TNPSC Thervupettagam

அழிவின் விளிம்பிலிருந்து

February 11 , 2023 548 days 289 0
  • சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெறும் ஒரு முடிவை தமிழக அரசு எடுத்திருக்கிறது. முற்றிலுமாக அழியும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பருந்துகளைப் பாதுகாக்க 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருப்பது சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது. தலைமை வன பாதுகாப்பு அதிகாரி (பிரின்சிபல் சீஃப் கன்சர்வேட்டர் ஆஃப் பாரஸ்ட்), சீஃப் வைல்ட் லைஃப் வார்டன் ஆகிய இருவரும் அந்தக் குழுவின் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
  • இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் பருந்துகள் அருகி வருகின்றன. எல்லா நாடுகளிலும் இதுகுறித்த விழிப்புணர்வு கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்கா இதுகுறித்து கூடுதலாக கவலைப்படுகிறது. அமெரிக்காவின் தேசியப் பறவையாக அங்கீகரிக்கப்பட்ட பருந்துகள் அநேகமாக அழிந்துவிட்ட நிலையிலிருந்து மிகுந்த முயற்சிக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
  • 'பால்ட் ஈகிள்' என்றழைக்கப்படும் பருந்து வகை சர்வதேச அளவிலும், குறிப்பாக வட அமெரிக்காவிலும் அழிவின் எல்லையை எட்டின. உலகளாவிய அளவிலுள்ள 557 கூரிய மூக்குகள் கொண்ட 'ராப்டர்' பறவைகளில் 30% அநேகமாக அழிந்துவிட்ட நிலையில் பிலிப்பின்ஸ் கழுகு, அன்னோபோன் ஆந்தை, ஹூடட் பருந்து உள்ளிட்ட 18 வகைகள் அதில் அடக்கம்.
  • 'கோல்டன் ஈகிள்' மெக்ஸிகோவின் தேசியப் பறவை. அவற்றில் ஒரு சிலதான் எஞ்சியிருக்கின்றன. 2016 கணக்கெடுப்பின்படி, இனப்பெருக்கத்துக்கு தகுதியான 100 இணைகள் இருந்தால் அதிகம். 'ஹேப்பி ஈகிள்' என்பது தெற்கு மெக்ஸிகோ, மத்திய, தெற்கு அமெரிக்கா ஆகியவற்றில் பரவலாகக் காணப்பட்ட பருந்துகள். மரங்களை வெட்டுவதாலும், காடுகள் எரிக்கப்படுவதாலும் அவற்றின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது. சர்வதேச அளவில் வாழ்விட அழிப்பு, பருவநிலை மாற்றம், பூச்சி மருந்து உள்ளிட்ட நச்சுகள் போன்றவை பருந்து, கழுகு உள்ளிட்ட பறவைகளின் அழிவுக்கு காரணங்கள்.
  • பருந்து (ஈகிள்) என்பவை தங்கள் உணவுக்காக சிறு உயிரினங்களை வேட்டையாடுபவை. அளவில் சிறியவை. அதேநேரத்தில் கூர்மையான பார்வையை கொண்டவை. மிக அதிகமாக சிறு உயிரினங்களை வேட்டையாடுபவையில் முக்கிய இடம் பருந்துக்கு உண்டு.
  • 'வல்ச்சர்' என்பவை பிணந்தின்னி கழுகுகள். இவை பெரும்பாலும் இறந்துகிடக்கும் உயிரினங்களைத்தான் உணவாகக் கொள்கின்றன. பருந்து போலல்லாமல் உருவத்தில் பெரியவை. பருந்துகளைப் போல கூர்மையான பார்வை இவற்றுக்கு கிடையாது.
  • கூட்டம் கூட்டமாக வாழக்கூடியவை பிணந்தின்னி கழுகுகள். குப்பை மேடுகள், சவக்கிடங்குகள் மட்டுமல்லாமல் இறந்து கிடக்கும் உயிரினங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை பிணந்தின்னி கழுகுகள் விட்டுவைப்பதில்லை. தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்கும், பிணங்கள் அகற்றப்படுவதற்கும் இவை உதவுகின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
  • 1980 வரை உலகளாவிய அளவில் 'வல்ச்சர்' எனப்படும் பிணந்தின்னி கழுகுகள் பரவலாகக் காணப்பட்டன. தற்போது அவை தங்களை நிலைநிறுத்திக்கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவில் 9 வகை வல்ச்சர்களும், இந்தியாவில் 8 வகை வல்ச்சர்களும் காணப்படுகின்றன என்றாலும் அவையனைத்துமே இன அழிப்பை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
  • இந்தியாவில் 'வைட் பேக்டு வல்ச்சர்', 'லாங் டின்ட் வல்ச்சர்', 'சென்டர் டில்டு வல்ச்சர்' ஆகிய மூன்று இனங்களின் எண்ணிக்கையும் 99% குறைந்துவிட்டன. எங்கேயாவது ஒன்றோ இரண்டோ பார்க்க முடிந்தால் அபூர்வம். இவை மட்டுமல்ல, எகிப்திய கழுகுகள், சிவப்புத் தலை கழுகுகள் ஆகியவையும் அநேகமாக அழிந்துவிட்டன.
  • கழுகுகள், பருந்துகள் ஆகியவற்றின் அழிவுக்கு முக்கியமான காரணம் அவற்றின் வாழ்வாதார அழிப்பு. நகர்மயமாதலால் காடுகள் அழிக்கப்படுகின்றன. கால்நடை வளர்ப்பு பண்ணைமயமானதால் கிராமங்களில்கூட வீடுகளில் கோழி, ஆடு, மாடு வளர்ப்பது குறைந்துவிட்டது. விவசாயம் டிராக்டர் மயமானதைத் தொடர்ந்து காளை மாட்டின் பயன்பாடு இல்லாமல் போனதும், செயற்கை முறை கருத்தரிப்பு காரணமாக காளை மாடுகள் தேவையில்லாமல் போனதும், பிணந்தின்னி கழுகுகளுக்கு இரையில்லாத நிலைமையை ஏற்படுத்திவிட்டன.
  • கழுகுகள் பெரும்பாலும் இறந்துபோன கால்நடைகளை உண்டு வாழ்பவை. கால்நடைகள் இறப்பதற்கு 3 நாள்கள் முன்பு 'டிக்ளோசெனக்' என்கிற மருந்து செலுத்தப்பட்டிருந்தால் அவை பருந்துகளின் உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. 'டிக்ளோசெனக்கிலுள்ள நச்சுத்தன்மை கழுகுகளின் சிறுநீரகத்தை பாதித்து உயிரிழப்புக்கு வழிகோலுகின்றன. 2006-இல் இந்த மருந்து கால்நடை மருத்துவ பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என்றாலும்கூட இன்னும் பல பகுதிகளில் இது உபயோகிக்கப்படுகிறது.
  • கழுகுகளும் சரி, பருந்துகளும் சரி மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்யும் பறவைகள். ஆண்டுக்கு ஒரு முட்டைதான் இடும். குஞ்சு பொரிக்க நிறைய நாள்கள் எடுத்துக்கொள்ளும். அதனால் என்னதான் முனைப்புடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்கூட இப்போதிருக்கும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க 10 முதல் 15 ஆண்டுகள் தேவைப்படும்.
  • டிக்ளோசெனக் மட்டுமல்ல, துப்பாக்கி ரவைகளில் பயன்படுத்தப்படும் ஈயமும்கூட இந்த பறவை இனங்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கின்றன. அமெரிக்க அரசு தங்களது தேசியப் பறவையை பாதுகாக்க 1972-இல் 'டிடிடி' பூச்சிக்கொல்லியை தடை செய்து அழிவின் விளிம்பிலிருந்த கழுகு இனத்தை காப்பாற்றியது. இப்போது தமிழக அரசு நமது மாநிலத்தில் இருக்கும் கழுகு இனங்களை காப்பாற்றும் முயற்சியில் அதேபோல ஈடுபட்டிருப்பதை வரவேற்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி: தினமணி (11 – 02 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்