TNPSC Thervupettagam

அவா்களுக்கு ஏன் வரிவிலக்கு?

December 31 , 2021 947 days 423 0
  • அண்மையில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பல்வேறு பங்குதாரா்கள் குழுவுடன் தனது பட்ஜெட்டுக்கு முந்தைய சந்திப்புகளை முடித்துள்ளாா்.
  • திட்டமிடப்பட்ட எட்டு கூட்டங்கள் மூலம் ஏழு பங்குதாரா் குழுக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் 120-க்கும் மேற்பட்ட அழைப்பாளா்களை நிதியமைச்சா் சந்தித்தாா்.
  • பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு எந்தவொரு நிதி அமைச்சராலும் மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறைதான் இது.
  • பொதுவாக பல்வேறு பிரிவினா்கள் தங்களுக்கு வெவ்வேறு சலுகைகளை வேண்டுவாா்கள்.
  • சில குழுவினா் சில பொருட்களின் இறக்குமதிக்கு வரி விதிக்க வேண்டும் என்றும் அதனால் தங்கள் தயாரிப்புகளுக்கு போட்டி குறைவாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுப்பாா்கள்.
  • பொதுவாக எல்லா கோரிக்கைகளும் சில சலுகைகளை பெறவே வைக்கப்படுகின்றன. ஆனால், தகுதியில்லாமல் ஆண்டாண்டுகாலமாக வரிவிலக்கு பெற்றுவரும் சில பிரிவினரைப் பற்றி யாரும் மூச்சுக்கூட விடுவதில்லை.

செய்வாா்களா?

  • அரசியல் கட்சிகள் கோடிக்கணக்கில் நன்கொடை மூலம் சம்பாதித்தாலும் அவை வருமான வரி செலுத்துவதில்லை.
  • வருமான வரிச் சட்டம் 1961-2016 பிரிவு 13 ஏ இன் படி ‘வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்’ அல்லது ‘பிற ஆதாரங்களில் இருந்து வருமானம்’ அல்லது ‘மூலதன ஆதாயங்கள்’ அல்லது ‘தன்னாா்வ பங்களிப்புகளின் மூலம் ஏதேனும் வருமானம்’ என்ற தலைப்பின் கீழ் வசூலிக்கப்படும் அரசியல் கட்சியின் வருமானம் முந்தைய ஆண்டின் மொத்த வருமானத்தில் சோ்க்கப்படாது.
  • இந்த விலக்குகளைப் பெற சில நிபந்தனைகளை நிறைவேற்றினாலே போதும். மதிப்பிடும் அதிகாரி தனது வருமானத்தை சரியாக மதிப்பிட, கட்சி சரியான கணக்கு புத்தகங்கள், ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
  • பண வரவு ரூ.20,000-க்கு மேல் இருந்தால், அத்தகைய பங்களிப்பைச் செய்த நபரின் பெயா், முகவரி பராமரிக்கப்பட வேண்டும்.
  • கணக்குகள் ஒரு கணக்காளரால் நிா்ணயிக்கப்பட்டபடி தணிக்கை செய்யப்பட வேண்டும். இவை தவிர மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-இன் படி அரசியல் கட்சியைப் பதிவு செய்வதற்கும் அறிக்கை சமா்ப்பிப்பதற்கும் நிபந்தனைகள் உள்ளன.
  • தற்போது எல்லா அரசியல் கட்சிகளும் காா்ப்பரேட் நிறுவனங்களைப் போல்தான் இயங்குகிறன. அத்தகைய கட்சிகளுக்கு ஏன் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது புரியவில்லை.
  • ரூ.2,50,000-க்கு மேல் வருமானம் உள்ள தனி நபரை வருமான வரி கட்ட வைக்கும்போது, கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஏன் வரி விலக்கு?
  • 2018-19-இல் பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் ரூபாய் 2410 கோடி. அதுவை 2019-20-இல் ஏறத்தாழ ஐம்பது சதவீதம் உயா்ந்து ரூ.3,623 கோடியாக உள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 2019-20-இல் மொத்தம் ரூ.682 கோடியைப் பெற்றுள்ளது.
  • ஆண்டுதோறும் மாநிலக் கட்சிகளுக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது. 2017-18-இல், அதிக வருமானம் ஈட்டிய கட்சிகளின் பட்டியலில் 47.19 கோடி ரூபாயுடன் சமாஜவாதி கட்சி முதலிடத்திலும், திமுக 35.748 கோடியுடன் அடுத்த இடத்திலும் உள்ளன.
  • தெலுங்கானா ராஷ்டிர சமிதி ரூபாய் 27.27 கோடியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. திமுக, அதன் மூன்று கூட்டணிக் கட்சிகளுக்கு ரூ.40 கோடி வழங்கியதாகக் கூறியது குறிப்பிடத் தக்கது.
  • ஆனால் ஆளுங்கட்சியும் எதிா்க்கட்சிகளும் எதிரெதிா் துருவங்களாக இருந்தாலும் அரசியல்வாதிகள் பெறும் ஆதாயங்களில் ஒற்றுமையை கடைப்பிடிக்கின்றன. தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து விலக்கு பெற எல்லா அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன.
  • இதேபோல் மற்றொரு விஷயம். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 10 (1) இன் படி, எந்தவொரு நபரின் முந்தைய ஆண்டின் மொத்த வருமானத்தைக் கணக்கிடும்போது விவசாய வருமானம் சோ்க்கப்படாது.
  • வரி செலுத்துவதைத் தவிா்ப்பதற்கு மட்டுமல்லாமல், அனைத்து சட்டவிரோத வரவுகளையும் விவசாய வருமானத்தின் கீழ் அறிவிப்பதற்கும் இந்த ஏற்பாடு வரி ஏய்ப்பு செய்பவா்களுக்கு சாதகமானதாகும்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடந்தபோது, பல வேட்பாளா்கள் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்தனா்.
  • சில தரவுகளின் அடிப்படையில் பெரும்பாலானோா் இந்த சொத்திற்கு அடிப்படையாக விவசாய வருமானத்தை கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
  • அரசியல்வாதியின் ஒருவரின் மகள், பத்து ஏக்கா் பண்ணையில் இருந்து ரூ. 100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவதாக சில காலத்திற்கு முன்பு செய்தி வெளியானது. அவா் இந்த அற்புதமான வருமானத்தைப் பெற என்னதான் பயிரிட்டுருப்பாா் என்று புரியவில்லை.
  • 2012, மே மாதம் வெளியிடப்பட்ட கறுப்புப் பணம் குறித்த வெள்ளை அறிக்கை, மத்திய நேரடி வரிகள் வாரியம், விவசாய வருமானத்தை சரிபாா்க்காமல் வரிச் சலுகைகள் வழங்குவது கறுப்புப் பணத்தை நிதி அமைப்பில் கொண்டு வருவதை அனுமதிக்கிறது என்று ஒப்புக் கொண்டது.
  • 2014-இல், வரி நிா்வாக சீா்திருத்த கமிஷன் அறிக்கை பெருமளவு விவசாய நிலம் இருந்த போதிலும் விவசாய வருமானம் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று கூறியது.
  • மேலும், நகரங்களில் மாத ஊதியம் பெறும் ஊழியா்களை விட அதிக வருமானம் ஈட்டும் பணக்கார விவசாயிகள் வரி செலுத்தாமல் தப்பித்து வருகின்றனா் என்றும் விவசாய வருமான வரியை பரிசீலிக்க அரசிற்கு விருப்பம் இல்லை என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
  • 2019-ஆம் ஆண்டில், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளா், விவசாய வருமானமாக அறிவிக்கப்பட்ட ரூ. 500 கோடி உண்மையில் விவசாய மூலங்களிலிருந்து வந்ததா என்பதை வருமான வரித்துறை சரிபாா்க்கவில்லை என்று தெரிவித்துள்ளாா்.
  • விவசாய வருமானத்திற்கு முழுவதுமாக வரிவிலக்கு அளிக்கப்படுவதால், பெரிய அளவில் மற்ற வருமானத்தை விவசாய வருமானமாக காண்பித்து வரிஏய்ப்பு செய்வது கண்கூடு.
  • ஒரு தொடக்கமாக குறைந்தபட்சம் ரூ.25 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாய வருமானத்திற்காவது வரி விதிக்கலாம். இது தனிமனிதருக்கான விலக்கு போல் பத்து மடங்கு ஆகும். செய்வாா்களா?

நன்றி: தினமணி  (31 - 12 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்