- நாம் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத வாயு ஆக்சிஜன். பெரும்பாலான உயிரினங்கள் ஆக்சிஜனைத்தான் சுவாசிக்கின்றன. ஆனால், அதே ஆக்சிஜன்தான் நமது உடலை அழிக்கும் மிக ஆபத்தான வாயு என்கின்றனர் விஞ்ஞானிகள்.
- ஆம், சுத்தமான ஆக்சிஜன் நச்சுவாய்ந்தது. நமது நுரையீரல், நரம்பு மண்டலம் இரண்டுக்கும் சேதம் விளைவித்து, உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியது. ஆக்சிஜனால் நமது உடல் பாதிக்கக்கூடிய நிலையை ஹைபர்ஆக்சியா (Hyperoxia) என்கிறோம். ஆனால், ஆக்சிஜன் ஏன் ஆபத்தாகிறது?
- உண்மையில் நாம் சுவாசிப்பது ஆக்சிஜனை மட்டுமல்ல. நாம் சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனோடு 78% நைட்ரஜன், 0.04% கார்பன்-டை-ஆக்சைடு, 0.96% மற்ற வாயுக்களும் இருக்கின்றன. இந்தக் கலவையைத்தான் நாம் சுவாசிக்கிறோம்.
- நாம் காற்றைச் சுவாசித்தவுடன் அதில் உள்ள ஆக்சிஜன் மட்டும் நமது உடலின் ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபினால் ஈர்க்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுகிறது. பிறகு ஹீமோகுளோபின் ஆக்சிஜனை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச்செல்கிறது.
- இந்த ஆக்சிஜன் நாம் சாப்பிடும் உணவில் உள்ள குளுக்கோஸுடன் இணைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தயாரிக்கிறது. இதன் துணைப் பொருளாக நீரும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்டவையும் உருவாகின்றன. இந்தச் செயல்பாட்டைத்தான் நாம் செல் சுவாசம் (Cellular Respiration) என்கிறோம்.
- இந்த செல் சுவாசம் நடைபெறும்போது வேறு சில மூலக்கூறுகளும் உற்பத்தியாகின்றன. இந்த மூலக்கூறுகள் அதிக வினைத்திறன் உடையவை. அத்துடன் நிலையற்றவை. இவற்றை ஒற்றை அயனி (Free Radicals) என்கிறோம்.
- இந்தத் ஒற்றை அயனி நிலையில்லாதவை. இதனால், அவை நிலைபெறுவதற்காக செல்களில் உள்ள மற்ற வேதிப்பொருள்களுடன் வினைபுரிந்து எலெக்ட்ரான்களைப் பெற முயல்கின்றன. இதனைத்தான் ஆக்சிஜனேற்றம் என்கிறோம்.
- இந்தச் செயல்பாடுதான் உடலுக்குக் கேடானது. காரணம், ஒற்றை அயனி செல்களில் உள்ள மற்ற வேதிப்பொருள்களுடன் வினைபுரிந்தால், அவை அந்த வேதிப்பொருள்களின் தன்மையையே மாற்றிவிடும். உதாரணமாக ஒற்றை அயனி புரதங்களுடன் வினைபுரிந்து அவற்றின் வேலையைப் பாதிக்கின்றன.
- புரதங்கள்தாம் நம் உடலை இயக்கும் வேலைக்காரர்கள். தனக்கு என்று ஒதுக்கப்பட்ட வேலையைப் புரதங்கள் சரியாகச் செய்ய வேண்டும். ஆனால், ஒற்றை அயனி புரதங்களுடன் வினைபுரியும்போது, புரதம் வேலை செய்வதை நிறுத்திவிடுகிறது. அல்லது அதற்கு ஒதுக்கப்பட்டதற்கு நேரெதிரான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிடுகிறது. இதனால், நம் உடலில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன.
- இப்படியாக ஆக்சிஜனேற்றத்தால் நமது செல்கள் பாதிப்படைகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. வயோதிகம் அதிகரிக்கிறது. ஏன் டி.என்.ஏ கூடப் பாதிக்கப்பட்டு, புற்றுநோய் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.
- இப்படிப்பட்ட பாதிப்புகள் இருந்தால் உடல் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க முயற்சி செய்யும் அல்லவா? இதனால்தான் நம் உடலில் எதிர் ஆக்ஸிகரணிகள் (Antioxidants) எனும் மூலக்கூறுகளும் உள்ளன. இவை ஒற்றை அயனிகளால் உடலில் ஏற்படக்கூடிய பாதிப்பைச் சரிசெய்கின்றன. ஒற்றை அயனி நிலைபெறுவதற்கு மற்ற மூலக்கூறுகளுடன் வினைபுரியும் முன்பே அவற்றுக்கு எலெக்ட்ரான்களை வழங்கி வினைபுரியாமல் தடுக்கின்றன. இதனால் நம் உடல் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றப்படுகிறது.
- இதுவே நாம் தூய ஆக்சிஜனைச் சுவாசிக்கும்போது இந்த எதிர் ஆக்ஸிகரணிகளால் சிறப்பாகச் செயல்பட முடியாது. நாம் அதிகச் செறிவுமிக்க ஆக்சிஜனைச் சுவாசிக்கும்போது ஒற்றை அயனிகளின் அளவு அதிகரித்து செல்களைப் பாதிக்கத் தொடங்குகிறது.
- அதிக ஒற்றை அயனிகளைத் தடுக்கும் அளவுக்கு நமது உடலில் எதிர் ஆக்ஸிகரணிகள் கிடையாது. இதனால், அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் நமது உடலில் நடைபெறும் வளர்சிதைமாற்ற வினை பாதிக்கப்பட்டு, இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளே இயங்குவதை நிறுத்திவிடும்.
- ஒருவேளை நாம் சுத்தமான ஆக்சிஜனை மட்டும் சுவாசித்தால், முதலில் நுரையீரலில் உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கத் தொடங்கும். பிறகு நரம்பணு மண்டலத்தில் உள்ள செல்களும் இறக்கும். இறுதியாக நமது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
- ஆனால், காற்றில் கலந்துள்ள ஆக்சிஜனைச் சுவாசிக்கும்போது இது நடப்பதில்லை. அத்துடன் காற்றில் உள்ள நைட்ரஜனும் நமது நுரையீரலைப் பாதுகாக்கிறது. நைட்ரஜன் வாயு செயலற்றது. எந்த வினையிலும் ஈடுபடாதது. மிக வலுவான வேதிப்பொருள் மட்டுமே நைட்ரஜனுடன் வினையாற்ற முடியும்.
- மனித உடலில் அத்தகைய வேதிப்பொருள்கள் இல்லை என்பதால் நைட்ரஜன் நமது உடலில் உள்ள எந்த ஒரு மூலக்கூறாலும் ஈர்க்கப்படாது. பெரும்பான்மையான நைட்ரஜன் நுரையீரலிலேயே தங்கிவிடுகிறது. அதன்மூலம் நமது நுரையீரல் சிறப்பாகச் செயலாற்றுவதற்கு உதவுகிறது.
- பொதுவாக வாயுக்களை எங்கு அடைத்து வைத்தாலும் அழுத்தம் உண்டாகும். நாம் சுவாசிக்கும் நைட்ரஜன் நுரையீரலில் தங்கிவிடுவதால், அங்கு அடிப்படை அழுத்தம் உண்டாகி நுரையீரலை விரித்து வைக்கிறது. இதனால், ஆக்சிஜன் நுரையீரலுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நுழைகிறது.
- இதுவே நாம் சுவாசிக்கும் காற்றில் வெறும் சுத்தமான ஆக்சிஜன் மட்டும் இருந்தால் நுரையீரலில் உள்ள காற்றின் அழுத்தத்தை மாற்றி, அந்த உறுப்பையே சிதைத்துவிடும். இதனாலும் நாம் சுத்தமான ஆக்சிஜனைச் சுவாசிப்பதில்லை.
- ஆனாலும் நாம் மருத்துவமனையில் தூய ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறோம். அந்த ஆக்சிஜன் அளவும் மருத்துவருடைய கண்காணிப்பிலேயே குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே தரப்படுவதால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
நன்றி: இந்து தமிழ் திசை (27 – 03 – 2024)