பொழுது மட்டுமே திரையிசைப்பாடல்களைக் கேட்டு ரசிக்க முடியும் என்ற நிலை இருந்தது. வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள் பெருகப் பெருக அவற்றில் ஒலி-ஒளிபரப்பப்படும் திரைப்பாடல்களை வீட்டிலிருந்தபடியே நம்மால் ரசிக்க முடிந்தது.
- இதே போன்று இசைத்தட்டுகள், ஒலிநாடாக்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை ரசித்த காலம் மாறி, தற்பொழுது "பென் டிரைவ்' எனப்படும் சிறிய கருவியில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பதிவு செய்து கேட்டு ரசிக்க முடிகின்றது.
- இதற்கெல்லாம் மேற்பட்ட புரட்சியாக, நமது கைப்பேசியிலேயே நாம் விரும்புகின்ற எந்த ஒரு பாடலையும் உடனடியாகத் தரவிறக்கம் செய்வதுடன், அவற்றைத் துல்லியமான ஒலி அலைகளில் ரசிக்க வைக்கின்ற நவீனமான (ஹெட்போன்) கருவிகளின் மூலம் கேட்டு ரசிக்க முடிகின்றது.
- இவ்வளவு வசதிகள் பெருகிவிட்ட நிலையில், நுழைவுச் சீட்டுகளுக்காகத் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த சில ஆயிரம் ரூபாய்களைச் செலவழிப்பதுடன், தங்களுடைய பொன்னான நேரத்தையும் இது போன்ற நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக வீணடிப்பது சரிதானா என்பதை ரசிகர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
- இதே போன்றுதான், புதிதாக உருவாகும் திரைப்படங்களை முழுவதுமாக எடுத்து முடித்து வெளியிடாமல், போஸ்டர், டீஸர், டிரெயிலர் என்று ஒவ்வொன்றாக வெளியிடுவதுடன், அத்திரைப்படங்களில் இடம் பெற்ற கிளர்ச்சியூட்டும் பாடல்களையும் ஒவ்வொன்றாகப் பொதுவெளியில் வெளியிடுவதும் வழக்கமாகியுள்ளது. இதுபோதாதென்று, பாடல் வெளியீட்டுக்காக விழா ஒன்றை ஏற்பாடு செய்து அந்நிகழ்ச்சியில் கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று விளம்பரம் செய்து அதற்கும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
- நமது சமுதாயத்திற்கு எந்த ஒரு நன்மையையும் செய்யாமல், இனக்கவர்ச்சி, பகடி, வன்முறை, புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீமைகளை நம் இளைய தலைமுறையினரின் மனங்களில் பதிய வைக்கின்ற இத்திரைப்படங்களுடைய விளம்பர உத்திகளால், அவற்றைப் பார்த்தே தீர வேண்டும் என்ற உந்துதல் இளைஞர்களிடம் ஏற்படுகின்றது.
- இதனால்தான், ஒரு திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியிலேயே பார்த்து விடுவதை ஒரு சாதனையாகச் சொல்லிக்கொள்ளும் மனநிலை உருவாகியுள்ளது. தனது ஊரில் வெளியிடப்படாத ஒரு திரைப்படத்தை வெளியூருக்குச் சென்றாவது பார்ப்பதால் தனக்கு என்ன பயன் என்று யோசிக்க வேண்டும்.
- இதே போன்று, எளிதாக நம் கைப்பேசியிலும் கணினியிலும் கேட்டு அனுபவிக்கக் கூடிய திரைப்படப் பாடல்களைக் கேட்பதற்காகப் பெருமளவில் பணத்தையும் செலவழித்து அதனால் அவஸ்தைகளையும் அனுபவிக்க வேண்டுமா என்று ஒவ்வொரு ரசிகரும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.
- திரைப்படத்தையும், திரைப்படப் பாடல்களையும் ரசிப்பதில் தவறில்லை; ஆனால், அதனால் நமக்கு எவ்வித சிரமமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
நன்றி: தினமணி (14 – 09 – 2023)