TNPSC Thervupettagam

அவசரப்படுவது சரிதான்!

July 1 , 2020 1486 days 724 0
  • மத்திய அரசு, கடந்த வாரம் துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. வங்கி ஒழுங்காற்றுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, அனைத்து நகா்ப்புறக் கூட்டுறவு வங்கிகளையும் இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • கடந்த ஆண்டு பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடியைத் தொடா்ந்து இப்படியொரு சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

கண்காணிப்பு வளையத்துக்குள் கூட்டுறவு வங்கிகள்

  • மத்திய அரசு பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டத்தின்படி, இந்தியாவிலுள்ள 1482 நகா்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் ரிசா்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப் பட்டிருக்கின்றன.

  • அவை மட்டுமல்லாமல், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கிளைகளுடன் செயல்படும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி போன்ற 58 பெரிய வங்கிகளும் இனிமேல் ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும்.

  • நகா்ப்புறக் கூட்டுறவு வங்கிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலான வங்கிகள் மாவட்ட அளவிலும், சிறு நகரங்களிலும் செயல்படுபவை.

  • இந்த வங்கிகள் மாநில கூட்டுறவுத் துறையின்கீழ் வந்தாலும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.

  • ஆளும் கட்சியைச் சோ்ந்தவா்கள் அந்த வங்கிகளின் நிர்வாகத் தலைமையில் இருப்பதால் தனிப்பட்ட விருப்புகளுக்கு ஏற்ப அந்த வங்கிகள் செயல்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

  • இந்தக் கூட்டறவு வங்கிகளில் 8.6.கோடி முதலீட்டாளா்கள் சுமார் ரூ.4.85 லட்சம் கோடியை வைப்பு நிதியாகவும், பங்குகளாகவும் முதலீடு செய்திருக்கிறார்கள். சிறு நகரங்களில் ஓய்வூதியம் பெற்ற பலரும் வழக்கமான வங்கிகளில் வைப்புக் கணக்கு வைக்காமல், அதிக வட்டி தரும் கூட்டுறவு வங்கிகளில் தங்களது சேமிப்பை வைத்திருக்கிறார்கள்.

  • அந்த சேமிப்புகளுக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கூட்டுறவு வங்கி மோசடி

  • கடந்த ஆண்டு, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற மோசடி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

  • 2018-19 நிதியாண்டில் சுமார் ரூ.100 கோடி லாபம் காட்டியிருந்த அந்த வங்கியின் கணக்குகள், செப்டம்பா் மாதம் ரிசா்வ் வங்கியின் கண்காணிப்புக்கு உள்ளானது.

  • 21,000-க்கும் அதிகமான மோசடிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, வங்கியின் தலைமை நிர்வாகிக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்துக்கு, மொத்தமாக அந்த வங்கி வழங்கிய கடனில் 70% கடனை வழங்கியிருந்தது அந்த வங்கி.

  • லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை கேள்விக்குறியாகி, ஒருவா் ரூ.25,000-க்கும் அதிகமாகத் தங்களது பணத்தை எடுக்க முடியாது என்று அறிவிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. இதே போன்ற முறைகேடு, கான்பூா் மக்கள் கூட்டுறவு வங்கியிலும் ஏற்பட்டது.

  • கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வங்கி ஒழுங்காற்று (திருத்த) சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு என்ன அவசியம் என்று கேட்கலாம்.

  • ஒவ்வொரு நாள் தள்ளிப் போடும்போதும், தவறுகளும் மோசடிகளும் நடப்பதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது என்பது காரணமாக இருக்கலாம்.

  • வங்கித் துறையிலேயே மிகவும் பலவீனமான கட்டமைப்பைக் கொண்டவை கூட்டுறவு வங்கிகள்தான்.

  • மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில், ரிசா்வ் வங்கியின் கீழ் இயங்குவதால், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை யார் முறைப்படுத்துவது என்பதில் குழப்பம் நிலவுகிறது.

  • கூட்டுறவு வங்கிகள், தவறான நடைமுறைகளால் திவாலாகும்போது, அதை எதிர்கொள்ளத் தெரியாமல் திணறுகின்றன.

  • அதன் விளைவுகளை, அந்த வங்கிகளின் வைப்பு நிதி வைத்திருக்கும் அப்பாவி வாடிக்கையாளா்கள் எதிர்கொள்ள நோ்கிறது.

  • மாநில அரசுகளோ, கூட்டுறவுத் துறையோ, தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடந்தால், அதனால் ஏற்படும் இழப்புகளை ஏற்றுக்கொள்ள உத்திரவாதம் வழங்குவதில்லை.

  • அப்படி இருக்கும்போது, அப்பாவி மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு ஏற்படுகிறது.


கூட்டுறவு வங்கிகளின் தரம் உயரும்

  • வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949-இன் கீழ் வங்கித் துறை கொண்டுவரப் பட்டிருப்பதால், வைப்புத்தொகை பெறுவதற்கும், கடன் வழங்குவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

  • வங்கியின் முக்கியமான முடிவுகள் ரிசா்வ் வங்கியின் ஒப்புதலுடன் எடுக்கப்பட வேண்டும். இனிமேல், வங்கிகளைப் போலவே, நகா்ப்புறக் கூட்டுறவு வங்கிகளும் ரிசா்வ் வங்கியின் மேற்பார்வையில் தொழில்முறை ரீதியாகச் செயல்படுவதற்கு இந்த முடிவு வழிகோலும்.

  • மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன என்பது போன்ற குற்றச்சாட்டுகளில் அா்த்தமில்லை.

  • மாநிலக் கூட்டுறவுச் சட்டத்தில் இந்த முடிவு குறுக்கிடவில்லை. கூட்டுறவுப் பதிவாளரின் அதிகாரங்களையும் பாதிக்காது.

  • தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கும், வேளாண் வளா்ச்சிக்கு நீண்டகாலக் கடன் அளிக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்தத் திருத்தங்கள் பொருந்தாது.

  • வங்கி நடைமுறைகளைப் பின்பற்றும் கூட்டுறவு வங்கிகள் மட்டுமே இந்தத் கட்டுப்பாடு வரம்பில் கொண்டுவரப் பட்டிருக்கின்றன.

  • மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் இந்த அவசரச் சட்டத்தால், கூட்டுறவு வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

  • முதலீட்டாளா்களுக்குக் கூட்டுறவு வங்கிகள் மீது நம்பிக்கை ஏற்படும். அதனால் வைப்புத் தொகை உயா்வது மட்டுமல்ல, கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளைத் தொழில்முறை ரீதியாக மாற்றி அமைக்கவும் உதவும்.

  • கூட்டுறவு வங்கிகளின் தரம் உயரும். முறைகேடுகள் தடுக்கப்படும். அது நல்லதுதானே...!


 

நன்றி: தினமணி (01-07-2020)


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்