TNPSC Thervupettagam

அழகுசாதனத் தயாரிப்பில் கடல் பாக்டீரியா

July 20 , 2021 1108 days 502 0
  • உலகளாவிய அழகுசாதனங்களில் 90% முகம் மற்றும் தலைமுடித் தோற்றத்தை மெருகூட்டவும் சருமத்தைப் பொலிவூட்டவும்தான் பயன்படுத்தப்படுகின்றன.
  • அழகு சாதனங்களைத் தயாரிக்க இயற்கை மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதும் உண்டு; செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படும் வாய்ப்பும் உண்டு.
  • பொதுவாக, செயற்கை வேதிப்பொருட்களால் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் ஏற்படலாம் என்பதால், அவ்வகை அழகுசாதனங்களுக்கு வணிகச் சந்தையில் வரவேற்பு குறைந்து வருகிறது.
  • இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் அழகுசாதனங்களின் விற்பனையே கூடுதல்.
  • அழகுசாதனங்களின் தயாரிப்புக்கு இயற்கை வழியில் கிடைக்கும் மூலப்பொருட்களில் முக்கியமானது, ‘எக்டாய்ன்’ (Ectoine). வேதிப்பண்பில் இது ஈரம் ஊட்டும் ஒரு பொருள் (Moisturizer).
  • செயல்முறையில் இது நம் சருமத்தில் ஈரத்தன்மையைத் தக்கவைப்பதால், சருமம் வறட்சி அடைவதில்லை. மேலும், இது சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் பார்த்துக்கொள்கிறது.
  • அதனால், வயதான தோற்றத்தைத் தவிர்க்கும் ஆடம்பரமான அழகுசாதனங்களைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.
  • புறஊதாக் கதிர்கள் சருமத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. ஆகவே, ‘ஒளி ஒவ்வாமை’ உள்ளவர்களுக்கு உதவும் சூரியஒளி காப்புக் களிம்புகளின் தயாரிப்புக்கு இதன் தேவை அதிகம்.
  • சாக்கடல் உப்பைவிட ஐந்து மடங்கு அதிக உப்புத்தன்மையுள்ள கடல்களில் வாழும் ‘ஹாலோபைல்’ (Halophile) பாக்டீரியாக்களில் ‘எக்டாய்ன்’ உற்பத்தியாகிறது.
  • இன்றுவரை அயல்நாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்கு இது இறக்குமதி செய்யப்படுகிறது.
  • அதுவும் நம் தேவைக்குக் கிடைப்பதில்லை. அதனால், ஆடம்பர அழகுசாதனங்கள் தவிர்த்து, சாதாரண அழகுசாதனங்கள் பெரும்பாலானவற்றில் செயற்கை வேதிப் பொருளில் தயாரிக்கப்பட்ட மாற்றுப்பொருள்தான் பயன்படுத்தப்படுகிறது.
  • இதைத் தவிர்க்கச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம். காரணம், சரும ஒவ்வாமையில் தொடங்கி புற்றுநோய் வரை இதன் ஆபத்துப் பட்டியல் நீள்கிறது.
  • இந்தப் பின்னணியில், சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று, ‘இந்தியாவிலேயே ‘எக்டாய்’னை இயற்கை வழியில் தயாரிக்க முடியும்’ எனும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. இந்த முறைமையில் தயாரிப்புச் செலவும் குறைவு.

சென்னையில் சாதனை

  • சென்னையைச் சேர்ந்த ‘தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவன’த்தின் (National Institute of Ocean Technology - NIOT) கடல்சார் உயிரித் தொழில்நுட்பத் துறை அறிவியலாளர்கள் அந்தமான் கடல் வண்டலிலிருந்து ‘பாசில்லஸ் க்ளோசி’ (Bacillus clausii) எனும் பாக்டீரியா தனி இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • அழகு சாதனங்களுக்குத் தேவைப்படும் ‘எக்டாய்ன்’ இதில் இருப்பதையும், ‘இ.கோலி’ (E.coli) எனும் பாக்டீரியாவின் மரபணுவை வெட்டி மாற்றியமைப்பதன் மூலம் ‘எக்டாய்’னைப் பல மடங்கு உற்பத்தி செய்ய முடியும் என்பதையும் உறுதிசெய்துள்ளனர். இதன் பலனால், இந்தியா இனி ‘எக்டாய்’னுக்காக அயல்நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை.
  • இந்த அரிய கண்டுபிடிப்பின் விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், ‘இ.கோலி’ பாக்டீரியா குறித்து சிறு அறிமுகம். கெட்டுப்போன உணவிலும் அசுத்தமான தண்ணீரிலும் வளரும் பாக்டீரியா இது; நம் வயிற்றுக்குள் போனால், விஷத்தைக் கக்கி நலத்தைக் கெடுக்கும் வில்லன். அதேசமயம், இது ஆய்வகங்களுக்குப் போனால், அறிவியல் வளர்ச்சிக்கு உதவும் நண்பன்.
  • ‘எக்டாய்ன்’ தயாரிப்புக்கு எப்படி உதவுகிறது இந்த ‘இ.கோலி’? ‘மரபணு மறுஇணைப்பு’ (recombinant DNA technology) எனப்படும் நவீனத் தொழில்நுட்பத்தின் முதல் படியில் ‘பாசில்லஸ் க்ளோசி’ பாக்டீரியாவிலிருந்து ‘எக்டாய்ன்’ மரபணுச் சரடைப் பிரித்தெடுத்துக் கொள்கின்றனர்.
  • அடுத்ததாக, ‘இ.கோலி’ பாக்டீரியாவின் மரபணுவில் பாதியை வெட்டிவிடுகின்றனர். அந்த இடத்தில் ‘எக்டாய்ன்’ மரபணுச் சரடைப் பொருத்திவிடுகின்றனர்.
  • இப்படி மரபணு மாற்றப்பட்ட ‘இ.கோலி’ பாக்டீரியாக்களை ஆய்வகத்தின் வளர் ஊடகங்களில் வளர்க்கின்றனர்.
  • அப்போது அவை கோடிகோடியாய்ப் பெருகும்போது, ‘எக்டாய்ன்’ மூலக்கூறுகளும் சேர்ந்தே வளர்கின்றன. அப்படி வளர்ந்த பாக்டீரியாக்களிலிருந்து ‘எக்டாய்’னைப் பிரித்தெடுத்து அழகுசாதனங்களுக்கு மூலப்பொருளாக வழங்குகின்றனர்.
  • சென்னை அறிவியலாளர்கள் மேற்படி தொழில்நுட்பத்தை வணிகமுறைக்குப் பயன்படுத்த சமீபத்தில் பெங்களூரு நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
  • உலகம் மொத்தத்திலும் அழகுசாதனங்களின் வணிகத்தில் வருடத்துக்கு 12,838 கோடி அமெரிக்க டாலர் புழங்குகிறது. இதில் இந்தியாவின் பங்கு 1,320 கோடி அமெரிக்க டாலர்.
  • ‘எக்டாய்’னின் தேவை அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 15,000 டன்கள். ஒரு கிலோ ‘எக்டாய்’னின் விலை 1,000 அமெரிக்க டாலர் என்றால், இதன் வணிக மதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
  • இனி, இந்திய ‘எக்டாய்’னுக்கும் உலக வணிகத்தில் கணிசமான இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

உணவுத் தயாரிப்புக்கு உதவும் பாக்டீரியா

  • அழகுசாதனங்களில் மட்டுமல்லாமல், மருந்துக் கலவைகள், ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பொருட்கள், தரை மற்றும் கண்ணாடிப் பரப்புகளை மெருகூட்டும் மெழுகுகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவை கொழகொழப்பாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
  • இந்தக் கலவைகளை ‘மேற்பரப்புத் திறச்செயலிகள்’ (Surfactants) எனும் பரப்பழுத்தக் குறைப்பான்களைக் கலந்து தயாரிக்கின்றனர். அதனால்தான் அவை குழைவாக இருப்பதோடு வசீகரமாகவும் தெரிகின்றன.
  • அவை பெரும்பாலும் செயற்கை வேதிப்பொருட்களாக இருப்பதால், அவற்றில் நச்சுத்தன்மையும் இருக்கிறது. ஒரு மாற்று ஏற்பாடாக அவற்றை இயற்கை வழியில் தயாரிக்க இதே சென்னை அறிவியலாளர்கள் புதிய முயற்சியை மேற்கொண்டனர்.
  • அந்தமான் கடல் வண்டலில் கிடைக்கும் ‘பிரேவிபாக்டீரியம்’ (Brevibacterium) எனும் மற்றொரு பாக்டீரியாவிலிருந்து புதிய ‘மேற்பரப்புத் திறச்செயலி’ ஒன்றைப் பிரித்தெடுத்து, அவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
  • இது ‘உயிரி மேற்பரப்புத் திறச்செயலி’ (Biosurfactant) என அழைக்கப்படுகிறது. இயற்கை வழியில் இது கிடைப்பதால், இதில் நச்சுத்தன்மை சிறிதும் இல்லை. இதன் ஈரப்பதம் அதிகம். வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலும் இதற்குக் கூடுதல்; சீக்கிரத்தில் கெட்டுப் போவதில்லை.
  • மேலும், இது மக்கும் பொருளாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கும் உகந்தது என்கின்றனர் சூழலியலாளர்கள்.
  • சென்னை அறிவியலாளர்களின் இந்த இரட்டைச் சாதனைகளைப் பாராட்டி மகிழும் அதே வேளையில், அந்தமான் கடலில் கிடைத்திருக்கும் இந்த அரிய வகை இயற்கை வளங்கள் கடல் கடத்தல்காரர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (20 - 07 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்