TNPSC Thervupettagam

அழிந்து வரும் அரிய உயிரினமாகும் ஆற்று நீர்

August 10 , 2024 110 days 125 0
  • வறண்ட கந்தக பூமியான கோவில்பட்டியில் இருந்து, தாமிரபரணி பாயும் நெல்லைச் சீமைக்கு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய புதிதில், வாடகைக்கு வீடு பார்க்க அலைந்தபோது, “இந்த ஏரியாவில் வீடு நல்லா இருக்கும் சார். நல்ல தண்ணி இணைப்பு இருக்கு. தொட்டி ரொம்பி வழியும் அளவிற்குத் தண்ணீர் தினமும் வரும்.
  • போர் தண்ணியும் இருக்கு. பக்கத்துல பிள்ளையார் கோயில்கூட இருக்கு” என்றெல்லாம் சொல்வார்கள். பத்து நாள்களுக்கு ஒருமுறை குடிநீரைப் பார்த்துப் பழகிய எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும். ‘ஆத்துத் தண்ணீரா...’ தினமுமா என்று அதிசயத்தில் வாயைப் பிளந்தது உண்டு. தினமும் ஆற்றில் போய்க் குளிக்க வேண்டும் என்கிற ஆசைகூட இருந்தது. அப்புறம் மாதம் ஒருமுறைகூடக் குளிக்க முடியாமல் போனது.

மறந்து போனோம்:

  • மனித இனம் சக்கரம் கண்டுபிடித்ததை அறிவியலின் மாபெரும் பாய்ச்சல் என்று சொல்வார்கள். அதைப் போல, வாட்டர் கேன் கண்டுபிடிப்பும்கூட மற்றொரு பாய்ச்சலோ என்று சொல்லுமளவிற்கு வாட்டர் கேன்கள் லாரி லாரியாக வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும், சாலையோர உணவகங்களுக்கும் போய்க்கொண்டிருக்கின்றன.
  • இன்றைக்கு வீட்டுமனை பார்ப்பவர் களும்கூட, இந்தப் பகுதியில் தண்ணீர் வசதி எப்படி? நிலத்தடி நீர் இருக்கா? குடிநீர் விநியோகம் இருக்கா என்றெல்லாம் கேட்பதை மறந்து, பல வருடங்கள் ஆகிவிட்டன. எந்தத் தண்ணீர் இல்லாத காடாக இருந்தாலும், வாட்டர் கேன் வாங்கிக்கலாம்... இல்லையேல், தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி இருக்கிறது. அது போதும் என்கிற மனநிலை பலருக்கும் வந்துவிட்டது.
  • வீடு பார்த்துத் தரும் புரோக்கர்களும்கூட, “பக்கத்துல, போர்வே (நால்வழிச் சாலைதான்) இருக்கு. அஞ்சு நிமிட தூரத்துல ஒரு பெரிய மால் வரப் போகுது. இடத்தோட மதிப்பு எங்கேயோ போயிரும்” என்கிறார்கள். நிலத்தடி நீர் பற்றியோ, மாநகராட்சிக் குடிநீர் பற்றியோ மறந்தும் சொல்வதில்லை. நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். வீட்டுக்கு அருகில் நால்வழிச் சாலை வந்தால் நமக்கென்ன பிரயோசனம்? ஒரே இரைச்சல், தூசியைத் தாண்டி ஒன்றும் புலப்படவில்லை.

துரை குடித்த கால்வாய் நீர்:

  • திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தைத் தாண்டி ஸ்ரீபுரத்தில் இருந்து டவுன் வளைவு வரை இருபுறமும் மருத மரங்கள் வரிசையாக நின்று அழகு சேர்த்த காலம் ஒன்றுண்டு. நெல்லை ஓவியர் இசக்கி அண்ணாச்சியின் கறுப்பு வெள்ளை ஒளிப்படங்களில் அந்த அழகை ஜீவனுடன் தரிசிக்கலாம். சாலையின் ஒருபுறத்தில் கால்வாய் ஓடும்.
  • என்னோடு வங்கியில் வேலை பார்த்த சண்முகவேல் (இம்பீரியல் வங்கியில் வெள்ளைக்காரருக்குக் கீழ் வேலைபார்த்தவர்) என்கிற டபேதார் சொல்வார்: “நம்ம பேங்க் வாசல்ல போற வாய்க்கால் தண்ணியை மண் பானையில் பிடிச்சு வைப்பேன். வெள்ளைக்கார ஏஜென்ட் அதைத்தான் குடிப்பாரு. தண்ணி என்னமா இருக்குங்கீய.
  • கண்ணாடியா இருக்கும். குனியும்போது சட்டைப் பையில் இருந்து ஓட்டைக் காலணா விழுந்தாக்கூட துல்லியமாத் தெரியும்டே. மருத மரங்க ரெண்டு பக்கமும் சோலையாய் வளந்து நிக்கும். சவத்துப்பய ஊருல எல்லாம் போச்சு. வாய்க்கால் எல்லாம் சாக்கடையா ஓடுது. ஒண்ணு சொல்லட்டுமாவே.
  • மனுஷனுக்கு என்ன அவசரம்னாலும் வாய்க்கா ஓரத்துல நின்னுகிட்டு மோள மாட்டான். மொகம், கை, கால் கழுவிக்கிடுவான். இதையெல்லாம் எவன்கிட்டேயும் போய்ச்சொல்லிக்கிட்டு இருக்காதீரும். உம்மையும்என்னையும் கோட்டிக்காரம்பான்... எல்லாம் காந்திமதிக்குத் தெரியும்” என்று பெருமூச்சு விடுவார். உண்மைதான். ஊருக்கு நடுவே வாய்க்கால் தண்ணீர் பாய்ந்தது என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்?

குடிக்காதீங்க!

  • சில ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி புஷ்கரம் நடந்தபோது, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டுவந்தார்கள். ஊரே ஆடிப்போய் விட்டது. தைப்பூச மண்டபம் அருகே இருந்த படித்துறையில் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருந்ததைக் கண் கொள்ளாமல் பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் குனிந்து நீரை அள்ளிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்தவர் சொன்னார், “தண்ணியைத் தீர்த்தம் மாதிரி தலையில் வேண்டுமானால் தெளிச்சுக்கோங்க. குடிச்சிராதீங்க.”
  • உண்மைதான். முப்பது வருசத்திற்கு முந்தைய தாமிரபரணி வேறு. வேதிக்கழிவு, சாக்கடைக் கழிவு கலந்துவரும் இன்றைய தாமிரபரணி வேறு. குறுக்குத்துறை முருகன் கோயிலில் மொட்டை போட்டுவிட்டு, ஆற்று நீரைத் தீர்த்தம்போல குடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. குளித்து மகிழலாம். படித்துறையில் அமர்ந்து சோப் போட்டபடியே கதைகள் பேசலாம்.
  • குளிக்கக் கூச்சப்பட்டால், கால்களை நனைக்கலாம். நண்பர்களோடு வட்டப்பாறையில் அமர்ந்து செல்ஃபி எடுக்கலாம். ஆனால், தாகமாக இருக்கிறது என்று மறந்தும் ஓடுற தண்ணீரை அள்ளி இன்றைக்குப் பருக முடியாது. ஆற்றின் நடுவே யானைப்பாலத்தில் அமர்ந்திருந்தாலும், தாகத்திற்கு ஒரு தண்ணீர்ப் புட்டியை பையில் செருகி வைத்திருக்கத்தான் வேண்டும்.

குழாய்த் தண்ணீர்:

  • காலம் எவ்வளவோ மாறிப் போய்விட்டது. வங்கித் தொழிற்சங்கத் தலைவர் கண்ணன் சொல்வார்: “அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தைகளுக்கு நமது தலைவர்களை பம்பாயில் இருந்து அழைப்பார்கள். திடீரென்று அழைப்பதால், ரயிலில் முன்பதிவு செய்து இவர்கள் போவதில்லை. கிடைக்கும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் புறப்பட்டுச் செல்வார்கள்.
  • ரயில் எங்காவது நிலையத்தில் நிற்கும்போதுதான் இறங்கிப்போய் தண்ணீர் குடிக்க முடியும். தண்ணீர் பாட்டில் எல்லாம் அப்போது ஏது? வசதியானவர்கள் கூஜாவில் தண்ணீர் கொண்டு செல்வதுண்டு. ரயிலில் பாத்ரூம் அருகே உள்ள குழாயில் வரும் தண்ணீரைத்தான் கையில் பிடித்துக் குடிப்பார்கள் நமது தலைவர்கள்“ - கண்கள் கலங்க அவர் சொல்லும்போது வியப்பாக இருக்கும்.
  • தலைவர்களை விடுங்கள். நாம் சிறுவர்களாக இருந்த காலத்தில், உணவு விடுதிகளில் உள்ள தண்ணீர் டிரம்களில் தண்ணீரை அப்படியே அள்ளிக் குடித்த அனுபவங்களும் உண்டுதானே!

ஆனால் இன்றைய நிலைமை?

  • எந்தக் கூட்டம் நடந்தாலும் சரி, சொற்பொழிவாளர்கள் முன்புள்ள மேஜையில் கண்டிப்பாக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அது பன்னாட்டுக்குளிர்பான நிறுவனங்களின் தயாரிப்பாக இருக்கும் பட்சத்தில், கூச்சப்பட்டு மேஜையில் வைக்காமல், ஒளிப்படத்தில் விழாத வகையில் நாற்காலியின் அடியில் வைப்பது உண்டு. பிராண்ட் லேபிளைக் கிழித்துவிட்டு வைப்பதும் உண்டு.
  • இப்போது அந்தக் கூச்சமும் கூடப் போய்விட்டது. சொற்பொழிவாளர்களுக்கு மட்டுமன்றி, பார்வையாளர்களுக்கும் கால் லிட்டர் கொள்ளளவு கொண்ட புட்டிகளைக் கொடுத்துவிடுகிறார்கள். திருமணங்கள், குடும்ப விழாக்களில் ஆளுக்கு ஒன்று என இந்தத் தண்ணீர்ப் புட்டிகளைத் தருகிறார்கள். பந்தியில் பாதி குடித்தும் குடிக்காமலும் அவை அப்படியே குப்பைக்குச் செல்கின்றன.

மிச்சம் இருக்குமா?

  • கேன் வாட்டர் எல்லாமே முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டது என்று மக்கள் நம்புவதுதான் வேடிக்கை. சாண்ட் பில்டர், கார்பன் பில்டர், மைக்ரான் பில்டர் மூலம் சுத்தம் செய்யப்பட்டு புற ஊதாக்கதிர்கள் மூலமாகத் தண்ணீரில் உள்ள வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் அழிக்கப்பட்டு, அதன் பிறகே கேன்களில் அடைக்கப்பட வேண்டும்.
  • இது முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று பார்க்காமல் சகட்டு மேனிக்கு கேன் வாட்டரை மக்கள் பயன்படுத்துவதுதான் வேதனை. இந்த சுத்திகரிப்பிள் தண்ணீரில் இயற்கையாக உள்ள தாதுப்பொருட்களும் சேர்ந்தே அழிந்து போகும்.
  • வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் நீர், குடிநீருக்கு, விவசாயப் பாசனத்திற்கு பயன்படுவதைவிடவும், பல மடங்கு பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களுக்கும், தொழிற்சாலை களுக்கும், கேன் வாட்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர்களுக்கும் செல்கிறது என்பதே கசப்பான உண்மை. இப்படியே சென்றால், தாமிரபரணி ஆற்றை பாட்டிலில் அல்ல, பாடப்புத்தகங்களில் மட்டுமே காண இயலும்!

நன்றி: இந்து தமிழ் திசை (10 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்