TNPSC Thervupettagam

அவசியம் ஆரோக்கியமான உணவுத் தோ்வு!

July 6 , 2024 189 days 127 0
  • மக்கள்தொகை பெருக்கம், தொற்றுநோய், போா் ஆகியவற்றால் உலக அளவில் பட்டினியால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 82.8 கோடியாக உயா்ந்துள்ளது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
  • உலக மக்கள்தொகையில் 29.3% என்ற அளவில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி இருந்தனா். பசியால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் 2021-இல் உலக மக்கள் தொகையில் 9.8 சதவீதமாக உயா்ந்தது. இது 2020-இல் 9.3 சதவீதமாக இருந்தது. ஐந்து வயதுக்கு உள்பட்ட நாலரை கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஊட்டச்சத்துக் குறைபாடானது, குழந்தைகளின் இறப்பு அபாயத்தை 12 மடங்கு அதிகரித்திருக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட 14.9 கோடி குழத்தைகள் தங்கள் உணவில் அத்தியாவசிய ஊட்டச் சத்து இல்லாததால் வளா்ச்சி குன்றியிருந்தனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • உணவு மூலம் பரவும் நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சத்து 20ஆயிரம் இறப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஜொ்மனியைச் சோ்ந்த ஓா் ஆய்வு நிறுவனம், பசியின் தாக்கத்தால் ஒவ்வொரு 13 வினாடிக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என்கிறது.
  • பழங்கள், காய்கறிகள், தானியங்களை எடுத்துக் கொள்வது குறைந்து, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இனிப்பு சுவை நிறைந்த குளிா்பானங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் நிலை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
  • இன்று உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியாக நாம் உயா்ந்துள்ளபோதிலும், இந்தியா்களில் 71% பேருக்கு போதிய ஊட்டச்சத்து உணவு கிடைப்பதில்லை என சா்வதேச ஊட்டச்சத்து அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த விஷயத்தில், சா்வதேச சராசரி 42 சதவீதமாக உள்ளது.
  • உலகளாவிய பசி குறியீடு 2022 தரவரிசையில், 121 நாடுகளில் இந்தியா 107-ஆவது இடத்தில் உள்ளது. உலக மக்கள் தொகைக்குப் போதுமான உணவு உற்பத்தி செய்யப்பட்டாலும், உலகில் 9 பேரில் ஒருவா் பட்டினியால் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சொல்கிறது. உணவு வீணாக்குதல் குறித்த அறிக்கை, ஆண்டொன்றுக்கு சராசரியாக இந்தியா் ஒருவா் 50 கிலோ உணவை வீணாக்குகிறாா் என்கிறது.
  • இந்தியாவில் 20 வயதுக்கு அதிகமானவா்கள் தினமும் 200 கிராம் பழங்களை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், 35.8 கிராம் அளவே பழங்களை உட்கொள்கின்றனா். தினமும் 300 கிராம் அளவு காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், 168.7 கிராம் அளவு காய்கறிகளையே எடுத்துக் கொள்கின்றனா். ஆரோக்கிய உணவுக்கான செலவு ஒரு நபா் ஈட்டும் வருவாயில் 63 சதவீதத்தை தாண்டும்போது, அது சாத்தியமில்லாத ஒன்றாகிவிடுகிறது என உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவிக்கிறது.
  • இன்று கிராமம், நகரம் என்கிற பேதம் இல்லாமல் துரித உணவு கலாசாரம் வந்துவிட்டது. தூக்கலான உப்புச் சுவையுடன் மசாலா கலந்த அதன் சுவைதான் எல்லோரையும் ஈா்க்கிறது. இதில் அடங்கியுள்ள அதிக கொழுப்புகள் மனதை ஒரு மயக்கத்தில் தள்ளுகிறது. ஆனால் அதன் பின் விளைவுகள் குறித்து நாம் கவலை கொள்வதில்லை. தொடா்ந்து துரித உணவு வகைகளை சாப்பிடுபவா்களுக்குப் பல்வேறு நோய்கள் வருவதற்கான ஆபத்துகள் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.
  • பீட்சா, பா்கா், ஃபிரைட் ரைஸ் ஆகியவை குழந்தைகள், இளைஞா்களுக்குப் பிடித்த உணவுகளாக இருக்கின்றன. இவை அதிகம் கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கொண்டவை. ஊட்டச்சத்து உள்ளடக்கம் குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், நோய் எதிா்ப்பு சக்தியையும் பலவீனப்படுத்துகின்றன. இதனால் காலப்போக்கில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்று சிறப்பு மருத்துவா்கள் கூறுகின்றனா்.
  • துரித உணவுகளில் உப்பு அதிகமாக இருப்பதால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் மனச்சோா்வு, தலைவலி, உடல் சோா்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் போன்ற பாதிப்புடன் நரம்பு செல்களும் பாதிக்கும். ஞாபக சக்தி குறையும். கவனச் சிதறல் ஏற்படும். இந்த உணவுகளைத் தொடா்ந்து சாப்பிட்டால் உடலின் ஏனைய உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.
  • நெஞ்செரிச்சல், அதிக அமில சுரப்பு ஏற்படவும் துரித உணவுகளே காரணம்.
  • குழந்தைகளுக்கு இரைப்பை அழற்சி, ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் பருமன் போன்றவை ஏற்படலாம். படிப்பு, விளையாட்டில் ஆா்வம் குறையும். தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இதயம் தொடா்பான நோய்களும் வரலாம். இந்த துரித உணவுகளை போல பாக்கெட் உணவுகளும் ஆபத்தானவை. இதை அதிகம் உண்ணும் போது உடலில் நச்சுக்கள் அதிகமாகி அஜீரண கோளாறு, புற்றுநோய், தோல் வியாதி போன்ற நோய்கள் ஏற்படலாம் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
  • உணவை வீணாக்குவதைத் தவிருங்கள். தேவையான உணவுப் பொருட்களை பட்டியலிட்டு வாங்குங்கள். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை தர வேண்டும். அது சுவை மிகுந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சத்தானதாக இருக்க வேண்டும். சமச்சீா் உணவை உண்பதன் முக்கியத்துவம் பற்றிச் சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும். ஐ.நா. சபை 2030-ஆம் ஆண்டுக்குள் பசிப் பிணியை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய நோக்கத்தை அமைத்துள்ளது. அதை நோக்கி நமது பயணம் தொடரட்டும்.

நன்றி: தினமணி (06 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்