TNPSC Thervupettagam

"ஆகஸ்ட் புரட்சி'யின் வித்து!

August 8 , 2019 1982 days 725 0
  • இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாற்றை நினைவில் கொள்பவர்கள் ஒருபோதும் மறக்க முடியாத நாள் 1942 ஆகஸ்ட் 8.
  • அந்த நாளில்தான் அண்ணல் மகாத்மா காந்தி பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் "வெள்ளையனே வெளியேறு' என்று ஓங்கிக் குரல் கொடுத்தார். ஐந்து ஆண்டுகளில், 1947-இல் இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறினர்.

அண்ணல் மகாத்மா காந்தி

  • 1942 பம்பாய் மாநாட்டில் 2 மணி நேரம் 20 நிமிஷங்கள் அண்ணல் மகாத்மா காந்தி உணர்ச்சி பொங்கப் பேசினார்: "உடனடியாக சுதந்திரம் வந்தாக வேண்டும்; இன்றிரவே சுதந்திரம் கிடைப்பது உறுதியானால் அதுவும் விடியும் முன்பே கிடைத்தாக வேண்டும். இந்த நிமிஷம் முதல் நீங்கள் ஒவ்வொருவரும் சுதந்திர மனிதராக எண்ணிக்கொள்ள வேண்டும். இனி நீங்கள் அடிமையில்லை. சுதந்திரத்தின் சாரமே இதுதான். "தான் அடிமை அல்ல' என்ற உணர்வு ஏற்பட்ட உடனேயே அடிமைத்தளைகள் உடைந்து நொறுங்கி விடும். இதோ ஒரு தாரக மந்திரம் சொல்கிறேன்; இதை மறக்காமல் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் செய் அல்லது செத்து மடி, இந்தியாவை விடுவிப்போம் அல்லது அந்த முயற்சியில் செத்து மடிவோம். அடிமைத்தனம் நிலைத்திருப்பதைப் பார்க்க நாம் உயிர் வாழத் தேவையில்லை' என்று மகாத்மா காந்தி முழங்கினார்.
  • தீர்மானம் நிறைவேறிய அடுத்த நாள் (ஆகஸ்ட் 9, 1942) காலையில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கொடியை கதர் ஆடை உடுத்திய இளம் மங்கை அருணா ஆசஃப் அலி ஏற்றி பறக்கச் செய்து வரலாற்றில் இடம்பெற்றார். காலை 5 மணிக்கெல்லாம் கஸ்தூர்பாய் காந்தி, மீரா பென், வல்லபபாய் படேல், ஜவாஹர்லால் நேரு, மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆகிய அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மும்பை சிவாஜி பூங்காவில் தேசியவாதிகள் வெள்ளம் போல் கூடி கண்டனக்குரல் எழுப்பினர்.
  • இந்தக் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. ஆகஸ்ட் புரட்சி நாடு முழுவதும் பரவியது. தில்லியில் மட்டும் காவலர் சுட்டதில் 75 பேர் உயிரிழந்தனர்;  114 பேர் படுகாயமடைந்தனர். ஆங்கிலேய அரசு அளித்த தகவலின்படி, ஆகஸ்ட் புரட்சியாளர்கள் மீது 538 முறை காவல் துறையினர் சுட்டனர்;  940 பேர் உயிரிழந்தனர். 1,630 பேர் படுகாயமடைந்தனர். ஆனால், ஆகஸ்ட் புரட்சியில் இந்தியா முழுவதும் சுமார் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • குஜராத்தில்…..
  • இந்தியாவின் அன்றைய 30 கோடி மக்களும் தம் மீது நம்பிக்கை வைக்கத்தக்க அளவுக்கு எளிமையாக இருந்தார் மகாத்மா.     தன் தளராத உழைப்பால் இந்திய மண்ணை பக்குவப்படுத்தி வைத்திருந்தார். அவர் குஜராத்தில் உருவாக்கிய சபர்மதி ஆசிரமத்தின் உள்ளே நுழையும்போது முதல் அறையில் ஒரு பெரிய ஓவியம் வரைந்து வைத்திருப்பார்கள். அந்த ஓவியத்தில், அண்ணல் காந்தி தண்டி கடற்கரையில் குனிந்து உப்பு எடுத்துக் கொண்டிருப்பார். அந்த ஓவியத்தின் கீழே இரண்டே வரிகளில் பின்வரும் கருத்தை ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். அதாவது, "ஒரு சிட்டிகை உப்பை அவர் (மகாத்மா காந்தி) கையில் எடுத்து, மிகப் பெரிய பிரிட்டிஷ் பேரரசையே உடைத்தெறிந்தார்' என்று அந்த ஓவியத்தின் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சபர்மதி ஆசிரமம் சிறிய ஆசிரமம்தான். அதில் இருந்த தொண்டர்களும் கொஞ்சம் பேர்தான். அந்த 72 தொண்டர்களுடன் "தண்டி யாத்திரை' ("உப்பு சத்தியாகிரகம்') கடற்கரை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டது. அந்த ஊர்வலத்தில்  மகாத்மா காந்தியின் தலைமையில் சுமார் 388 கிலோமீட்டர் பல்லாயிரக்கணக்கானோர் சென்றனர்; பின்னர் பல லட்சம் பேர் பங்கு கொண்டதாக மாறியது.  1930-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் பாத யாத்திரையாக ஊர்வலம் சென்றது; தொடர்ந்து 24 நாள்களுக்குப் பிறகு ஏப்ரல் 5-ஆம் தேதியன்று  மகாத்மா காந்தியும் அவரது குழுவினரும் தண்டி கடற்கரையை அடைந்தனர்.
  • அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் மகாத்மா காந்தி குனிந்து ஒரு பிடி உப்பை அள்ளினார்.  அந்த ஒரு பிடி உப்பு, தேச விடுதலையின் அடையாளமாகக் கருதப்பட்டது. அது பாதுகாப்பாக வைக்கப்பட்டு பிறகு ரூ.16,000-க்கு ஏலம் விடப்பட்டது.  இந்த பிடி உப்பை அண்ணல் மகாத்மா காந்தி எடுத்ததன் மூலம் சுதந்திர உணர்ச்சியை 30 கோடி மக்களுக்கும் கொண்டுசேர்த்து விட்டார்.  
  • சிறுவர்கள், ஆண், பெண், முதியவர்கள் அனைவருக்கும் உரிய நமது கடலின் உப்பை, நாம் சாப்பிடுவதற்கு ஆங்கிலேயர்களுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையை உப்பை உபயோகப்படுத்துபவர்கள் அனைவருக்கும் "உப்பு சத்தியாகிரகம்' ஏற்படுத்திவிட்டது.  

நாடு முழுவதும்….

  • நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. சர் தேஜ் பகதூர்,  ஜெ.எம். ஜெயகர் இருவரையும் மகாத்மாவுக்கு தூது அனுப்பினார் பிரிட்டிஷ் வைஸ்ராய். 
  • தொடர்ந்து மூன்று நாள்கள் சிறையில் இருந்த மகாத்மா காந்தியுடன் முக்கியமான ஆலோசனை  நடைபெற்றது. "மகாத்மா காந்தியைச் சிறையிலடைத்துவிட்டு, சிறைக் கதவுக்குப் பின்னர்  என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்' என பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வெகுவாகக் கோபமடைந்தார்.
  • கடைசியில் எந்தவிதமான நிபந்தனையுமின்றி காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.  "ஆகஸ்ட் புரட்சி'க்கு உப்பு சத்தியாகிரகமே வித்தாக அமைந்தது என்றால் மிகையில்லை.

நன்றி: தினமணி (08-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்