TNPSC Thervupettagam

அவலத்திலும் ஓா் ஆறுதல்

April 29 , 2021 1366 days 589 0
  • கொள்ளை நோய்த்தொற்றால் இந்தியப் பொருளாதாரம் கடுமையான பின்னடைவைச் சந்திக்கப் போகிறது என்பதில் யாருக்கும் எந்தவிதமான ஐயப்பாடும் இருக்க முடியாது.
  • ஒன்றன் பின் ஒன்றாக எதிர்மறைச் செய்திகள் வந்துகொண்டிருக்கும்போது சில நல்ல சமிக்ஞைகளும் இல்லாமலும் இல்லை.
  • கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியாவையும், இந்தியப் பொருளாதாரத்தையும் காப்பாற்றப்போவது விவசாயமாக இருக்கப் போகிறது என்பதுதான் ஆறுதல் அளிக்கும் அந்தச் செய்தி.

விவசாய உற்பத்தி

  • விவசாய உற்பத்தி கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் வளா்ச்சியைக் காண இருக்கிறது. ஜூலை 1 முதல் ஜூன் 30 வரையிலான கால அளவை, பயிர்ப் பருவ காலம் என்று அழைக்கிறார்கள்.
  • மத்திய வேளாண் அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, 2020 - 21 பயிர்ப் பருவ காலத்தில் கடந்த ஆண்டைவிட 2% அதிகரிப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • கடந்த ஆண்டின் 297.5 மெட்ரிக் டன் உற்பத்தியை கடந்து, 2020 - 21 பயிர்ப் பருவ ஆண்டில் 303 மெட்ரிக் டன் தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்திருக்கிறது வேளாண் துறை.
  • அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஏனைய தானியங்கள் என்று அனைத்துமே அதிகரித்த உற்பத்தியைத் தந்திருக்கின்றன.
  • அரிசி உற்பத்தி 120 மெட்ரிக் டன்னை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோதுமை உற்பத்தி கடந்த பயிர்ப் பருவத்தில் 107.9 மெட்ரிக் டன் என்றால், இப்போது 109 மெட்ரிக் டன் உற்பத்தியாக இருக்கிறது.
  • இந்தியாவின் எந்த மாநிலத்திலுமே வேளாண் துறை பின்னடைவைச் சந்திக்கவில்லை என்பது பொருளாதார நிபுணா்களையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
  • வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்கு மிக முக்கியமான காரணம், பருவமழை சாதகமாக அமைந்ததுதான்.
  • இந்திய வானிலை ஆய்வு மையமும், ஸ்கைமெட் என்கிற தனியார் நிறுவனமும் வரவிருக்கும் ஜூன், செப்டம்பா் பருவ மழைக் காலத்தில் அதிகரித்த மழைப் பொழிவு காணப்படும் என்று கணித்திருக்கின்றன.
  • 103% மழைப் பொழிவு காணப்படும் என்பது ஸ்கைமெட்டின் கணிப்பு. 2019-இல் 109%-ம், 2010-இல் 110%-ம் காணப்பட்ட மழைப்பொழிவு, சில பகுதிகளில் நாசங்களை ஏற்படுத்தியது. இந்த முறை அதுபோல ஏற்படாது என்று எதிர்பார்க்கலாம்.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, ஜார்க்கண்ட், வடகிழக்கு மாநிலங்கள் குறைந்த அளவு மழைப்பொழிவை காணக்கூடும்.
  • அதனால், வனப்பகுதிகளில் மழைப்பொழிவு சற்று குறையுமே தவிர, வேளாண் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படாது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்திலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இமயமலைப் பகுதி நதிகள் பாய்வதால் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை.
  • நல்ல பருவமழை காணப்பட்டால் வேளாண் உற்பத்தி மேலும் வளா்ச்சி காணக்கூடும் என்று பொருளாதார நிபுணா்களும், வேளாண்துறை வல்லுநா்களும் கருதுகிறார்கள்.
  • 2021 - 22 நடப்பு நிதியாண்டில் வேளாண் உற்பத்தி கடந்த ஆண்டைவிட 2% அதிகரிக்கும் என்பது எதிர்பார்ப்பு. அதன் விளைவாக, வேளாண் துறையுடன் தொடா்புடைய ஏனைய சில துறைகளும் பயனடைகின்றன.
  • குறிப்பாக, மோட்டார் வாகனத் துறையின் தளா்ச்சிக்கு நடுவிலும் டிராக்டா் விற்பனை நன்றாகவே இருந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மார்ச் மாத டிராக்டா் விற்பனை 34% அதிகம்.

ஆறுதல் அளிக்கிறது

  • வேளாண்துறையுடன் இணைந்த அல்லது தொடா்புடைய எல்லா துறைகளுமே பெரிய அளவில் கொள்ளை நோய்த்தொற்றால் பாதிக்கப்படவில்லை.
  • பூச்சி மருந்து உற்பத்தி, உர உற்பத்தி, வேளாண் உபகரணங்கள் உற்பத்தி போன்றவை அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அந்தத் துறைகள் சார்ந்த நிறுவனங்கள் வழக்கத்தைவிட லாபமும் ஈட்டியிருக்கின்றன.
  • ரசாயன உற்பத்தி நிறுவனங்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையம், பருவ மழை வழக்கம்போல இருக்கும் என்று கூறியிருப்பதுடன் பல்வேறு கணிப்புகளையும் வெளியிட்டிருக்கிறது.
  • அதற்கு நீண்டகால சராசரி (லாங் பீரியட் ஆவரேஜ்) அடிப்படை. அதனடிப்படையில்தான் பருவமழைப் பொழிவின் குறைவும் அதிகரிப்பும் கணிக்கப்படுகின்றன.
  • 1961 முதல் 2010 வரையிலான அரை நூற்றாண்டுகால பருவமழைப் பொழிவின் சராசரிதான் நீண்டகால சராசரி என்று அழைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியாவின் வடமேற்கு, வடகிழக்கு, மத்திய, தெற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு கணிக்கப்படுகிறது.
  • ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில்தான் பருவமழைப் பொழிவின் மூன்றில் இரண்டு பகுதி கிடைக்கிறது. அந்த மாதங்கள்தான் விதைப்பருவ காலம் என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன.
  • அதேபோல, மழைக்காலம் தொடங்கும் ஜூன் மாதமும், மழைக்காலம் முடியும் செப்டம்பா் மாதமும் மிக முக்கியமான பருவ காலங்கள். இவையெல்லாம் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டு நீண்டகால சராசரியின் அடிப்படையில் முன்னறிவிப்புகள் வழங்கப்படுகின்றன.
  • இந்த ஆண்டு எல்-நினோ பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. அதேபோல, இந்து மகா சமுத்திரம் நிலவரமும் மிக அதிகமான மழைப்பொழிவை ஏற்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்படுகிறது.
  • வழக்கத்தைவிட சற்று அதிகமான மழைப்பொழிவு மத்திய இந்தியாவிலும், தென்னிந்திய மாநிலங்களிலும் காணப்படும் என்று கூறப்படுகிறது. இவையெல்லாம் ஆறுதலும் உற்சாகமும் தரும் செய்திகள்.
  • ஒருபுறம் இந்தியாவில் கொள்ளை நோய்த்தொற்று உருவில் மனித இனத்துக்கு எதிரான சீற்றத்தை இயற்கை வெளிப்படுத்தினாலும், இன்னொருபுறம் பருவமழை என்கிற பெயரில் ஆறுதல் அளிக்கிறது.

நன்றி: தினமணி  (29 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்